Sunday 8 October 2017

தேர்வில் வெற்றிபெற உதவும் பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் கோயில்

Image result for அதிதீஸ்வரர் கோயில்

கல்விக்கும், கலைகளுக்கும் அதிபதியாக விளங்கும் கலைவாணிக்கே பேசும் சக்தியை அருளிய இறைவன் உறையும் தலம் பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் கோயில். இக்கோயில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. வாணியின் பெயரிலேயே வாணியம்மை பாடி, சரஸ்வதிபுரம், சதுர்வேதிமங்கலம், பெரும்பாணர்பாடி, ஜம்புகனூர் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஊர் வாணியம்பாடி என அழைக்கப்படுகிறது. பல்லவர்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.  சத்திய லோகத்தில் பிரம்மாவும், சரஸ்வதியும் உரையாடி கொண்டிருந்தனர். அப்போது பிரம்மா, ‘உயிர்களை படைக்கும் நானே பெரியவன். 

அதனால்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள் என்று ஆணவத்துடன் கூறினார். இதை கேட்ட கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. இதனால் கோபமான பிரம்மா, வாணியை ஊமையாகும்படி சபித்தார். இதனால் வருந்திய வாணி பூலோகத்திற்கு வந்து சிருங்கேரியில் தவம் இருந்தாள். 
வாணியை பிரிந்த பிரம்மா, காஞ்சியில் வேள்வி செய்ய முற்பட்டார். உடனிருந்த தேவர்கள் துணைவியார் இல்லாமல் வேள்வி பூர்த்தியாகாது என்றனர். உடனே வாணியை சமரசம் செய்து அழைத்து வந்த  பிரம்மா, பாலாற்றின் வடகரையில் அறச்சாலை அமைத்து தானம், தவம் செய்ய தொடங்கினார். இதனால் மகிழ்ந்த சிவனும், பார்வதியும் நந்தி மீது அமர்ந்த நிலையில் கைலாய காட்சி தந்து, வாணியம்மை நீ பாடு என்று அருளினர். 

ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற வாணியாகிய சரஸ்வதி பாடினார். வாணி நீ பாடிய தலமாதலால் இது வாணியம்மைபாடி என்ற பெயரால் விளங்கும் என்றும், கைலாய காட்சி தந்தருளிய கோலத்திலேயே இங்கு இருப்போம் என்றும்  ஈசன் வரமளித்தார். அத்துடன் தங்கள் இருவரின் தவக்கோல பஞ்சலோக பதுமை தந்து, இவ்வுருவில் யாம் அடக்கம் என்று கூறியும் வாழ்த்தி அருளினார். அவ்வுருவை கலைவாணி தெற்கு நோக்கி வைத்து, தான் மேற்கு நோக்கி அமர்ந்து பூஜித்து வணங்கி வருகிறாள். இக்கோயிலில், திருக்கைலாயம் போலவே இறைவன், இறைவி சுயம்புவாய், அருவமாய், உரு ஒன்றினுள் இரண்டாய் காட்சி தருகின்றனர். தென்னாட்டு சிவ தலங்களில், ஞானத்தை போதிக்கும் குரு தட்சிணாமூர்த்தி உறைவிடமாகவும் அமைந்துள்ளது. 

மூன்று சக்திகளான இச்சை, கிரியை, ஞானம் இதனை இறைவன் ஒரு வடிவினில், வாணிக்கு அளித்ததும் இத்தலத்தின் தனிப்பெரும் சிறப்பாக கூறப்படுகிறது.
காச்யப முனிவரின் பத்தினி அதிதி, புனர்பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி. வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், ஆசிரியர்கள் தங்கள் பணியை துவங்கும் முன்பும் இங்கு வழிபடுவது சிறப்பு. சரஸ்வதியே அருள்பெற்ற தலமாதலால், பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. 

தல சிறப்பு: 

மேற்கு நோக்கிய இக்கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின்முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்து தவம் செய்யும் காட்சி சிறப்பானது. அதனால் சிறந்த குரு பரிகார தலமாகவும் விளங்குகிறது. அதேபோல் சிவன், விஷ்ணு சங்கமமான சங்கரநாராயணர் திருவுருவமும் வழிபாட்டில் உள்ளது. இங்குள்ள  பைரவர் சன்னதியில் ராகு காலத்தில் வழிபாடு செய்தால் சர்ப்பதோஷம் அகலும். சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால், சனியின் தாக்கம் குறையும்.

No comments:

Post a Comment