விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பெரியதச்சூர் அடுத்த எண்ணாயிரத்தில் அழகிய லட்சுமி நரசிம்மர் கோயில் சோழர் கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இக்கோயில் 11ம் நூற்றாண்டில் ராஜராஜசோழ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வூரை சுற்றி நான்கு திசைகளிலும் உள்ள எசாலம், பிரம்மதேசம், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு ஆகிய இடங்களில் சிவாலயங்கள் உள்ளன. இதில் பிடாரிப்பட்டு சிவாலயம் முழுவதும் சிதிலமடைந்து லிங்கம் மட்டுமே உள்ளது. எண்ணாயிரம் என்ற ஊரானது ஆரம்ப காலத்தில் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற பெயருடன் விளங்கியுள்ளது. அப்போது அந்த ஊரில் உள்ள பாடசாலையில் 70 பேர் 4 வேதங்களை கற்றனர். பின்னர் ராமானுஜர் இவ்வூருக்கு விஜயம் செய்து 8 ஆயிரம் சமணர்களை வைணவர்களாக்கியதால் இவ்வூரானது எண்ணாயிரம் என்று மாறியதாக வரலாறு கூறுகிறது.
சோழமன்னன் கட்டிய கோயில்:
இவ்வூரில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட் ஸ்ரீஅழகிய லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றி அகழி அமைக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றியுள்ள பிரதான கல்வெட்டுக்கள் அனைத்திலும் ராஜராஜசோழனை பற்றியே உள்ளதால் இக்கோயில் ராஜராஜசோழன் காலத்தை சேர்ந்தது என்று அறிய முடிகிறது. கோயிலின் உள் மண்டபத்தில் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து நீர் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்து வந்துள்ளது. இங்கு அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது. மேலும், இங்குள்ள லட்சுமி நரசிம்மர் சிரித்தபடி உள்ளதால் அழகிய லட்சுமி நரசிம்மர் என்ற பெயருடன் வேறு எங்கேயும் இல்லாத தனிச்சிறப்பாகும். அதேபோல் மூலஸ்தானத்தின் முன் அமைந்துள்ள 7 அடி உயரமான வராஹ மூர்த்தியும் தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒன்று.
கோயில் சிறப்புகள்:
எண்ணாயிரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் லட்சுமி நரசிம்மரை மனதில் தொழுது வேண்டினால் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறும். குடும்ப பிரச்னை, திருமணத்தடை, குழந்தையின்மை, தொழில் முடக்கம், மனசஞ்சலம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் தீரும். மனம் அமைதிபெறும், குடும்பத்தில் செல்வங்கள் பெருகி அமைதி ஏற்படும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
விஷேச தினங்கள்:
பிரதிமாத திருவாதிரை நட்சத்திரத்தன்று (பகவத் இராமானுஜர் சித்திரை திருவாதிரையில் அவதரித்தவர்) ஏரிக்கரையிலுள்ள ராமானுஜருக்கும், அவரது பாதுகைக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெற்று வருகிறது. வைகாசி மாதத்தில் 10 தினங்கள் ராமானுஜருக்கு பிரம்மோற்சவமும், ஆடிபூரம், ஆவணியில் கோகுலாஷ்டமி, மார்கழி மாதத்தில் தினசரி ஆண்டாள் திருமஞ்சனமும், வைகுண்ட ஏகாதசி, மார்கழி 27 கூடாரவல்லி அன்று பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாண வைபோகமும் நடக்கிறது. பிரதி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் 10 வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கும்.
செல்வது எப்படி?
விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ள எண்ணாயிரம் கிராமத்திற்கு விழுப்புரத்திலிருந்து எசாலம் (தடம் எண் 21) மற்றும் பிடாரிப்பட்டு (தடம் எண் 20) ஆகிய ஊர்களுக்கு செல்லும் நகரப் பேருந்துகளில் செல்லலாம். விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் பேருந்துகளில் நேமூரில் இறங்கி 7 கி.மீ., தூரம் ஆட்டோவில் செல்லலாம். அதேபோல் திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் (தடம் எண் 35) பேருந்திலும், திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் பேருந்தில் பேரணி பஸ் கூட்டுரோட்டில் இறங்கி 8 கி.மீ., தூரத்தில் உள்ள எண்ணாயிரத்திற்கு ஆட்டோவிலும் செல்லலாம்.
No comments:
Post a Comment