திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 12வது திருத்தலமாக இருப்பது ஜலநாதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் அமைந்துள்ளது. இறைவனாரின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் திருஊறல் (திருவூறல்) என்று இத்தலம் பெயர் பெற்றது. தற்போது இந்த ஊர் தக்கோலம் என அழைக்கப்படுகிறது. தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. இவர் யாகம் நடத்தும் சமயம் ஆசிரமத்திற்கு அருகே காமதேனு பசு வந்தது. இதைக் கண்ட தீர்க்கதா, யாகத்திற்கு வருவோரை உபசரிக்க உதவ வேண்டும் என்றார்.
அதற்கு இந்திரன் கூறாமல் தங்க இயலாது என காமதேனு மறுத்ததால் அதனை கட்டிப்போட முயன்றார். இதனால் கோபமுற்ற காமதேனு, தீர்க்கதாவுக்கு சாபம் இட்டது. சாப விமோசனம் பெற நாரதரிடம் அறிவுரை வேண்டினார் தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர். நாரதர் அறிவுரைப்படி திருவூறல் வந்து சிவபெருமானை வழிபட்டு மகனுக்கு சாபவிமோசனம் வேண்டினார். இறைவனோ, நந்தியை வழிபட்டு அவரது வாயிலிருந்து தெய்வ கங்கையை வரவைத்து அத்தீர்த்தம் கொண்டு தம்மை வழிபட சாபவிமோசனம் கிட்டும் என்றார்.
அதன்படி தீர்க்கதா செய்து சாபவிமோசனம் பெற்றார். இதனால் இத்தல இறைவனார் ஜலநாதீஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டு வருகிறார். சுயம்புலிங்கமான இத்தல இறைவனார், உத்தராயண காலத்தில் இளம் சிவப்பு நிறத்திலும் தட்சிணாயன காலத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சி தருகிறார். மணலால் உருவான சுயம்புலிங்கம் என்பதால் இவருக்கு மஞ்சள் காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. குரு பகவானின் மகனான உதத்திய முனிவர், தன் மைந்தனின் சாபம் தீர, இங்கு சிவலிங்கம் அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த சிவலிங்கம் ஒரு குகைக்குள் இருக்கிறது. அதற்கும் தினமும் வழிபாடு நடந்து வருகிறது. எனவே ஜலநாதீஸ்வரரை வணங்கினால் சாபம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் இக்கோயிலில் யோக தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது. சுவாமி சற்று சாய்ந்த நிலையில் மாணவர்களை உற்றுப் பார்க்கின்ற ஆசிரியன் போல உத்திட்ட ஆசனத்தில் அமர்ந்து, நேரில் பேசுவது போன்ற ஓர் உணர்வை தருகிறது. தட்சிணாமூர்த்தியை, யோக தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கிறார்கள். குரு பெயர்ச்சியின்போது இந்த தட் சிணாமூர்த்திக்கு விசேஷமான அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. அன்று நன்றாக படிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறவும் வேண்டி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து அர்ச்சனை செய்து தரிசனம் செய்கின்றனர். பஸ்வசதி: தக்கோலம், அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அதிகளவு பஸ் வசதி உள்ளது.
No comments:
Post a Comment