Tuesday 25 July 2017

நாலுபேரு நல்லா பேசணும்


நம்மைப் பற்றி நாலுபேர் நல்லா பேசினால் மனசுக்கு சந்தோஷமா இருக்கும்! ஆனால், அப்படி அவர்களை பேச வைப்பது எப்படி? காசு கொடுத்து பேசவைத்தால், அது அன்றே முடிந்து விடும்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்கிற மாதிரி உண்மையாகவே நம்மைப் பற்றி மற்றவர்கள் சிறப்பாக பேச வேண்டுமானால், ஆஞ்சநேயரைப் போல சுயநலமில்லாதவராக இருக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள வானரப் படைகள் ராவண வதம் முடித்ததும் அங்கிருந்து புறப்படத் தயாராயினர். வீரர்கள் எல்லாரும் இருக்கிறார்களா என்று சரி பார்க்கும்படி சேனாதிபதியிடம் ராமர் உத்தரவிட்டார்.

ஒரு வானரம் மட்டும் காணாமல் போனது தெரிந்தது. "சுவாமி.... வசந்தன் என்னும் வானரம் மட்டும் எங்கு சென்றது என்று தெரியவில்லை'' என்றார் சேனாதிபதி. ஆஞ்சநேயரை அழைத்த ராமர், "வசந்தனைக் கண்டுபிடிப்பது உன் பொறுப்பு'' என்று பொறுப்பை ஒப்படைத்தார். ஆஞ்சநேயர் எங்கு தேடியும் வசந்தன் தென்படவில்லை. ஒருவழியாக எமலோகத்தில் அவன் இருப்பது தெரிய வந்தது.

எமலோகம் சென்ற ஆஞ்சநேயர், "எமதர்மா... வசந்தன் எப்படி இங்கு வந்தான்?'' என்று கோபமாகக் கேட்டார். 

எமதர்மன் பணிவுடன், "சுவாமி... கோபம் கொள்ளாதீர்கள். பூலோகத்தில் உள்ள அனைவரும் உமது புகழைக் கேட்டு மகிழ்கிறார்கள். அதைக் கேட்கும் ஆசை எனக்கும் வந்தது. நான் பூலோகம் வந்தால், என் பார்வை பலத்தால் பலரும் எமலோகம் வர வேண்டிய சூழல் உண்டாகி விடும். அதனால் வசந்தனை மட்டும் வரவழைத்து, உமது அருமை பெருமையைக் கேட்டு மகிழ்ந்தேன்,'' என்ற எமன் அவனை விடுவித்தான். ஆஞ்சநேயர் வசந்தனுடன் பூலோகம் வந்து சேர்ந்தார்.

நல்லவனாக நடந்தால் நம்மைப் பற்றி நாடே கேட்டு அறிந்து கொள்ளும்.

No comments:

Post a Comment