மகாபலிபுரம்
ஆயிரம் இதழ்கள் கொண்ட அபூர்வ, அழகிய தாமரை அது. ஆதவனின் ஒளிபட்டு மிளிர்ந்து, தன் செவ்வண்ணப் பூச்சால் அனைவரையும் கவர்ந்திழுத்தது. அந்த ஈர்ப்புக்கு ஆட்பட்டவர்களில் முற்றும் துறந்த முனிவர் புண்டரீக மகரிஷியும் ஒருவர். ‘ஊண் வேண்டேன், உறக்கம் வேண்டேன், நான் வேண்டும் நல்லன எல்லாம் நாராயணன் திருவருளே’ என்ற கொள்கைகொண்ட பற்றற்ற பரம புருஷர் அவர். ஆனால், பரந்தாமன் திருவருளால், இப்படி வேண்டுவன, வேண்டாதன இல்லாத அவருக்குள்ளும் ஓர் ஆசை துளிர்விட்டது. அந்த ஆயிரம் இதழ் தாமரையை, அந்த தாமரையைப் போன்ற பரந்தாமனின் சிவந்த பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால், பரந்தாமன் எங்கிருப்பான்? ஆதிசேஷன் மீது சயனித்தபடி பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பான்! அவனை எப்படி அணுகுவது? இதோ இந்தக் கடல் வழியே சென்றால் பாற்கடலை அடைந்துவிட முடியாதா? பிரபஞ்சத்தின் மகாப் பெரிய சமுத்திரமான பாற்கடலுடன் இந்தக் கடல் போய்க் கலக்காதா? பக்தி மேலீட்டால் அவர் பாமரத்தனமாகக் கருதினார்.
அதோடு அதை செயல்படுத்தவும் முனைந்தார். அலைவீசும் கடற்கரைக்கு வந்தார். அலைகள் அவரை ‘வா, வா’வென அழைத்தனவே தவிர, அவர் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவோ, அவருக்கு உதவவோ சிறிதும் முன்வரவில்லை. இந்தக் கடலை எப்படிக் கடப்பது? தாவி கடலுக்குள் விழுந்தால் அது தன்னை அடித்துக் கொண்டுபோய் பாற்கடலில் சேர்த்துவிடாதா? ஆனால் இந்த அலைகள், தன்னை மறுபடியும் கரைக்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டால் என்ன செய்வது? சரி, இந்தக் கடலை வற்றச் செய்துவிட்டால்..? பரம்பொருளிடம் பற்று கொள்வதுதான் எத்தகைய வைராக்கியத்தை வளர்த்து விடுகிறது! இந்தக் கடலை அப்படியே இறைத்து நீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டால், கடல் வறண்டுவிடும். உடனே அதில் இறங்கி ஓடிப்போய் பாற்கடலை அடைந்து விடலாம்! புண்டரீகர் சட்டென கடலில் இறங்கினார். கைகளால் கடல்நீரை கரை நோக்கி இறைத்தார். இந்தக் கடல் இதோ விரைவில் வற்றிவிடும். அல்லது என் இறைப்பு வேகத்துக்கு பயந்து வழி விடும்...
கைகள் சோர்ந்தன, கால்கள் தளர்ந்தன, உடல் நலிந்தது. ஆனால் மனம் மட்டும் ‘இன்னும், இன்னும்...’ என்று ஆர்ப்பரித்தது. ‘உன்னால் முடியும்’ என்று சலிக்காமல், ஓர் பிசாசு போல அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டது. அப்போது அங்கே ஒரு முதியவர் வந்தார். ‘‘அப்பா...நான் ரொம்பவும் பசியோடு இருக்கிறேன். எனக்கு எங்கிருந்தாவது உணவு கொண்டு வந்து கொடுப்பாயா?’’என்று பரிதாபமாகக் கேட்டார். மகரிஷி மனம் இளகினார். இப்போதைக்கு இவருக்கு உணவுக்கு ஏற்பாடு செய்வோம்; பிறகு நீரிறைப்பைத் தொடருவோம். ஒரே மாதிரியான வேலையிலிருந்து சற்றே மாறுதலாகவும் இருக்கும்; சிறிது நேரம் ஓய்வு கிடைத்தது போலவும் ஆகும்... உடனே ஊருக்குள் சென்று யாசித்து உணவு பெற்று வந்தார். ‘பாவம் அந்த முதியவர். எங்கிருந்து வருகிறாரோ, எவ்வளவு தொலைவு நடந்தாரோ!
இதற்கு முன் எப்போது சாப்பிட்டாரோ? அவரது சுருண்ட வயிறும், வற்றிய முகமும் அவர் பலநாள் பட்டினி என்று தெரிவிக்கின்றனவே. பாவம்!’ என்று மனசுக்குள் அவருக்காக வருந்தினார். உணவு சேகரித்துக் கொண்டு கடற்கரைக்கு வந்தார். அங்கே முதியவரைக் காணோம். ஆனால், கடல் நடுவே பிளந்து மகரிஷி நடந்து செல்வதற்கு பாதை வகுத்துத் தந்திருந்தது! திடுக்கிட்டார் புண்டரீகர். யார் செய்த மாயம் இது! என் முயற்சிக்கு கடலரசன் கொடுத்த அங்கீகாரமா? என் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாமல் கடலே வழி கொடுத்ததா? ஒன்றும் புரியாமல் அவர் திகைத்து நின்றிருந்தபோது, ‘‘முனிவரே, இங்கே வாருங்கள்’’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிய அவர், சற்றுத் தொலைவில் அந்த முதியவர் கரையில் படுத்தபடி இடது கையால் சைகை செய்தும், குரல் கொடுத்தும் அழைத்தார். அவர் காலடியில் அந்த அபூர்வத் தாமரை!
பளிச்சென்று பொறி தட்டியது புண்டரீகருக்கு. கடலுக்குள் வழி செய்தவர் இவர்தான். இவரால் இப்படி செய்ய முடியுமானால், இவர் நிச்சயம் புயலடிக்கும் வாழ்க்கைக் கடலில் தத்தளிக்கும் மக்களைத் தாங்கிச் சென்று கரை சேர்க்கும் கருணாகரனாகத்தான் இருப்பார்... மென்சிரிப்புடன் அவரது மனவோட்டத்தைப் படித்த பாற்கடல் பரந்தாமன் அவரை அப்படியே ஆட்கொண்டார். இடது கையை மடக்கி ‘வா’வென அழைக்கும் பாணியில் வைத்துக் கொண்டு, மேலிரு கரங்களை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு, கீழ் வலது கையை உடலோடு சேர்த்து வைத்துக் கொண்டு, அனந்த சயனனாகக் காட்சியளித்தார். புல்லரித்துப் போனது புண்டரீகருக்கு. ‘‘என்ன அதிசயம் இது! பரந்தாமா, இது நீதானா? ஏன் தனித்து வந்திருக்கிறாய், என் தெய்வமே! உன் ஆதிசேஷன் எங்கே, சங்குசக்கரம் எங்கே, நாபிக் கமல பிரம்மன் எங்கே, உன் காலடியில் அமர்ந்திருக்கும் மஹாலக்ஷ்மி எங்கே?’’ வியப்பால் விழி விரியக் கேட்டார் மகரிஷி.
‘‘அவர்களுக்குத் தெரியாமல்தான் வந்தேன்’’ என்றார் மாதவன். ‘‘என்னை பாற்கடலில் தரிசிக்கும் பொருட்டு கை நோக கடலிலிருந்து நீரிறைத்தாயே, அந்த உன் பக்திக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்! அதனால்தான் நான் தனித்தே வந்து உனக்காக நீரிறைத்தேன். அவர்களுக்கு விஷயம் தெரிந்ததானால், நான் சிரமப்படக் கூடாது என்பதற்காக அவர்களும் வந்து கடலை இறைக்க ஆரம்பித்திருப்பார்கள். ஆனால், என் இனிய பக்தனான உனக்கு, பிரத்யேகமாக நானே உதவ விரும்பினேன்’’ என்று பாற்கடல் நாதன் பதிலுரைத்தபோது அப்படியே நெகிழ்ந்து போனார் மகரிஷி. அந்தப் பரம்பொருளைத்தான் நாம் இங்கே தரிசித்து மகிழ்கிறோம். திருமாலே கடலில் வழி அமைத்ததால் இத்தலம் அர்த்த சேது என்றும் அழைக்கப்பட்டது.
ஐயனுடன் உறையும் தாயாரின் பெயர், நிலமங்கைத் தாயார். என்ன பொருத்தம்! நாயகன் கடற்கரை மணலில் சயனித்திருக்க, தாயாரும் நிலமங்கையாகத் திகழ்கிறாள், இங்கே. நிலம், வீடு சம்பந்தமான எந்தப் பிரச்னையையும் தாயாருக்குக் குங்கும அர்ச்சனை செய்வதன் மூலம் எளிதாக, சாதகமாக நிவர்த்தி செய்துவிட முடியும் என்கிறார்கள். பொதுவாகவே வராகரை வழிபட்டால், பூமித்தாயை இரண்யாட்சகனிடமிருந்து காத்த அவர், பக்தர்களின் பூமி சிக்கல்களையும் அவிழ்த்து நலம் பயப்பார் என்பார்கள். ஐந்து நிலை ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைய, நெடிதுயர்ந்த தீபஸ்தம்பமும், துவஜஸ்தம்பமும் நல்லாசி கூறி வரவேற்கின்றன. கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், ராமர் சந்நதிகளுடன் பூதத்தாழ்வாரையும் இங்கே தனி சந்நதியில் தரிசிக்கலாம்.
இவருக்கு ஏன் இந்த சிறப்பு, மரியாதை? ஆழ்வாரின் அவதாரத்தலமே கடல்மல்லைதான். கோபுர வாசலுக்கு எதிரே அவரது அவதார மண்டபம் உள்ளது. அதனருகே உள்ள பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தவர் பூதத்தாழ்வார். தான் பிறந்த தலம் பரமனின் திவ்ய தேசமாகத் திகழ, இது குறித்து ஒரு பாடலில் மங்களாசாசனம் செய்திருக்கிறார்:
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளம் தண்பொருப்பு வேலை
தமருள்ளும் மாமல்லை கோவல்
மதிட்குடந்தை யென் பரேஏவல்ல எந்தைக் கிடம்
(இரண்டாம் திருவந்தாதி70)
அதாவது, தஞ்சை மாமணிக்கோயில், திருவரங்கம், திருத்தங்கால், திருவேங்கடமலை, திருப்பாற்கடல் ஆகிய தலங்கள், அடியார்களின் உள்ளத்தில் உறைபவை; மாமல்லை, திருக்கோயிலூர், திருக்குடந்தை ஆகியவை அடியார்களின் சிந்தனையில் துளிர்ப்பவை; இவற்றுள் பரந்தாமன் வசிப்பது அடியவர் உள்ளத்திலும், கடல்மல்லையிலும்தான் என்கிறார் பூதத்தாழ்வார். கோயிலின் மூலவர், தலசயனத் துறைவர் என்றும் போற்றப்படுகிறார்; உற்சவர், உலகு உய்ய நின்றான் எனப்படுகிறார். இந்த உற்சவரை ஹரிகேசவர்மன் என்ற மன்னன் 14ம் நூற்றாண்டில் ஒரு புற்றில் கண்டெடுத்து, பிறகு கோயிலினுள் பிரதிஷ்டை செய்தான் என்கிறது சரித்திரம். உற்சவர் கரத்தில் ஒரு தாமரை மொக்கு. இவரே மூலவர் பாதத்தில் அந்த மலரை சமர்ப்பிப்பதாக ஐதீகம். தலசயனப் பெருமாளை ஞானப்பிரான் என்று திருமங்கையாழ்வார் வர்ணிக்கிறார். ஏன்? இந்தப் பெருமாள்தான், பத்தாவது அவதாரமான கல்கியாக அவதரிக்கப் போகிறார் என்பதைத் தனக்கு உணர்த்தியதாகச் சொல்கிறார் ஆழ்வார். பெரிய திருமொழி இரண்டாம் பத்தில் ஐந்தாம் பாடலாக அதனை திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார்:
உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர் பெருநெறியை வையங்
காக்கும், கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்
டேன் கடிபொழில்சூழ் கடன்மல்லைத்
தலசயனத்தே.
கல்கி அவதாரம், இந்த தலசயனப் பெருமாளால் நிகழ்த்தப்படவிருக்கிறது என்ற திருமங்கையாழ்வாரின் ஊகத்திலும் ஒரு நயம் இருக்கிறது. மொத்தம் தச அவதாரங்கள். முதலாவது, கடலுக்குள்ளிருந்து மச்சாவதாரம்; பத்தாவது கடற்கரையில் கல்கி அவதாரம்! என்னப்பொருத்தம்! பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்தத் தலம் ஆதி வராஹபுரி என்றழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரமாக பழைய கலங்கரை விளக்கத்துக்கு அருகே உள்ள ஒரு குகைக் கோயிலில் தன் வலது பக்கத்தில் பூமிதேவியை தாங்கியபடி நின்ற கோலத்தில் திகழும் வராஹரை சுதைச் சிற்பமாக தரிசிக்கலாம். இவ்வாறு பிரானின் வலது பக்கத்தில் தேவி இடம்பெற்றதாலேயே இத்தலம் ஆரம்பத்தில் திருவலவந்தை எனப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தக் கடல்மல்லைக்குச் சென்று தலசயனப் பெருமாளை தரிசனம் செய்ய இயலாதவர்கள் கீழ்க்காணும் அந்தத் தல தியான ஸ்லோகத்தைப் படித்து மானசீகமாகப் பெருமாளை வணங்கலாம்: மகாபலிபுரத்துக்குச் சென்று தலசயனப் பெருமாளை தரிசிக்கும்வரை கீழ்க்காணும் கடல்மல்லை தியான ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
நாம்நா ஸாகர பர்வதே ச்ருதிநுதே நந்தே
விமாநேத்புதே
பச்சாந் நிர்மல புண்டரீக ஸரஸ: ப்ராசீ
ப்ரதேசேக்ஷண:
லக்ஷ்ம்யா பூமி ஸமாக்யயாச விலஸத்
பக்தாவநே தீக்ஷித:
விஜ்ஞானாகர புண்டரீக முநிநா ஸாக்ஷாத்
க்ருதே பாஸதே!
ஸ்ரீ விஷ்ணு ஸ்தல தர்சனம்
பொதுப் பொருள்: திருக்கடல்மல்லை என்னும் இந்த திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, தலசயனத்து உறைவோனே, உமக்கு நமஸ்காரம். திருமகளுடனும், நிலமங்கையுடனும், அனந்த விமான நிழலில், புண்டரீக புஷ்கரணிக் கரையில், தலசயனராய், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் விளங்கும் பரம்பொருளே உமக்கு நமஸ்காரம். பக்தர்களை காக்கும் உறுதியுடையவராய், புண்டரீக மாமுனிவருக்குக் காட்சி அருளித் திகழும் பரந்தாமா, உமக்கு நமஸ்காரம். சென்னையிலிருந்து நிறையப் பேருந்துகள் உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம், திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்துகள் மகாபலிபுரத்துக்கு அழைத்துச் செல்கின்றன. தனி வாகனங்களில் செல்பவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லலாம்.
No comments:
Post a Comment