காந்தார தேச மன்னன் சுலபாவின் மகள் காந்தாரி. இவள் சிறுமியாக இருந்தபோது, சிவபெருமான் மீது பெரிதும் பக்தி கொண்டு பூஜை செய்து வந்தாள்.
காந்தாரிக்கு திருமண வயது வந்தது. அவளுக்கும், திருதராஷ்டிரனுக்கும் திருமணம் நிச்சயமாயிற்று.
காந்தாரிக்கு, "திருதராஷ்டிரன் கண் பார்வை இல்லாதவன்' என்று தெரிய வந்தது. எனவே அவள், ""எனக்குக் கணவராக வரப் போகிறவர் பார்த்து அனுபவிக்காத இந்த உலகத்தை, நானும் பார்த்து அனுபவிக்கக் கூடாது,'' என்று கூறி, தன் கண்களை ஒரு துணியைக் கட்டி மறைத்துக் கொண்டாள். திருமணமும் சிறப்பாக முடிந்தது.
பின் காந்தாரி, பிறவியிலேயே பார்வையற்றவள் போல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள். அவள் தியாக மனப்பான்மை உடையவள், தொண்டு மனப்பான்மை கொண்டவள், பதிவிரதை, தவம் நிறைந்தவள். ஒரு உயர்ந்த இந்துப் பெண்மணிக்கு உரிய தெய்வீகக் குணங்களுடன் வாழ்ந்தாள்.
மகாபாரதப் போர் மும்முராக நடந்துகொண்டிருந்தது. போரில் பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாபெரும் வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் துரியோதனன் ஒரு நாள் தர்மபுத்திரரிடம் சென்று, ""போரில் ஆயுதங்கள் என்னைத் தாக்கினாலும், அதனால் எனக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படக் கூடாது. அதற்கேற்ப என் உடல் வஜ்ரம் போன்று உறுதி உடையதாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்,'' என்று கேட்டுக்கொண்டான்.
அவனிடம் தர்மபுத்திரர், "நமது தாய் காந்தாரி போற்றுவதற்கு உரிய தூய்மையும் தவமும் உடையவள். அவள் உன்னைப் பெற்றவள். அவள், தன் கணவர் பார்க்காத உலகத்தை, தான் பார்க்கக் கூடாது என்று நினைத்து, கண்களை மறைத்து வாழ்ந்து வருபவள். அவ்விதம் அவள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதால், அவள் கண்களில் ஓர் அபூர்வமான சக்தி இருக்கிறது. நீ அவளிடம் சென்று, அவள் எதிரில் உடைகளைக் களைந்துவிட்டு பிறந்தமேனியாக நில். அந்த நிலையில் அவளைக் கண் திறந்து உன்னை ஒருமுறை பார்க்கும்படி கேட்டுக்கொள். அவள் தன் கண்களைக் கட்டியிருக்கும் துணியை அகற்றிவிட்டு ஒரு தடவை உன்னைப் பார்த்தால் போதும். உடனே உன் உடல் வஜ்ரம் போன்று உறுதி வாய்ந்ததாகிவிடும்,'' என்று கூறினார்.
தர்மபுத்திரர் கூறியதைக் கேட்ட துரியோதனன், அதை உடனடியாக செயல்படுத்த முடிவு செய்தான். அவன் தன் தாயின் மாளிகைக்கு புறப்பட்டான்.
இந்த விஷயம் அர்ஜுனனுக்குத் தெரிய வந்தது. அப்போது கிருஷ்ணர் சிறிது தூரத்தில் இருந்த ஒரு பாசறையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரிடம் அர்ஜுனன் விஷயத்தை தெரிவித்தான்.
இதைக் கேட்ட கிருஷ்ணர், தர்மத்தை நிலைநிறுத்துவதற்கு இந்த போர் நடக்கிறது. தர்மபுத்திரர் கூறியதுபோல் துரியோதனன் செய்தால், அவன் உடல் வஜ்ரம் போன்று ஆகிவிடும். அதன்பிறகு அவனைக் கொல்ல முடியாது. அதனால் இது வரையில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும். துரியோதனின் இந்த நிலையை மாற்றுவதற்கு, நான் இப்போது ஏதாவது செய்ய வேண்டும்,'' என்று நினைத்தார்.
துரியோதனன் செய்யும் பூஜைக்கு தினந்தோறும் பூக்கள் கொண்டு போய் கொடுக்கும் தோட்டக்காரன் ஒருவன் இருந்தான். அவனது வடிவத்தில் கிருஷ்ணர், காந்தாரியின் மாளிகை நோக்கிச் சென்ற துரியோதனனைச் சந்தித்தார்.
துரியோதனனிடம், ""அரசே! நீங்கள் போருக்குப் பயந்து இப்போது போர்க்களத்திலிருந்து வந்து விட்டீர்களா? அல்லது உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வருகிறீர்களா?'' என்று கேட்டார்.
அதற்கு துரியோதனன், "நான் எதற்கும் பயப்படவில்லை. போர்க்களத்திலிருந்து ஓடி வரவும் இல்லை,'' என்று கூறிவிட்டு, தனக்கும், தர்மபுத்திரருக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தெரிவித்தான்.
உடனே தோட்டக்கார வடிவிலிருந்த கிருஷ்ணர், "அரசே! தர்மபுத்திரர் நேர்மையானவர்தான். ஆனால், அவர் இப்போது உங்கள் எதிரி. உங்கள் நாட்டைக் கைப்பற்றுவதற்காக உங்களிடம் அவர் போரிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் கூறியபடி நீங்கள் ஆடை எதுவுமின்றி பிறந்தமேனியாக அன்னையின் முன்பு சென்றால், அது அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தும். அந்தநிலையில் அவள் கண் திறந்து உங்களைப் பார்த்தால், நீங்கள் எரிந்து சாம்பலாகி விடுவீர்கள்! இப்படி ஒரு யோசனையைக் கூறி தர்மபுத்திரர் உங்களை நன்றாக
ஏமாற்றியிருக்கிறார்,'' என்று கூறினான்.
இதைக் கேட்டு துரியோதனன் குழம்பி விட்டான். அவன் கவலை உடன், "இப்போது நான் என்னதான் செய்வது?'' என்று கேட்டான்.
உடனே கிருஷ்ணர், துரியோதனனிடம் ஒரு மாலையைக் கொடுத்து, "நான் தரும் இந்த மாலையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அன்னை முன்பு சென்று உங்கள் உடைகளைக் களைந்தபிறகு, இந்த மாலையால், உங்கள் இடுப்பு மற்றும் மர்மஸ்தானத்தை மறைத்துச் சுற்றிக் கொள்ளுங்கள். அது காந்தாரிக்குக் கோபத்தை ஏற்படுத்தாது. உங்கள் எண்ணமும் நிறைவேறும்,'' என்றான்.
துரியோதனனுக்கு, அது நல்ல யோசனை என்று தோன்றியது.
துரியோதனனும் தாய் முன் வந்தான்.
அவன் வந்ததைக் கண்டு கோபமடைந்த காந்தாரி, ""நீ இப்போது போர்க்களத்தில் இருக்க வேண்டியவன். அங்கிருந்து இங்கு ஏன் வந்தாய்? சண்டைக்குப் பயந்து வந்தாயா? உன்னுடைய செயல் ஒரு கோழையின் செயல்,'' என்று படபடத்தாள்.
அவளிடம் துரியோதனன் தனக்கும், தர்மபுத்திரருக்கும் நடந்த உரையாடலைத் தெரிவித்து,
"நீங்கள் உங்கள் கண்களைக் கட்டியிருக்கும் துணியை ஒரு முறை அவிழ்த்து என்னைப் பாருங்கள்,'' என்று கேட்டுக்கொண்டான்.
காந்தாரியும் சாந்தமாகி, துரியோதனன் சொன்னபடி செய்தாள். அவள் பார்வை பட்டதும் துரியோதனன் உடலில் மாலை மறைத்திருந்த பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகள் வஜ்ரம் போன்று ஆகிவிட்டன. இது நடந்ததும் காந்தாரி, தன் கண்ணை மீண்டும் துணியைக் கட்டி மறைத்துக்கொண்டாள்.
அதன் பின் காந்தாரி, அவனது இடுப்பை மறைத்ததற்கான காரணத்தைக் கேட்டாள்.
துரியோதனன் அவளிடம், ""தோட்டக்காரன் கூறிய யோசனை இது'' என்றான்.
அது கேட்ட காந்தாரி, ""உன்னை வழியில் சந்தித்துப் பேசியவன் தோட்டக்காரன் இல்லை. கிருஷ்ணன் தான் தோட்டக்காரன் வடிவில் வந்து, உன்னிடம் இப்படி ஒரு யோசனையைக் கூறினான்,'' என்றாள்.
மேற்கூறிய ஒரு சமயத்தில் மட்டும்தான், அவள் தன் கண்களை மூடியிருந்த துணியை அவிழ்த்து ஒரு முறை இந்த உலகத்தைப் பார்த்தாள். கிருஷ்ணர், தன் பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும்' என்பதில் எப்போதும் கவனமாக இருப்பவர். அதனால் அவர் பாண்டவர்களுக்கு உதவும் பொருட்டு, தோட்டக்காரன் வடிவில் சென்று இப்படி ஒரு நாடகம் ஆடினார்.
இந்த நிகழ்ச்சி தர்மபுத்திரரின் நேர்மை, பக்தர்களைக் காப்பாற்றுவதற்கு கிருஷ்ணர் மேற்கொண்ட முயற்சி, காந்தாரியின் பெருமை ஆகியவற்றை உணர்த்துகிறது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு துரியோதனனுக்கும் பீமனுக்கும் போர் நடந்தது. அதில் துரியோதனன் காந்தாரியின் முன்பு மாலையால் மறைத்திருந்த தொடையை பீமன் தாக்கி, அவனைக் கொன்றான்.
மேற்கூறிய கதை, சுவாமி சிவானந்தர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கதையை ஆதாரமாகக் கொண்டது.
மகாபாரதத்தில், ""யதோ தர்ம: ததோ ஜய: (எங்கே தர்மம் இருக்கிறதோ, அங்கே வெற்றி இருக்கும்)'' ஒரு புகழ்பெற்ற ஸ்லோகம்
இருக்கிறது. இதைக் கூறியவள் காந்தாரி.
No comments:
Post a Comment