Tuesday 25 July 2017

வைகாசியில் பவனி வரும் பச்சை அம்மன்


விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலுள்ள வெம்பக்கோட்டை எனும் ஊரின் அருகே உள்ளது, துலுக்கன் குறிச்சி. இங்குள்ள வாழைமர சுப்பிரமணியர் ஆலயத்தில் முருகன் வாழை மரத்துடன் அருள்பாலிக்கிறார். 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தல விருட்சமும் வாழைதான். இங்கு வைகாசி விசாகத்தன்று பால்குட உற்சவம் நடக்கிறது. இவரை அந்நாளில் வழிபட குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தொலைவிலுள்ளது, பச்சை நாச்சி அம்மன் கோயில். இங்கு அன்னைக்கு சாத்தப்படும் வளையல், உடை என அனைத்துமே பச்சை நிறத்தில்தான் இருக்கிறது. இங்கு அன்னைக்கு உற்சவர் சிலை கிடையாது. மாறாக பனை ஓலையில் அன்னையின் உருவம் செய்து அதையே வீதி உலாவில் பவனி வரச் செய்கிறார்கள். வைகாசி மாத அமாவாசையை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை இங்கு 7 நாட்கள் விழா நடக்கிறது. அப்போது பச்சை நாச்சி அம்மன் வீதி உலா வருகிறார். 

நாகதோஷம் போக்கும் முருகன்

காஞ்சிபுரத்திலுள்ள குமரக்கோட்டம் முருகன் கோயிலில் முருகப் பெருமானுக்கு ஐந்துதலை நாகமும், வள்ளி, தெய்வானைக்கு மூன்று தலைநாகமும் குடைபிடித்தபடி உள்ளன. இந்த கோலத்தை ‘கல்யாண சுந்தரர்’ கோலம் என்கிறார்கள். இங்கு வைகாசி பிரம்மோற்சவத்தின் 11ம் நாள் முருகனுக்கும் வள்ளிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். அந்த சமயத்தில் வழிபட்டால் அனைத்து வகையான நாகதோஷங்களும் நிவர்த்தியாகும் என்கிறார்கள்.

வைகாசியில் கருவறை செல்லும் உற்சவ மூர்த்தி!

திருநல்லூர் பெருமனம் என்கிற ஆச்சாள்புரம் என்கிறஊரிலுள்ள சிவலோக தியாகேசர் சிவன் கோயிலில் மட்டும். உற்சவரான கல்யாண சம்பந்தரை கருவறைக்கு வைகாசி மூலம் நட்சத்திர நாளில் கொண்டு செல்கிறார்கள். திருஞான சம்பந்தர் இங்கு ஜோதியில் கலந்தார் என்ற ஐதீகத்தில் இப்படி நடக்கிறதாம். துவாக சிவன் கோயில்களில் மூலவர் உள்ள கருவறையில் சிவலிங்கத் திருமேனியே இருக்கும். கருவறையில் உற்சவ மூர்த்தியைக் கொண்டு செல்வதில்லை. விதிவிலக்காக சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஆனைக்காரன் சத்திரம் எனும் ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள ஆச்சாள்புரம். 

வைகாசியில் காவடி எடுக்கும் அதிகாரிகள்!

முருகன் வள்ளியை மணம் புரிந்த தலம். வேளி மலை முருகன் கோயில். இது நாகர்கோவிலிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முருகன் எட்டு அடி உயரத்தில் மணமகன் கோலத்திலும், வள்ளி ஆறடி உயரத்தில் மணமகள் கோலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகத் திருவிழா 6ம் நாளன்று தேவஸ்தான போர்டு ஊழியர்கள் வள்ளிக்குச் சொந்தமான சொத்து விவரங்களை பொதுமக்கள் முன்னிலையில் வாசிக்கிறார்கள். அத்தோடு வைகாசி விசாகத்தன்று, இங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கம் மன்னராட்சி காலத்திலிருந்தே உள்ளதாம்.

வைகாசியில் வளையல் காப்பு பரிகாரம்!

கும்பகோணம் திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள உமையாள்புரம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வைகாசி விசாகம் அன்று காசி விஸ்வநாதருக்கும் ஸ்ரீ குங்கும சுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கும். இதனை காணும் திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணம் உடனே நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருக்கல்யாண வைபவம் சமயத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வளையல் காப்பு வைபவம் செய்து பரிகாரம் பெறுகிறார்கள். 

வைகாசி விசாக விரதம்

விசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வருகிறது. ஆயினும் வைகாசி விசாக நட்சத்திரத்தை சிறப்பான விரதமாக அனுஷ்டிக்கிறார்கள். இதற்குக் காரணம் உண்டு. வைகாசி மாதம் சூரியன் ரிஷபத்திலிருக்கிறார். அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு, விசாக நட்சத்திரம் மூன்று மாதங்கள் துலா ராசியில்; நான்காவது பாதம் விருச்சிக ராசியில்; விசாக நட்சத்திர  நான்காவது பாதத்தையே சூரியன் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு என்பது போல, விசாக நட்சத்திர தேவதை குமரன். குமரனை சூரியன் வழிபடுவதாக ஐதீகம். எனவே குமரனை வழிபடும் சூரியனை நாமும் வழிபடுவோம் என்பது கருத்து. வைகாசி விசாக நட்சத்திரத்தன்று பகல் உணவு அருந்தி மாலையில் குமரன்குடி கொண்ட கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபடுவதால் புத்திர சோகம் நீங்கி நற்புத்திரப்பேறு  கிடைக்கும் என்பது நம்பிக்கை

No comments:

Post a Comment