சியவன முனிவர் என்பவர் முக்காலமும் உணர்ந்தவர். எதிர்காலத்தில் அரசகுலத்திற்கும், அந்தணர்களுக்கும் பெரும் போராட்டம் ஏற்படும் என்பதையும், அதனால் அந்தணர்கள் அழிவார்கள் என்பதையும் தன் ஞானதிருஷ்டியால் தெரிந்து கொண்ட அவர், அதைத் தவிர்க்க முயற்சி மேற்கொண்டார். அரசகுலத்தவருக்கு சாபம் கொடுத்து விட்டால் அவர்கள் வலிமை இழந்து விடுவார்கள் என முடிவு செய்தார்.
தன் சோதனைக்கு குசிகர் என்ற மன்னனைத் தேர்ந்தெடுத்தார். அவரது நாட்டுக்கு சென்ற சியவனரை மன்னன் வரவேற்று உபசரித்தார்.
அவரிடம்,""நான் களைப்பாக இருக்கிறேன். படுப்பதற்கு இடம் கொடு,'' என்றார் சியவனர். அவருக்கு தனி அறை ஒதுக்கிய குசிகர், அங்கே உறங்குமாறு பணிவுடன் சொன்னார். சியவனரும் படுத்தார். படுத்தவர் எழவே இல்லை. 21 நாட்கள் ஆயிற்று. அதுவரை குசிகரும், அவரது மனைவியும் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தனர். சாப்பிடக் கூட எழவில்லை. திடீரென எழுந்த சியவனர் அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அங்கிருந்து போய் விட்டார்.
மீண்டும் ஒரு சமயம் அவர் அரண்மனைக்கு வந்தார். முன்பு போலவே படுக்க இடம் கேட்டார். குசிகரும் அவ்வாறே செய்தனர். சில நாட்கள் தொடர்ந்து தூங்கிய அவர், ஒருநாள் எழுந்து, "எண்ணெய் தேய்த்து குளிக்க ஏற்பாடு செய்யுங்கள்,'' என்றார்.
குசிகரும் எண்ணெய் கிண்ணத்தை அவர் முன் நீட்ட, அதில் சிறிதளவு எடுத்து தலையில் தேய்த்தார். குளிப்பதற்கு முன்பே, ""சாப்பாடு போடு'' என்றார்.
பதிலேதும் பேசாத குசிகர் தம்பதிகள் அவர் சொன்னதை பிசகாமல் செய்தார். அவர் இலை முன் அமர்ந்ததும் அந்த உணவு எரிந்து சாம்பலாகி விட்டது. பிறகு ஏதும் பேசாமல் அங்கிருந்து போய்விட்டார். திரும்பவும் ஒருநாள் அரண்மனைக்கு வந்தார். "தேரில் உலா வரப்போகிறேன். பெரிய தேர் ஒன்று கொடு,'' என்றார்.
போருக்கு செல்ல பயன்படுத்தும் "மெகா' தேர் அங்கு கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்ட அவர் அதில் இருந்த குதிரைகளை அவிழ்க்கச் சொல்லி விட்டு, "நீங்களே தேரை இழுக்க வேண்டும்,'' என மன்னனுக்கும், ராணிக்கும் உத்தரவு போட்டார். அவர்களும் சளைக்காமல் தேர் இழுத்தனர். நாட்டு மக்கள் இதைப் பார்த்து கொந்தளித்தனர்.
"மகாராஜாவையும், ராணியையும் தேர் இழுக்க வைத்து விட்டாரே?' என மனதுக்குள் புழுங்கினர். ஓரிடத்தில் தன்னை இறக்கி விடச் சொன்ன முனிவர், அங்கிருந்த பூங்காவுக்குள் நுழைந்தார். பிறகு இருவரையும் மறுநாள் வந்து பார்க்கும்படி சொன்னார்.
குசிகரும் அவர் மனைவியும் மறுநாள் அங்கு சென்றார்கள். அங்கே ஒரு அரண்மனை இருந்தது. அங்கிருந்த சியவனர், "குசிகரே! பிற்காலத்தில் நடக்க உள்ள அசம்பாவிதம் ஒன்றை தடுக்க முயற்சித்து உனக்கு சோதனைகள் பல வைத்தேன். ஆனால் நீ கோபமே கொள்ளாமல் என் எல்லா கட்டளைகளையும் ஏற்று நடத்தினாய். அதனால் உனக்கு சாபம் தர இயலவில்லை. ஆண்டவனின் சித்தத்தை மாற்ற யாராலும் முடியாது என்பதை உணர்ந்தேன். நீங்கள் இப்போது இருப்பதை விட இன்னும் சிறப்பு பெற்று வாழ்வீர்கள்!'' என்று ஆசியளித்தார்.
நமக்கு திட்டம் தீட்ட அதிகாரம் உண்டு. ஆனால் கடவுள் நினைத்தால் மட்டுமே அது நிறைவேறும். நாம் நிற்பதும், நடப்பதும் கூட அவன் செயலால் தான். புரிகிறதா...!
No comments:
Post a Comment