திருப்புள்ளம்-பூதங்குடி
சீதையைக் காணாமல் பரிதவித்த ராமன் அவளைத் தேடித் தேடி நொந்தான். எங்கே போயிருப்பாள், யார் செய்த சதி இது என்று எதுவும் புரியாமல் குழம்பிய அவன், தன் விழிகளில் சீதையைத் தேக்கியதால், தேடிய இடமெல்லாம் அவளே நிறைந்திருப்பது போன்ற பிரமை. அது தந்த ஏமாற்றத்தைத் தாங்கியபடி தளர் நடை பயின்றான். உடன் இளவல், அவனுக்கும் மேலான வேதனை, மர்மம் விலகா குழப்பம்... அதோ, அங்கே யார் தரையில் படுத்திருப்பது? அசைய முயன்றும் முடியாத முயற்சிகளினூடே முனகலும், அரற்றலுமாக, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியபடி திணறிக்கொண்டிருப்பவர் யார்? ராமன், தன் இயல்பான கருணைப் பெருக்கத்தோடு அந்த நபரிடம் ஓடோடிச் சென்றான். என்னவோர் அதிர்ச்சி! அங்கே வீழ்ந்துகிடந்தவர், தன் தந்தையாரின் இனிய நண்பர், ஜடாயு! பட்சிகளின் பேரரசனாக விளங்கி, தசாத சக்கரவர்த்திக்கே பல உதவிகள் புரிந்தவர்.
தசரதன் மரணமடைந்த செய்தி கேட்டதும் ‘என்னுயிரும் என்னைவிட்டு நீங்காதோ’ என்று அழுது நண்பனின் இழப்பை வருந்தித் தெரிவித்தவர். தசரதரும் தான் வெறும் உடல்தானென்றும், ஜடாயுவே தன் உயிர் எனவும் நட்பு மேலிட சொல்லி மகிழ்ந்திருக்கிறார். ‘உயிர் கிடக்க உடலை விசும்பேற்றினார் உணர்விறந்த கூற்றினாரே’ என்று தசரதனின் நட்பு மனநிலையை கம்பர் விவரிக்கிறார். உள்ளமும், உடலும் துடிக்க அப்படியே மண்டியிட்டு அவரைத் தன் இரு கரங்களாலும் தாங்கிக்கொண்டான் ராமன். ‘‘என்னாயிற்று, ஐயனே, எப்படி ஆயிற்று இந்தக் கோலம்...’’ என்று கதறினான்.
அவனை ஆசுவாசப்படுத்திய ஜடாயு, அவன் மனைவி சீதையை ராவணன் தன் புஷ்பகவிமானம் மூலம் கடத்திச் செல்வதைத் தான் பார்த்ததையும், அவனிடமிருந்து அவளை மீட்க தன்னாலியன்ற எல்லா முயற்சிகளையும் செய்ததாகவும், ஆனால் அசுர வலிமை மிக்க ராவணன் தன் சிறகுகளை வெட்டி வீழ்த்தி, தப்பித்துச் சென்றுவிட்டான் என்றும் தகவல் சொன்னார். கண்களிலிருந்து நீர் கரகரவெனப் பெருகியது ராமனுக்கு. ‘‘உன் சீதை உத்தமி. என்னை ராவணன் வீழ்த்தியபோது, ‘‘ஐயா, என் பொருட்டு தாங்கள் உயிர் தரித்திருக்க வேண்டும்; என் ராமன், என்னைத் தேடி இந்த வழியாக வரக்கூடும். அப்போது அவரிடம் தாங்கள் என் நிலைமையைச் சொல்ல வேண்டும்; என்னைக் கடத்திச் செல்லும் கயவன் யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும்,’’ என்று தன்னுடைய துயர் மிகு நிலையிலும் என்னிடம் வேண்டிக்கொண்டாள்.
அவள் தர்ம பத்தினி என்பதால், நீயும் என் மகன் போன்றவன் என்பதால், என்னிடமிருந்து இன்னும் உயிர் பிரியாமல் இருக்கிறது. போ ரகுராமா, அந்த ராவணனை வதம் செய்; அவனிடமிருந்து உன் மனைவியை மீட்டுக்கொள்,’’ என்று ஜடாயு மேலும் சொன்னபோது, அப்படியே அவரை ஆரத் தழுவிக்கொண்டான் ராமன். அருகில் உடல் குலுங்க அழுதபடி நின்றிருந்தான் லட்சுமணன். தன் கடமை முடிந்த நிறைவில் விழி மூடினார் ஜடாயு. தன் தந்தைக்கு ஒப்பான அவருக்கு இறுதிக் கடன் நிறைவேற்றி அவருக்கு தன் நன்றியை தெரிவித்தான் ராமன். தன் தந்தையார் தசரதனுக்கு மூத்த மகன் என்ற பொறுப்பில் நீத்தார் கடன் நிறைவேற்ற முடியாத பாவியாகிவிட்ட தன் மன வெதும்பலை ஜடாயுவுக்கு செய்து முடித்து, ஓரளவு ஆறுதல் அடைந்தான் ராமன்.
ஆனால், இதுபோன்ற ஈமச் சடங்குகளை மேற்கொள்ளும் ஒருவன், உடன் மனைவியிருக்க, தம்பதி சமேதராகத்தான் செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறதே; இப்போது சீதையில்லையே, இந்நிலையில் யாரை தன் மனைவியாக வரிப்பது என்ற குழப்பமும் எழுந்தது. ராமன், மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், பூமிதேவி, தான் அந்த ஸ்தானத்தை நிரப்புவதாக முன்வந்தாள். அருகிலிருந்த ஒரு புஷ்கரணியிலிருந்து மேலெழுந்த அவள் அருகிலிருக்க, ராமன் ஜடாயுவுக்கான இறுதிக் கடன்களை நிறைவேற்றினான். புன்னை மரத்தடியில் அவ்வாறு அவன் கடன் நிறைவேற்றியதன் சாட்சியாக இன்றும் அந்த மரம் தல விருட்சமாகத் திகழ்கிறது.
‘சிந்தையாலும் வேறொரு மாதரைத் தொடேன்’ என்ற தன் உறுதிப்பாட்டை சற்றே, தளர்த்திக்கொண்டான் ராமன். ஜடாயுவுக்குத் தன்னால்தான் மோட்சகதி கிட்ட வேண்டும் என்ற சூழ்நிலை நிர்ப்பந்தம் நெருக்கியபோது, இப்படி சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என்றே அவன் நினைத்தான்; அப்படியே செய்யவும் செய்தான். காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள திருப் புட்குழி திவ்ய தேசத்திலும் ஜடாயுவுக்கு ராமன் இறுதிக் கைங்கர்யங்களைச் செய்தான் என்ற தலபுராணக் குறிப்பு இருந்தாலும், திருப்புள்ளபூதங்குடியைப் பொறுத்தவரை, பூமிதேவியுடன் அந்த சாங்கியங்களை அவன் அனுசரித்தான் என்ற வகையில் சற்றே மாறுபட்டிருக்கிறது.
வெறும் உணர்வு பூர்வமாக, ஜடாயுவின் உயிர்தியாகத்தை மெச்சும் வழியாக மட்டும் ராமன் இந்தக் கடமையைச் செய்யவில்லை. அந்தத் தியாகத்தை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் பிறரிடம் எடுத்தியம்பவும் செய்தான். கம்பர், யுத்தகாண்டத்தில், ஜானகிக்கு, ராமன் மானசீகமாக துணை நிற்கிறான் என்கிறார்.
‘சரண் எனக்கு யார்கொல் என்று சானகி அழுது
சாம்ப
அரண் உனக்கு ஆவேன், வஞ்சி, அஞ்சல் என்று
அருளின் எய்தி
முரண் உடைக்கொடியோன் கொல்ல, மொய்
அமர் முடித்து தெய்வ
மரணம் என்தாதை பெற்றது என்வயின் வழக்கு
அன்று ஆமோ’
என்பது அப்பாடல். ‘என்னை யார் காப்பார்கள்?’ என்று ஜானகி வருந்தி நிற்க, ‘நானிருக்கிறேன். நான் உன்னைக் காப்பேன். உன்னைக் காக்க ராவணனுடன் போரிட்டு தெய்வ மரணம் அடைந்த என் தந்தை போன்ற ஜடாயுவின் அற்புதப் பண்பினை நானும் மேற்கொள்வேன். ஆகவே அஞ்சாதே,’ என்று மானசீகமாக அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான் ராமன். இப்படி, தன் தந்தைக்கு நிகரான ஜடாயுவுக்கு அந்திமக் கிரியைகளை நிறைவேற்றிய ராமன், பிறகு இத்தலத்தில் ஓய்வு கொண்டான். ஏற்கெனவே சீதையைப் பிரிந்த துக்கம், இப்போது ஜடாயுவை இழந்துவிட்ட சோகம் எல்லாமாகச் சேர்ந்து அவனை மிகவும் களைப்படைய வைத்திருக்கும் போலிருக்கிறது. ஆகவே இந்த புள்ளபூதங்குடியில் ஓய்வெடுத்துக்கொண்டான்.
அந்த நிலையே சயனக்கோல ராமபிரானாக இன்றளவும் நமக்கு தரிசனம் நல்குகிறது. ஜடாயுவாகிய புள்ளிற்கு மோட்சகதி அளித்து, அதன் பூத உடலுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை ராமன் செய்ததால் இந்தத் தலம் புள்ளபூதங்குடி என்றாகியது. ஸ்ரீ ரங்கம் போலவே இந்தத் தலமும் காவிரி, கொள்ளிடம் நதிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. நீத்தார் கடன் நிறை வேற்றும் பாரம்பரியத்தில் வந்த ஒவ்வொருவரும், வடநாட்டிலுள்ள பிரபல மான கயா ஸ்தலத்தில் அதனை மேற்கொண்டால் என்னென்ன நற்பலன்கள் கிட்டுமோ அந்தப் பலன்கள் எல்லாம் கொஞ்சமும் குறைவின்றி, இந்தத் தலத்தில் மேற்கொள்பவர்களுக்கும் கிட்டும் என்கிறது தல புராணம்.
வீரதீர பராக்கிரமத்தோடு உலா வந்தவன் சற்று ஒதுங்கி கண்ணயர்ந்தால், அவன் பிறரால் கவனிக்கப்படாமல் போய்விடுவானோ! இந்த ராமனாலும் அப்படி ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. அப்படி கவனிக்காமல் போய் சங்கடப்பட்டவர், வேறு யாருமல்ல, திருமங்கையாழ்வாரேதான்! தன் திவ்ய தேச உலாவின்போது இந்தத் தலத்திற்கு வந்த ஆழ்வார், இங்கிருந்த உற்சவ மூர்த்தியைக் கண்டும் காணாமல் போய்விட்டார். ஆமாம், யாரோ இரண்டு கரங்கள் கொண்ட ஒரு தெய்வம் என்றுதான் அவர் கருதினார். தன் அனுபவத்தில், கண்ணோட்டத்தில், தன் பெருமாளின் திவ்ய கோலம் நான்கு கரங்களைக் கொண்டதாகவே இருந்தது! ஆகவே, திரும்பிச் செல்ல யத்தனித்த அவர், தன் பின்னாலிருந்து திடீரென ஓர் ஒளி வெள்ளம் பரவியதை உணர்ந்தார். சட்டென்று திரும்பிப் பார்த்தார்.
அப்படியே செயலிழந்துவிட்டார். ஆமாம், அங்கே சங்கு சக்கரதாரியாக நான்கு கரங்களுடன் அவருக்கு ராமன் காட்சி தந்தார். அந்தக் காட்சியைப் பார்த்த அவர் அப்படியே நெகிழ்ந்து, தன் செயலுக்காக பெரிதும் வருந்தினார். ‘அடடா, இப்படி பரந்தாமன் எனக்குக் காட்சி கொடுக்காவிட்டால், இந்த திவ்ய தேசத்தை நான் உதாசீனப்படுத்திவிட்ட குற்றத்துக்கு ஆளாகியிருப்பேனே! என் அலட்சியம், நுணுகி அறிய இயலாத அறியாமையையும் பொருட்படுத்தாமல், அற்புதமானதொரு காட்சி தந்து என்னை ஆட்கொண்ட பெருமாளே,’ என்றெல்லாம் உருகி பிரார்த்தித்தார். உடனேயே, ‘அறிவதறியான் அனைத்துலகும் உடையான்’ என்று தொடங்கி பத்துப் பாசுரங்களால் அந்த ராமனை மங்களாசாசனம் செய்து மகிழ்ந்தார் திருமங்கையாழ்வார்.
அவரைப் போலவே நமக்கும் இந்தத் தலத்தில் மட்டும்தான் ராமன் நான்கு திருக்கரங்களுடன் சயனக் கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவர் வல்வில் ராமன் என்றழைக்கப்படுகிறார். வில்லாற்றலில் வல்லவன், தனக்கு உதவியோருக்கு தாராளமாகப் பிரதியுதவி செய்பவன். தனக்காகப் பிறர் மேற்கொண்ட தியாகங்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டவன் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். இந்த வல்வில் ராமனை சூர்ப்பணகை பிரமித்துப் போற்றுகிறாள். அவள் கண்ட ராமன் எப்படிப்பட்டவன்?
‘செந்தாமரைக் கண்ணோடும், செங்கனி வாயினோடும்
சந்தார்ந்த தடத்தோளோடும் தாழ்தடக் கைகளோடும்
அமதார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றமென்ன
வந்தான் இவன் ஆகும் அவ்வல்வில் இராமன் என்பான்’
என்று தன் தமையன் ராவணனிடம் வர்ணிக்கிறாள். அவள் கண்ட சீதை எத்தகைய அழகுடையவள் என்று ராவணன் கேட்டதற்கு, அதற்கு முன் தான் கண்ட ராமனை இப்படி வர்ணித்துச் சொன்னாள் சூர்ப்பணகை! கருவறையில், ஆதிசேஷன் குடை பிடிக்க, புஜங்க சயனனாகத் தோற்றமளிக்கும் இந்த ராமனின் நாபியிலிருந்து தோன்றும் கமலத்தில் பிரம்மன் கொலுவிருக்கிறான். திருவடியில் லட்சுமணன், அனுமன். ஜடாயுவுக்குக் காரியம் செய்ய துணையாக வந்து உதவிய பூமிதேவியும் திருவடியில் வீற்றிருக்கிறாள். ராமனின் அந்த எழிலார்ந்த தோற்றம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. கூடவே, ‘ராமா, எழுந்திரு. ஓய்வெடுத்தது போதும். இலங்கைக்குச் சென்று ராவணனை உடனே வதம் செய்து சீதையை மீட்டெடு,’ என்று இறைஞ்சவும் தோன்றுகிறது!
தாயாருக்கு தனி சந்நதி. மூலவர் ஹேமாம்புஜவல்லி எனவும், உற்சவர் பொற்றாமரையாள் என்றும் வணங்கப்படுகிறார்கள். மூலவர் தாயாரின் சந்நதியில் ஆண்டாள் வீற்றிருக்கும் கோலத்தில் அருள்கிறாள். இதனால் ஆண்டாளுக்குத் தனியே சந்நதி இல்லை. பிராகாரத்தில் நரசிம்மர் தனியே சந்நதி
கொண்டிருக்கிறார். இவர், யோக நரசிம்மர். இவர் காலடியில் ராமன் விக்கிரகம் காணப்படுகிறது. இந்த ராமருக்கும் சரி, மூலவர் வல்வில் ராமருக்கும் சரி, கண் திருஷ்டி பட்டுவிடாதபடி இந்த நரசிம்மர் பார்த்துக்கொள்கிறாராம்! அதுமட்டுமல்ல, பக்தர்களின் உத்யோகம், திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீர்த்து வைக்கிறார்! இவர் சந்நதியில் இதுபோன்ற கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல், அவ்வாறு அவர் நிறைவேற்றி வைத்ததற்காக நன்றி தெரிவிக்கவும், அர்ச்சனை, ஆராதனை மூலமாகக் காணிக்கை செலுத்தவும் பக்தர்கள் வந்து குழுமுகிறார்கள்.
வடமொழி, இந்த ராமனை ‘த்ருட கார்முக ராமன்’ என்றும் இந்தத் தலத்தை ‘பக்ஷி பூத நகரி’ என்றும் வர்ணிக்கிறது. திருமங்கையாழ்வாரின் பத்துப் பாசுரங்களில் ஒன்றை சுவைப்போம்:
‘கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம்
பள்ளச் செறுவில் கயல் உகளப் பழனக் கழனி அதனுள் போய்
புள்ளுப்பிள்ளைக்கு இரைதேடும் புள்ளம் பூதங்குடிதானே’
‘வாமனனாக அவதரித்து, மகாபலியை தந்திரமாக பாதாள லோகத்தினுள் அமிழ்த்தி, அனைத்துலகையும் தன் வசப்படுத்திக்கொண்டவன், முதலைப் பிடியிலிருந்து கஜேந்திரனைக் காத்து மோட்சமளித்து ரட்சித்தவன், அந்தத் தூய பெருமான் நிலைத்து வாழும் தலம் இது. இங்கே நீர் நிறைந்த ஆழமான வயல்களில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. தாய்ப் பறவைகள் அந்த வயல்களில் தம் குஞ்சுகளுக்குத் தகுந்த இரை தேடிப் பிடித்து ஊட்டுகின்றன. இந்தத் தலமே திருப்புள்ளபூதங்குடியாகும்’ என்று வர்ணிக்கிறார் ஆழ்வார். கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையைக் கடந்து, திருவைகாவூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புள்ளம்பூதங்குடி. கும்பகோணத்திலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு.
No comments:
Post a Comment