Friday 28 July 2017

அருள் பொழியும் பொன்மய லிங்கம்

தொடர்புடைய படம்

செம்பனார்கோயில்

சிவனை அழைக்காமல் அவமதித்து யாகம் செய்த தந்தை தட்சனுக்குப் புத்திமதி கூறி சிவனை அழைக்க பார்வதி தேவி புறப்பட்ட இடமாகவும், அகம்பாவம்  தலைக்கேறிய தட்சனை அழிக்க வீரபத்திரர் உருவாகிச் சென்ற இடமாகவும், செம்பொன்மயமான சிவலிங்கம் உருவாகிய செம்பொன்னார்கோயில் தலம் திகழ்கிறது.  பெரும்தவம் புரிந்தவனும் பிரம்மாவின் மானசபுத்திரர்களில் ஒருவன் தட்சன். தன் அரிய தவத்தால் உமாதேவியை மகளாகப் பெற்று சொர்ணபுரீஸ்வரப்  பெருமானுக்கு மணமுடித்து வைத்தார். கயிலாயத்திற்கு சென்ற தட்சனுக்கு சிவகணங்கள் மரியாதை தரவில்லை என்று கோபித்துக்கொண்டு திரும்பினான்.  இதனால், தான் நடத்தும் யாகத்திற்கு சிவனை அவன் அழைக்கவில்லை. அவனைத் திருத்தி சிவனை அழைக்க வைக்கவேண்டும் என்று பார்வதி இந்த  சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சென்றாள். தட்சன் மரியாதை தரமாட்டான் என்று தேவியை ஈசன் தடுத்தார். பார்வதிதேவியோ கேட்காமல்  யாகம் நடக்கும் திருப்பறியலூர் சென்றாள். 

‘‘மண்டையோட்டில் பிச்சை எடுத்து சுடுகாட்டில் வசிக்கும் அந்த சிவனை அழைக்க வேண்டிய அவசியமில்லை’’என்று அவமரியாதையாகப் பேசினான் தட்சன்.  இதனால் ஆத்திரமடைந்த பார்வதிதேவி, அவன் யாகம் அழிய சாபமிட்டுத் திரும்பினார். சிவனிடம் சென்று தட்சனைத் தண்டிக்க வேண்டுமென  கேட்டுக்கொண்டாள். உடனே வீரபத்திரனை உருவாக்கி திருப்பறியலூரில் தட்சனது யாகத்தையும், அவனையும் அழித்துவர இறைவன் உத்தரவிட்டார்.  அந்த வீரபத்திரர் செம்பொன்னார்கோயிலிலிருந்து சென்று திருப்பறிலூரில் நடைபெற்ற யாகத்தையும் அழித்து தட்சனையும் சம்ஹரித்துவிட்டு திரும்பினார். பின்  தாட்சாயிணியின் வேண்டுகோளின்படி தட்சனை ஆட்டு முகமுடையவனாக உயிர்ப்பித்தருளினார் சிவன்.

மேலும் சிவநிந்தை புரிந்த தட்சனின் மகள் என்ற பாவம் தீரவேண்டி இத்தலத்தில் தாட்சாயிணி கடுந்தவம் புரிந்தாள். சொர்ணபுரீஸ்வரப் பெருமான் அருள்கூர்ந்து  தாட்சாயிணியை தேற்றி, ‘சுகந்தளா என்னும் மருவார்குழலியே எமது துணைவியாக எழுந்தருள்வாயாக’ என ஆணையிட்டார். அதனால் இந்த ஆலயத்தில்  சுவர்ணேசப் பெருமானும், மருவார்குழலியும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்குள்ள காவிரித் துறையில் எலும்புகளைப் போட்டால் அவை பூ  மரங்களாகிப் பூக்கும். சாதுக்கள் அப்பூக்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பர். இத்தலத்தில் தவம் எளிதில் சித்தியாகும். ரதி இறைவனை இங்கே வழிபட்டு  மன்மதனைக் கணவனாகப் பெற்றாள். லட்சுமி இத்தலத்து பெருமானை நோக்கித் தவம் இயற்றி திருமாலை மணவாளனாகப் பெற்றார். அதனால் லட்சுமிபுரி என  இத்தலத்திற்கு ஒரு பெயர் உண்டாயிற்று.  

இந்திரன் இங்கே தவம் செய்து, இத்தலத்தில் உள்ள சூர்ய தீர்த்தத்தில் கிணறு ஒன்று அகழ்ந்து, சகல தீர்த்தங்களையும் அக்கிணற்றிலே ஆவாகித்து தினமும்  நீராடி, இறைவனைப் பூசித்து, விருத்திராசுரனை வெல்ல வஜ்ஜிராயுதம் பெற்றான். இந்திரன் இப்பேறு பெற்றமையால் இந்திரபுரி எனவும் இத்தலம் பெயர்பெற்றது. பிருது அரசன் அந்தணர்களுக்கு வீடுகளை அமைக்க மரங்களை வெட்டினார். ஆனால் அந்த மரங்களை அழிக்கமுடியவில்லை. ‘அரசே இங்கு முனிவர்கள்  மரங்களாக இருந்து தவம் செய்கிறார்கள். ஆதலால்தான் அவற்றை அழிக்க முடியவில்லை,  சிறிது தூரத்தில் சூரிய புஷ்கரணி என்ற தீர்த்தமும் அதன் கரையில்  லிங்கமும் உள்ளது’ என அசரீரி சொல்லியது. அரசன் அங்கு சென்றபோது செம்பொன்நிறமாக லிங்கம் காட்சியளித்தது. 

அதனை வழிபட்ட மன்னன், அங்கே வந்த அகத்திய முனிவரை வணங்கி இந்த லிங்கம் பொன்மயமாக காட்சியளிப்பதற்கு என்ன காரணம் என கேட்டான்.  
இத்தலத்திற்கு எதிரில் சூரிய தீர்த்தத்தை உருவாக்கி, அதில் நீராடி, 12 சூரியதேவர்களும் சிவனை வழிபட்டதாக புராணம் கூறுகிறது. அதற்கு ஆதாரமாக சித்திரை  மாதம் 7ம் நாள் முதல் 18ம் நாள்வரை காலையில் சூரியனின் கிரணங்கள் மூலவர் மேல் படுகிறது. அப்பன்னிரண்டு நாட்களிலும் விசேஷ பூஜைகள்  நடைபெறுவதுடன், ஒன்பதாம் நாள் பெருந்தேர் விழாவும் கொண்டாடுவார்கள். அழகிய கோபுர வாயிலைக் கொண்டு விளங்குகிறது கோயில். கோயிலின்  முகப்பிலிருந்து நேரே பார்க்க சொர்ணபுரீஸ்வரர் சந்நதி தெரிகிறது. 

பொன்னார் மேனியன் இங்கு கருணை கொண்டு அமர்ந்திருக்கிறானே என வியப்பு மேலிடுகிறது. இங்கு அம்பாள் மருவார்குழலி, தனிச்சந்நதியில் அருள்கிறாள்.  இக்கோயிலில் சுவாமி சந்நதி கிழக்கு நோக்கியும் அம்பிகை சன்னதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். ‘மருவார் குழலி மாதோர் பாகமாய்த்  திருவார் செம்பொன் பள்ளி மேவிய கருவார் கண்டத் தீசன் கழல்களை மருவா தவர்மேல் மன்னம் பாவமே,’என்று ஞானசம்பந்தரும், ‘தந்தையும் தாயுமாகித்  தானவன் ஞானர்த்தி முந்திய தேவர்கூடி முறைமுறை இருக்குச்சொல்லி  எந்தைநீ சரணம்என்றங் கிமையவர் பரவி ஏத்தச் சிந்தையுள் சிவமதானார்  திருச்செம்பொன் பள்ளியாரே,’ என நாவுக்கரசரும் உருகுகிறார்கள். சப்த கன்னியரின் சந்நதியும் அருகேயே உள்ளது. 

கோஷ்ட கணபதி, வீரபத்திரர், சூரியன், நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர் என தனித்தனி சந்நதி. வீரபத்திரருக்கு சிறிய சிலையும் உண்டு. செம்பனார்கோயிலுக்கு  அருகில் உள்ள திருக்கடையூரில் அறுபதாம் கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி)போன்ற ஆயுளை நீடிக்கச் செய்யும் பூஜைகள் நடத்துவதற்கு முன்பாக இந்த  ஆலயத்திற்கு வந்து சூரியதேவர் ஏற்படுத்திய இத்திருக்குளத்தில் புனித நீராடிச் சென்றால் கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார்கள். எதிரியை அழிக்கப் புறப்பட்ட  தலமும், பாதிக்கப்பட்டவருக்கு விமோசனம் கொடுத்த தலமும் இது என்பதால் பக்தர்கள் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்த வண்ணம் உள்ளனர். இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. 

No comments:

Post a Comment