Sunday, 23 July 2017

நீடித்த வளம் சேர்க்கும் நிலைமாலை பிரார்த்தனை


மீனாட்சியைத் திருமணம் புரிய சிவபெருமான் பூலோகம் வந்தார். அவருடன் பிரம்மா, திருமால், இந்திரன், நாரதர், தேவர்கள், முனிவர்கள் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான சிவகணங்களும் புடைசூழ வந்தார்கள். உலகெலாம் புரந்தருளும் ஈசனையே தங்களுடைய மருமகனாக அடையப்பெற்ற பேற்றினை நினைத்து மனம் உருகினாள் மீனாட்சியின் தாய் காஞ்சனமாலை. ஏற்கெனவே முந்தைய ஜன்மத்தில் வித்யாவதியாகப் பிறந்த தான், அம்பிகையே தனக்கு மகளாக வந்துதிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டதன் பயனை, இப்போது காஞ்சனமாலையாக அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் அவள். திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமால் தாரைவார்த்துக் கொடுக்க, மீனாட்சிசுந்தரேஸ்வரர் உலகநன்மைக்காகக் கைத்தலம் பற்றினர். 

திருமணம் முடிந்த பிறகு, அனைவரும் பிரியாவிடை பெற்றனர். ஆனால், நான்கு சிவகணங்கள் மட்டும் தம் தலைவனான ஈசனை விட்டுப் பிரிய முடியாத ஏக்கத்தில் அங்கேயே தங்கிவிட்டார்கள். கணப்பொழுதும் கண்ணிமைக்காமல் ஈசனுக்கும், அம்பிகைக்கும் காவலாக விளங்கும் பொருட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு திசைகளிலும் அவர்கள் தனியே ஆலயங்களில் கொலுவிருந்தார்கள். அந்த நால்வரில் குறிப்பிடத்தக்கவர் வடக்கு வாசலில் கோயில் கொண்டிருக்கும் முனீஸ்வரன். மற்ற மூவர், கிழக்கு வாசலில் விட்டவாசல் முனீஸ்வரன், தெற்கு வாசலில் ஜடா முனீஸ்வரன், மேற்கு வாசலில் பாண்டி முனீஸ்வரன்.

வடக்கு வாசல் முனீஸ்வரனை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் நூற்றாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இன்றளவும் அவரை வந்து தரிசித்து ஆசிபெற்றுச் செல்கிறார்கள். வெற்றிலைபாக்கு, வாழைப்பழம், ஊதுபத்தி, சிறு பூமாலை, தேங்காய் இவற்றோடு சுருட்டு ஒன்றும் இந்த முனீஸ்வரனுக்குப் படைப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. சுருட்டு படைப்பதன் காரணத்தை யாராலும் விளக்க இயலவில்லை. ‘அது ஒரு சம்பிரதாயம், அவ்ளோதான்’ என்றே பதில் கிடைத்தது. தங்கள் வம்சம் நீடிக்கவும், தொடர்ந்து வளம்பெறவும் முனீஸ்வரனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் மட்டுமல்லாமல், இவரது கீர்த்தியைத் தெரிந்துகொண்ட பிற பக்தர்களும் வந்து இவரை வணங்கிச் செல்கிறார்கள். முனீஸ்வரனுக்கு சில விசேஷ பூஜைகளும் நடைபெறுவதுண்டு. 

அப்போது அருகிலிருக்கும் காண்டாமணி ஒலிக்க, வெகு நேர்த்தியாக அந்த பூஜைகள் நடைபெறுகின்றன. பல வருடங்களுக்கு முன்னால், இவரிடம் வேண்டிக்கொண்டவர்கள், தங்களுடைய கோரிக்கை நிறைவேறியதும், இவருடைய சந்நதிக்கு முன் வந்து, இவருக்கு முதுகு காண்பித்தபடி நின்று கொள்வார்களாம். பிறகு ஒரு வாழைப்பழத்தை உரித்து, தோலைக் கையில் வைத்துக்கொண்டு பழத்தை மட்டும் பின்னோக்கி முனீஸ்வரன் கோயிலுக்கு மேல் எறிவார்களாம். ஆனால், நாளாவட்டத்தில் அவ்வாறு எறியப்பட்ட பழங்களை சுத்தப்படுத்த இயலாமல் போய், நாற்றமெடுக்கவே, அந்தவகைப் பரிகாரத்தைத் தடுத்துவிட்டார்களாம். நிலைமாலை சாத்துவது என்பது இன்னொரு பிராயசித்தம். 

மீனாட்சிசுந்தரேஸ்வரர் இருவரின் அருளையும் முனீஸ்வரர், நிலைமாலை சாத்தும் இந்தப் பரிகாரம் மூலமாகப் பெற்றுத் தங்களுக்குத் தருகிறார் என்று பக்தர்கள் பரவசத்துடன் கூறுகிறார்கள். அதாவது, மீனாட்சி அம்மன் கோயிலில் வடக்கு கோபுரத்தில், மேலிருந்து நான்காவது நிலையிலிருந்து நீண்ட ஒரு மலர் மாலையைத் தொங்கவிடுகிறார்கள். முற்றிலும் மலர்களால் ஆன மாலை அல்ல அது, ஒரு அடிக்கு நாலைந்து பூக்கள் வீதம் நாரில் தொடுக்கப்பட்ட மாலை. நான்காவது நிலையிலுள்ள யாளியின் கழுத்தில் அவ்வாறு தொங்கவிடப்படும் அந்த மாலை, அப்படியே ஐந்து, ஆறு, ஏழு என்று அடுத்தடுத்த நிலைகளிலுள்ள யாளிகளின் கழுத்தைச் சுற்றியபடி இருபுறமும் கீழே இறங்குகிறது. 

அவ்வாறு இறங்கும் அந்த மாலையை அப்படியே முறுக்கிப் பிணைத்து, கோபுரத்தின் இடப்புறம் இருக்கும் முனீஸ்வரன் கோயிலுக்கு முன்பாக மேலே விதானத்தை ஒட்டி இழுத்துச் சென்று கட்டிவிடுகிறார்கள். அடுத்து யாரேனும் இதுபோல பிரார்த்தித்துக்கொள்ளும்வரை இந்த மாலை அப்படியே மீனாட்சிசுந்தரேஸ் வரர் அருளை முனீஸ்வரர் பெற்றுத் தரும் பாவனையில் தொங்கிக்கொண்டிருக்கும். அடுத்த பிரார்த்தனையாளர் முறை வரும்போது முதலில் சூட்டப்பட்ட மாலை அவிழ்க்கப்பட்டு, புதிதாக நிலைமாலை அணிவிக்கப்படும். நிலைமாலை சூட்ட கட்டணம் உண்டு. (தற்போது ரூ.500/) முனீஸ்வரன் கோயில் நிர்வாகியிடம் பணம் செலுத்தினால், அவர் நாள் குறிப்பிட்டுச் சொல்கிறார். 

அன்று வந்து நிலைமாலை சாத்தப்படுவதைக் குறிப்பிட்ட பக்தர் காணலாம். ஒரேநாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்தர்களுக்காகவும் நிலைமாலைகள் சாத்தப்படுகின்றன. இதற்காக முனீஸ்வரன் கோயில் பணியாளர் ஒருவர் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தில் உட்புறமாக ஏறிச் சென்று, மேலிருந்து ஒவ்வொரு நிலையாக, உள்வழியாகவே இறங்கி வந்து மாலையைச் சாற்றுகிறார். ஒரு பெரிய பந்தாக மாலையைச் சுற்றிக்கொண்டு ஒவ்வொரு நிலையிலும் அதற்கு இணைப்பு கொடுத்து நிறைவாக, கீழே வருகிறார். அதேசமயம் பழைய மாலையைக் கழற்றிக்கொண்டு வந்துவிடுகிறார். 

முனீஸ்வரனை ‘மொட்ட கோபுரத்தான்’ என்றும் செல்லமாக அழைக்கிறார்கள். இவருடைய கோயிலுக்கு மேலே ஒரு கோபுரம் கட்ட முயற்சிக்கப்பட்டதாகவும், அந்த முயற்சிகள் பல கைகூடாமல் போனதாகவும், ‘என் ஈசன் கோயில்கொண்டிருக்கும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குதான் கோபுரம் வேண்டும், ஆகவே எனக்குக் கோபுரம் வேண்டாம்’ என்று முனீஸ்வரனே மறுத்திருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் மூன்று கலசங்கள் கொண்ட ஒரு சிறு விமானம் இவருடைய கருவறைக்கு மேலாக அழகு செய்கிறது. முனீஸ்வரன் கோயில் விபூதி பிரசாதம் சுகந்த நறுமணம் கொண்டது, எந்நாளும் அவரது பேரருள் நம் வாழ்க்கைத் தோட்டத்தில் குன்றா மணம் வீசும் என்பதை உணர்த்துவதுபோல

No comments:

Post a Comment