பொதுவாக பங்குனி, சித்திரை மாதங்களில் சூரிய பகவானுக்கு நம்மீது மிகவும் பாசம் பொங்கி வந்து தன் உஷ்ண பார்வையை அதிகமாக செலுத்துவார்.. மாரியம்மன் மழைக்கு உகந்த கடவுள் அல்லவா?.. மாரி என்றால் மழை தானே? சூரியனின் உஷ்ணத்தில் இருந்தும் அதனால் வரும் நோய் நொடிகளில் இருந்தும் தங்களை காக்கவும், மழை தர வேண்டியும் மக்கள் மாரியம்மனுக்கு இந்த மாதங்களில் கொண்டாடும் விழாக்கள் தான் பங்குனி மற்றும் சித்திரை பொங்கல் விழாக்கள். இந்த திருவிழாக்கள் சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் உட்பட மாவட்டம் முழுவதிலும் உள்ள அம்மன் கோயில்களில் பங்குனி, சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) எட்டு சமூகத்தார் உறவின்முறை பொது மகமைப்பண்டுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் திருத்தங்கல்லில் உள்ளது.
இந்த கோயிலில் 70ம் ஆண்டு பங்குனிப்பொங்கல் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து அருள் பெறுவர். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் விஷேச அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. அம்மன் பல்வேறு வாகனங்கள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் திருவிழா இன்று நடைபெறுகிறது. பக்தர்கள் பொங்கல் வைத்தும் பூச்சட்டி எடுத்தும், கயிறு குத்துதல், ஆயிரங்கனண்பானை, உருவம் மற்றும் பிற நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவர். நாளை செவ்வாய்க்கிழமை முளைப்பாரி திருவிழா நடைபெறுகிறது.
காலையில் பால்குடம் எடுத்து அம்மன் வழிபாடு நடைபெறும். மாலையில் மேளதாளம் முழங்க முளைப்பாரி திருவீதி உலா உற்சவம், மாவிளக்கு எடுத்தல் நடைபெறுகிறது. வரும் 13ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பொங்கல் திருவிழாவில் அம்மனுக்கு அக்னி சட்டியும், ஆயிரங்கண்பாணையும் எடுத்து அருளோடு வலம் வந்து வாயார வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இந்த திருக்கோயிலின் சிறப்பாகும். உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்தல் நல்லது. குறை நிவர்த்தி வேண்டி திருகோயிலில் தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், மக்கள் பேறு அளித்தும், மாங்கல்ய பாக்கியம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனைத் தரிசித்து அருள்பெறுவோமாக! பொங்கல் திருவிழா ஏற்பாடுகளை திருத்தங்கல் எட்டு சமூகத்தார் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment