Sunday 23 July 2017

நாரதர், திருமாலுக்கும் வரம் அருளிய களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரர்


களக்காடு மலை என்று சொல்லப்படும் வௌ்ளிமலையின் அடிவாரத்தில் ஓடும் பச்சையாற்றின், ஆருத்ரா நதியின் கரையை ஒட்டிய, களா மரங்கள் அடர்ந்த காட்டில் தோன்றிய ஊர் களக்காடு. இவ்வூர் களந்தை என்றும் அழைக்கப்படுகிறது. வானவன் நாடு, பச்சையாற்று போக்கு, சோழகுலவல்லிபுரம் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்தக் கோயில் கொல்லம் ஆண்டு 640ல் வீரமார்த்தாண்ட வா்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இறைவன் புன்னை மரத்தடியில் தோன்றியதால் இறைவனது திருநாமம் ‘புன்னைவனநாதன்’ என்றழைக்கப்படுகிறது. இறைவி திருநாமம் ‘கோமதி தாய்’ ஆகும்.  

இந்த கோயில் கல்வெட்டில் இறைவன் திருநாமம் ஸ்ரீபுரமெலிச்வர முதலிய நயினார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீபுரம்’ என்பது கோட்டை என்பதையும், ஸ்ரீசிவனார் முப்புரங்களை எரித்து வரம் தந்தவர்’ என்ற பொருளையும் குறிக்கிறது. மூன்று புரங்களையும் ஆண்டு வந்த மூன்று அசுர சகோதரர்கள் சிவபக்தர்களாக இருந்த நிலையிலும், அவர்கள் தேவர்கள் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தனா். இதனால் சிவபெருமான் மூன்று கோட்டைகளையும் தனது புன்னகையாலேயே எரித்து மூன்று அசுர சகோதரர்களையும் வதம் செய்தார். 

இறுதியில் அசுரர்கள் மனம் திருந்தியதால் அவர்களில் இருவரை தனது திருக்கோயிலின் வாயில் காவலர்களாகவும், மற்றொருவரை தான் திருநடனம் புரியும்போது அருகே நின்று மத்தளம் வாசிக்கும்படியும் வரம் அருளினார். முப்புரத்து அசுரர்கள் சிவபூஜையை மறக்கும்படி செய்த நாரதரும், திருமாலும் கண்ணிழந்து இந்த தலத்திற்கு வந்து புன்னைவனநாதனை வேண்டி தவம் இருந்து, இழந்த கண்களைப் பெற்றனா். இறைவனது திரு நடனத்தைக் காணும் வரத்தையும் பெற்றனா். புன்னைவனநாதா் சத்தியவாக்கு அருளியதால் ஸ்ரீசத்தியவாகீஸ்வரர்’ என்ற திருநாமம் வழங்கப்பட்டது. புராண காலத்தில் இந்த ஊருக்கு ஸ்ரீகந்தர்ப்ப வனம்’ என்ற பெயரும் இருந்துள்ளது.

இக்கோயிலில் 135 அடி உயரமுள்ள 9 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் உள்ளது. ஒவ்வொரு நிலையிலும் அழகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மணி மண்டபத்தின் இரு பகுதிகளிலும் தலா 16 தூண்கள் வீதம் 32 தூண்கள் ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணிலும் தனித்தனியே நாத ஓசை எழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் குதிரை, யானை மீதேறி கயிலை மலை செல்லும் காட்சியும், முகப்புப் பகுதியில் வீரமார்த்தாண்டா் சிலையும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 

இராஜகோபுரத்தின் நிழல் தரையில் விழுவதில்லை என்பதும் இக்கோயிலின் சிறப்பாகும். இந்த கோயில் சேரன்மகாதேவியிலிருந்து வள்ளியூர் செல்லும் வழியில் களக்காடு கோட்டை என்ற பகுதியில் அமைந்துள்ளது.  நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி வழித்தடத்தில் 40 கி.மீ. தொலைவில் களக்காடு உள்ளது. திருநெல்வேலி, நாகா்கோவில், பாபநாசம், தென்காசி, நாங்குநேரி ஆகிய ஊர்களிலிருந்து இங்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.

மூலவர் மீது சூரிய ஒளி 

புவியியலில் சம இரவு பகல் நாட்கள் எனக் கூறப்படும் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு நேரே பிரகாசிக்கும் தினங்களான மார்ச் 20ஐ ஒட்டிய 3 தினங்கள், செப்டம்பர் 22ஐ ஒட்டிய 3 நாட்கள் சூரிய உதயத்தின்போது சூரிய ஒளி மூலவர் மீது படும் வகையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. வானியல் கண்ணோட்டத்துடன் கட்டப்பட்ட இது தமிழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த உதாரணம் ஆகும்.

No comments:

Post a Comment