உள்ளம் உருகி ஓடி வருபவர்களுக்குப் புகலிடம் அளிக்கும் ஊட்டத்தூர் பற்றி நீங்கள் `சக்தி விகடன்' மூலம் அறிந்திருப்பீர்கள். அங்கிருக்கும் அருள்மிகு சுத்த ரத்தினேஸ்வரர் ஆலயம் பற்றி விரிவாக நாம் வழங்கியிருந்தோம். அக்கோயிலுக்கு மிக அருகிலேயே கோயில் கொண்டிருக்கிறாள், அருள்மிகு செல்லியம்மன்.
‘குறைகளையும் பிரச்னைகளையும் அவள் பாதக்கமலங்களில் கொட்டித் தீர்த்து, சரணாகதி அடைந்துவிட்டால் போதும்... தாய்க்கே உரிய பரிவோடு பிரச்னைகளையெல்லாம் நீக்கி, புது வாழ்க்கையைத் தரும் அம்பிகை எங்கள் செல்லியம்மா’ என்று செல்லியம்மனின் மகிமை குறித்து பகிர்ந்துகொள்கிறார்கள் உள்ளூர் மக்கள். சிறிய கோயில்தான் என்றாலும் மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழ்கிறது செல்லியம்மனின் சந்நிதானம்.
‘‘ராஜராஜசோழனால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் இது. அதுக்கான வரலாற்று ஆதாரம் இருக்குன்னு சொல்றாங்க. போர் சமயங்களில், சோழ மன்னர்கள் இங்கே வந்து செல்லியம்மனைக் கும்பிட்டுத்தான் போருக்குப் போவாங்கன்னு, பெரியவங்க சொல்லுவாங்க. அன்னையின் நவசக்தி வடிவங்களில், இங்கே பத்ரகாளி வடிவத்தில் எழுந்தருளி இருக்காங்க அம்மா. மூலவரைப் பாருங்க... சப்தநாடியும் ஒடுங்கும் அளவுக்கு மிரட்டும் பெரிய உருவம். வெற்றியைத் தரும் உக்கிர தெய்வம். சக்தின்னா அப்படி ஒரு சக்தி. வேண்டியது நடக்கும்; கேட்டது கிடைக்கும்’’ என்கிறார், கோயில் மேலாளர் பிரசன்னா.
ஆம்... பிரம்மாண்டமான உருவம். மெய்சிலிர்க்க வைக்கும் ஆகிருதி. ஏழரை அடி உயரம், ஆயுதங்கள் தாங்கிய பத்துக் கரங்கள், அசுரர்கள் மூவரை சம்ஹாரம் செய்த நிலையில் வீரத் திருக்கோலம் காட்டுகிறாள் செல்லியம்மன். அன்னையைத் தரிசிக்கும் அக்கணத்தில் நம்மையுமறியாமல் சிலிர்த்துப்போகிறது உடம்பு. பக்திப் பெருக்கில் கண்களில் நீர் சுரக்க, கரங்கள் இரண்டும் தாமாகவே இணைந்து வணங்குகின்றன அந்தத் தாயை!
நமக்குக் கோயில் பற்றிய தகவல்களைக் கூறிய அன்பர் பிரசன்னா, விழாச் சிறப்புகள் குறித்தும் விவரித்தார். ‘‘பல பேருக்கு இது குலதெய்வம். அதனால் ஆண்டு முழுவதும் குலதெய்வ வழிபாடு நடக்கும். இங்கு ஆடியும் பங்குனியும் ரொம்ப விசேஷம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மாவுக்குச் சந்தனக் காப்பு அலங்காரம் ரொம்ப விசேஷம். அப்போ பார்க்கணுமே இந்த செல்லியம்மாவை... அவங்க உயரத்துக்கும் அந்த அலங்காரத்துக்கும் அப்படி ஓர் அழகா இருக்கும். முத்து முத்தாக அம்பாளுக்கு வியர்த்துக் கொட்டும். துண்டால் ஒற்றியெடுக்கும் அளவுக்கு வியர்த்தாலும், சந்தனம் கரையாது. அது ஓர் அதிசயம் இங்கே!
ஆடி மாசம் பல பேர், குலதெய்வ வழிபாட்டுக்கு வருவாங்க. நேர்த்திக் கடன்களைச் செய்து வழிபடுவாங்க. அப்புறம் இங்கேயே ஆலமரத்தடியில் உக்காந்து சாப்பிட்டுக் கிளம்பிப் போவாங்க. திருமண பிராப்தி, குழந்தை வரம், தொழிலில் வெற்றின்னு பல பிரார்த்தனைகளுக்காகப் பக்தர்கள் இங்கே வந்தாலும், குழந்தைப்பேறு வேண்டி வர்றவங்க அதிகம்’’ என்று அம்பாளின் மகிமையைப் பரவசத்தோடு பகிர்ந்துகொண்டார்.
‘‘இந்த அம்மனுக்குப் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன் ரொம்ப வித்தியாசமானதுன்னு கேள்விப்பட்டோமே!’’ என்றதும், அதுகுறித்து விவரித்தார் பிரசன்னா.
‘‘ஆமாம்... பங்குனி மாசம் முதல் அல்லது 2-ம் செவ்வாய் காப்புக் கட்டி, அதிலிருந்து 16 நாள்கள் திருவிழா நடக்கும். சுத்துப்பட்டு ஊர்களிலிருந்து மட்டுமில்லாமல், தமிழகத்தின் எல்லா ஊர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருவாங்க. திருவிழாவின் முக்கியமான அம்சம், ‘முள்படுகளம்’ நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி.
16-ம் நாள் மூலவருக்குச் சந்தனக் காப்பு அமோகமா இருக்கும். அன்னிக்கு இரவு, கண்ணாடி விமானத்தில் பல்லக்கு புறப்பாடு நடக்கும். சர்வ அலங்காரத்தில் உற்சவர் அம்மா பவனி வருவாங்க. ஊரிலுள்ள எட்டு வீதிகளிலும் சுவாமி ஊர்வலம் ஜகஜ்ஜோதியாக நடக்கும். சிவன் கோயிலை ஒட்டி, கீழ ராஜ வீதியில் ஊர்வலம் வர்றப்ப, அந்த வீதி நெடுகிலும் ரெண்டு பக்கமும் மூணு அடி உயரத்துக்கு நாட்டுக் கருவேல முள் படுக்கையை விரிச்சு தயாரா வெச்சிருப்பாங்க. வீதி நடுவே அம்மன் வர்றதுக்கு வழிவிட்டுட்டு, சுமார் 1000 பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தத் தயாரா, கைகளில் தேங்காய், கழுத்தில் மல்லிகை மாலையோடு நிப்பாங்க. அம்மனின் பல்லக்கு அவங்ககிட்ட வரும்போது ‘அம்மா’ன்னு சொல்லிக்கிட்டே பின்பக்கம் இருக்கிற முள்படுக்கையில் படுப்பாங்க. அம்மன் ஊர்வலம் போற வரை அப்படியே படுத்திருப்பாங்க. அஞ்சு, பத்து நிமிஷம் கழிச்சு எழுந்து, சாதாரணமா சாமி பின்னாடியே நடந்து போவாங்க. இந்த அதிசயத்தை நம்ம கண்ணால பார்க்கலாம்...’’ விவரிக்கும்போதே, உணர்ச்சிப் பெருக்கில் குரல் உடைந்து உருகுகிறது அவருக்கு.
கோயிலின் பூசாரி மூர்த்தி தொடர்ந்தார். ‘‘நேர்ந்துகிட்டு, அக்னியில் இறங்குறது, தீச்சட்டி தூக்குறது, அலகு குத்துறது மாதிரி இதுவும் ஒரு பெரிய வேண்டுதல்தான். எட்டு நாள், அசைவம் சாப்பிடாமல் சுத்தபத்தமா விரதம் இருக்கணும். அம்மா நினைவிலேயே, அவ பேரைச் சொல்லிக்கிட்டு படுத்தா, முள் படுக்கையைக் கூட, மலர் படுக்கையா மாத்திடுவா அந்த மகாசக்தி படைச்ச செல்லியம்மா!’’ என்றார்.
இந்த விழாவுக்கான முதல் காப்பு, முதல் காவு, முதல் பூசையை அருகிலுள்ள மாதாகுளத்தில்தான் போடுவார்களாம். ஏன் அப்படி?
‘‘அக்கா மாதாகுளத்தம்மன்தான் முதலில் இங்கே இருந்தவங்க. எப்பவும் பங்குனி மாசம் முதல் காப்பு, முதல் காவு, முதல் பூசை மாதாகுளத்தில்தான் போடுவோம். அதன்பிறகே தங்கச்சி செல்லியம்மனுக்குக் காப்புக் கட்டுவோம்’’ என்று காரணத்தை விவரித்தார் மூர்த்தி.
எந்தக் குறை என்றாலும், இரண்டு கடா வெட்டி, அன்னதானம் போடுவதாக வேண்டிக் கொள்கின்றனர். முக்கியமாக, குழந்தை வேண்டி வருபவர்கள், குழந்தை பிறந்ததும் அதன் எடைக்கு நிகராகக் சில்லறைக் காசுகளை அம்மாவுக்குக் காணிக்கையாக அளிப்பது வழக்கம்.
கோயிலுக்குள்ளே பிரதான சந்நிதி செல்லியம்மனுக்குத்தான். பரிவார தெய்வங்களாக, முன்புறம் விநாயகரும், அய்யனார், கருப்பர், நாகாத்தம்மன் போன்ற காவல் தெய்வங்களும் வீற்றிருக்கிறார்கள்.
கோயில் வாசலிலேயே 200 ஆண்டுகள் பழைமையான பெரிய ஆலமரம். விழுதுகள் விட்டு, வேரூன்றிப் பரந்து விரிந்திருக்கிறது. நேர்த்திக்கடன் செலுத்த வருபவர்கள், அந்த ஆலமரத்தின் அடியில்தான் அமர்ந்து இளைப்பாறி, உணவருந்திச் செல்கின்றனர். அப்படி ஓர் இதமான, குளுமையான நிழல்... அந்த அம்மாவின் அன்பைப் போலவே
No comments:
Post a Comment