Monday, 24 July 2017

கனவில் வந்த பாம்பு


வீரநரசிம்ம கஜபதி என்னும் விஜயநகர மன்னன் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை புறப்பட்டான். வரும் வழியில் திருப்பதி பெருமாளை தரிசிக்க மலையேறினான். 

ஏழுமலையானை தரிசித்த அவன், அங்கு கோபுரம் ஒன்றைக் கட்ட உத்தரவிட்டான். ராமேஸ்வரம் யாத்திரையை முடித்து விட்டு மீண்டும் திருப்பதி வந்தான். அப்போது கோபுரம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது.

அன்றிரவு பெருமாளை தரிசித்த அவன் மலையிலேயே தங்கினான். அவன் கனவில் பாம்பு வடிவில் ஆதிசேஷன் தோன்றி, "மன்னா! என் உடம்பே இந்த மலையாக இருக்கிறது. இதில் கோபுரம் கட்டினால் ஏற்படும் பாரத்தை என்னால் தாங்க முடியாது,'' என்று சொல்லி விட்டு கருவறைக்குச் சென்று ஏழுமலையானின் வலக்கையில் சுற்றிக் கொண்டது. 

பதறி எழுந்த மன்னன், பண்டிதர்களை அழைத்து கனவு பற்றி கேட்டான். அவர்கள், " மன்னா! கோபுரப்பணியை இப்போதே நிறுத்தி விடுவோம். ஆதிசேஷனை அமைதிப்படுத்தும் விதத்தில் பரிகாரமாக தங்க நாகாபரணம் ஒன்றைச் செய்து பெருமாளுக்கு அணிந்து விடுவோம்,'' என்றனர். 

வீரநரசிம்ம கஜபதி அளித்த நாகாபரணமே இன்றும் ஏழுமலையானின் வலக்கைக்கு அழகு சேர்க்கிறது.

No comments:

Post a Comment