Friday, 28 July 2017

பல்லாண்டு வாழ்க


பாண்டிய மன்னன் வல்லபதேவன் ஒருநாள் இரவு நகர சோதனைக்காக புறப்பட்டான். ஒரு வீட்டுத் திண்ணையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவரை எழுப்பிய மன்னன், ""நீர் யார்?'' என்று கேட்டான்.

"மன்னா! நான் புனித கங்கையில் நீராடி விட்டு, இப்போது சேதுக்கரையில் நீராடச் சென்று கொண்டிருக்கிறேன். இன்றிரவு இங்கு தங்கியிருக்கிறேன்'' என்றார் அவர்.

"மிக்க மகிழ்ச்சி முதியவரே! பக்தரான நீங்கள் பயனுள்ள ஸ்லோகம் ஒன்றைச் சொல்லுங்களேன்,'' என்று கேட்டான் மன்னன்.

ஸ்லோகம் ஒன்றை சொன்ன முதியவர், அதற்கான பொருளையும் கூறினார். 
"மழை காலமான ஆடி முதல் ஐப்பசி வரை இன்பமாக வாழ விரும்பினால், மற்ற எட்டு மாதத்தில் உழைக்க வேண்டும். இரவுக்கு தேவையானதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் தேட வேண்டும். இதைப் போலவே அடுத்த பிறவிக்கு வேண்டியதை இப்பிறவியில் தேடுவது அவசியம்' என்பது அவர் சொன்ன ஸ்லோகத்தின் பொருள்.

மன்னன் அவரை வணங்கி புறப்பட்டான். அவனது மனதிற்குள், "முதியவர் கூறியவற்றில் மூன்று விஷயத்தை பெற்றிருக்கிறேன். ஆனால், அடுத்த பிறவிக்கு தேவையானதை இதுவரை சேர்க்க வில்லையே...என்ன செய்யலாம்?'' என யோசனையில் ஆழ்ந்தான். மறுநாள் குலகுரு செல்வ நம்பியை அழைத்து, "அடுத்த பிறவியில் இன்பம் அடைய என்ன வழி?'' என்று கேட்டான்.

"பண்டிதர்களை ஒன்று கூட்டி, இதற்கான வழியை தேடுவதே சிறந்தது,'' என்றார் நம்பி. 

அதன்படி பண்டிதர்களுக்கான போட்டியும், பரிசும் அறிவிக்கப்பட்டது. சரியான விடை அளிப்போருக்கு சன்மானமாக, ஒரு மூங்கில் குச்சியை நட்டு, அதன் உச்சியில் பொற்காசு மூடையைக் கட்ட மன்னன் உத்தரவிட்டான். 

இந்நிலையில் ஒருநாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழும் பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றினார்.

வல்லபதேவனின் சந்தேகத்தைப் போக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். "தன்னை (பெருமாளை) வழிபட்டால் மறுபிறவியில் இன்பம் கிடைக்கும்' என்ற உண்மையை நிலைநாட்ட உத்தரவிட்டார்.

வல்லபதேவன் அரண்மனைக்கு வந்த ஆழ்வார், "நாராயணனே பரம்பொருள்' என்பதை நிரூபித்தார்.

அப்போது, வாசலில் கட்டியிருந்த மூங்கில் கம்பு தானாகவே வளைந்து பொன் மூட்டை ஆழ்வார் கை பக்கமாக வந்தது. அப்போது பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்தார். அவரைக் கண்ட பெரியாழ்வார் "பல்லாண்டு பல்லாண்டு' எனத் தொடங்கும் பாசுரம் பாடி வாழ்த்தினார்.

வைகுண்ட ஏகாதசி நாளில் "ஓம் நமோ நாராயணாய!' என்ற மந்திரம் சொல்லி பெருமாளை வழிபட்டால் பல்லாண்டு காலம் நலமோடு வாழலாம். 

No comments:

Post a Comment