Monday, 24 July 2017

திகட்டாத வாழ்வு தரும் திராக்ஷாராமேஸ்வரம்


திராக்ஷாராமம்

மாதொருபாகன், வாயு உருவமாக வணங்கப்படும் காளஹஸ்தி, ஜோதிர் லிங்கமான மல்லிகார்ஜுன ஸ்வாமி அருள்பொழியும் ஸ்ரீசைலம் மற்றும் கயிலைநாதன் பீமேஸ்வரராக காட்சி தரும் திராக்ஷாராமம் ஆகிய மூன்று லிங்கங்களும் பெயர் பெற்றவை என்பதால் ஆந்திர மாநிலமே திரிலிங்க தேசம் என்று விளங்குகிறது.
மேலும், ஐந்து சிவன் கோயில்கள் இந்தப் பகுதியில் புகழ் பெற்று விளங்குகின்றன. அசுரனான தாரகாசுரன் கடுமையான தவம் செய்து சங்கரனிடமிருந்து ஆத்ம லிங்கத்தைப் பெறுகிறான். தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் அவனது அட்டகாசம் அதிகரிக்கிறது. ரிஷிகள், தேவர்கள், மக்கள் எல்லோரும் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். தாரகாசுரனை வதம் செய்து அவனது தொண்டையில் இருக்கும் ஆத்ம லிங்கத்தை சிதற வைக்க முருகனால் முடியும் என்று பணிக்கிறார். முருகனின் பாணம் பட்டுச் சிதறிய ஆத்ம லிங்கம் ஐந்து இடங்களில் சிதறியது.

திராக்ஷாராமம் பீமேஸ்வரம், கோட்டுப்பள்ளி  குமார ராம, சாமர்வக் கோட்டை  பீமாராம், பாலக் கொல்லு க்ஷீரா ராம, அமராவதி  அமர ராம. இந்த பஞ்சராமக்ஷேத்ரங்களில் முதன்மையானது திராக்ஷாராமம். தஷன் யாகம் செய்த இடம் இதுதான் என்று கருதப்படுகிறது. தக்ஷராமம் என்ற பெயரில் இருந்து பிறகு தீக்ஷாராமம் / திராக்ஷ்க்ஷா ராமம் என்று மருவியதாம். முக்கியமான 18 (அஷ்ட தச பீடங்கள்) சக்தி பீடங்களில் இது 12வது இடம். தாட்சாயணியின் நாபிக் கமலம் விழுந்த இடம். மானிக் என்றால் தெலுங்கில் தொப்புள் என்று பொருள். இங்கு மனதைக் கவரும் அழகுடன் காட்சி தரும் ஹம்ஸன் மகளின் பெயர் மாணிக்காம்பா! சுற்று வட்டார மக்களுக்கு இந்த தேவிதான் பிரத்யட்ச தெய்வம். இங்கு உள்ள பல மகளிருக்கு இந்தப் பெயர். 

இந்தக் கோயிலில் தீ மூட்டும் ஹோமங்கள்! யாகங்கள் ஏதும் நடப்பதில்லை. இதில் ஓரிரு மாறுதல்களும் சொல்லப்படுகிறது. திரிபுரங்களை சிவனார் எரித்தபோது சிதையாமல் இருந்த ஒரு பெரிய சிவலிங்கத்தை மகாதேவரே, ஐந்து பாகங்களாக்கி, பஞ்சராம க்ஷேத்ரங்களாக பிரதிஷ்டை செய்தார் என்றும் ஒரு கதை நிலவுகிறது. அகஸ்தியர் விந்திய மலையின் கர்வத்தை ஒடுக்கி இந்த இடத்திலேயே தங்கிவிட்டார். ஒருமுறை வியாசருக்கும், காசி விஸ்வேஸ்வருக்கும் பிணக்கு ஏற்பட்டது. காசியை விட்டு வெளியேறி விடு என்று பணிக்கிறார் சிவனார். அன்னபூரணி தேவி குறுக்கிட்டு மகரிஷியை திராக்ஷாராம் என்ற திருத்தலத்தில் தங்கி வழிபடு  அது காசிக்கு சமம் என்று அருள் புரிகிறாள். 

காசியில் இறப்புக்குப்பின் மோட்சம் கிட்டும். திராக்ஷாராமில் போகம், வரம், மோட்சம் ஆகிய யாவும் படிப்படியாக கிடைக்கும் என்று ஆசிர்வதிக்கிறாள். வியாசர் தனது 300 சீடர்களுடன் தக்க்ஷவாடிகா எனப்படும் தக்ஷின காசியில் தங்குகிறார் என்கிறது தலவரலாறு. இத்திருக்கோயிலின் கருவறையின் உள்ள லிங்க உருவம் சுயம்பு மூர்த்தி! சுமார் 9 அடி உயரமும் 1½ அடி சுற்றளவும் உள்ள பாணம் இரண்டு அடுக்காக காட்சி தருகிறது. கோயிலின் கீழ்த்தளத்தில் சிறிய ஆவுடையும், பாணத்தின் மூலபாகமும், கோயிலின் மேல்தளத்தில் அதாவது, முதல் மாடியில் பாணத்தின் நடுப்பாகமும் உச்சியும்! இந்தப் பெரிய பாணம் ஒரு பெரிய Crystal என்கிறார்கள். மேல்தளத்தில்தான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கீழ்த்தளத்தில் கற்பூர ஆரத்தி மட்டுமே. இரண்டு தளமாக பாண வடிவம் காட்சி தருவது ஒரு வித்தியாசமான அனுபவம். 

புவனேஸ்வரில் உள்ள சிவன் கோயிலும் இதேபோன்ற அமைப்பு உள்ளது. அந்த பாண உருவம் இதைவிட பெரியது. மேல்தளத்தில் தாட்சாயணி தேவியின் உலோகச் சிலை உருவம் பாணத்திற்கு அருகில் உள்ளது. முன்பு, கருவறையின் உள்பாகம் மிகவும் இருட்டாக இருக்குமாம். சுவற்றின் உட்புறம் உயர்ந்த வகை வைரக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்ததாம். அவற்றின் ஜொலிப்பில் பூஜைக்கு தேவையான வெளிச்சம் கிடைக்குமாம். அன்னியர் படையெடுப்பில் வைரங்கள் களவு போய்விட்டன என்றும் சுவற்றில் அதற்கான அடையாளங்கள் இருக்கின்றன என்றும் கூறுகின்றனர். காலையில் முதல் பூஜை சூரியனால் செய்யப்படுகிறது. ஆம்! உதய நேரத்தில் லிங்க உருவம் சூரிய ஒளியில் ஜொலிக்கிறது. பிறகு சப்த ரிஷிகளும், இந்திராதி தேவர்களும் மானசீக பூஜை.

இந்தக் கோயிலின் அமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. இரண்டு அடுக்கு மண்டபமாக ஒன்றுக்கு  ஒன்றாக 2 சுவர்கள், 2 படிக்கட்டுகள், 2 பிராகாரங்கள், தேவர்களும், தேவதைகளும் ஒரே இரவில் இந்தக் கோயிலை வடிவமைத்தனராம். சூரிய உதயத்திற்குள் கட்டப்பட்ட பகுதிகள் மட்டுமே உள்ளனவாம். வெளிப்புற சுற்றுச்சுவர் பாதிதான் இருக்கிறது. அதைக்கட்டுவதற்கு பல முயற்சிகள் எடுத்தாலும் அதற்கு நிறைய தடைகள் வருகின்றனவாம். தனி சந்நதியில், தனி கோபுரத்துடன் மாணிக்காம்பா தேவி காட்சி தருகிறாள். சுமார் 4 அடி உயரமுள்ள அர்ச்சாவதாரத் திருமேனி! முகத்தில் அழகும், களையும்! பக்தர்களுக்கு பரவசப்படுத்தும் கண்கொள்ளாக்காட்சி. சிறந்த அலங்காரங்களுடன் வெண்பட்டுப் புடவையில் நின்ற திருக்கோலம்!

சுற்றுப் பிராகாரத்தில் நர்த்தன கணபதி, துண்டி கணபதி, பைரவர், நடராஜர், கனக துர்க்காதேவி, அன்னபூர்ணேஸ்வரி ஆகியோர் காட்சி தருகின்றனர். கருவறையின் வலப்புறமாக தெற்கு நோக்கிய தனிச் சந்நதியாக, தனிக் கோயிலாக காசி விஸ்வேஸ்வரர்! தக்ஷிண காசியில் தங்கிய வியாச மகரிஷியைக் காண காசி விஸ்வநாதர் இங்கு வந்து தங்கிவிட்டாராம். இந்தக் கோயிலில் தினசரி அபிஷேகத்திற்கு சப்த கோதாவரி புஷ்கரிணியிலிருந்து புனித நீர் கொண்டுவரப்படுகிறது. இந்தப் புஷ்கரிணியைப் பற்றி ஒரு வரலாறு. காச்யர், அத்ரி, கௌதமர், விஸ்வாமித்திரர், பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி ஆகிய 7 மகரிஷிகளும் கோதாவரியின் ஒவ்வொரு கிளை நதியிலும் இருந்து தவம் செய்வதாகவும், இவற்றில் ஒரு அந்தர்வாகினியான சங்கம இடம்தான் இந்த புஷ்கரிணி என்கின்றனர்.

சப்த மாதர்கள், முருகன், மகிஷாசுரமர்த்தினி, ஆஞ்சநேயர், நகுலேஸ்வர சிவன், சதுர்முக பிரம்மா, லட்சுமி கணபதி, நவகிரகம், வீரபத்திரர், சூரியன், சண்டிகேஷ்வரர் ஆகிய பற்பல தெய்வங்கள் பிராகாரத்தின் பல பகுதியில் இருக்கின்றனர். ஒரு அழகான லட்சுமி நாராயண சந்நதி! பிற்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டதாம். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள், மகாலட்சுமி, பீமேஸ்வரர், மானிக்யம்மாளும் ஒரே மேடையில் திருக்கல்யாணம்! இந்தக் கோயிலுக்கு இரண்டு பெரிய பிராகாரங்கள். 3 சிறிய பிராகாரங்கள் இருக்கின்றன. வெளிப்பிராகாரத்தில் கோபுரங்களுடன் கூடிய 4 நுழைவாயில்கள்! மேற்கு கோபுரத்தை கோகுலம்மா, வடக்கில் மாந்தாதா, கிழக்கில் சுகாம்பிகா, தெற்கில் கண்டாம்பிகா ஆகியோர் கோயில் காப்பாளர்கள், பிராகாரத்தில் வலம் வரும்போது இந்திரேஸ்வரர், யக்னேஸ்வரர், சித்தேஸ்வரர், யோகேஸ்வரர், காலேஸ்வரர், வீரபத்ரேஸ்வரர் ஆகிய லிங்க வடிவங்கள் இருக்கின்றன.

12 ஏக்கர் பரப்பில் இருக்கும் இந்தக் கோயிலின் கொடிமரம் 70 அடி உயரம்! இந்தக் கோயில் கி.பி. 811 நூற்றாண்டு காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கோயில் சுமார் 800 கல்வெட்டுகள்! பல அரசர்கள், அரசு ஆவணங்கள், தொடுக்கப்பட்ட போர்கள், மக்களின் வாழ்க்கை முறை, நாட்டின் வளம் ஆகிய எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை வரலாற்றுப் பொக்கிஷம். தமிழ் மன்னன் குலோத்துங்கச் சோழன் ஒரு பிராகாரத்தின் சுவற்றையும், சில மண்டபங்களையும் அமைத்திருக்கிறான் என்பதும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்தபோது சிலிர்ப்பாக இருந்தது. காக்கிநாடாவிற்கு அருகில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காக்கி நாடாவிலிருந்து 28 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது திராக்ஷாராமம்! பஸ் வசதி உள்ளது. ராமச்சந்திரபுரம் என்ற இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

No comments:

Post a Comment