நீலமேகப் பெருமாள் தஞ்சை நகரில் மணிமுத்தாறு நதிக்கரையிலும், மணிக்குன்றப் பெருமாள் களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள், ஸ்ரீநிவாசபுரம் செவப்ப நாயக்கன் குளம் அருகிலும் கோயில் கொண்டிருந்தார்கள் என்றும், பிற்கால நாயக்க மன்னர்களால் இந்த மூன்றுப் பெருமாள்களும் இப்போதைய இடங்களில் மறு நிர்மாணம் செய்யப்பட்டதாகவும் சரித்திரம் கூறுகிறது. அதேசமயம் ஒரே திவ்ய தேசமான இந்த மூன்று கோயில்களுக்கும் தனித்தனியே மூலவர், உற்சவர், தாயார், தீர்த்தம், விமானம் எல்லாம் அமைந்திருக்கும் வித்தியாசமான அற்புதங்களும் இங்கே உண்டு. மூன்றில் முதலாவதான முக்கியத்துவம் இருப்பதாலோ என்னவோ, இந்தக் கோயில் ராஜகோபுரத்துடன் திகழ்கிறது.
தலை வணங்கி அதற்கு மரியாதை தெரிவித்து உள்ளே நுழைந்தால் இடது பக்கத்தில் லக்ஷ்மி ஹயக்ரீவர் முதலில் அருளாசி வழங்குகிறார். இவருக்கு எதிரே சுவாமி தேசிகன் தனி சந்நதி கொண்டிருக்க, இவருக்கு வலது பக்கம் ஆழ்வார்களும், இடது பக்கம் ராமானுஜரும் அருள்பாலிக்கிறார்கள். வலப்பக்கச் சுவரில் சுவாமி தேசிகனின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே வெளிப் பிராகாரத்தை வலம் வந்தால், தலமரத்தை தரிசிக்கலாம். அதன் கீழே நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கின்றன. அடுத்து செங்கமலவல்லித் தாயார் தனியே சேவை சாதிக்கிறார். தாயாரின் கருணைப் பார்வையில் நம் மன அழுக்காறுகள் விலகி மனம் தெளிவடைவதைப் போலவே அருகே ஒரு நந்த வனமும் பசுமை மிளிர காட்சியளிக்கிறது.
கருவறை மண்டபத்தில் இருகரம் கூப்பியபடி கருடன் தன் எதிரே கொலுவிருக்கும் பெருமாளுக்கு வந்தனம் தெரிவிப்பது மட்டுமன்றி, அவரை தரிசிக்க வரும் நம்மையும் வாஞ்சையுடன் வரவேற்கிறார். மூலவர் சந்நதிக்கு இடப்புறம் திரிவிக்ரமப் பெருமாள், வராகர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் ஆகியோர் அணிவகுத்து நிற்கின்றனர். அமர்ந்த கோலத்தில் நீலமேகப் பெருமாள் அருள் பொங்கக் காட்சியளிக்கிறார். ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அழகு பொலியத் தோன்றும் இவரது காலடியில் தஞ்சகன் சரணடைந்திருக்கிறான். யார் இந்தத் தஞ்சகன்? பராசர முனிவர், சக்தி என்பாரின் மகன். இந்த சக்தி, மஹாபாரதம் இயற்றிய வியாசரின் மகன். அதாவது வியாசர், பராசரரின் தாத்தா.
இந்தப் பராசரர், பெருமாளின் அருளைப் பெறும் நோக்கத்துடன் இந்தத் தலத்துக்கு வந்து தவம் இயற்றத் தொடங்கினார். தம் நோக்கம் நிறைவேறும்வரை கடுமையான சூழ்நிலை நிலவினாலும் தவத்தைக் கைவிடாது மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார். புற இடையூறுகள் ஒருபுறம் இருக்க, அகத்துள் உடல் நல பாதிப்பு என்ற இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று யோசித்தார். உடனே விண்ணுலகத்திலிருந்து அமிர்தத்தைக் கொண்டுவந்தார். அதைச் சிறிது உண்டாலேயே வருடங்கள் பலநூறு கடந்தாலும் உடல்நலம் சிறிதும் குன்றாது, சோர்வு என்பதே இருக்காது என்ற உண்மை அவருக்குத் தெரியும். ஆகவே தான் எடுத்துக்கொண்டது போக, மீதியை பிறர் கண்ணிலிருந்து மறைக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டது.
உடனே அந்த ஊர் திருக்குளத்தினுள் அந்த அமிர்தக் குடத்தை அவர் அமிழ்த்தி மறைத்து வைத்தார். பிறகு தவத்தில் ஆழ்ந்தார். தவம் நீடித்த காலத்தில், அந்தப் பகுதியில் கடுமையான பஞ்சம் தோன்றியது. ‘பன்னிரண்டு ஆண்டு கருப்பு’ என்ற பெயருக்கேற்றாற்போல அந்த வறட்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு அந்த பிராந்தியத் தையே பரிதவிக்க வைத்தது. ஆனால், பராசரர் தவம் மேற்கொண்டிருக்கும் பகுதி மட்டும் பசுமை குன்றாமல், வளம் குறையாமல், மக்கள் பட்டினியால் வாடாமலிருப்பதைக் கண்டார்கள் மூன்று அசுரர்கள். உடனே இத்தலத்துக்கு விரைந்து வந்து அதற்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். சோர்வே அடையாத முனிவரையும் அவரைச் சுற்றிச் சூழ்ந்துள்ள பசுமை வனத்தையும் கண்டு வியந்தார்கள்.
அருகிலுள்ள புஷ்கரணியால் இத்தகைய மகிமை உண்டாகியிருக்கக்கூடும் என்று ஊகித்தார்கள். ஒரு முயற்சியாக தீர்த்தத்தில் நீராடினார்கள். உடனே தங்களுக்குள் புது சக்தி ஒன்று ஊடுருவி, தாம் பேராற்றல் கொண்டவர்களாக மாற முடிந்ததைப் புரிந்துகொண்டார்கள். ஆனால் அது அமிர்த குளம் என்பதை அவர்கள் அறியாததால், தங்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவபெருமானை நோக்கி நெடிய தவம் இயற்ற ஆரம்பித்தார்கள். அவர்களுக்குக் காட்சியளித்த ஈசன், அவர்கள் கோரிக்கையைக் கேட்டு பின் வாங்கினார். ‘‘மரணமில்லாத வாழ்க்கையை அளிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. அந்த வரத்தை மஹாவிஷ்ணு அருளக்கூடும்; அவரை எண்ணி தவமியற்றுங்கள்.
அதேசமயம், என்னால் உங்களுக்கு மரணம் சம்பவிக்காது என்றும் உறுதியளிக்கிறேன்,’’ என்று ஆறுதல் அளித்தார். அவரால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்ட அவர்கள், ஆணவம் மிகக் கொண்டு அரக்கத்தனத்தில் ஈடுபட்டார்கள். அதோடு, தன்னால் அவர்கள் உயிருக்கு பாதிப்பில்லை என்று சிவபெருமான் சொன்னது, தாங்கள் அந்தப் புஷ்கரணியில் நீராடியதால் இருக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டார்கள். ஆகவே தினமும் அந்த தீர்த்தத்தில் நீராடித் தம் வலிமையைப் பெருக்கிக்கொண்டார்கள்; அடுத்தடுத்து அழிவுச் செயல்களில் ஈடுபட்டார்கள். அவர்கள் விளைவித்தத் துன்பங்களில் சிக்கியவர்களில் பராசரரும் ஒருவர். ‘நிம்மதியாக தவம் இயற்ற வந்தால் இப்படி ஒரு கொடுமையான இடையூறா!’ என்று மனதுக்குள் நொந்துகொண்டார் முனிவர். அவர் எம்பெருமானை நோக்கிக் கதறினார். தன் நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று புலம்பினார்.
பக்தனின் பரிதவிக்கும் குரலைக் கேட்ட பரந்தாமன், உடனே கருடனை அனுப்பி அவர்களுடைய கொட்டத்தை அடக்கச் சொன்னார். வந்த கருடனால், அசுரர்களின் படைகளை மட்டுமே அழிக்க முடிந்ததே தவிர, தஞ்சகன், தண்டகன், தாரகன் ஆகிய அந்த அரக்கர்களை நெருங்கவும் முடியவில்லை. இதைக் கண்ட பராசரர் அவர்கள் அமிர்த தீர்த்தத்தில் நீராடியதால்தான் மரணம் அவர்களை நெருங்கத் தயங்குகிறது என்று உணர்ந்தார். தான் ஒளித்து வைத்த அமிர்தம், தனக்கே பெரும் தீங்கை உருவாக்குவதை எண்ணி வருந்தினார். மீண்டும் அந்த ஆதிமூலத்தையே சரணடைந்தார். பரம்பொருள் ஒளிசூழ அங்கே வந்துதித்தார். முதலில் தஞ்சகனை அழிக்கலானார். அவரால் வெட்டுப்பட்டு துண்டுகளாகி அவன் வீழ்ந்தாலும், மீண்டும் உயிர் பெற்று அவர்முன் நின்று அவரை ஏளனமாகப் பார்த்தான் தஞ்சகன்.
அவனுடைய இந்த இறவா நிலைக்குக் காரணம் அவன் அமிர்த தீர்த்தத்தில் நீராடியதுதான் என்பதை உணர்ந்து கொண்ட பரம்பொருள், உடனே அன்னப் பறவையாக மாறினார். தீர்த்தத்துள் இறங்கினார். அங்கே நீருடன் கலந்திருந்த அமிர்தத்தை மட்டும் பிரித்து உட்கொண்டார். இப்போது நீர் அமிர்த கலப்பில்லாத வெற்று நீராகிவிட்டது. இது அறியாத தஞ்சகன் தீர்த்தத்தில் நீராடி மீண்டும் போருக்குத் தயாரானபோது, அவனை பெருமாள் வெகு எளிதாக வீழ்த்தினார். அப்போதுதான் தன் நிலை உணர்ந்த தஞ்சகன், அவரை அடிபணிந்து தனக்கு மோட்ச பிராப்தி நல்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டான். அதோடு தன்னைப் போன்ற இரக்கமற்ற அரக்க குணம் யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் பெயரையே தான் வீழ்த்தப்பட்ட தலத்திற்கு வைக்குமாறும் இறைஞ்சினான். அதனால் இந்த ஊர், தஞ்சாவூர் என்று வழங்கலாயிற்று. இந்த ஊர்ப் பெயரை கேட்பவர்களுக்கு உடனே அந்த அரக்கனின் நினைவு வரும் என்றும், அதைத் தொடர்ந்து அவனைப்போலத் தாமும் தீய குணம் கொள்ளக்கூடாது என்று உறுதி கொள்வார்கள் என்றும் அவன் நம்பினான். தஞ்சகன் ஊர் என்ற இந்த தஞ்சாவூர்ப் பெயர் வர இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, பெருமாளை தஞ்சம் என்றடைந்துவிட்டால், அவனது, இக, பர வாழ்வையும், ஆன்ம சுகத்தையும் பெருமாள் பாதுகாப்பார் என்பதுதான் அது. இதை நிரூபிக்கும் வகையில் இங்கே நீலமேகப் பெருமாளாக அவர் கோயில் கொண்டிருக்கிறார்.
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாணாள்
அம்பினால் அரக்கர் வெருக் கொள நெருக்கி
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலா சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள், உய்ய நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
என்று பாடிப் பரவசப்படுகிறார் திருமங்கையாழ்வார். ‘எனக்கு எல்லாமும் நாராயணனே. எனக்குத் தலைவன் இவன், தந்தையும் உறவு எல்லாமும் இவனே. என்னை ஆள்பவன் மட்டுமல்ல, என் வாழ்க்கையே இவனாகத்தான் இருக்கிறது. அம்பு எய்து அரக்கர் அனைவரையும் வெருண்டோடச் செய்த இந்தத் தீரன் பசுமையான சோலைகள் நிறைந்த, வலிமையான மதில்கள் சூழ்ந்த திவ்ய தேசத் திருக்கோயிலில் அருள்பாலிக்கிறான். தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment