செம்பங்குடி
சோழவள நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் சிறப்புக்குரியவை. அவற்றுள் செம்பங்குடியும் ஒன்றாகத் திகழ்கிறது. அமிர்தம் வேண்டி தேவர்களும், அரசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அதில் கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தார் ஸ்ரீ மகாவிஷ்ணு. விப்ரசித்தி என்னும் அசுரனுக்கும், இரணியனின் தங்கை சிம்ஹிக்கும், பிறந்தவன் ஸ்வபானு. அசுர குலத்தவன். தேவ வடிவம் பூண்டு, அமிர்தத்தை உண்டான். குறிப்பால் இதனை உணர்ந்த சந்திர சூரியர், அவ்வசுரனின் தலையில் ஓங்கி அடிக்க... அவனது தலை சிரபுரம் என்னும் சீர்காழியிலும், உடல் செம்பாம்பினன்குடி என்னும் இந்த செம்பங்குடியிலும் விழுந்தது. சிவந்த மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட கேதுவின் வடிவம் இங்கு குடி கொண்டதால் இத்தலம் செம்பாம்பினன்குடி ஆனது. அது மருவி இன்று செம்பங்குடி ஆகியுள்ளது.
அமுதுண்ட அவை ஈசனை நோக்கி கடுந் தவமிருந்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, பூஜித்து ‘‘அகில உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் வரமும், சந்திர சூரியரை விழுங்கும் பலமும் கேட்டன. ஈசனோ ‘‘சூரிய சந்திரரின்றி உலகம் தத்தளிக்கும். இருப்பினும், கிரகண காலங்களில் அவர்களை விழுங்கும் திறன் பெற அருள்பாலித்தார்! இருவருக்கும் கிரகபதவியும் வழங்கினார்! அவர்களே ராகு கேது! எனவே, ஆதி கேதுத் தலமாகப் போற்றப்படுகின்றது இந்த செம்பங்குடி.
அருணாசலக் கவிராயரின் சீர்காழி தல புராணத்தில் இப்பதி செம்பாம்பினன்குடி என்றும், கேதுபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறையுள் மனித இடர்களைப் போக்கும் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த தலத்தை வைப்புத் தலமாகப் போற்றியுள்ளார்.
ஊருக்குச் சற்று ஒதுங்கிய இடத்தில் இச்சிவாலயம் அமையப் பெற்றுள்ளது. சுற்றிலும் வயல்வெளிகள். ரம்மியமான சூழல். தோரண வாயிலின் நேராக ஈசனது சந்நதி அமைந்துள்ளது. விதானத்தில் அம்மையப்பர் தரிசனம். மகாமண்டபம், அர்த்த மண்டபம், கடந்து கருவறையுள் கண் நோக்க... அற்புத தரிசனம். அழகிய சிறிய திருமேனியராய், ஆனந்தமாய் வீற்றருள்கின்றார். ஸ்ரீ நாகநாதஸ்வாமி. ஆதியில் கேது பூஜித்த லிங்கமாதலால் கேதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். பல ஜென்ம நாக தோஷங்களையும் நொடிப் பொழுதில் நீக்கி, சுகத்தை அருளுபவர். ஆலய வலம் வருகையில், முறையான கோஷ்ட தெய்வங்களோடு, தனிச் சந்நதிகளில் வீற்றிருக்கும் கணபதி, கந்தன் மற்றும் கஜலட்சுமியை வணங்குகின்றோம்.
சுவாமிக்கு வாம பாகத்தில் அம்மையின் சந்நதி கிழக்கு முகமாக அமைந்துள்ளது. அம்பிகையாக ஸ்ரீ கற்பூரவல்லி சிறிய திருமேனி கொண்டு புன்னகை சிந்துகின்றாள். திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப் பெறுகின்றாள். ஆதிகேதுவின் சந்நதி ஆலய வாயு பாகத்தில் தனியாக அமைந்துள்ளது. சிறிய ஆலயம்! சீர்மிகுந்து விளங்குகின்றது. சுவாமிக்கும், அம்பாளுக்கும் பசும்பாலால் அபிஷேகம் செய்து, சிவந்த அல்லி மலர்களால் அர்ச்சித்து, புளியோதரை நிவேதனம் செய்து பிரார்த்திக்க, முன் ஜென்மங்களில் ஏற்பட்ட நாக தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறலாம்.
அதோடு சிறந்த அறிவையும், பேராற்றலையும் பெற்றிடலாம். சிவபக்தியில் சிறந்தும், மோட்சகாரனாகவும் திகழும் இத்தல ஆதிகேதுவை எமகண்ட வேளையில் அபிஷேகித்து, பல வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிவித்து, சிறந்த நீர்வகைப் புஷ்பங்களால் அர்ச்சித்து, கொள்ளுப்பொடி சாதம் நிவேதனம் செய்து, ஆராதித்து சகலவித பாபங்களிலிருந்தும் விடுபட்டு, சுகபோகங்களோடு, சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். நாகை மாவட்டம், சீர்காழி நகரிலிருந்து திருமுல்லைவாயில் செல்லும் பாதையில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செம்பங்குடி.
No comments:
Post a Comment