ராதை என்னும் பக்தை தினமும் பாண்டுரங்கனின் திருநாமம் சொல்லி ஜெபிப்பாள். பசுக்களை வளர்த்த அவள், விராட்டி விற்று வந்தாள். நியாயமான லாபத்திற்கு விற்றதால் விற்பனை சிறப்பாக இருந்தது. ராதையின் பக்கத்து வீட்டில் பால்காரி ஒருத்தி இருந்தாள். பேராசை மிக்க அவள் பாலில் நிறைய தண்ணீர் சேர்த்து விற்பாள். அதனால் யாரும் அவளிடம் பால் வாங்கவில்லை. இதனால் ராதை மீது பொறாமை கொண்டாள்.
ஒருமுறை அவள் ராதையின் விராட்டிகளை எடுத்து தன் வீட்டில் மறைத்து வைத்தாள்.
நடந்ததை அறிந்த ராதை சண்டையிட்டாள்.
"விராட்டியில உன்னதுன்னு எழுதியா இருக்கு?'' என்று கேலி பேசினாள் அவள்.
"எல்லாம் பாண்டுரங்கன் அறிவான்' என்று சொல்லி விட்டு ராதை வந்து விட்டாள்.
அப்போது அங்கு மகான் துக்காராம் வந்தார். அவரிடம் ராதை நடந்ததைச் சொன்னாள். பக்கத்துவீட்டுப் பெண்ணும் நல்லவள் போல துக்காராமை வணங்கினாள். இருவரும் துக்காராம் சொல்லும் முடிவை ஏற்பதாக தெரிவித்தனர். துக்காராம் விராட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து தன் காதருகில் கொண்டு சென்ற பின் அவற்றை தனித்தனியாகப் பிரித்து வைக்க தொடங்கினார். அப்படி பிரித்ததில் ராதையின் விராட்டிகளே அதிகம் இருந்தது.
"பக்தியோடு பணி செய்தால் அதில் தெய்வீகத் தன்மை வெளிப்படும். இந்த விராட்டிகள் ஒவ்வொன்றும் "விட்டல' நாமத்தை எதிரொலித்தது. ராதையும் தினமும் "விட்டல' நாமம் சொல்பவள். அதனால் இந்த விராட்டிகள் ராதைக்கே சொந்தமானவை'' என்றார் துக்காராம். இதை கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
No comments:
Post a Comment