ஒருநாள் ஒரு தெருவில், தேவரிஷி நாரதரும் ஆங்கிரஸ் மகரிஷியும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். வழியில் பெரிய ஒரு மாளிகை. அதன் முன்பகுதியில் தானியங்கள் விற்பனை செய்யும் பெரிய கடை இருந்தது. அந்தக் கடையின் எதிரிலும், பலவகையான தானியங்கள் விற்பனைக்குக் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கடையில் வேலைகள் செய்வதற்கு வேலைக்காரர்கள் பலர் இருந்தார்கள்.
கடையின் உரிமையாளன் ஓர் இளைஞன். அவன் தன் கையில் ஒரு தடி வைத்திருந்தான். சில சமயம் கடையின் எதிரில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தானியங்களைச் சாப்பிடுவதற்கு ஆடு, மாடுகள் வரும். அப்போது இளைஞன் தன் கையில் இருக்கும் தடியால் ஆடு - மாடுகளை அடித்து விரட்டுவது வழக்கம்.
ஒரு நாள் எங்கிருந்தோ ஓர் ஆடு, தானியக்கடையை நோக்கி வேகமாக ஓடி வந்தது. ஆவலுடன் கடையின் எதிரில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தானியக் குவியலில் வாய் வைத்தது. உடனே இளைஞன், கையில் இருந்த தடியால் ஆட்டின் தலையில் ஓங்கி, "படார்!'' என்று பலமாக அடித்தான். தலையில் அடிபட்ட ஆடு அலறியபடியே அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்தக் காட்சியைப் பார்த்த நாரதர் சிரித்தார்.
ஆங்கிரஸ் முனிவர் நாரதரிடம், ""உங்கள் சிரிப்புக்கு என்ன காரணம்?'' என்று கேட்டார். அதற்கு நாரதர் ஒரு பதிலைக் கூறினார்:
"இப்போது நாம் இங்கு ஒரு தானியக் கடையைப் பார்க்கிறோம். இதை மிகவும் சிறிய அளவில் ஒருவர் ஆரம்பித்தார். தன் உழைப்பால் வியாபாரத்தை பெருக்கி கோடீஸ்வரரானார். பிறகு அவர் வேறு பல இடங்களிலும் கடைகள் துவங்கினார். அவர்தான் இப்போது நாம் இங்கு பார்க்கும் இந்தப் பெரிய மாளிகையையும் கட்டினார். அவர் முதன் முதலில் இந்த இடத்தில் தான் தன் தொழிலை ஆரம்பித்தார். எனவே அவர் மாளிகையின் முன்பகுதியில் இருக்கும் கடையை மாற்றாமல், அப்படியே வைத்துக் கொண்டார். அதற்கு, அந்த இடம் மிகவும் ராசியானது என்று அவர் நினைத்ததும் ஒரு காரணம். அவர் காலமான பிறகு, அவரது மகன் தன் தந்தை ஆரம்பித்த கடைகள் அனைத்துக்கும் உரிமையாளன் ஆனான்.
அவன் தினந்தோறும் இந்தக் கடையில் ஒரு மணி நேரம் இருந்துவிட்டுச் செல்வான். இப்படி அவன் தனக்குச் சொந்தமான ஒவ்வொரு கடையிலும், சிறிது நேரம் இருப்பது வழக்கம். தானியக்கடைகளில் வியாபாரத்தைக் கவனித்துக்கொள்வதற்கு அவனுக்குத் தேவையான வேலையாட்கள் இருக்கிறார்கள்.
நான் சிரித்ததற்குக் காரணம் என்னவென்றால், இந்தக் கடையை இங்கு முதலில் ஆரம்பித்தவர் இப்போது ஓர் ஆடாகப் பிறந்திருக்கிறார். அந்த ஆடுதான் சிறிது நேரத்திற்கு முன்பு பசியோடு வந்து தானியக் குவியலில் வாய் வைத்தது! அந்த ஆட்டின் தலையில் பலமாக ஓங்கி அடித்தானே! அவன் இவர் மகன்தான்.
வியாபாரி தன் மகனை நன்றாக வளர்ப்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். கடையில் இருக்கும் இந்த இளைஞன் இப்போது செல்வச் செழிப்பில் வாழ்வதற்குக் காரணமே அவனுடைய தந்தைதான். ஆடாகப் பிறந்திருக்கும் அவருக்கு இப்போது இங்கு ஒரு வாய் தானியம் சாப்பிடக்கூட உரிமையில்லை! இவ்விதம் நடப்பது தான் உலக வழக்கமாக இருந்து வருகிறது. இதை நினைத்தபோது தான் எனக்குச் சிரிப்பு வந்தது,'' என்றார்.
இன்னொரு கதையைக் கேட்போமா! சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்லும் முன், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இரண்டு வாரம் தங்கினார். அங்கு அவருக்கு படைத்தளபதி சர்தார் ஹரிசிங் அறிமுகமானார். அவருடைய வீட்டில் சுவாமிஜி சில நாட்கள் தங்கினார். இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. ஆன்மிகக் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. தீவிர வேதாந்தியான ஹரிசிங், இறைவன் உருவமற்றவர் என்பதில் நம்பிக்கை உடையவர்.
ஒருநாள் இருவருக்குமிடையில், இது பற்றிய பேச்சு எழுந்தது. சுவாமிஜி ஹரிசிங்கிடம், இறைவன் உருவமுள்ளவர் என்பதை விளக்கிக் கூறினார். ஆனாலும், அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அன்று மாலை இருவரும் ஒரு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சிலர், பக்திப்பாடல்களைப் பாடியபடியே கிருஷ்ணன் விக்ரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.
ஊர்வலத்தை சுவாமிஜியும் ஹரிசிங்கும் சிறிது நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று சுவாமிஜி ஹரிசிங்கைத் தொட்டு, "ஹரிசிங்! அதோ அங்கு உயிருள்ள கிருஷ்ணன் நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள்!'' என்று கூறினார்.
இவ்விதம் சுவாமிஜி கூறியதும் ஹரிசிங், கிருஷ்ணன் விக்கிரகத்தைப் பார்த்தார். அங்கு உண்மையில் உயிருள்ள கிருஷ்ணனே நின்று கொண்டிருந்தார்.
முதலில் ஹரிசிங்கால் அதை நம்பவே முடியவில்லை. கிருஷ்ணனைக் கண் இமைக்காமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அது அவரைப் பரவசமடையச் செய்தது. பக்தியில் மனம் நெகிழ்ந்த அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு ஹரிசிங் விவேகானந்தரிடம், "சுவாமிஜி! எனக்கு நீங்கள் பல மணி நேரம், இறைவனுக்கு உருவம் உண்டு என விளக்கிக் கூறினீர்கள். அதை அப்போது நான் புரிந்துகொள்ளவில்லை. இப்போது உங்களுடைய ஒரு ஸ்பரிசம், இறைவன் உருவம் உடையவர் என்பதைச் சுலபமாக எனக்கு உணர்த்திவிட்டது. அங்கு உண்மையிலேயே நான், உயிருள்ள கிருஷ்ணனையே தரிசித்தேன்'' என்று வியப்புடன் நாதழு தழுத்த குரலில் கூறினார். சம்பாதிப்பது எல்லாம் நமக்கு சொந்தமல்ல..மகான்களின் கருத்து உண்மையானது என்ற இரண்டு தத்துவங்களை இதன் மூலம் தெரிந்து கொண்டீர்கள் தானே
No comments:
Post a Comment