Friday 28 July 2017

ஆயுள் பலம் தருவார் ஆலடி புதியவன்


திப்பணம்பட்டி, திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குரும்பூரில் வசித்து வந்தவர் வைரவன் நாடார். மனைவி, மக்களை அழைத்துக்கொண்டு, நெல்லை மேற்குப் பகுதிக்கு வந்து, ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூர் என்ற ஆலடிப்பட்டி கிராமத்தில் குடியேறினார். இந்தப் புலம் பெயர்தல் ஏழு தலைமுறைகளுக்கு முந்தைய நிகழ்ச்சியாகும். தான் வணங்கி வந்த சாஸ்தாவுக்கும் அப்பகுதியில் சிறிய அளவில் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார். கூடவே குலதெய்வமான சுடலைமாடனுக்கும் சிலை அமைத்து  பூஜித்தார். 

அந்தப் பகுதியில், தனது மகன்களுக்கும் அவன் தரத்து வாலிபர்களுக்கும் பகை உருவானதால், வைரவன் நாடார் அங்கிருந்து திப்பணம்பட்டிக்கு வந்து குடியமர்ந்தார். இங்கே அவர் விவசாயத் தொழிலை மேற்கொண்டார். மேலும் வீட்டில் கறவை மாடுகளும் வளர்த்து வந்தார். மகன் மூத்தவன் மாடு, கன்றுகளை ஓட்டிக்கொண்டு, தன் நண்பர்களோடு மேய்ச்சலுக்கு சென்றான். காட்டில் அவரவர் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, சிறுவர்கள் ஆடிப்பாடி விளையாடுவதும், குளத்தில் நீராடுவதுமாகப் பொழுதை கழிப்பது வழக்கம். ஒருநாள் காலைப்பொழுதில் மாடுகள் கட்டப்பட்டிருந்த இடத்திலிருந்து வந்த வைரவன் தனது மனைவியை அழைத்தார்.

‘‘என்ன… கூப்பிட்டியேளோ’’ என்று அலுப்பாகக் கேட்டபடி நடை தளர  வந்தாள் மனைவி.
‘‘ஏமுட்டி, என்னாச்சு உனக்கு?’’ வைரவன் கவலையுடன் கேட்டார்.
‘‘மண்ட கனமா இருக்கு.’’ 
‘‘உனக்கு ஒரு நாளும் சீக்கு ஒழியாது.’’ 

‘‘ஆமா, சும்மா, சும்மா கோபப்படாதியும். நம்ம சாமிய, போய் கும்பிட்டு வரலாமுன்னு சொன்னா கேக்கியேளா,’’ என்றாள் மனைவி தங்ககனி.
‘‘சாமியையும், சாஸ்தாவையும் நான் ஊர விட்டு வந்தாலும் மறக்காம கொண்டு கோயில கட்டி கும்பிட்டதுக்கு, அங்கயும் பகையாகி ஊரவிட்டு வந்ததுதான் மிச்சம். என்னத்த, நல்லாயிட்டோம்..? நோயும், நொடியும்  மாறல, மாடா உழைச்சும் ஒரு துட்டும் தங்கல’’ என்று விரக்தியுடன்  வைரவன் பேசிக்கொண்டிருக்க, அந்த நேரம் வீட்டு வாசலில் குறி  சொல்பவன் வந்து நின்றான். ‘‘நல்ல காலம் பொறக்குது சாமி, உங்களுக்கு  நல்ல காலம் பொறக்குது. தலைக்கு வந்தது தலைப்பாவோடு போச்சு. கெட்ட  நேரத்தில உம்ம உசுருக்கும், குடும்பத்தில உள்ளவங்களும் தீங்கு ஏதும்  நேராம, அவப்பேரோடு அடுத்த இடத்திற்கு வரவச்சு காப்பாத்திட்டான் அந்த மீசைக்காரன்.  

இன்னைக்கு வெள்ளிக்கிழமை. உங்கள காத்து நிக்கும் அந்த அருவாக்காரனுக்கும், ஆனை வாகனத்தான் சாஸ்தாவுக்கும் பேர சொல்லி துட்ட முடிஞ்சி வைங்க, வீட்டு மவராசிக்கு வந்த தலவலி மறு நொடியே மறஞ்சி போகும்.’’ என்றுரைத்தான். அவன் சென்ற பிறகு தனது  தெய்வமான சுடலைமாடனை நினைத்து காசை முடிந்து வைத்தார்  வைரவன். அதேநாள் பகல் பன்னிரண்டு மணியளவில் காட்டில்  மாடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், வழக்கம்போல் குளத்தின் கரையில்  நட்ட கல்லை சாமியாக்கி, தகர டப்பாவில் தாளம் இசைத்து ‘சாமியாட்டம்’ விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வைரவன் நாடார் மகன் மீது சாமி வந்தது. அவனது சத்தமும், கண் முழியும் வித்தியாசமாக இருக்கவே, உடனிருந்த சிறுவர்கள் அஞ்சினர். 

அருகே உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கும், விறகு வெட்டவும் வந்த  நாலைந்து பேரை அழைத்து வந்தனர். அவர்கள் வந்து ‘‘யார் நீ, என்ன  வேணும்?’’ என்று கேட்க, ‘‘நான் ஆலடிக்காரம்பா,’’ என்றான் சிறுவன்.  உடனே அந்த கூட்டத்திலிருந்த நபர் ‘‘சரிப்பா, ஆலடிக்காரன் தான், உன்  பேரு என்ன?’’ என்று கேட்டதற்கு, ‘‘புது மனுஷன்னு வச்சுக்கோ,  முதல்ல நான் சொல்லுறத கேளு, எனக்கு பூஜை செஞ்சி வணங்கி வந்த  வைரவன் இங்க வந்திட்டான். நானும் இப்போ இங்கே வந்திட்டேன். எனக்கு  கோயில கட்டி வணங்கி வந்தா உங்கள காத்து நிப்பேன்.’’ என்று கூறிய  சிறுவன், உடனே மயங்கி விழுந்தான்.

தண்ணீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். வைரவன் நாடார் மகனை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். நடந்ததை அவரிடம் கூறினார். மறு வாரமே கொண்டலூர் குளக்கரையில் சிறிய அளவில் மண்ணால் பீடம் அமைத்து ஆலடி புதியவன் என்று பெயர் வைத்து வழிபட ஆரம்பித்தனர். ஆண்டுதோறும் கொடையும் நடத்தி வந்தனர். கொடை நாளின்போது  நள்ளிரவு பெண்களையும், குழந்தைகளையும் காட்டுக்கு அழைத்து செல்வது  கடினமாக இருந்ததால், ஆலடி புதியவன் சாமிக்கு ஊருக்குள் கோயில் கட்ட  முடிவு செய்தனர். அப்பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற மூதாட்டி கோயில் கட்டுவதற்காக இடத்தை தானமாக கொடுத்தார்; பொருளுதவியும் செய்தார். பின்னர் கோயில் கட்டப்பட்டது. 

அந்த ஊரில் யாருக்காவது உடல் நலம் குன்றினால் உடனே வைரவன் நாடாரை அழைப்பார்கள். அவர் ஒரு பார்வை பார்த்து முகத்தில் நீர் தெளித்து திருநீறு பூசினால், நோயுற்றவர் குணமாவார். அந்த நம்பிக்கை கிராம மக்களிடம் அதிகம் இருந்தது. ஒருநாள், எண்பது வயது நிறைந்த ராமலிங்கம் நாடாருக்கு உடல் நலம் குன்றியது. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் வைரவன் நாடாரும் அவர் வீட்டுக்கு வந்தார். ‘‘ஏ, அய்யா வைரவா, வந்திட்டியா, எமன், காலன் தூதனோடு வந்து என்னை  கூப்பிடுறான் அய்யா,’’ என்றார் ராமலிங்கம்.

வைரவன், அவரை பார்த்து ‘‘உமக்கு ஒண்ணும் செய்யாது  ம்… ‘ஆலடி புதியவா என்ன காப்பாத்து’ன்னு சொல்லும்’’ என்று கூற, அவரும்  ‘‘ஆலடி புதியவா’’ என்றுரைத்தார். அவ்வாறு அழைத்த மறுநிமிடமே  அவர் ஆரோக்கியத்துடன் எழுந்து அமர்ந்தார். வைரவன் நாடார், ‘‘எமன்  எடுக்க வந்த உசுர ஆலடி புதியவன் மீட்டு தந்திருக்கிறாரு. நம்ம அய்யன்  ஆலடி புதியவனின் சத்தியத்துக்கு கட்டுப்பட்ட எமனுக்கும், கால  தூதனுக்கும் உருவச் சிலை நிலையம் கொடுத்து பூ வச்சு  கொடுங்க,’’என்றார்.

அதன்படி ஆலடி புதியவன் கோயிலில் எமனுக்கு சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. கிராம கோயில்களில் எமனுக்கு சிலை இருப்பது இங்கு மட்டுமே. எமன் எருமை மீது அமர்ந்தபடியும், அருகிலே காலன், தூதுவர் சிலைகளும் நின்ற கோலத்தில் உள்ளன. ஆலடி புதியவன் என்பது அய்யன் சுடலைமாடன் தான் என்று கூறுகின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமைக்கு முந்தைய வெள்ளியன்று கொடை விழா நடைபெறுகிறது. திருநெல்வேலி -தென்காசி சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவிலுள்ளது திப்பணம்பட்டி. அங்குள்ள மீனாட்சிபுரத்தில், ஆலடி புதியவன்கோயில் அமைந்துள்ளது.   கோயிலுக்கு நிலம் கொடுத்த மீனாட்சி அம்மாளையும் நினைவு கூர்ந்து  அவருக்கும் ஒரு படையல் கொடுக்கின்றனர், இப்பகுதி மக்கள்.

No comments:

Post a Comment