இளைஞன் ஒருவனுக்கு, "எல்லாம் சிவமயம் என்பது உண்மை தானா?' என்ற சந்தேகம் எழுந்தது.
கங்கைக் கரையில் இருக்கும் சாதுக்களிடம் சென்று கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
அங்கிருந்த ஒரு சாது, "ஞானியான ஏகநாதரிடம் செல். அவரைச் சந்தித்தால் உன் சந்தேகம் தீரும்,'' என்றார்.
ஏகநாதரைக் காண இளைஞன், கங்கை கரையிலுள்ள ஒவ்வொரு சிவன் கோவிலாக ஏறி இறங்கினான். ஆனால், அவர் தென்படவில்லை.
நண்பகல் நேரம் ஆகி விட்டது. வெயிலும் உக்கிரமானது.
கடைசியாக இளைஞன் சோர்வுடன் ஒரு கோவிலுக்குள் நுழைந்தான். அங்கு ஒரு சிவலிங்கத்தை நோக்கி, கால் வைத்தபடி ஏகநாதர் தூங்குவதைக் கண்டான். "சிவனை அவமதிக்கும் இவரா ஞானி,'' என திகைத்துப் போனான். இருந்தாலும், அவர் விழிக்கும் வரை காத்திருந்தான்.
அவரிடம் இளைஞன், ""ஞானிகள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லவா கண் விழிப்பார்கள்? நீங்கள் நண்பகல் வரை தூங்குகிறீர்களே....'' என்று கேட்டான்.
"எனக்குள் இருக்கும் பிரம்மத்திற்கு (கடவுளுக்கு) தூக்கம் வரும் போது தூங்கினேன். விழிப்பு வரும் போது விழித்தேன். பிரம்மம் விழிக்கும் நேரம் தானே பிரம்ம முகூர்த்தம்,'' என்றார் ஏகநாதர்.
"அதுவும் சரி தான்...லிங்கத்தை நோக்கி கால் நீட்டி அவமதிக்கிறீர்களே.....'' என்றான் இளைஞன்.
"சிவன் இல்லாத திசையே உலகில் இல்லை.....காண்பது அனைத்தும் சிவமே. நீயும், நானும் சிவம் தான். யாராலும் அவரை அவமதிக்க முடியாது'' என்றார் ஏகநாதர்.
எங்கும் சிவமயம் என்பதை புரிந்து கொண்டான் அவன்.
No comments:
Post a Comment