Thursday 27 July 2017

கிணற்றையே கோயிலாக கொண்ட பாப்பாத்தி கன்னியம்மன் திருவிழா


வாலாஜா அருகே கிணற்றையே கோயில் கருவறையாக கொண்டு அருள்பாலிக்கும் பாப்பாத்தி கன்னியம்மன் திருவிழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பாகவெளி கிராமத்தில் உள்ளது பாப்பாத்தி கன்னியம்மன் கோயில். அங்குள்ள ஒரு விவசாய கிணற்றையே கருவறையாக கொண்டு அம்மன் அருள்பாலித்து வருகிறார். உலகிலேயே இவ்வாறு இருப்பது இங்கு மட்டும்தான் என்கின்றனர் இந்த ஊர் பெரியவர்கள். கிணற்றையே கருவறை யாக கொண்ட பாப்பாத்தி கன்னியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. 

2ம் நாளான நேற்று செண்டை மேள இசையுடன் ஓம்சக்தி கோயிலில் இருந்து யானை மீது அம்மன் வெள்ளி ஊஞ்சல் புறப்பாடு நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பால் குடம், பூக்கூடை ஏந்தி ஊர்வலமாக கிணற்று கோயிலுக்கு வந்தனர். விரதமிருந்த பக்தர்கள் மதியம் 2 மணியளவில் கிணற்றில் குதித்து, கிணற்றில் குடியிருக்கும் பாப்பாத்தி கன்னியம்மன் கற்சிலையை மீட்டெடுத்தனர். சிலை கிடைத்ததால் கிணற்றை சுற்றி திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரசவத்துடன் தரிசனம் செய்தனர். வெளியில் எடுக்கப்பட்ட பாப்பாத்தி கன்னியம்மனுக்கு சிறப்பு  கிணற்றின் கரையிலேயே பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அபிஷேக, ஆராதனைகள், ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

மாலை 5 மணிக்கு நாட்டி யாஞ்சலி நடந்தது. இரவு 8 மணிக்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் பூஜைக்கு பிறகு அம்மன் மீண்டும் கிணற்றில் குடிகொண்டார். இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யப்படுகிறது. வறட்சிக் காலத்தில் கூட இந்த கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். நல்லமழை பெய்யும் பாகவெளியில் உள்ள விவசாய கிணற்றில் கோயில் கொண்டுள்ள பாப்பாத்தி கன்னியம்மன் வழக்கமாக நீண்ட நேரம் தேடினால்தான் கிடைக்கும். ஆனால் நேற்று 15 நிமிடத்திலேயே அம்மன் கிடைத்தது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், அம்மன் சிலை 15 நிமிடங்களில் கிடைத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment