Monday 31 July 2017

சிவனுக்கு பிடித்த செவ்வாழை


பண்ணையார் ஒருவரிடம் நல்லதம்பி என்ற படிப்பறிவு இல்லாத இளைஞன் வேலை செய்து வந்தான். 

வழக்கமாக நெல்லும், கரும்பும் மட்டும் பயிரிடும் பண்ணையார், வேறு ஏதாவது புதிதாகப் பயிரிடலாமா என்று நல்லதம்பியிடம் யோசனை கேட்டார். 
"நீங்க விரும்பினா இந்த வருஷம் செவ்வாழை பயிரிடலாம். நல்ல லாபம் வரும்,'' என்றான் நல்லதம்பி. 

பண்ணையாரும், "உன் மனசு போல செவ்வாழையே நடலாம்'' என்றார்.

வாழைக்கன்று நட்டதில் இருந்து, நல்லதம்பி தோட்டமே கதி என்று காவல் கிடந்தான்.

கன்றுகள் பச்சைப் பசேலென செழித்து வளர ஆரம்பித்தன. அதைக் கண்ட நல்லதம்பி மகிழ்ந்தான். 

முதன் முதலில் ஒரு மரம் குலை தள்ளியது.

வயலுக்கு வந்த பண்ணையார், ""நல்லதம்பி... வாழையெல்லாம் எப்படி இருக்கு?'' என்று கேட்டார்.

"பலன் கொடுக்கிற நேரம் வந்தாச்சு எஜமான். இதோ! நீங்களே மொதல்ல தள்ளிய குலையைப் பாருங்க,'' என்றான் நல்லதம்பி. 

பண்ணையாரும் மனதிற்குள், "ஆகா.....செவ்வாழையால் நல்ல லாபம் கிடைக்கும் போலிருக்கே,'' என்று சந்தோஷத்துடன்  வீட்டுக்கு கிளம்பினார்.

வீட்டில் , குலதெய்வமான சிவன் கோவிலில் இருந்து அழைப்பிதழ் வந்திருந்தது. அதைப் படித்த போது, ஐப்பசி பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேம் நடக்க இருப்பதை அறிந்தார். பண்ணையார் சிவனுக்கு காணிக்கை செலுத்த விரும்பினார். 

நல்லதம்பியை அழைத்து, ""மொதல்ல வர்ற வாழைத்தாரை வெட்டி பழுக்க வைச்சிடு. அதை நீயே போய் குலதெய்வம் கோவிலுக்கு குடுத்துடு,'' என்றார்.

நல்ல தம்பியும் தாரை வெட்டிப் பழுக்க வைத்தான். அதில் 136 பழங்கள் இருந்தன. அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

நீண்ட தூரம் நடந்ததால், அவனுக்கு பசி உண்டானது. பொறுக்க முடியாமல், சில வாழைப் பழங்களைத் தின்று பசியாறினான். 

கோவிலுக்குச் சென்றவன், ""சிவனே..... உன்னருளாலே எல்லாரும் நல்லா இருக்கணும் சாமி,'' என்று வேண்டினான். கோவில் பொறுப்பாளரிடம் வாழைத்தாரை ஒப்படைத்தான். 

அவரும் அதை வாங்கி விட்டு பண்ணையாருக்கு ரசீது எழுதிக் கொடுத்தார். அதில், "தாங்கள் அனுப்பியதில் 10 பழம் தவிர மீதிப் பழங்கள் வந்து சேர்ந்தது,'' என்று இருந்தது. 

நல்லதம்பியும், விஷயம் புரியாமல் பண்ணையாரிடம் ரசீதை ஒப்படைத்தான்.
அதைப் படித்த பண்ணையாருக்கு கோபம் எழுந்தது. 

"சுவாமிக்கு கொடுத்த பழத்தை திருடியது இந்த கை தானே!'' என்று சொல்லி நல்லதம்பியின் கையில் சூடு போட்டார். அவன் வலி தாளாமல் துடித்தான்.

அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய சிவன், "பக்தனே.... நீ அனுப்பியதில் 10 பழத்தை மட்டும் விருப்பமுடன் ஏற்றுக் கொண்டேன்,'' என்றார். விழித்தெழுந்த பண்ணையார் படபடத்துப் போனார். 

"நல்லதம்பி.... நீ சாப்பிட்ட பழத்தையே கடவுள் ஏற்றுக் கொண்டிருக்கிறார். உழைப்பின் பலனை அனுபவிக்கும் முதல் உரிமை உனக்கே என்பதை உணர்ந்தேன். என்னை மன்னித்து விடு,'' என்றார் பண்ணையார். 

No comments:

Post a Comment