Monday, 24 July 2017

நாலாயிரம்


நாலாயிரம் என்று நினைவு வந்துவிட்டாலே, நாவும் நம் மனமும் களிப்படைந்து விடுகின்றன. நம் மனம் சஞ்சலமாக இருக்கிறதா? மனம் ஒருமைப்பட வேண்டுமா? நம் வசத்தில் மனம் வாசம் செய்ய வேண்டுமா? இதோ ஓர் அற்புத மருந்து. பக்கவிளைவுகள் இல்லாத, அதே சமயத்தில் பயன் தரும் மா மருந்தாய் நாலாயிரத் திவ்யபிரபந்தம், திராவிட வேதம், பச்சைத் தமிழ் ஆழ்வார் பெருமக்களின் அருளிச் செயல்கள் என்று நானிலத்தாரால் கொண்டாடப்படுகின்ற நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை நாமும் கொண்டாடுவோம். திருமாலின் மேன்மைகளை கூறும், தெய்வீகப் பேரின்பம் தரும், தூய துளசி தீர்த்தமாக நம்மில் நம்மையே கறைய வைக்கும், தேனினும் இனிய பாசுரங்களில் அதன் அழகு தமிழில் மூழ்குவோம். 

அள்ள அள்ளக் குறையாத அமுதத்தை இரு கைகளால் ஏந்திப் பருகுவோம். உயிரின் கடைக்கோடி அணுக்கள் வரை ஊடுருவிப் பாயும் தெய்வீகத் தமிழான ஆழ்வார்களின் அற்புதப் பாசுரங்களில் இருந்து நம் பயணத்தை தொடங்குவோம். மன மாசுகளை அகற்றி விட்டு இம்மைக்கும் மறுமைக்கும் பேரின்பம் அளிக்கின்ற வைணவத் தமிழில் ஆண்டவன் மீது ஆழ்வார்கள் காட்டும் உருக்கத்தையும் நெருக்கத்தையும் காண்போம். 

அழுதும் தொழுதும் பரமனைப் பற்றியும் அவன் மங்கல குணங்களையும் காட்டும், பாசுரங்கள். ஜிவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணைப்பையும் பிணைப்பையும் தெள்ளத் தெளிவாக உணர்த்தும் ஈரத்தமிழிலான இனிய பாசுரங்கள், பக்தனுக்கும் பகவானுக்கும் இடையே உள்ள தடைகளை தகர்த்தெறிந்து பரிபூரண சரணாகதி ஒன்றுதான் நம் வாழ்வு உய்ய ஒரே வழி என்பதை பன்னிரு ஆழ்வார் பெருமக்களும் அவர்களுக்கே உரிய பாணியில் பேருண்மைகளை இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். பிரபத்தி என்கிற சரணாகதி... அவனிடம் நம்மை முழுவதுமாக ஒப்படைத்து விடவேண்டும். அப்படி ஒப்படைத்து விட்டால் நமக்கு என்ன கிடைக்கும். இதற்கு அற்புதமான அழகான பாசுரத்திலிருந்து இதற்கு பதில் தருகிறார் ஆழ்வார்களில் சூப்பர் ஸ்டாரான திருமங்கை ஆழ்வார்.

‘குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்’      

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தை சுற்றுப்புறச் சூழலைத் தரும். ஐஸ்வர்யத்தைத் தரும். அடியவர்கள் படுகிற துயரங்களை எல்லாம் தரைமட்டமாக்கி பரமபதத்தை தரும். அருள் கைவரப் பெறும். வலிமை கிடைக்கும். அதற்குப் பிறகு ஆழ்வார் ஒரு அற்புத உதாரணத்தை நம் முன் வைக்கிறார். உலகத்திலேயே மிகப்பெரிய ஆதாரம் பெற்ற தாய்தான். அந்தத் தாயை விட தயாபரனான இறைவன் மிகக் கருணையானவன். பரிபூரண அன்பைத் தருகிறவன். எல்லா நலத்தையும் வளத்தையும் தருகிறவன். அவனுடைய நாராயணா நாமத்தை சொல்லுவோம் என்று திருமங்கையாழ்வார் ஆணித்தரமாக எடுத்துச் சொல்லுகிறார்.

திருமங்கையாழ்வார் போட்டுக் கொடுத்த ராஜபாட்டையில் அடுத்து உலகம் உய்ய வந்த ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீதேறி நாராயண மந்திரத்தை அந்த தெய்வீகப் பேரொளியைத் தரும் மந்திரச் சொல்லை அனைவரும் கேட்க, ஏழை, பணக்காரன், உயர்வு தாழ்வு பார்க்காமல், ஆண்டவன் சந்நிதானம் முன் அனைவரும் சமம் என்கிற சமதிருஷ்டி நோக்கில் உரத்த குரலில் உலகத்திற்கு எடுத்துச் சொன்னார், திருமங்கையாழ்வார். இந்தப் பாசுரத்தில் ஒரு பேருண்மையை இந்த உலகத்திற்கு செய்தியாக தந்திருக்கிறார். 

அது என்ன தெரியுமா? நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்கிறார். நான் கண்டு கொண்டேன் அதாவது இறைவனை அந்தப் பரம்பொருளை கண்ணாரக் கண்டு கொண்டேன். அதாவது பரந்தாமனை பார்த்தாகி விட்டது. பரந்தாமனை நோக்கிய பாதையில் பயணம் செய்ய ஆழ்வார்களின் அமுதத் தமிழ் படைப்பான நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இருந்து கற்கண்டுத் தமிழில் நம் மனதைப் பறி கொடுப்போம். வைணவ நெறியை ‘‘என்றும் உள்ள வழி’’ என்றும், ‘‘தொடக்கம் இல்லாமல் தொடரும் கொள்கை’’ என்றும் அருளாளர்கள் போற்றிச் சொல்லுவார்கள். திருமாலயத்தின் பழமையும் பெருமையையும் போற்றும் திவ்யப்பிரபந்தத்தின் மேன்மைகளையும், சிறப்புக் கூறுகளையும் சீர்தூக்கிப் பார்ப்போம்.

‘நாவெல்லாம் நாலாயிரம்
நெஞ்செல்லாம் நாராயணம்
இனி வாராவாரம் ஆராவாரம்தான்.’

No comments:

Post a Comment