Wednesday 26 July 2017

வீட்டில், ஸ்வாமி விக்கிரகங்கள் வைத்து வழிபடும் நிலையில் அந்த மூர்த்தங்களுக்கு அனுதினமும் அபிஷேக-நைவேத்தியம் செய்ய வேண்டுமா?


உடல் சுகாதாரத்துக்கு நீராடுகிறோம். பசியைப் போக்க உணவருந்துகிறோம். வீட்டில் பசு மாட்டை வளர்ப்பதுண்டு. அதைக் கழுவுவதும், அதற்கு உணவளிப்பதும் உண்டு. செல்லப் பிராணிகளை வளர்க்கிறோம். அவற்றின் பராமரிப்பு, தடங்கல் இல்லாமல் நடைபெறுகிறது. அவற்றுக்குப் பிடித்தமான உணவு அளிப்போம். அவற்றின் சுகாதாரம் குன்றினால் மருத்துவரை அணுகி கவனிப்போம். நம் குழந்தைச் செல்வங்களையும் தினமும் நீராட்டி, பாலூட்டி வளர்ப்போம். குழந்தைக்குப் பசிக்கும் வேளையை அறிந்து எச்சரிக்கையாகச் செயல் படுவோம். விருந்தாளியை உணவளித்து உபசரிப்போம்.

நாம் உட்கொள்ளும் உணவுப்பொருள்கள் கடவுளின் படைப்பு. விதையை விதைக்கிறான் விவசாயி. பூமி அதைப் பயிராக மாற்றித் தருகிறது. அது, பூமி மாதாவின் கருணை. அவர் தந்த உணவை முதலில் அவருக்குப் படைத்த பிறகு ஏற்றுக்கொள்வோம். உணவை ஆண்டவனுக்கு அளிக்க வேண்டும். அவரது பார்வைபட்டு, தூய்மையாக்கி அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நாகரிக நடைமுறையை வகுத்துத் தந்தது தர்மசாஸ்திரம். அவருக்கு அபிஷேகம் செய்வதும், உணவளிப்பதும் ஒரு சுமையாகாது.

விக்கிரகத்தை வைத்து பூஜை செய்ய ஆசைப்பட்டால் அபிஷேகம், பிரசாதம் ஆகியவற்றையும் செய்ய வேண்டும். நமது வீட்டில் அவரை வரவழைத்து அபிஷேகம் செய்யாமலும், உணவளிக்காமலும் இருப்பது தவறு. விருந்தோம்பலில் முன்னவர்களான நமக்கு, அது அழகல்ல. அக்கறையுடன் செய்யுங்கள். தங்களது முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வீட்டில் அவருக்குப் பணிவிடை செய்ய பொருளாதாரமும் சந்தர்ப்பமும் இடம்கொடுக்காவிட்டால் விக்கிரகத்தைத் தேவையானவர்களுக்கு அளிக்கலாம்; கடவுளைக் கோயிலில் வணங்கினால் போதும்.

No comments:

Post a Comment