Sunday, 30 July 2017

மகிழ்ச்சி தந்த கவலை


சீதையைத் தேடி வரும் வழியில், தம்பி லட்சுமணனுடன் பம்பை நதிக்கரைக்கு வந்தார் ராமர். பம்பையில் நீராடும் பொருட்டு, தன் கோதண்டம் என்னும் வில்லை, கரையில் அழுத்தமாக ஊன்றி வைத்தார். நீராடித் திரும்பிய அவர் வில்லை கையில் எடுத்தார். அதன் நுனியில் ரத்தக்கறை இருந்தது கண்டு திடுக்கிட்டார். ரத்தம் படிந்த காரணம் என்ன என ஆராய்ந்த போது, தவளை ஒன்று ரத்தம் வழிய தரையில் கிடந்தது. 

தவளை கிடப்பதைக் கவனிக்காமல், வில்லை அழுத்தமாக ஊன்றி விட்டோமே என வருந்திய ராமர், முத்து முத்தாக கண்ணீர் வடித்தார். 

தவளையை தடவிக் கொடுத்தபடியே, "தவளையே! நான் அறியாமல் பிழை செய்து விட்டேன், நீ கீழே இருப்பதை நான் கவனிக்கவில்லை. நான் கோதண்டத்தை ஊன்றும் போது, சத்தம் போட்டிருக்கலாம் இல்லையா?'' என்று பரிவுடன் கேட்டார்.

தவளை கனிவுடன் பேசியது.

"ஸ்ரீராமா! தாங்கள் நாராயணனின் அவதாரம் என்பதை நான் அறிவேன். என் மீது பட்டது உங்கள் கோதண்டம். இந்த கோதண்டத்தை தாங்கள் கண்ணாலாவது பார்க்க மாட்டோமா என இந்திரனும், மற்ற தேவர்களும் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால், என் மீது அதன் ஸ்பரிசம் தானாகப் பட்டது. அது எனக்கு வேதனை தந்தது என்னவோ உண்மை தான். ஆனால், அந்த வேதனையிலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே ஏற்பட்டது,'' என்றது. ராமனுக்கு அதன் பேச்சு சமாதானத்தை தரவில்லை.

"என்ன இருந்தாலும், நான் செய்தது தவறு தான். இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யப் போகிறேனோ!'' என்றவரிடம் தவளை மீண்டும் பேசியது.

"ஸ்ரீராமா! நீ பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன். இந்த உலகத்தில் அதர்மம் அழிந்து தர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நீயே மனிதனாக அவதரித்து வந்திருக்கிறாய். தர்மத்தை நிலைநாட்டவே, உன் வில்லான கோதண்டமும் உன்னோடு வந்திருக்கிறது. புனிதமான அந்த வில், என் மீது பட்டதே எனக்கு பெருமை தானே! ஒரு வேளை அதன் அழுத்தத்தால் என் உயிரே போயிருந்தாலும், அதை விட உயர்வான செயல் என்ன இருந்து விட முடியும்?

ஐயனே! இந்த வில்லால் ஏற்பட்ட புண் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்ன பாவம் செய்தேனோ! நான் உன்னைப் போல், உயர்ந்த மானிடப்பிறப்பு எடுக்காமல் தவளையாய் பிறந்தேன். இந்த பிறவி மறைந்து, இன்னும் எத்தனையோ பிறப்பெடுத்தால் மானிடப் பிறவியையே அடைய முடியும். அதன்பிறகே எனக்கு முக்தி கிடைக்கும். ஆனால், இப்போது உன் கோதண்டத்தால் இப்போதே எனக்கு முக்தி கிடைத்து விடுமே!'' என பெருமையாகச் சொன்னது.

தவளையின் உயர்ந்த பக்தி கண்ட ராமர், "அழியாத புண்ணிய உலகத்தை இப்போதே அடைவாய்!'' என்று வாழ்த்தினார். அந்த தவளை பெருமாளின் திவ்யலோகத்தை அடைந்தது.

கடவுளை நம்புவோருக்கு கவலையும், வேதனையும் கூட சந்தோஷத்தை தந்து விடுகிறது

No comments:

Post a Comment