அமர்நாத் யாத்திரை வெற்றிபெற உடலும் மனமும் ஒத்துழைப்பது அவசியம். இத்துடன் இயற்கையின் ஒத்துழைப்பும் கைவரப்பெற்று உச்சியில் வீற்றிருக்கும் அந்த இயற்கை லிங்கத்தைப் பார்த்தபோது கிடைத்த பரவச அனுபவம் பயணத்தில் எதிர்கொண்ட கஷ்டங்களை மறக்கடித்துவிடுகிறது.
முதலில் சென்னையிலிருந்து புதுடெல்லிக்கும் அங்கிருந்து ஜம்முவுக்கும் ரயில் பயணம். புதுடெல்லியிலிருந்து ஜம்முவுக்குச் செல்ல 18 மணி நேரம் ஆகிறது. சிரம பரிகாரம் முடித்த பின்னர் ஒரு நண்பகல் வேளையில் கட்ராவுக்குப் புறப்பட்டோம். டெல்லிக்கு ரயிலேறியவுடனேயே ஆங்காங்கு கிடைக்கும் உணவுகளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிடுவது அவசியம்.
மலை அடிவாரப் பகுதியில் அமைந்திருக்கிறது கட்ரா. இங்கிருந்து மாதா ஸ்ரீ வைஷ்ணவி ஆலயம் செல்வதற்கு மலைமீது ஏற வேண்டும். நடக்க இயலாதவர்களை டோலியில் அமர்த்தித் தூக்கிச் செல்கிறார்கள். கோவேறுக் கழுதை இனத்தைச் சேர்ந்த மட்டரகக் குதிரைகளிலும் அழைத்துச் செல்வார்கள். பாதசாரிகளுக்குக் குறைந்தது எட்டு முதல் பன்னிரெண்டு மணி நேரம் ஆகும். சபரிமலை பெரிய பாதையைப் போல இரண்டு மடங்கு பெரியது இது.
வழி நன்றாக இருக்கும். சிமெண்ட் ரோடுகளும் படிக்கட்டுகளும் உண்டு. ஒரே விஷயம் நமது பயணத்தை இயற்கையின் கரங்களில் ஒப்படைத்துவிட வேண்டும். எஞ்சியவற்றை எல்லாம் வல்ல இயற்கை பார்த்துக்கொள்ளும் எனும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர வேண்டியதுதான்.
சூறாவளியுடன் கடும் மழை
நான் சென்ற நேரம், மாலை நான்கு மணி. ஆனால், மதிய நேரம் போல் சூரியன் சுடர்விட்டது. ஏழு மணி ஆகியும் வெளிச்சம் குறையவில்லை. ஐந்து மணி நேர நடைப்பயணம் செய்திருப்போம். சிறு தூறலில் ஆரம்பித்து, கனமழையாகி, சூறாவளியுடன் கடும் மழையும் பெய்தது. யாத்ரீகர்கள் திகைத்து நின்றோம். எங்கள் யாத்திரை ஸ்தம்பித்தது. மழைக்குக் கட்டுப்பட்டு நின்றோம். அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் யாத்திரையை ஆரம்பித்தோம்.
இந்திய ராணுவத்தினர் எங்களை நெறிப்படுத்தி அனுப்பிவைத்தனர். ஒருவழியாக ஆலயம் சென்றோம். அதிகக் கூட்டம். வளைந்து செல்லும் வரிசை. மூன்று மணி நேரக் காத்திருப்புக்குப் பின், ஒரு சிறு குகைக்குள் வைஷ்ணவி அன்னையின் தரிசனம். மீண்டும் மலை இறங்கி எங்கள் வாகனம் தேடி ஸ்ரீநகர் பயணம் செய்தோம். சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான பயணம். இது மலைவழிப் பயணம் என்பதால் காலதாமதமானது.
மலை நீர் அருந்துவதாலும் உணவு மாற்றத்தாலும் ஒவ்வாமை காரணமாகவும் யாத்ரீகர்கள் பலர் வாந்தியாலும் வயிற்றுவலியாலும் துன்புற்றனர். இரண்டு கிலோமீட்டர்வரை நீண்ட குகைக்குள் செய்யும் பயணம் மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தும். ராணுவ, போலீஸ் பாதுகாப்பு அதிகம் கொண்ட வழிப்பாதை இது.
மருத்துவப் பரிசோதனையும் காப்பீடும்
ஸ்ரீநகரை அடைந்து அங்குள்ள மருத்துவ முகாமில் (ராணுவத்தின்) உடல்தகுதியைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் உள்ளதா என்று கேட்டுப் பரிசோதனை செய்வார்கள். அங்கிருந்து பொபூல்காம் எனும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.
இந்த யாத்திரைக்கு ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறையிடம் காப்பீடு செய்திருக்க வேண்டும். அதற்கான அடையாள அட்டை கேட்கப்படும். நமது உடைமைகளையும் சோதித்து அனுப்புவார்கள். இங்கிருந்து நடை ஆரம்பம். சந்தன் வாரிவரை ஆட்டோவும் உண்டு. அங்கு நமக்கு தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும். இட்லி, தோசை யும் உண்டு. நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். காசு கேட்க மாட்டார்கள். விரும்பினால் உண்டியில் காசு போடலாம்.
பஞ்சதரணி எனப்படும் பலவர்ண ஏரி
ஐந்து மணிக்கெல்லாம் பொழுது விடிந்துவிட்டது. காலை ஆறு மணிக்கு மேல் யாத்திரை வழி திறக்கப்படுகிறது. வழியில் சில்லென்று குளிர் காற்று வீசுகிறது. சேஷநாத் எனும் அடிவாரம் காவலர்களின் பலத்த பாதுகாப்பு வளையத்திலிருக்கிறது. இந்த இடத்தை அடைவதற்குள் சிலருக்கு மூச்சுவிடக் கடினமாக இருக்கும். இங்கு பிராணவாயு குறைந்து போகும். உடல் சற்றுச் சங்கடத்தை எதிர்கொள்கிறது.
இங்கு மருத்துவ முகாம் உண்டு. பிராண வாயு சிலிண்டர் உண்டு. இலவச உணவும் இருப்பிட வசதியும் உண்டு. இதைத் தொடர்ந்து நடக்க வேண்டும். சுமார் 15 கிலோமீட்டர் பயணத்தில் பஞ்சதரணி எனும் இடத்தில் அழகான, பல்வேறு நிறம் கொண்ட ஏரி உள்ளது. 90 டிகிரி செங்குத்துப் பாதையில் ஏறி உச்சிக்குச் சென்று இறங்க வேண்டும். இந்த இறக்கத்தில்தான் பஞ்சதரணி இருக்கிறது. இந்தப் பகுதியில் ஆக்ஸிஜன் சரிவரக் கிடைக்காது.
ஒருபக்கம் உயர்ந்த மலை, கீழே பள்ளத்தாக்கு. அதன் அடியில் ஏரிக்கரை. இதற்கு நடுவே பாதை. இந்தப் பாதையில் கழுதை சவாரி, டோலி சவாரி செல்வார்கள். இதில்தான் நாம் நடக்க வேண்டும். பிராண வாயு பிரச்சினையால் இங்குதான் அதிகம் மரணம் சம்பவிக்கும்.
யாத்ரீகர்கள் நடந்தபடி கீழே விழுவார்கள். மயக்கம் வரும். மூச்சுத் திணறும். மரணம் அடைவார்கள். ஆயிரத்தில் ஒருவர் இங்கே மரணம் அடைவதாகக் கூறப்படுகிறது.
முதலுதவி, மருத்துவர் இருந்தும் சிலநேரம் காப்பாற்ற இயலாத நிலை உருவாகும். நடக்கும் வழிகளில் புல்பூண்டு கிடையாது. மரங்கள் கிடையாது. மலைப்பரப்பு மொட்டையடித்தது போலக் காட்சி தருகிறது. கடுமையான குளிரிலிருந்து தப்பிப்பதற்காக ஸ்வெட்டர், ஜெர்கின், குல்லாய் ஆகியவை எல்லாருக்கும் அவசியமாகும். உணவு செல்லாது, தண்ணீர் குடிக்கவும் தோன்றாது. குளுகோஸ் நல்லது. புளிப்பு மிட்டாய் சற்று இதம் தரும்.
இதைத் தொடர்ந்து வரும் நெடிய பள்ளத்தாக்கெங்கும் பனிக்கட்டிகள் படர்ந்து இருக்கும். நடைவழியில் கவனம் தேவை; விபத்துகளைத் தடுக்க இயலாது. மலையடிவாரத்தின் ஓரமாகச் செல்ல வேண்டும். உதவிக்கு நமது ராணுவ நண்பர்கள் இருப்பார்கள். உடல் நடுங்கும். உயிர் தத்தளிக்கும். பயம்தான் காரணம். சோர்வு நம்மை ஆட்கொள்ளும். ஓய்வு இந்த இடத்தில் ஓய்வு மிக அவசியமானது. எடுக்க லங்கர் என்று அழைக்கப்படும் ஓய்விடங்கள் உண்டு. இங்கு யாத்ரீகர்களுக்கு ஜல்ஜீரா என்கிற பானம் தருவார்கள். அதைக் குடிக்க வேண்டும். அது உடலுக்கு நல்லது.
பனி லிங்கம் அருகே புறாக்கள்
இந்த மலையடிவாரத்தைக் கடக்கும் போதே எதிரில் அமர்நாத் (Holi Cave) குகை தெரியத் தொடங்கிவிடுகிறது. இந்தப் பாதையைக் கடந்தால் மீண்டும் ஒரு சிறிய ஏற்றம் உண்டு. அதைத் தொடர்ந்து சென்றால் நிறையக் கூடாரங்கள் தெரியும். கடைகள் இருக்கும். அந்த வழியில் சென்று மீண்டும் ஒரு மலையுச்சியின் பனி படர்ந்த மத்தியப் பகுதியில் பெரிய குகையின் நடுவே அமர்நாத் ஈஸ்வரன் பனிக்கட்டியின் வடிவில் காட்சியளிக்கிறார்.
நீண்ட வரிசையில் காத்திருந்து குகைக்குள் செல்ல வேண்டும். பெரிய மேடை உண்டு. சூலம் உண்டு. காக்கா, குருவிகள் வாழ முடியாத இடமாக இருந்தாலும், இரண்டு புறாக்கள் மட்டும் எப்போதும் இருக்கும் என்று கூறப்படுகிறது. பனிக்கட்டியாகக் காட்சியளிக்கும் லிங்கத்துக்கு வட நாட்டு முறை வழிபாட்டுடன் இனிமையான தரிசன அனுபவம் கிடைக்கும்.
அத்தனை போராட்டங்களையும் தாண்டி மனித வாழ்க்கையில் உணர நேரும் முழுமையை ஞாபகப்படுத்தி நிற்கிறது அமர்நாத் பனிலிங்கம்.
No comments:
Post a Comment