Tuesday 25 July 2017

சத்தியவான் சாவித்திரி

image

அஸ்வபதி என்னும் மன்னர் குழந்தை வரம் வேண்டி 18 ஆண்டுகள் சாவித்திரி தேவியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். சாவித்திரி தேவியும் அவன் முன் தோன்றி, "நற்குணமுள்ள பெண் குழந்தை வாய்க்கப் பெறுவாய்'' என்று வாழ்த்தி அருள்புரிந்தாள். அதன்படி பிறந்த பெண் குழந்தைக்கு, தான் வணங்கிய சாவித்திரியின் பெயரையே வைத்தார் அஸ்வபதி. பருவ வயதை அடைந்த சாவித்திரியிடம் அஸ்வபதி, "உனக்கு ஏற்ற கணவரை நீயே தேர்ந்தெடு. அவருக்கே உன்னை மணம் முடித்து வைக்கிறேன்,'' என்று உறுதியளித்தார். 

சாவித்திரி பல நாடுகளுக்கும் சென்றாள். ஒருமுறை காட்டுப்பகுதிக்கு சென்ற போது அங்கு வாழ்ந்த சாலுவ தேசத்து மன்னரின் மகனான சத்தியவான் என்ற இளைஞனை சந்தித்தாள். அவனைத் திருமணம் செய்வதென முடிவு செய்தாள். 

நாட்டுக்கு திரும்பியதும், தனது தந்தை அஸ்வபதியிடம் தெரிவித்தாள். "தந்தையே! நான் சத்தியவான் என்ற இளைஞரை சந்தித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள என் மனம் விரும்புகிறது,'' என்று தெரிவித்தாள்.

மகளின் விருப்பத்தை நிறைவேற்ற அஸ்வபதியும் முடிவு செய்து, சத்தியவானைப் பற்றி விசாரிக்க தொடங்கினார். முக்காலம் அறிந்த ரிஷியான நாரதர் மூலமாக அந்த இளைஞன் சாலுவ தேசத்து ராஜகுமாரன் என்றும், அற்ப ஆயுள் கொண்டவன் என்றும் அறிந்து கொண்டார். 

"அற்ப ஆயுள் கொண்ட ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டாம்' என்று அஸ்வபதி புத்திமதி கூறியும், சாவித்திரி தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. 

சத்தியவானுக்கும், சாவித்திரிக்கும் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். சாவித்திரி பார்வையற்ற தன் மாமனார், மாமியாருக்கு தகுந்த சேவை செய்து வந்தாள். இந்நிலையில் சத்தியவானின் இறுதிநாள் வந்தது. அவன் தன் பெற்றோருக்காக உணவு கொண்டு வர காட்டுக்கு சென்றான். சாவித்திரியும் உடன் சென்றாள். அந்த சமயத்தில் எமன் பாசக்கயிற்றை சத்தியவான் மீது வீசி உயிரை பறித்தான். 

யார் கண்ணுக்கும் புலப்படாத எமன், பதிவிரதையான சாவித்திரியின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை. அவனை பின் தொடர்ந்தாள் சாவித்திரி. அவளைக் கண்டு அதிர்ச்சியுற்ற எமன், "பெண்ணே..... மானிடப்பெண்ணான நீ என்னை பின்தொடர்வது கூடாது. கற்புக்கரசியான உனக்கு விருப்பமான வரத்தை இப்போதே அளிக்கிறேன்,'' என்று உறுதியளித்தான். 

அதற்கு சாவித்திரி, "எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டும்,'' என்று வரம் கேட்டாள். சற்றும் யோசிக்காமல் எமதர்மன், "அப்படியே ஆகட்டும்' என்று கூறிவிட்டு நகர்ந்தார். 

வழிமறித்த சாவித்திரி, "நீங்கள் அளித்த வரம் உண்மையானால், எனக்கு குழந்தை பிறக்க என் கணவரைத் திருப்பிக் கொடுங்கள்,'' என்றாள். வாக்கை மீற முடியாத எமனும் சத்தியவானுக்கு உயிர் அளித்து புறப்பட்டான். 

கணவரை உயிருடன் மீட்ட சாவித்திரியைக் கண்ட அனைவரும் அதிசயித்தனர். 

அவளின் நினைவாக மாசியும், பங்குனியும் இணையும் நல்ல நாளில் சாவித்திரி விரதம் என்னும் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. மணமான பெண்கள் சாவித்திரியை மனதால் நினைத்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியமும், கன்னியருக்கு நல்ல கணவனும் அமைவார்கள் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment