Monday 31 July 2017

வேண்டுதல்களை நிறைவேற்றும் வீரராகவ பெருமாள்


மதுரை தெற்குமாசி வீதி எழுத்தாணிக்காரத் தெரு சந்திப்பில் உள்ளது வீரராகவப் பெருமாள் கோயில். இது மன்னர் சொக்கப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். மதுரை கூடலழகர் கோயிலின் உப கோயில் இது. இக்கோயில் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக வீரராகவப் பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அருகில் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். தாயார் கனகவல்லி, ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பள்ளி கொண்ட அரங்கநாதர், சக்கரத்தாழ்வார், அமர்ந்த கோல யோகநரசிம்மர், கருடன், அனுமன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றனர்.

சித்திரைப் பெருநாளில் வைகையாற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் அழகரை வீரராகவப் பெருமாள் வெள்ளிகுதிரை வாகனத்தில் எதிர்கொண்டு வரவேற்பது இக்கோயிலின் சிறப்பாகும். புராண காலத்தில் மதுரை வரும் அழகர் சோழவந்தான் அருகே தேனூர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார். விளைந்த நெற்கதிர்களால் பந்தலிட்டு அழகுடன் அமைக்கப்பட்ட கதிர்கால மண்டபத்திற்கு வந்த பக்தர்களில் ஒருவர் ‘திரி’ சுற்றிய போது, அதிலிருந்து பறந்த நெருப்பு பொறி பந்தலில் பற்றி எரிய துவங்கியது. இதனை கண்ட பக்தர்கள் உற்சவர் கள்ளழகரை விட்டுவிட்டு அலறியடித்து ஓடினர். தங்கத்தாலான அழகர் விக்கிரகம் நெருப்பில் சிக்கியதை கண்ட வீரராகவப் பெருமாள் கோயிலின் அன்றைய அர்ச்சகர் அமுதார் மண்டபத்துக்குள் விரைந்தார். 

அங்கு கொழுந்து விட்டெறிந்த பந்தலுக்குள் புகுந்த அவர், தன் மீது பற்றிய நெருப்பையும் பொருட்படுத்தாது அழகரை வாரியணைத்து வெளியில் வந்தார். பின்னர் ஆற்று மணலை தோண்டி அதில் விக்கிரகத்தை புதைத்து காத்தார். கள்ளழகர் மீதான பக்தி வெளிப்பாட்டில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கள்ளழகர் திருமேனி காத்த அமுதாரை காண மதுரை மன்னரே நேரில் வந்தார். ‘கடவுள் காத்த உமக்கு இனி அழகர் ஆற்றில் இறங்கும் ஒவ்வொரு ஆண்டும் மன்னரின் முன்மரியாதை உண்டென்று’ மனம் உருக உரிமையளித்தார். அதற்கு அர்ச்சகரோ, ‘விழா நாளன்று வைகை ஆற்றில் என் வீரராகவப் பெருமாள் கள்ளழகரை எதிர் கொண்டு அழைத்திட வேண்டும்’ என மன்னரிடம் வேண்டினாராம். 

அமுதாரின் வேண்டுகோளுக்கிணங்க அன்று முதல் அழகர் ஆற்றில் இறங்கும் போது வீரராகவப் பெருமாள் வெள்ளிக்குதிரையில் அவரை எதிர்கொண்டு வரவேற்கும் நிகழ்வு தொடர்கிறது. அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு கோயிலில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி வீரராகவப் பெருமாள் புறப்பாடாகிறார். வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து, காலை ஆறரை மணியளவில் வைகையில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து ஆற்றில் இறங்கும் அழகரைக் கண்டதும் வீரராகவப் பெருமாளை சுமந்து வருவோர் ‘வையாளி’ எனும் குலுக்கியெடுத்தலில் குதூகலமடைவர்.

ஆற்றில் உள்ள மண்டபத்தில் அழகர் வீற்றிருக்க, அவரை மும்முறை வலம் வருகிறார் பெருமாள். மங்களாசாசனம் செய்து, பரிவட்டம் மற்றும் மாலை சாற்றி இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுக்கும் நிகழ்வு அற்புதமானது. இதன் தொடர்ச்சியாக ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயில் பட்டருக்கு, அழகரின் சடாரியை ஏந்தும் உரிமை தரப்படுகிறது. வீரராகவப் பெருமாளை மனமுருக வழிபடுவதன் மூலம் திருமணம், புத்திர பாக்கியம், கருத்து வேறுபாடுள்ள தம்பதிகள் மனம் சேர்ந்து வாழ்தல், தொழில் விருத்தியடைதல் என பலதரப்பட்ட வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல்களுடன் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சித்ரா பவுர்ணமி தினம், ஆடிப்பூரம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி ஆகிய விசேஷ தினங்களில் இக்கோயில் திருவிழாக்கோலம் பூண்டு காட்சி தருகிறது. பவுர்ணமி தினத்தன்று வீரராகவப் பெருமாளுக்கும், அமாவாசை திதியன்று ரங்கநாதருக்கும் ‘திருமஞ்சன வைபவம்’ சிறப்பாக நடத்தப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் இக்கோயிலில் தரிசனம் செய்யலாம்.

No comments:

Post a Comment