Monday, 24 July 2017

பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தீஸ்வரர்


வட இலுப்பை

‘கருப்பையில் பிறவாதிருக்க இலுப்பையூரை நினை மனதே’ என்று வட இலுப்பை திருத்தலத்தைப் போற்றுகின்றது அருணகிரிநாதரின் திருப்புகழ். ‘மாதூக க்ஷேத்ரம் என்றும் போற்றப்படுகிறது இந்தத் திருத்தலம். பாலாற்றங்கரையிலேயே உள்ள இந்த ஊர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை கூட வேத கோஷங்களால் எப்போதும் நிறைந்திருக்குமாம். நான்கு வேதங்களையும் சொல்லித் தர நிறைய வேத விற்பன்னர்கள் இந்த ஊரில் வசித்து வந்தனர். இந்த ஊருக்கு பிரம்ம வித்யாபுரம் என்னும் திருப்பெயரும் உண்டு. அக்திய மகாமுனிகள் இங்கு வந்து சென்றதாக ‘ஷடாரண்ய மகாத்மியம்’ சொல்கிறது, இங்குள்ள அகத்தீஸ்வரர் கோயில் லிங்கத்தில் மதூகர் என்ற முனிவர் ஐக்கியமானதால் மதூக க்ஷேத்திரம் ஆயிற்று.

காஞ்சிபுரம்ஆற்காடு சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத மருந்தீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரிநாதர், தபோவனம் ஞானானந்த சுவாமிகள், பூண்டி மகான் போன்றவர்கள் விஜயம் செய்து, பூஜித்து இருக்கின்றனர். காஞ்சி மகா பெரியவர் சுமார் 350 முறைக்கு மேல் இங்கே வந்து தங்கியிருந்து, பூஜைகள் செய்து வழிபட்டிருக்கிறார். மஹா ஸ்வாமிகள் இந்த ஊருக்கு வரும் போதெல்லாம், ‘வேதத்தின் அத்தாரிட்டி’ என்று அவரால் போற்றப்பட்ட குமாரஸ்வாமி தீட்சிதரின் இல்லத்தில் தங்கி, பூஜைகள் செய்வது வழக்கம். அந்த இல்லத்துக்கு எதிரிலேயே மிகப் பழமையான சிவாலயம் ஒன்று சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. 

பரமாச்சார்ய சுவாமிகள் வட இந்தியாவுக்கு பாத யாத்திரை சென்றபோதும், பல வருஷங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கே திரும்ப வந்தபோதும் அவருக்கு இங்கே காமாட்சி தேவியின் தரிசனம் கிடைத்தது. அப்படி இரண்டு முறை அம்பிகையின் பரிபூரண தரிசனம் பெற்ற சுவாமிகள், இந்த இடத்தில் அம்பிகையின் சாந்நித்தியம் பூரணமாக இருப்பதாகக் கூறியுள்ளார். அம்பிகையின் திருவுள்ளப்படி, தற்போது இந்தக் கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, ஏற்கனவே இருந்த தெய்வ மூர்த்தங்களுடன் தேவி சமேதராக இருக்கும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் போன்ற இன்னும் சில தெய்வ மூர்த்தங்களுக்கான சந்நதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அம்பிகையுடன் காட்சியளிக்கிறார். 

இவரை ராகு காலத்தில் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும். இந்தக் கோயிலின் விசேஷம் ஸ்வர்ணாகர்ஷண பைரவர்தான். பைரவர் என்பவர் ஈசனின் ருத்ர அம்சம் என்பது நமக்குத் தெரியும். இவர் காக்கும் கடவுள். இங்குள்ள பைரவரின் சிறப்பு அவர் தன் பத்தினி பைரவியுடன் இருப்பதுதான். இந்தியாவில் ஏழு இடங்களில்தான் பைரவர், பைரவியுடன் இருக்கும் கோயில் இருக்கின்றன. மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் சேரும். ஈசான்யத்தில் தெற்கு நோக்கி இருக்கும் பைரவி சமேத ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், உங்கள் கடன் பிரச்னைகள் தீரும் என்பது மட்டுமல்ல; உங்கள் நிதி ஆதாரம் எந்த சங்கடத்தையும் சந்திக்காது. ஞாயிறு மாலை ராகு காலத்தில் புதிய அகல் கொண்டு விளக்கேற்றி பைரவரை வணங்க வேண்டும். வேண்டுதல் நிறைவேறியவுடன் அன்னதானம் செய்ய வேண்டும். 

மேற்கு நோக்கிய சந்நதியில் மூலவர் மருந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். இவருக்கு நிவேதனம் செய்த பிரசாதத்திற்கு நோய் தீர்க்கும் மருத்துவச் சக்தி உண்டாகிறது. தட்சிணாமூர்த்தி சந்நதியின் எதிரில் சர்வ மங்கள பக்த ஆஞ்சநேயர் சந்நதி உள்ளது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் விதத்தில் வீற்றிருக்கின்றனர். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே பரமாச்சார் அவர்களால் பெரிதும் போற்றப்பட்ட குமாரஸ்வாமி தீட்சிதரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இவரை வழிபடுகின்றனர். இத்தலத்தில் எல்லா நலனும் தரும் யந்திர கூரை உள்ளது. மழை, வெயில், காற்று, இடி, மின்னல் போன்ற இயற்கை சூழ்நிலையிலிருந்து நம்மை ரட்சிக்க (காக்க) வீட்டிற்கு கூரை (உதிரம்) உள்ளது. வீட்டின் உதிரத்தை (கூரை) நல்ல நாள் பார்த்து கூரை போடுவதுதான் நம் மரபு.

அதே எல்லா மக்களையும் காப்பதற்கு (ரட்சிக்க) வல்லதுதான் யந்திர கூரை. பல்வேறு பயன்களை உடைய யந்திரங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் தலத்தில் அல்லது ஒரு மகானின் அனுஷ்டானத்தில் அமையப் பெற்றது. நாம் யந்திர கூரை அதாவது மகானை தரிசித்தால் சர்வ பாவமும் விலகும். அதே போல் அந்த பிருந்தாவனத்தில் ஜெபம் செய்தாலே என்றுமே ஜெயம். கீழே 108 யந்திரங்களும், மேலே 108 மந்திரங்களும் உடைய சிறப்புமிக்கதாகும். கிட்டதட்ட 108 விதமான யந்திரங்கள் கிரமப்படி செப்பு தகடுகளால் செய்யப்பட்டு மகானின் மேல் பகுதியில் தசமகாவித்யா யந்திரங்களும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு நான்கு திசைகளில் வாகனங்களும், ஷோடச அஸ்திரங்களும் உள்ள பகுதியில் யந்திரங்கள் கிரமமாக அமைய பெற்றதாகும். 

ஒவ்வொரு யந்திரத்திற்கும் ஒருநாள் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. மிகவும் சிரத்தையாக ஜெபம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் உலகில் மூன்றே இடத்தில்தான் உள்ளது. ஸ்ரீவித்யா யந்திர சாஸ்திர முறைப்படி பூஜை செய்யப்படும். இந்த யந்திரக் கூரையை தலத்தை தரிசித்தால் சர்வ பாவமும் விலகும். இதில் ஸ்ரீசக்ரம், மகாகாளி, மகாலட்சுமி, சரஸ்வதி, சாம்ராஜ்ய லட்சுமி, சுதர்சனம், சரபேஸ்வரர், சூலினி, ப்ரத்தியங்கரா, கூர்மம், மத்ஸ்யம், தட்சிணாமூர்த்தி, நரசிம்ம, ஹயக்ரீவர், ராஜ மாதங்கி, விவாஹ சத்ரு நாச சகல காரிய அனுகூலம் தரும் யந்திரங்கள் உள்ளது. இந்தத் தலத்தை  தரிசித்தால் விவாஹம், புத்திர பாக்கியம், வழக்கு விஷயங்கள், உடல் உபாதை நீங்கி கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும். மகான்கள் கால் பதித்த இந்த புண்ணிய பூமிக்கு சென்று வந்தால் நமது பாபங்கள் கரைந்து போகும்.

தினமும் காஞ்சிபுரம் மற்றும் ஆற்காட்டிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது. பிரதி வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜையும், ஹோமங்களும் நடைபெறும்.

No comments:

Post a Comment