வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி, அகண்ட காவிரியாக விஸ்வரூபம் எடுத்து பாயும் இடம் கரூர் மாவட்டம் குளித்தலை. இங்கு காவிரி கரையோரம் எழுந்தருளியிருக்கும் சிவத்தலம் கடம்பவனேஸ்வரர் ஆலயம். அருணகிரி நாதரால் பாடல்பெற்ற இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது. வடக்கே காசியைப்போல, தென்னகத்தில் வடக்கு நோக்கியுள்ள தலம் என்பதால் இதைத் தட்சிண காசி என்றும் அழைக்கிறார்கள். குபேர திசையெனப் போற்றப்படும் வடதிசையை நோக்கி எழுந்தருளியுள்ள சிவன் கடம்ப மரத்தில் தோன்றி காட்சியளித்ததால் கடம்பவனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பாலகுஜலாம்பிகை எனப்படும் முற்றாமுலையம்மை உடன் இங்கு இறைவன் அருள் பாலிக்கிறார்.
இக்கோயில் 2 பிரகாரங்களை கொண்டது. கோயிலை சுற்றித் தேரோடும் வீதி உள்ளது. கோயில் நுழைவு வாயிலுக்கு முன்புறம் ஒரு மண்டபமும் இருக்கிறது. உட்புறத்தில் 2ம் பிரகாரத்தின் கிழக்கில் வாகன மண்டபம், ம ட ப் ப ள் ளி, கி ண று முதலியவையும், கால சன்னதியும் உள்ளது. பிரம்ம தீர்த்தம், நவராத்திரி மண்டபமும், இதன் அருகே அம்பாள் சன்னதியும் உள்ளது. தென்கிழக்கு மூலையில் பிரம்ம தீர்த்தமும், வடகிழக்கு மூலையில் நவராத்திரி மண்டபமும், வடகிழக்கில் நடராஜர் சன்னதியும், நவக்கிரகங்களும், தெற்கில் நால்வர், அறுபத்து மூவர், சேக்கிழார் சன்னதிகளும், மேற்கில் விஸ்வநாதர், விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன.
இவற்றின் நடுநாயகமாக மகாமண்டபம் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் கடம்பவனேஸ்வர் அருள்பாலிக்கிறார். மூலவரின் பின்பக்கத்தில் சப்தகன்னியர்கள் உள்ளனர். கன்னியரின் தோஷம் நீங்கிய தலம்: ஒருசமயம் துர்க்கைக்கும், தூம்றலோசன் என்ற அரக்கனுக்கும் கடும் போர் நடந்தது. போரில் அரக்கனின் கை ஓங்கியது. இதைக் கண்ட சப்த கன்னியர்கள் துர்க்கைக்கு ஆதரவாக அரக்கனை எதிர்த்து போரிட்டனர். இதைத் தாக்கு பிடிக்க முடியாத அரக்கன் உயிர் பிழைக்க தப்பி ஓடினான். வழியில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார்.
அரக்கன் ஓடும்போது தவம் கலைந்ததால் ஆத்திரமடைந்த முனிவரால் அரக்கன் மறைந்தான். அப்போது அங்கு வந்த சப்த கன்னியர்கள், அரக்கன் தான் முனிவர் வேடமிட்டு இருக்கிறார் என கருதி முனிவரை கொன்று விடுகின்றனர். இதனால் சப்த கன்னியர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதைப் போக்க கன்னியர்கள் எங்கெங்கோ சென்று வழிபாடு நடத்தினர். ஆனாலும் தீரவில்லை. இறுதியாக கடம்பவனேஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர் என்பது தல வரலாறு.
அதனால் தான் மூலஸ்தானத்தில் கடம்பவனேஸ்வரருக்கு பின்னால் சப்த கன்னியர்கள் வீற்றிருக்கின்றனர். இன்றும் இங்கு மூலவரை தரிசிக்கும்போது இதைக் காணலாம். இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றபோதும், இங்கு நடைபெறும் தைப்பூச திருவிழா சிறப்பு வாய்ந்தது. குளித்தலை கடம்பவனேஸ்வரர், முசிறி சந்திரமவுலீஸ்வரர், ராஜேந்திரம் மத்யார்சுவனேஸ்வரர், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதீஸ்வரர், கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர், வெள்ளூர் திருக்காமேஸ்வரர், பெட்டவாய்த்தலை மத்யார்சுவனேஸ்வரர் ஆகிய 8 கோயில் சுவாமிகளும் தைப்பூச திருநாளில் குளித்தலை வந்து காவிரி ஆற்றில் வரிசையாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்ற வைபவம் பிரசித்தி பெற்றது. பின்னர் 8 சுவாமிகளும் காவிரியில் ஒருசேர தீர்த்தவாரி காண்பர்.
அப்போது 8 சுவாமிகளையும் ஒரே நேரத்தில் இங்கு பக்தர்கள் கண்குளிரக் கண்டு தரிசிக்கும் பாக்யம் தைப்பூச நாளில் மட்டும் கிடைக்கும். இதற்காக இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். விடிய விடிய இந்த தரிசனம் நடைபெறும். தைப்பூசத்திற்கு மறுநாள் காலை சுவாமிகள் தங்கள் தலங்களுக்கு பிரியாவிடை பெறும் நிகழ்ச்சி நடைபெறும். 7 ஊர் சுவாமிகளையும் கடம்பவனேஸ்வரர் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைப்பார்.
No comments:
Post a Comment