Sunday 23 July 2017

திருப்பதி உண்டியலா... ஜாக்கிரதை...


மன்னரின் முன்னிலையில் வழக்கு ஒன்று நடந்தது. அதன் முடிவில் மன்னர் குற்றவாளியிடம், “உன் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது. நீ பணம், நகைகளை திருடியிருக்கிறாய். 

இதற்காக மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கிறேன்” என்றார். 

குற்றவாளி கண்ணீருடன், பெருமாளே...! சோதித்து விட்டாயே!” என்றான்.

“தப்பு செய்தவன் தண்டனை பெறுவது சரியானது தானே...! இதற்குப் போய் பெருமாளை ஏன் இழுக்கிறாய்? ” என்றார் மன்னர்.

“மன்னா! நான் திருடும் போதெல்லாம் கிடைத்ததில் சரி பாதியை பெருமாளுக்கு கொடுப்பதாக வேண்டிக் கொள்வேன். இந்த முறையும் அப்படித் தான் வேண்டினேன். ஆனால் பெரும் பணம் கிடைத்ததால் இம்முறை உண்டியலில் அவரது பங்கை செலுத்தவில்லை. கடவுளிடமும் திருட்டுப் புத்தியைக் காட்டி விட்டேன். அதனால் சரியான பாடத்தை கற்பித்து விட்டார்,” என்றான் குற்றவாளி.

திருடனின் பேச்சைக் கேட்ட மன்னர் தீவிரமாக யோசித்தார். தீர்ப்பை மீண்டும் திருத்தி அறிவித்தார்.

“பிறர் பொருளைத் திருடுவது பாவம். அதை கோவில் உண்டியலில் சேர்ப்பது பெரும் பாவம். செய்யும் தப்பிற்கு கடவுளையும் உடந்தை ஆக்குவது அயோக்கியத்தனம். 

இதற்காக மேலும் ஓராண்டு காலம் சிறை தண்டனை விதிக்கிறேன். பக்தியின் பெயரால் தப்பு செய்வோருக்கு அதிகமான தண்டனை அளிக்கப்படும் என்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது,” என்றார்.

பக்தியின் பெயரால் கொள்ளைஅடித்து திருப்பதி உண்டியலில் பணம் செலுத்துபவர்களை பெருமாள் விட்டு வைக்கமாட்டார்... புரிந்து கொண்டீர்களா.

No comments:

Post a Comment