சிவனும், பார்வதியும் ஒருநாள் நந்தவனத்தில் உலாவி கொண்டிருந்தனர். அங்கு வில்வமரம் ஒன்று இருப்பதைக் கண்ட சிவன் அதன் அடியில் அமர்ந்தார். காற்று வீசியதால் இலைகள் தன் மீது உதிர்ந்து விழவே மகிழ்ச்சியில் திளைத்தார். அந்த சமயத்தில் மரத்தின் மீதேறிய ஆண் குரங்கு ஒன்றும் விளையாட்டாக வில்வ இலைகளை வேகமாகப் பறித்து போட்டது. பொல பொல என இலைகள் விழுவதைக் கண்ட பார்வதி நிமிர்ந்து பார்க்க குரங்கு நின்றிருந்தது.
அப்போது பார்வதியிடம் சிவன், "தேவி... வேடிக்கையாகச் செய்தாலும் இக் குரங்கு புண்ணியத்தை தேடி விட்டது. அதன் பயனாக இப்போதே இதற்கு நல்லறிவு உண்டாகட்டும்,'' என்று அருளினார்.
அறிவு உண்டானதும் குரங்கு சிவபார்வதியை கை கூப்பி வணங்கியது.
அப்போது சிவன், "வில்வத்தால் அர்ச்சிக்கும் பேறு பெற்ற நீ பூலோகத்தில் பிறந்து மன்னராகப் பிறக்கும் பேறு பெறுவாய்,'' என்று வாழ்த்தினார்.
"பூலோகத்தில் மன்னராகப் பிறந்தாலும் தனக்கு இறையருளைப் பெற்றுத் தந்த குரங்கு பிறப்பை மறக்க அதற்கு மனமில்லை. அதனால் எப்போதும் குரங்கு முகத்துடன் இருக்க இறைவனிடம் வரம் கேட்டது. அதன்படி குரங்கு முகமும், மனித உடலுமாக பூலோகத்தில்
பிறப்பெடுத்தது. சோழ வம்சத்தில் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சக்கரவர்த்தியே இந்த குரங்கு. "முசுகுந்தன்' என்றால் "குரங்கு முகம் கொண்டவன்' என்று பொருள்.
No comments:
Post a Comment