Sunday 30 July 2017

பேரருள் நல்குவார் புண்டரீகாட்சப் பெருமாள்


திருவெள்ளறை

அந்த மொட்டை கோபுரத்தைப் பார்க்கும்போது ஏக்கம் பீறிடுவதைத் தவிர்க்க முடியாதுதான். கோபுரத்துச் சிற்பங்கள்தான் எத்தனை நேர்த்தியாகக் காட்சி தருகின்றன! ஆனால், அவற்றைப் பார்க்கும் ஆவலில், அவற்றுடன் உறவாடும் வாஞ்சையில், பின்னிப் பிணைந்திருக்கும் செடி, கொடிகளையும் பார்க்கும் போது மனசு விண்டுதான் போகிறது. நான்கு அடுக்குகளுக்கு மேல் நிலவும் வெறுமை, உச்சியைக் காணாத அந்த கோபுரத்தின் வேதனையை வெளிப்படுத்துகிறது. இந்த ஆலயத்தை நிர்மாணித்ததாகக் கூறப்படும் பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மனின் இந்த முயற்சி முழுமை பெறாதது ஏன்? நிதிப் பற்றாக்குறையா,
அந்நியரின் ஆக்கிரமிப்பு என்ற இடையூறா? இந்த முயற்சிக்கு வித்திட்டவர், முயற்சி முற்றுப்பெறு முன்னரே மண்ணுக்குள் புதைந்துபோனாரா? 

அவருக்கு அடுத்து யாரும் முயற்சியை மேற்கொள்ளவில்லையா? ஒருவேளை ஸ்ரீரங்கத்து தெற்குப் பக்க மொட்டை கோபுரத்தை முழு கோபுரமாக்கிய அஹோபில மடத்தின் 41வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் சுவாமிகளைப் போல, இந்தத் திருவெள்ளறைக் கோயிலுக்குப் புரவலர் யாரும் கிடைக்கவில்லையா?  கேள்விகள் மனதை ஆக்கிரமிக்க, 18 படிகள் ஏறி அந்த மொட்டைக் கோபுரத்திற்குள் நுழைந்து நிமிர்ந்தால், எதிரே முழுமை பெற்ற இன்னொரு கோபுரம் நம்மை ஆறுதலாக வரவேற்கிறது. ஒரு சம்பிரதாயத்துக்காக, ஆலய அமைப்பின் பூரணமாக கோபுரம் திகழவேண்டுமே என்பதற்காக இந்த முழு கோபுரம் நின்றிருப்பதாகவே தோன்றுகிறது. 

எதிரே, மூலவர் சந்நதிக்கு முன்னால் நாழி கேட்டான் வாசல் ஒன்று இருக்கிறது. இந்த வாசலுக்கு ஏன் அந்தப் பெயர்? ஒருமுறை, ஊர் மக்களைக் காக்கும் பொருட்டு வெளியே உலா சென்றாராம் எம்பெருமான். அவர் திரும்பிவர காலதாமதமானதால், இந்த வாசலருகே வந்து நின்று காத்திருந்தாளாம் தாயார். எம்பெருமான் நேரம் கழித்து உள்ளே வந்தபோது, ‘‘ஏன் இத்தனை நாழி? (லேட்!)’’ என்று கேட்டாளாம். அதனாலேயே இந்த வாசல் ‘நாழி கேட்டான் வாசல்’ என்ற பெயர் பெற்றதாம். இந்த வாசலின் இரு புறங்களிலும் பத்திரனும் (சுக்கிரனின் மகன்; அசுரர்களுக்கு புரோகிதன்), சுபத்திரனும் (வசுதேவருக்கு பௌரவி மூலம் பிறந்தவன், யாதவ வீரன்) சுதைச் சிற்பங்களாக அமைந்திருக்கிறார்கள். 

வாசலுக்கு உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் பத்மநிதியும், வலதுபக்கம் சங்கநிதியும் சிலா ரூபமாகத் திகழ்கிறார்கள். எதிரே, சூரியன், இந்திரன், புண்டரீகாட்சப் பெருமாள், கருடன், சந்திரன் ஆகியோர் பத்து அடி உயரத்தில் பிரமாண்டமாக அருட்காட்சி நல்குகிறார்கள். மூலவர் பிராகார சுற்றில் கருடன் கர்வ பங்கமும், ஈஸ்வரனின் பிரம்மதோஷ நிவாரணமுமான இரு புராண காட்சிகள் சிற்ப வடிவில் பொலிகின்றன. மேற்குப் பகுதியில் சிவன், பிரம்மா, விஷ்ணு, கோவர்த்தன கிரியைத் தாங்கிய கிருஷ்ணன் என்று சிற்பங்கள் தம் அழகால், நம்மை சில விநாடிகள் நிறுத்தி வைக்கின்றன. வலம் வந்தால், சற்று உயரத்தில், உத்திராயண வாசல், மூலவர் தரிசனத்துக்காக கதவுகள் திறந்து நம்மை அழைக்கிறது. 

அது என்ன உத்தராயண வாசல்? பரமபதமான வைகுண்டத்தை நமக்கு நினைவுபடுத்தும் உத்திதான் இது. அங்கே அமைந்துள்ளதைப் போலவே இந்த ஆலயத்திலும் மூலவரை (ஸ்ரீமன் நாராயணனை) தரிசிக்க இரண்டு வாசல்கள். ஒன்று இந்த உத்திராயண வாசல்; இன்னொன்று தட்சிணாயன வாசல். ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயண வாசல் வழியாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தட்சிணாயன வாசல் வழியாகவும்தான் கருவறைக்குச் சென்று பெருமாளை சேவிக்க முடியும். அவரவர் மோட்ச காலத்திற்கேற்ப ஸ்ரீமன் நாராயணனை வைகுண்டத்தில் சேவிக்கப் போகும் இறுதி நாளின் ஒத்திகையாகவே இந்த தரிசன முறையை எடுத்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. அதாவது, இந்தப் பெருமாளை தரிசித்துவிட்டால், வாழ்வின் முடிவு மோட்சத்தில்தான் என்பது உறுதி. 

உள்ளே மண்டபத்தில் கிருஷ்ணன் தனி சந்நதியில் அருள்மாரி பொழிகிறார். அடுத்து 32 படியேறினால் புண்டரீகாட்சன் புன்முறுவலுடன் ‘வா’ என்று வாஞ்சையோடு அழைக்கிறார். அந்த நெடிதுயர்ந்த உருவம் நம் மன விகாரங்களைப் பொடிப்பொடியாக்குகிறது. மென்மையாக உற்றுப் பார்க்கும் விழிகள் நம் உள்ளத்தை உருக்கி கண்களில் நீர் பொழிய வைக்கின்றன. ‘உனக்கினி கவலை ஏன்? உன்னை நான் உற்றுப் பார்க்கும்போது அந்தக் கவலையெல்லாம் இனி என்னுடையதாகிறது. மனபாரம் நீங்கி மகிழ்ச்சி கொள்’ என்று சொல்வதுபோல தோன்றுகிறது. இவர் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், ஆதிசேஷன் அனைவருமே தம் தெய்வத் தோற்றம் விடுத்து மனித ரூபத்தில் பெருமாளுக்குப் பணிவிடைகள் செய்வது பார்த்தற்கரிய காட்சி.

கருவறை வலம் வரும்போது காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி சுதைச் சிற்பங்களும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. மொத்தத்தில் இந்தக் கருவறைச் சுற்று அனைத்துக் கடவுளர்களின் அருளாசியையும் பெற்றுத் தருவதாகவே அமைந்துள்ளது. உற்சவப் பெருமாளின் பெயரும் புண்டரீகாட்சன்தான். பெருமாளை தரிசித்த பின், வெளிச்சுற்றில், தனி சந்நதி கொண்டிருக்கும் செண்பகவல்லி என்ற பங்கயச் செல்வித் தாயாரை சேவிக்கலாம். தாயார் கோயில் கொண்டிருப்பது என்னவோ வெளிச்சுற்றில்தான்; ஆனால், இந்தக் கோயிலைப் பொறுத்தவரை முதல் மரியாதை தாயாருக்குதான். திருவெள்ளறை என்ற இந்தத் தலத்தின் பெயரே, மகாலட்சுமி இங்கே தாயாராக எழுந்தருளியதன் பொருட்டு உருவானதுதான். 

‘வண்டல் நந்தாத இப்பெருமான் கரிமறைய
வளர் சாலிப் பழனம் நண்ணும்
கொந்தாரும் பொழில் திருவெள்ளறை
புண்டரீகக் கண்ணன்’

 என்கிறது திவ்யசூரி சரிதம். அதாவது, இவ்வுலக ஆன்மாக்களை எல்லாம் தூய்மைப்படுத்தி, தன்னைப் போலவே பேரின்ப நிலையில் வைக்க வேண்டும் என்று திருமகள் நாராயணனுக்கு ‘ஆணை’யிட்டதாகவும், அதனாலேயே பரந்தாமன் அர்ச்சாவதார மூர்த்தியாக இந்தத் தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறது திவ்யசூரி சரிதம். இந்தத் திருவெள்ளறை எப்படிப்பட்டதாம்? திருமகளே வந்துவிட்டதால் வற்றாத வளம் கொழிக்கும் பூமியாகத் திகழ்கிறதாம். பயிர் உற்பத்திக்கு ஆதாரமான வண்டல் மண் நிறைந்திருக்கும் பகுதி இது. அதனால் இங்கே விளையும் நெற்பயிர்கள், நின்றுகொண்டிருக்கும் உயரமான யானைகளையும் மறைக்கும் அளவுக்கு ஓங்கி உயர்ந்து, அடர்ந்து வளரக்கூடியவையாம்! அத்தகைய செழிப்பான வயல்களைக் கொண்ட பூமி இது. 

மகாலட்சுமியின் கடாட்சம் இந்தத் தலத்தில் பொலிவதால், இந்த பூமி முழுவதுமே தாயாருக்குதான் சொந்தம்! அதனால்தான் வீதி உலா செல்லும்போது முதலில் தாயார் செல்ல, பெருமாள் அவளைப் பின்தொடர்ந்து செல்கிறார். அதேபோல கோயிலுக்குத் திரும்பும்போதும் தாயார் முதலில் வந்து கோயிலுக்குள் புக, எம்பெருமான் தொடர்கிறார். இதே ஆலயத்தில் ராமானுஜர் பல்லாண்டு காலம் தங்கியிருந்து அருட் சேவை புரிந்திருக்கிறார். தான் உண்ட அமுதை ராமானுஜனுக்கும் கொடுக்கச் சொல்லி, தாயாரிடம் சொல்ல, அதன்படி தாயாரும் அளித்து ராமானுஜரின் தினப்பசியை ஆற்றியிருக்கிறார். இதே நடைமுறை இன்றளவும் ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இப்படிப் பசியறிந்து உணவிடும் தாய்மை உணர்வு கொண்ட செண்பகவல்லித் தாயாரைத் தொழுவோருக்குக் குறை ஒன்றும் இல்லை என்பது அனுபவபூர்வமான உண்மை. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தாயாரை உளமாற வணங்கி, கோயில் பிரசாதத்தை உட்கொண்டால், தடைகள் விலகி ஓட, விரைவில் திருமணம் முடியும்; புத்திர பாக்கிய ஏக்கமும் நிவர்த்தியாகும் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள், பக்தர்கள். தசாவதார சந்நதியை அடுத்து சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன் மிகப் பெரிய உருவினராகக் காட்சியளிக்கிறார். அவருக்கு முன்னால் உற்சவர். சக்கரத்தாழ்வார் மூலவருக்கு தைலக்காப்பு மட்டும் நடைபெறுகிறது. இவர் கிரகக் கோளாறுகளை நிவர்த்தி செய்கிறார். சருமத் தொல்லைகளையும் சரிசெய்து அருள்கிறார். 

சரி, இந்தக் கோயில் இங்கே உருவானதற்கான புராணத் தகவல்களைப் பார்க்கலாமா? ஸ்ரீராமனுடைய குலத்தின் மூதாதையரில் ஒருவர் சிபி சக்கரவர்த்தி. இறைவனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில், பாரதத்தின் தென்பகுதிக்கு வந்தார். அயோத்தியிலிருந்து வந்த அவருக்கு எண்ணற்ற தலங்களைத் தரிசித்தாலும் எங்குமே பரந்தாமனை பார்க்க முடியாத ஏக்கம் வலுத்தது. ஆனாலும் முயற்சியில் சற்றும் தளர்ச்சியை சேர்க்காமல் தொடர்ந்து தேடினார். மிகச் சரியாக திருவெள்ளறை என்று பின்னாளில் அழைக்கப்பட்ட இந்தத் தலத்துக்கு வந்தார். இங்கே கால் பதித்ததுமே புத்துணர்வு தன்னை அரவணைப்பதை உணர்ந்தார். இறைவனைக் கண்டுவிட முடியும் என்ற நம்பிக்கை உறுதியானது. 

அப்போது அவர்முன் ஒரு வெள்ளைப் பன்றி ஓடியது. அப்படி ஒரு பிராணியைப் பார்த்தறியாத அவர், அதன் அழகில் மயங்கி அதனைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அதன் பின்னாலேயே ஓடினார். அவருக்குப் போக்குக் காட்டியபடியே ஓடிய அந்தப் பன்றி சற்றும் எதிர்பாராத வகையில் மிகச் சிறிய ஒரு புற்றுக்குள் புகுந்து மறைந்தது. அத்தனை பெரிய பன்றி இத்தனை சிறிய புற்றுக்குள் எப்படி ஒடுங்கியது! வாழ்க்கைத் தத்துவம் ஏதோ புரிவது போலிருந்தது சிபிக்கு. சுற்றுமுற்றும் பார்த்த சிபி, அங்கே புற்றுக்கு அருகில் மார்க்கண்டேய மகரிஷி தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார். தவம் கலைந்த ரிஷி, சக்கரவர்த்தியைப் பார்த்து அவர் அங்கு வந்திருக்கும் காரணத்தை வினவினார். சிபியும் இறைவனை தரிசிக்கும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். 

வெண் பன்றி ஒளிந்து மறைந்த புற்றுக்குப் பால் அபிஷேகம் செய்யுமாறு அறிவுறுத்தினார் மார்க்கண்டேயர். அவரும் அப்படியே செய்ய, அந்தப் புற்றிலிருந்து ஒரு பேரொளி தோன்றியது. அதனூடே பரந்தாமன், புண்டரீகாட்சனாக, தாமரைக் கண்ணனாக, பிரத்யட்சமாக தரிசனம் தந்தார். மெய்சிலிர்த்துப் போனார் சிபி. அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். தன் ஜன்மம் சாபல்யம் அடைந்த நெகிழ்ச்சியில் நெக்குருகினார். அந்த நொடியில் பரந்தாமன் மறைந்தார். திடுக்கிட்ட சிபி, தனக்கு இந்த அளவிலாவது அந்தப் பேரருள் தரிசனம் தந்தமைக்குக் காரணமான மார்க்கண்டேயருக்கும் தாள் பணிந்து நன்றி தெரிவித்தார். அந்த நன்றிக்குக் காணிக்கையாக மன்னனிடம் ஓர் உதவி கேட்டார்: ‘‘நீ பரந்தாமனின் திவ்ய தரிசனம் கண்டாயே, அந்த மூர்த்தியின் அர்ச்சாவதாரத்தைப் பிறரும் காணச் செய்ய வேண்டியது உன் பொறுப்பு. 

அதற்காக நீ 3700 வைணவர்களை உன் நாடு மற்றும் பிற இடங்களிலிருந்து அழைத்து வா. அவர்களை இங்கே குடியமர்த்து. நீ பாலால் அபிஷேகம் செய்தாயே அந்தப் புற்றை மையமாக வைத்து புண்டரீகாட்சனுக்கு ஒரு கோயில் உருவாக்கு.’’உடனே அந்தப் பணியை சிரமேற் கொண்டார் சிபி. பாரத தேசமெங்கும் சென்று 3700 வைணவர்களைத் திரட்டி அழைத்து வந்தார். அனைவரும் மார்க்கண்டேயரின் பாதம் பணிந்தனர். மன்னர் கோயிலை நிர்மாணிக்கும் பணியைத் தொடங்கினார். தனக்குப் பரந்தாமன் எவ்வாறு காட்சியளித்தாரோ அதே தோற்றத்தில் அவரது அர்ச்சாவதாரத்தை உருவாக்கச் சொன்னார் மன்னர். ஆலயம் பிரமாண்டமாக எழுந்தது. எல்லாம் நிறைவு பெறும் தருணத்தில் ஒரு குறை. ஆமாம், மொத்தம் 3700 பேரில் ஒருவர் மரணமடைந்துவிட்டார். 

அடக்கடவுளே, பணி முற்றுப் பெறும் கட்டத்தில் இப்படி ஒரு இடையூறா? இந்த ஒருவருக்கு பதிலாக மாற்று வைணவரை நான் எங்கே தேடிக் கொண்டு வருவேன் என்று பெரிதும் வருந்தினார். அப்போது புதிதாக ஒரு வைணவர் அங்கே வந்து சேர்ந்தார். வியப்பால் விழி தெறிக்கப் புதியவரை சிபி மன்னன் பார்த்தபோது அவர் மென்மையாகச் சிரித்தார். ‘‘உன்னுடைய இந்தக் குறையையும் நானே தீர்த்து வைக்கிறேன்,’’ என்றது அந்தச் சிரிப்பு. வைணவராக வந்த பகவான் எப்போதும் தன்னைக் கைவிடமாட்டான் என்று அகமகிழ்ந்த சிபி, தன் குறை தீர்த்ததுபோலவே தரணியில் அனைவரது குறையும் தீர்த்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டான். கோயில் நிமிர்ந்து எழுந்தது. 

கோயிலுக்கு வெளியே துவஜஸ்தம்பத்துக்கு முன்னால் ஒரு பலிபீடம் இருக்கிறது. இதனை பிரார்த்தனை பீடம் என்றழைக்கிறார்கள். இந்த பலிபீடத்துக்கு பக்தர்கள் திருமஞ்சனம் செய்கிறார்கள். தம் எந்த வேண்டுதலுக்காகவும் இவ்வாறு திருமஞ்சனம் செய்தால் எண்ணியது ஈடேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. கோயிலுக்குப் பின்னால் நாலு மூலைக்கேணி எனப்படும் ஸ்வஸ்திகா கிணறு ஒன்று உள்ளது. கம்பன் அரையன் என்பவரால் உருவாக்கப்பட்ட கிணறு இது. நான்கு புறங்களிலிருந்தும் படிகளில் இறங்கி இந்தக் கிணற்றில் நீராடலாம். ஒரு பக்கத்தில் குளிப்பவரை அடுத்த பக்கத்திலிருந்து குளிப்பவரால் பார்க்க முடியாது. இந்த ரகசிய குளியலை ஒட்டியே இந்தக் கிணற்றை ‘மாமியார்மருமகள்’ கிணறு என்று குறிப்பிடுகிறார்கள். 

இந்தக் கோயிலுக்கும், கிணற்றுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால், கிணற்றின் மேல் பரப்பில் நந்தி, நாகர் சிலைகள் பதிக்கப்பட்டுள்ளன. புண்டரீகாட்சன் கோயிலுக்குள் சைவவைணவ ஒற்றுமைச் சின்னங்கள் பலவற்றைப் பார்க்க முடிகிறது. ஆனால், இந்த கிணறோ, ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத ரகசியத்தைக் கொண்டிருக்கிறது! இந்தத் தலத்துக்கு இன்னொரு பெருமை எங்களாழ்வான், உய்யக்கொண்டார் ஆகிய ஆசார்யப் பெருமக்கள் அவதரித்த தலம் இது. மார்ச் 16ம் தேதி இக்கோயிலில் உற்சவம் ஆரம்பமாகிறது.

எப்படிப் போவது?

திருச்சிதுறையூர் பாதையில், 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கோயில். ஸ்ரீரங்கத்திலிருந்து 10 கி.மீ. நிறைய பேருந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதிகள் உள்ளன.

No comments:

Post a Comment