விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள கருநெல்லிநாதர் ஆலயத்தில் பழநி முருகப்பெருமானைப் போலவே தோற்றம் தரும் முருகப்பெருமானை தரிசிக்கலாம்.
வழக்குகளில் சிக்கிய நிரபராதிகளின் வாழ்விற்கு வழி காட்டி அவர்களுக்கு அருளும் முருகனை வழிவிடும் முருகன் எனும் பெயரில் ராமநாதபுரத்தில் தரிசிக்கலாம். அண்ணன் கணபதியுடன் கந்தன் கருவறையில் அருளும் தலம் இது.
கடலூரில் வெற்றிவேல் முருகன் எனும் திருப்பெயரில் முருகப்பெருமான் அருள்கிறார். மழலை வரம் வேண்டுவோர் மூன்று எலுமிச்சம்பழங்களை இவருக்கு படைத்து வேண்டிட அவர்களுக்கு மழலை வரம் கிட்டுகிறது. திருமணத்தடை உள்ளோர்கள் வெற்றிலைத் துடைப்பு எனும் முருகனுக்கு அபிஷேகம் செய்த நீரை வெற்றிலையில் தெளித்து முகத்தைத் துடைக்கும் பரிகாரத்தை செய்து தடை நீங்கப்பெறுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலையில் மூலவர் குமாரசுவாமியாகவும் உற்சவர் மணவாளகுமரனாகவும் அருள்புரிகின்றனர். வேடுவ குலத்து வள்ளியை முருகப்பெருமான் திருமணம் புரிந்த தலம் இது. இங்கு வழங்கப்படும் கஞ்சிதர்ம பிரசாதம் சகலநோய்களையும் தீர்ப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கிடங்கூரில் சுப்ரமண்யராக பிரம்மச்சாரி வடிவில் முருகப்பெருமானை தரிசிக்கலாம். கேரள கோயில்களிலேயே உயரான கொடிமரமும் அதன் மேல் மயிலும் இடம் பெற்றுள்ள சிறப்பு பெற்ற தலம் இது. இந்த சந்நதிக்குள் பெண்கள் தரிசிக்க அனுமதியில்லை. கொடிமரத்தருகே நின்றுதான் தரிசிக்க முடியும்.
கோயமுத்தூரில் உள்ள சரவணம்பட்டியில் ரத்னகிரி முருகன் திருக்கோயில் உள்ளது.
இந்திரனை அசுரர்களிடமிருந்து காக்க அவனை தன் வாகனமாக முருகப்பெருமான் ஏற்றருள் புரிந்த தலம் இது. இங்கு முருகப்பெருமானுக்கு வன்னி இலையால் அர்ச்சனை நடைபெறுவது சிறப்பு.
சிவகங்கை மாவட்டம் கோவனூரில் உள்ள பில்லூரில் முருகப்பெருமான் திருவருள்புரிகிறார். சித்த வைத்தியர்கள் சிறப்பாகக் கருதும் பூநீர் உற்பத்தியாகும் தலம் இது. சித்த மருத்துவர்களும், சித்த மருந்துகள் உண்போரும் தரிசிக்க வேண்டிய தலம் இது.
சென்னை குரோம்பேட்டை குமரன் குன்றத்தில் சுவாமிநாத சுவாமி எனும் பெயரில் அழகன் முருகனை தரிசிக்கலாம். சித்திரை வருடப்பிறப்பன்று இக்குன்றின் 120 படிகளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இத்தல நடராஜர் வலது பதம் தூக்கி ஆடிய நிலையில் அருள்வதால் தன்பாதம் தூக்கிய நடராஜர் என வணங்கப்படுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரையில் சுவாமிநாத சுவாமியாக தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை தரிசிக்கலாம். சித்தப்பிரமை உடையவர்கள் இத்தலத்திற்கு வந்து தரிசித்து தீர்த்தப் பிரசாதம் சாப்பிட சித்தப் பிரமை நீங்கிவிடும் அற்புதம் நிகழ்கிறது.
கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் பாலசுப்ரமண்யரை தரிசிக்கலாம். நான்முகனின் கர்வத்தை அடக்க படைப்புத்தொழிலை மேற்கொண்ட காமதேனு வெண்ணெய்மலையை உருவாக்க அதில் முருகப்பெருமான் எழுந்தருளியதாக தலபுராணம் கூறுகிறது. காமதேனுவால் உருவாக்கப்பட்ட தேனு தீர்த்தத்தில் 5 நாட்கள் மூழ்கி முருகனை வழிபட பிள்ளைப்பேறு கிட்டிடும் தலம் இது.
காஞ்சிபுரத்தில் காமாட்சி அன்னைக்கும் ஏகாம்பரநாதருக்கும் இடையே சோமாஸ்கந்த அமைப்பில் உள்ள ஆலயம் குமரக்கோட்டம். நான்முகனை சிறையிலடைத்த முருகப்பெருமான் பிரம்ம சாஸ்தா வடிவில் படைப்புத் தொழிலை ஆரம்பித்த தலம் இது. நாகம் குடைபிடிக்கும் இத்தல உற்சவர் குமரக்கோட்ட கல்யாணசுந்தரர் பேரழகுடன் திகழ்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியில் ஷண்முகநாதரை வணங்கி மகிழலாம். சாபத்தால் மலைவடிவான முருகனின் மயில்சாபவிமோசனம் பெற்றதலம் இது. குன்றக்குடிக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் நினைத்தவை நடந்தே தீரும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத அனுபவ நம்பிக்கை.
சேலம் மாவட்டம் ஊத்துமலையில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் பால சுப்ரமண்யர் அருள்கிறார். அகத்திய முனிவர் பூஜித்த முருகப்பெருமான் இவர். வணங்குவோர்க்கு தொழில்வளம் சிறக்க இந்த பால சுப்ரமண்யர் ஆசி வழங்குகிறார்.
கும்பகோணம் அருகேயுள்ள திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் ஆலயத்தில் குடுமி வைத்த நிலையில் தியான கோலத்தில் முருகப்பெருமானை தரிசித்து மகிழலாம். நான்முகனை இகழ்ந்த முருகனுக்கு வாய் பேசும் சக்தி இழந்தது. அவர் இங்கு வந்து ஈசனை பூஜித்து அக்குறை நீங்கப்பெற்ற தலம் இது. எனவே, திக்கு வாய் உள்ளவர்கள் இவரை தரிசித்து அக்குறை நீங்கப் பெறுகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையில் சிவசுப்ரமண்ய சுவாமியாக முருகப்பெருமானை கண்டு மகிழலாம். தைப்பூசமன்று இத்தலத்தில் நடக்கும் தேர்த்திருவிழாவில் பெண்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. தேங்காய் மூடிகளில் தீபமேற்றினால் நினைத்ததை நிறைவேற்றித்தருபவராம் இத்தல முருகன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருவாவினன்குடியில் குழந்தை வேலாயுதராக முருகனை தரிசிக்கலாம். பழநிமலை அடிவாரத்தில் உள்ள தலம் இது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடு இது. சிவாம்சமாக முருகப்பெருமான் அருள்வதால் பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வர போன்றோர் இத்தலத்தில் அருள்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வில்வாரணியில் சுப்ரமண்யராக முருகப்பெருமான் திருவருள்பாலிக்கிறார். இங்கு தன் தந்தையைப் போலவே லிங்க வடிவில் முருகப்பெருமானை தரிசிக்கலாம். ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகைப்பெண்களும் இவரை தரிசிக்க வருவதாக ஐதீகம் நிலவுகிறது. ராகு/கேது தோஷம் தீர்க்கும் தலமாக இது விளங்குகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பண்பொழியில் முத்துக்குமாரசுவாமி எனும் பெயரில் கந்தனை கண்குளிரக் காணலாம். இத்தலத்தில் சப்தகன்னியர் எழுந்தருளியுள்ளது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் ஆலய பிராகாரங்களில் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள காந்தமலையில் பாலசுப்ரமண்யராக கந்தவேளை தரிசிக்கலாம். 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் சேர்ந்து 39 படிகளாக இவர் சந்நதியில் அமைந்துள்ளது விசேஷம். செவ்வரளி மாலையை இவருக்கு சாத்த செவ்வாய் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
வேலூர் மாவட்டம் ரத்னகிரியில் பாலமுருகனை வணங்கி மகிழலாம். மலர்கள், தீபம், நைவேத்தியம் அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையிலேயே செய்யப்படுவது இத்தல சிறப்பு. பாலவடிவில் உள்ளதால் கந்தசஷ்டியின் போது இத்தலத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை.
பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி கோலத்தில், தம்பதி சமேதராக முருகனை தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் பல்லடம்உடுமலைப்பேட்டை பாதையில் உள்ளது.
பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.
பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை வைக்கச் சொல்லி உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம். அந்தப் பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம்.
கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில், வழக்கத்துக்கு மாறாக, இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது ஆரோகணித்திருக்கிறார் முருகன்.
கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.
குமரி, தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள குமார கோயிலில் வள்ளியுடன் முருகன் கருவறையில் வீற்றிருக்கிறார்.
மாமல்லபுரம் கல்பாக்கம் பாதையில், திருப்போரூரில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக முருகனை தரிசிக்கலாம். சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில் முருகனுக்குச் சமமாக போற்றப்படுகிறது.
தென்காசி, திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏறி தரிசிக்கலாம்.
திருச்சியிலிருந்து 26 கி.மீ தொலைவிலுள்ள விராலி மலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி, தெய்வானையுடன் முருகன்
அருள்கிறார்.
அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம்.
திருவாரூரிலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள எண்கண் தலத்தில், எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில்
முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.
வைத்தீஸ்வரன் கோயிலில் செல்வ முத்துக்குமரனாக செவ்வாய் பகவான் அம்சத்தோடு முருகப் பெருமானை தரிசிக்கலாம்.
நாகை, தில்லையாடிக்கருகில் உள்ள திருவிடைக்கழி தலத்தில் குஹ சண்டிகேஸ்வரரோடு அருள்கிறார் முருகப்பெருமான். இது அபூர்வமான அமைப்பு.
கோவைக்கு அருகில் உள்ள அநுவாவியில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்ற அனுமனின் தாகத்தை தீர்த்த அழகு முருகனை தரிசிக்கலாம்.
கோவை கிணத்துக்கடவு எனும் கனககிரியில் உள்ள பொன்மலையில் தரிசனம் தரும் முருகனை, பார்வை இழந்த அடியவர் ஒருவர் விழிக்குத்துணை உன் மென்மலர்ப்பாதங்கள் என திடமாக நம்ப, அதிசயமாக அந்த அடியவர்க்கு பார்வையை மீட்டுத் தந்தவர் இந்த முருகன்.
கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோடன், செங்கோட்டையன் எனும் திருப் பெயர்களில் முருகப்பெருமான் சேலத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள திருச்செங்கோடு தலத்தில் காட்சி தருகிறார்.
சென்னை பாரிமுனையில் கந்த கோட்டத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியாக தரிசனம் தரும் முருகன், வள்ளலாரால் வழிபடப்பட்டவர்.
திருநெல்வேலியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது இலஞ்சி. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாக செயல்படுவதை உணர்த்திய முருகனை வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் தரிசிக்கலாம்.
தென்காசிக்கு 6 கிமீ தொலைவில் உள்ள ஆய்க்குடியில் மழலைவரம் வேண்டுவோர்க்கு படிப்பாயசம் பிரார்த்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ குமரனை கண்குளிர காணலாம்.
சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் பிராகாரத்தில் சிங்காரவேலவனாக மயில் மீதமர்ந்த முருகனை தனித்தனியே யானைகள் மீது அமர்ந்த தேவியருடன் தரிசிக்கலாம்.
No comments:
Post a Comment