Tuesday 25 July 2017

நீடிக்கலாம் வாழ்நாளை


வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாடுவதற்காகச் சென்றான். பகலில் ஒரு மிருகமும் தென்படவில்லை. வெறுங்கையுடன் வீட்டுக்குப் போனால் மனைவி, மக்கள் தூற்றுவார்களே என பயந்து, இரவில் காட்டிலேயே தங்கினான். இந்த நிலையில் ஒரு புலியைக் கண்டான். அவன் அம்பை எடுப்பதற்குள், சுதாரித்த புலி அவனை விரட்டியது. தப்பித்தால் போதுமென கையிலிருந்த வில்லை கீழே போட்டு விட்டு ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். புலியும் விடவில்லை. மரத்தடியிலேயே படுத்துக் கொண்டது.

இரவில் கண்ணயர்ந்து தவறிக் கீழே விழுந்து விட்டால், புலி அடித்துக் கொன்று விடுமே!' என்று பயந்த வேடன், "தூங்காமல் கண் விழித்திருப்பதற்காக அந்த மரத்தின் இலைகளைக் ஒவ்வொன்றாகக் கிள்ளிக் கீழே போட்டுக் கொண்டிருந்தான். 

வில்வ மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்ததையும், அவன் ஏறியிருந்தது வில்வமரம் என்பதும் அவனுக்கு இருளில் தெரியவில்லை. அது மட்டுமல்ல! அன்று மகாசிவராத்திரி என்ற விபரமும் அவனுக்கு தெரியாது.

அவன் பறித்து போட்ட இலைகள் சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அவனது இடையில் கட்டியிருந்த சுரைப்பையில் இருந்த தண்ணீர் அவனது அசைவில் சிறிது சிறிதாக கீழே சிந்தியது.

ஒருவழியாக பொழுது விடிந்தது. புலியும் அங்கிருந்து சென்று விட்டது. அன்றைய தினம் வேடனின் ஆயுள் முடிந்து மரணமடைய வேண்டும் என்று விதி இருந்தது. அதன்படி எம தூதர்கள் வந்தனர். அப்போது நந்திகேஸ்வரர் அங்கு தோன்றி, எமதூதர்களைத் தடுத்தார்.

""நேற்று மகாசிவராத்திரி புண்ணிய காலம். அது தெரியாத நிலையில், இந்த வேடன் நேற்று முழுவதும் ஏதும் சாப்பிடாமல் இருந்தான். இரவு முழுவதும் விழித்திருந்து, வில்வ இலைகளை சிவலிங்கத்தின் மீது போட்டுக் கொண்டிருந்தான். அவனது சுரைப்பையில் இருந்து தண்ணீர் கொட்டி லிங்கத்திற்கு அபிஷேகம் ஆனது. 

அதனால் இவனது வாழ்நாள் நீடிக்கிறது. வாழ்நாளுக்குப் பின் இவன் சிவலோகம் வருவான். அதன்பின் இவன் மீண்டும் இந்த பூலோகத்தில் பிறக்கமாட்டான். முக்தி பேரின்பம் அடைவான்,'' என்று கூறினார்.

எமதூதர்களும் அவனை விட்டுச் சென்றனர். உயிருக்கு போராடும் நோயாளிகளுக்காக சிவராத்திரி விரதத்தை பக்தியுடன் மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment