Saturday 29 July 2017

காலமெல்லாம் காத்தருள்வாள் கௌமாரி


தேவர்களின் சேனாதிபதியாக விளங்கும் முருகப்பெருமானின் வீரத்திற்குக் காரணமே கௌமாரிதான். மன்மதனைப் பழிக்கும் பேரழகோடும் சௌந்தர்யத்தோடும் தோற்றமளிப்பதால் சுப்ரமண்யர், குமாரர் என வணங்கப்படுகிறார். அகங்காரத்திற்கு தேவதையாக இவர் கூறப்படுகிறார்.  ‘புருஷோ விஷ்ணுரித் யுக்த: சிவோ வா நாம நாமத: அவ்யக்தம் து உமாதேவி ஸ்ரீர்வா பத்ம நிபேஷணா யத் ஸமயோகாத் ஹம்கார: ஸ்ச ஸேநாபதிர் குஹ:” எனும் வராஹ புராண ஸ்லோகப்படி சிவன் புருஷனென்றும், உமாதேவி ஞானம் என்றும் அவ்விருவரின் சேர்க்கையால் உண்டான அகங்காரமானது சேனாதிபதியான குகன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அகங்காரத்தினுடைய கணங்களை நாதர்களாகக் கொண்டவர்களை அம்பிகை அடக்கிக் கொண்டிருப்பதால்தான் அவளை ‘குமார கண நாதாம்பா’ என்று வழிபடுகிறோம். 

வீரத்தை இவளே அருள வேண்டும். இவள் வாகனமான மயில் ஓங்கார வடிவத்தோடு விளங்குகிறது. பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம் போன்றவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களைத் தட்டாமல் நிறைவேற்றுபவள். இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம், அபயம், வரதம் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரங்களைக் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூலில் இந்த அன்னையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத்தத்திற்குத் தலைவியான இவள் கோபமடைந்தால் பசுக்களுக்கு கோமாரி எனும் நோய் தோன்றும். பனை ஓலை விசிறியால் விசிறி எலுமிச்சம்பழ சாதம் நிவேதனம் செய்ய, நலம் பெறலாம். சிங்கமுகன், சூரபத்மன், தாரகன் போன்றோரை அடக்க நந்தி கணங்களோடும், வேத மந்திர ஒலிகளோடும் வீற்றிருக்கும் பரமன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளைத் தோற்றுவித்தான். அதன் வீர்யத்தைத் தாங்காத தேவர்களால் அது சரவணப் பொய்கையில் இடப்பட்ட ஆறு தாமரை மலர்களில் அதியற்புதமாக ஆறு குழந்தைகளாக, அன்னை பார்வதி அனைவரையும் ஓருருவாய், ஆறுமுகமாக்கினாள். அழகின் மொத்த உருவாய் தோற்றம் கொண்ட குமரனின் அறிவும், பொலிவும் ஆச்சரியமானது.

ஞான குருவாய் ஓம் எனும் பிரணவத்தை உபதேசித்து ஒப்பிலாத் தெய்வமானான். மாதா பார்வதி தேவியின் திருக்கரத்திலிருந்து சக்தி வேலை வாங்கி அதைக் கொண்டு சூரனை இரு கூறாக்கியவன். இந்த தமிழ்க் கடவுளின் சக்தியே கௌமாரி எனப்படும் சஷ்டி தேவியாவாள். பரம்பொருள், மாயா சம்பந்தமாக தேவிகளை ஏற்கும்போது மாயை இரண்டு அம்சங்களாக உதிக்கிறாள். இந்த இரு அம்சங்களே சிவனுக்கு பார்வதி, கங்கையாகவும்; திருமாலுக்கு ஸ்ரீதேவி, பூதேவியாகவும், நான்முகனுக்கு சாவித்ரி, சரஸ்வதி எனவும், விநாயகனுக்கு சித்தி, புத்தியாகவும் அருள்வது போல் குமரனுக்கு தேவஸேனா, வள்ளி எனத் துணை நிற்கின்றன என கந்தபுராணம் கூறுகிறது. முன்பொருசமயம் நாரதர்கூறிய திருமுருகனின் லீலா விநோதங்களைக் கேட்டு அகமகிழ்ந்த நாரணன் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் பெருக்க அவர் தம் கண்ணீரிலிருந்து உதித்த இரு பெண்களும் முருகனைக் கணவராய் அடைய அரியிடம் வரம் கேட்டனர். 

அமுதவல்லி, சுந்தரவல்லி எனும் அந்த இருவரையும் பூவுலகில் தவம் புரியப் பணித்தார் பரந்தாமன். அவ்வாறே தவம் புரிந்த அவர்களின் முன் தோன்றிய முருகன் அமுதவல்லி தேவேந்திரன் மகளாக இந்திர லோகத்தில் தேவஸேனா எனும் பெயருடன் வளரவும், சுந்தரவல்லி பூமியில் வேடுவர் குலத்தில் வள்ளியாக வளர்ந்திடவும் தக்க காலத்தில் தாம் அவர்களை மணம் புரிவதாகவும் வாக்குறுதி அளித்தான். காலம் கனிந்தது. சூரர்களிடம் இருந்து தேவலோகத்தைக் காத்து தேவஸேனாவை மணம் புரிந்து தேவஸேனாதிபதியானான் முருகப்பெருமான். எப்போதும் காதலுடன் தன்னையே நோக்கும் புள்ளிமானாகிய வள்ளிமானையும் மணந்தான். தேவஸேனா தேவலோகத்து மந்தாரமாலை, முத்துமாலை போன்றவற்றை அணிந்த மார்பினள். முருகனின் இடப்புறம் அமர்ந்து அருள்பவள். 

வள்ளி, தாமரை மலர் ஏந்தி அலங்கார ரூபிணியாக மாணிக்க மகுடங்கள் துலங்க இடப்புறம் வீற்றிருப்பவள். ஆகமங்கள் இவர்களை கஜா, கஜாவல்லி என்றும் வித்யா, மேதா என்றும் போற்றுகின்றன. ஸ்வயம்புமனுவின் புதல்வன் நிஷிதன் என்பவனுக்குப் பிறந்த குழந்தைகள் உடனே இறந்தன. அவனை இந்த சஷ்டிதேவி என வழங்கப்படும் கௌமாரி உபாஸனை காப்பாற்றியது. இவள் குழந்தைகளைப் பிழைக்க வைத்து அவனிடம் கொடுத்தருளினாள். அப்போது குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தையையும், வறுமையில் உழல்பவர்களுக்கு செல்வத்தையும், தன் கர்மாக்களை சரியாகச் செய்வோர்க்கு அதன் பலன்களையும் தான் அளிப்பதாகவும் கௌமாரிதேவி உறுதியளித்ததாக புராணம் கூறுகிறது. 

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் எனும் பழமொழி கூட சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் மழலை வரம் வரும் என்பதைக் குறிக்கும் என்பர். அவ்வாறான முருகனுக்கு உறுதுணையாய் இருக்கும் சஷ்டி தேவியான தேவஸேனாவை முருகனுடன் சேர்ந்து வழிபட நீண்ட ஆயுள், ஆரோக்யமுடன் சத்புத்ர 
ப்ராப்தியும் கிடைக்கும். நீலச்சிகண்டியில் ஆரோகணித்து குமரவேலுடன் கோலக்குறத்தியாய் பக்தர்களைக் காக்க வருபவள் வள்ளியம்மை. ஞானமும், தவமும் அறியாத வேடுவர் குல நங்கையைத் தானே வலியச் சென்று மணம் செய்த முருகனின் பரந்த நோக்கை அருணகிரியார் பரக்கப் பேசுகிறார்.‘முனினாமுதா’ எனும் சுப்ரமண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் கூட ‘‘குண்டலினி, நவவிதபக்தி செய்து தன்னை வழிபடும் அடியவர்க்கு அருள்புரியும் அநேக தெய்வங்கள் உண்டு; ஆனால், எதுவுமே அறியாத எளியோருக்கும் விரும்புவதைத் தரும் தெய்வமான முருகனின் பேரருளை வியக்கிறேன்,’’ என்று கூறியுள்ளார். 

காலத்தின் வடிவை ஸ்தூலமாய் உருவகப்படுத்தினால் 60 வருடங்களையும் அறுபது படிகளாகக் கொண்டு, அதன் மேல் கோலோச்சும் சுவாமிநாதன், 60 வருடங்களாகிய காலத்தின் ஸ்தூலரூபம். காலத்தை ஒரு வருடத்தின் உருவமாய்க் கொண்டால் முருகனின் இரு கால்கள் தட்சிணாயனம், உத்திராயணம் ஆகிறது. ஆறு ருதுக்களும் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களே பன்னிரண்டு மாதங்களாகும். அதே காலம் ஒரு நாளாய் உருவகம் கொண்டால் இரவு, பகல் என்றாகிறது. அதையே முருகனின் வடிவமாக எடுத்துக்கொண்டால் இரவு வள்ளி, பகல் தேவஸேனா. இந்த இரண்டு கௌமார சக்திகளும் இணைந்த ஒருவரே முருகனின் திருவடிவம். முருகப்பெருமானை காலரூபமாகவும் காலத்தை தன் வசத்தில் 
வைத்திருப்பவனாகவும் பேசுகிறது கந்தபுராணம். 

முருகனை படைப்புத் தொழில் புரியும் பிரம்மசாத்தனாகவும், காத்தல் தொழில்புரியும் முகுந்த முருகனாகவும், தீயவற்றை அழித்து நல்லோரைக் காக்கும் உருத்திர குமாரனாகவும் போற்றி வழிபட்டதைப் போலவே அவனது அம்சமான கௌமாரியையும் மூன்று நிலைகளில் வழிபட்டனர் என கருதுகின்றனர். இவ்வளவு மகிமை வாய்ந்த புத்திரப்பேற்றை தட்டாமல் தரும் சகல வல்லமை பொருந்திய முருகனின் சக்தி கௌமாரிதேவி பக்தர்களுக்காக எதைத்தான் செய்யமாட்டாள்? இந்த கௌமாரியை வழிபட பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். மனதில் புத்துணர்வும் தெம்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். அறிவு பிரகாசிக்கும். 

த்யானம் 
அங்குசம் தண்ட கட்வாங்கௌ பாசாம்ச தததீகரை:
பந்தூக புஷ்ப ஸங்காசா கௌமாரீ காம தாயினீ
பந்தூக வர்ணாம் கிரிஜாம் சிவாயா
மயூர வாஹனாம்து குஹஸ்ய சக்தீம்
ஸம்பிப்ரதீம் அங்குச சண்ட தண்டௌ
கட்வாங்கரா சௌ சரணம் ப்ரபத்யே!
ஷட்வக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ  ஸமன்விதாம்
ஜடாமகுட ஸம்யுக்தாம் நீலவர்ணாம் ஸுயௌவனாம்
வரதாபய ஹஸ்தாம் தாம் வஜ்ரம் சக்தீம் ச தாரிணீம்
ஸர்வலக்ஷண ஸம்பன்னாம் கௌமாரீ தாம்
விபாவயேத்.
மந்த்ரம்
ஓம் கௌம் கௌமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கௌமாரீ கன்யகாயை நம:
கௌமாரி காயத்ரி
ஓம் சிகி வாஹனாய வித்மஹே சக்தி ஹஸ் தாய தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்.
ஓம் சிகித்வஜாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்.

மயில் வடிவம் பொறித்த கொடியை உடையவளும் வஜ்ரம், சக்தி ஆகிய ஆயுதங்களை ஏந்தியவளுமான கௌமாரி தேவியைத் தியானிக்கிறேன். அவள் என்முன்னே வந்து வெற்றியையும் பாதுகாப்பையும் அருள்வாளாக. தேவி மாஹாத்மியத்தில் கௌமாரி மயூர குக்குட வ்ருதே மஹா சக்தி தரேனகே
கௌமாரீ ரூப ஸம்ஸ்தானே நாராயணீ நமோஸ்துதே. மயில் வாகனம் மீது கோழிக்கொடி சூழ, மகாசக்தி ஆயுதத்தைத் தாங்கி பாபமற்ற கௌமாரியாக விளங்குகின்ற நாராயணியே! உனக்கு நமஸ்காரம்.

No comments:

Post a Comment