Sunday 30 July 2017

மந்திரம் யார் சொன்னால் பலிக்கும்


அரசன் ஒருவனுக்கு, ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட வேண்டும், தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆத்மஞானம் பெற வேண்டுமானால், அதற்கு குரு ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவது முற்றிலும் அவசியம் என்று, சாஸ்திரங்களின் மூலம் அறிந்தான். 

தொலைதூரத்தில் இருக்கும் பிரம்மஞானி ஒருவரிடம் சென்று, மந்திரதீட்சை பெற முடிவு செய்தான். பிரம்ம ஞானியின் ஆஸ்ரமம் இருந்த மலைச்சாரலுக்குச் சென்றான். அவரைப் பணிந்து வணங்கி, ""நான் ஒரு சிவபக்தன். எனக்கு நீங்கள் மந்திரதீட்சை கொடுங்கள்,'' என்று கேட்டுக்கொண்டான். 

மன்னனைப் பார்த்த பிரம்மஞானி, "அவன் மந்திரதீட்சை பெறுவதற்குப் போதிய மனப்பக்குவம் இல்லாதவன். அவனுக்கு மந்திரதீட்சை பெறும் தகுதி இல்லை' என்பதைப் புரிந்துகொண்டார். 

எனவே அரசனிடம், "அரசே! நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை. அதற்கு சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு மந்திரதீட்சை தருவதற்கில்லை...'' என்று கூறினார். 

அரசன், தனக்கு மந்திரதீட்சை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றிருந்தான். தீட்சை தராததால், மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனை திரும்பினான்.

தன் அமைச்சரிடம், "எனக்கு பிரம்மஞானி மந்திர உபதேசம் தர மறுத்துவிட்டார்... எப்படியும் நான் மந்திரதீட்சை பெற்றாக வேண்டும். அதற்கு என்ன வழி?'' என்று கேட்டான். 

"மன்னர் பெருமானே! நமது நாட்டில் சாஸ்திரங்களை மிகவும் நன்கு கற்றறிந்த பெரிய சமஸ்கிருத பண்டிதர் ஒருவர் இருக்கிறார். நீங்கள் விரும்பினால், உடனே அவரிடம் நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு நான் உரிய ஏற்பாடுகள் செய்கிறேன்,'' என்றார் அமைச்சர். 

மன்னனும், அமைச்சர் சொன்னபடி மந்திர தீட்சை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்தான். அமைச்சர், பண்டிதருடன் தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகள் செய்தார். 

பண்டிதர் ஒரு நல்ல நாளில் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னனுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார். அவருக்கு அரசன் நிறைய வெகுமதிகள் வழங்கினான். 

அரசன் தந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட பண்டிதர், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். 

அரசன், "இப்போது தனக்கு மந்திர தீட்சை கிடைத்துவிட்டது! தனக்கு தீட்சை தர மறுத்த பிரம்மஞானிக்கு, இப்போது பாடம் புகட்ட வேண்டும்!' என்று நினைத்தான். 

தன் வீரர்களை அழைத்து, "எனக்கு மந்திரதீட்சை தர மறுத்த பிரம்மஞானியைப் பிடித்து வந்து, என் முன்னால் நிறுத்துங்கள்!'' என்று உத்தரவிட்டான். வீரர்களும் அவ்வாறே செய்தார்கள். 

சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசன் ஏளனமாக, "என்ன, எப்படி இருக்கிறீர்கள்? உங்களிடம் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் நீங்களோ, எனக்கு உபதேசம் செய்ய மறுத்துவிட்டீர்கள்! ஆனால், இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? நான் என்ன மந்திரத்தை உங்களிடம் உபதேசம் பெற வேண்டும் என்று விரும்பினேனோ, அதே மந்திரத்தை நான் இப்போது ஒரு பண்டிதரிடம் பெற்றுக்கொண்டேன்,'' என்றான். 

பிரம்மஞானி எதுவும் பேசாமல், அமைதியாக இருந்தார். மன்னன் தொடர்ந்தான். 

"ஓம் நமச்சிவாய' - இதுதானே மந்திரம்! இந்த மந்திரத்தை தருவதற்குத் தானே நீங்கள் மறுத்தீர்கள்? இப்போது நான் விரும்பியபடி எனக்கு மந்திரதீட்சை கிடைத்துவிட்டது!'' என்றான் ஆணவமாக! 

அது கேட்ட பிரம்மஞானி, ""அரசே! இப்போது நான் சொல்வதுபோல், நீங்கள் சிறிது நேரம் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். ஏதும் புரியாத அரசனும் சம்மதித்தான். 

பிரம்மஞானி அரசனிடம், "அரசே! நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தில், நான் சிறிது நேரம் அமர்வதற்கு என்னை அனுமதியுங்கள். அதே சமயம் நீங்கள், நான் இப்போது நின்றுகொண்டிருக்கும் இந்த இடத்திற்கு வந்து சிறிது நேரம் நில்லுங்கள்,'' என்று கேட்டுக்கொண்டார்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டான் அரசன். பிரம்மஞானி நின்றுகொண்டிருந்த இடத்தில் வந்து நின்றான். ஞானியோ சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார். 

பிரம்மஞானி அரியணையில் அமர்ந்தாரோ இல்லையோ, உடனே அவர் அரசனைச் சுட்டிக்காட்டி அருகில் இருந்த வீரர்களிடம், ""இவரை உடனே கைது செய்யுங்கள்!'' என்று கட்டளையிட்டார். 

இவ்விதம் பிரம்மஞானி கூறியதைக் கேட்டு, அரசவையில் இருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டார்கள், திகைத்தார்கள். வீரர்களுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. 

இந்த நிலையில் பிரம்மஞானி தன்னைக் கைது செய்யும்படி கூறியதைக் கேட்டு கோபம் கொண்ட அரசன், அரியணையில் உட்கார்ந்திருந்த பிரம்மஞானியை வீரர்களுக்குச் சுட்டிக்காட்டி, "இவரை உடனே கைது செய்யுங்கள்!'' என்று கட்டளையிட்டான். 

அவ்விதம் அரசன் சொன்னானோ இல்லையோ, வீரர்கள் உடனே சென்று பிரம்மஞானியைக் கைது செய்தார்கள். 

அப்போது பிரம்மஞானி அரசனைப் பார்த்து சிரித்தபடியே கூறினார்: 

"அரசே! இப்போது இங்கு நடந்த நாடகத்தில், உங்கள் கேள்விக்கு உரிய பதில் இருக்கிறது. இதுதான் மெய்ஞ்ஞானி ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும், பண்டிதர் ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் உள்ள வேறுபாடு ஆகும். நான் உங்களைக் கைது செய்யும்படி இங்கிருந்த வீரர்களுக்குக் கட்டளைஇட்டேன். ஆனால், என் கட்டளையை அவர்கள் நிறைவேற்றவில்லை. நான் அரசனுக்குரிய அரியணையிலிருந்துதான் உத்தரவு பிறப்பித்தேன் என்றாலும், என் உத்தரவை இங்கு யாரும் பொருட்படுத்தவில்லை, மதிக்கவில்லை. மாறாக, நீங்கள் அரியணையில் அமராமல், நான் நின்ற இடத்தில் நின்றுகொண்டு என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தீர்கள். என்றாலும், உடனே உங்கள் கட்டளையை வீரர்கள் நிறைவேற்றினார்கள். 

எனவே நான் கூறிய அதே சொற்களை, நீங்கள் சொன்னபோதுதான் அதற்கு இங்கு பலன் ஏற்பட்டது. நீங்கள் கூறிய அதே சொற்களை நான் இங்கு சொன்னபோதிலும் - அதற்கு மதிப்பில்லை. இதுபோல்தான் அரசே! மந்திரோபதேசம் செய்யும்போது குருமார்கள், சீடர்களுக்கு வழங்கும் மந்திரம் ஒரே மந்திரமாக இருக்கலாம். ஆனால், மெய்ஞ்ஞானி ஒருவர் அந்த மந்திரத்தை மந்திர தீட்சையின்போது உரிய முறையில் வழங்கினால்தான், அந்த மந்திரம் உயிர் பெற்று தனக்கு உரிய உண்மையான உயர்ந்த பலனைத் தரும். 

இறையனுபூதி பெறாத ஒருவர், சாஸ்திரங்களை ஏராளமாகப் படித்தவராக இருக்கலாம். ஆனால், அவர் ஞானிகள் சொல்லும் அதே மந்திரத்தை உபதேசம் செய்தாலும் அதற்குரிய உயர்ந்த பலன் இருக்காது. தகுதியானவர்கள் உபதேசம் செய்தால் தான் மந்திரம் பலிக்கும்,'' என்று கூறி முடித்தார். 

No comments:

Post a Comment