பிரம்மபுரம்
பொன்னி நதி பாயும் சோழவள நாட்டைப் போன்றே, சான்றோர்கள் நிறைந்த தொண்டை மண்டலமும் திருக்கோயில்கள் நிரம்ப பெற்றது. சைவமும், வைணவமும் தழைத்தோங்கிய தொண்டை நாடு என்று அழைக்கப்பெற்றது. இங்குள்ள பாலாற்றின் வடகரையில் குன்றின் மீது மாடு மேய்க்கும் சிறுவனுக்கு திருமலை வேங்கடவன் பிரசன்னமாகி காட்சி கொடுத்த தலம்தான் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீவி மலை மேல் அமைந்த பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலாகும். திரேதாயுகத்தில் ராமபிரான் அன்னை சீதையை மீட்க இலங்கேஸ்வரனான ராவணனுடன் யுத்தம் புரிந்தான். அனுமனின் தலைமையிலான வானர சேனைகளுடன் கடும் யுத்தம் நடந்த வேளையில் ராவணனின் மகன் இந்திரஜித்தின் அஸ்திரத்தால் ராமனின் தம்பி லட்சுமணன் மற்றும் சேனைகள் மூர்ச்சையற்று சாய்ந்தனர்.
அந்த வேளையில் ராவணின் வைத்தியர் சுக்ஷேன் போர்முனைக்கு அழைத்து வரப்படுகிறார். அவரது ஆலோசனையின் பேரில் இமயத்தில் உள்ள சஞ்சீவி மூலிகையை கொண்டு வர அனுமனுக்கு ராமன் உத்தரவிடுகிறான். புயலெனப் புறப்பட்ட அனுமன் இமயத்தில் சஞ்சீவி மூலிகையுடன் ஒரு குன்றையே பெயர்த்தெடுத்து போர்முனைக்கு விரைகிறான். அப்போது அந்த குன்றிலிருந்து சிதறி விழுந்த இடங்கள் எல்லாம் புகழ்பெற்ற திருத்தலங்களாயின. அந்த வகையில் சஞ்சீவி பர்வதத்திலிருந்து விழுந்த ஒரு துகளே இங்கு பிரம்மபுரத்தில் சஞ்சீவி கிரியாக விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க சஞ்சீவிகிரியின் அடிவார கிராமமான பிரம்மபுரத்தில் ஏழை ஆயர்குலத்தில் தோன்றிய சனந்தன் என்ற சிறுவன், தினமும் பசுக்களை ஓட்டிக்கொண்டு அருகிலுள்ள சஞ்சீவி பர்வதத்துக்கு வருவான்.
ஒரு சமயம் அவனது தந்தையும் சிற்றன்னையும் முதல் தார பிள்ளையான சனந்தனை தனியாக விட்டு திருப்பதி திருமலைக்கு வேங்கடமுடையானை தரிசிக்க யாத்திரை செல்கின்றனர். யாத்திரை முடிந்து திரும்பிய சனந்தனின் தந்தை திருவேங்கடமுடையானான ஏழுமலையானின் பெருமைகளை தனது மகன் சனந்தனிடம் விவரிக்கிறான். அதைக் கேட்ட சனந்தன் மனதுக்குள் ஏழுமலையானை வரித்து தினமும் மானசீகமாக வழிப்பட்டு வருகிறான். அப்போது ஏழுமலையானும் தன்னை போலவே சிறுவனாகத்தான் இருப்பான், அவனுக்கும் பசி எடுக்கும் என்ற எண்ணத்தால், சஞ்சீவி பர்வதத்தின் மீது மாடுகளை மேய்க்கும்போதே பாலும், அன்னமும் வைத்து காத்திருப்பான். அவனது இந்த நிலையை கண்ட அவ்வழியாக கண்ட மகரிஷி ஒருவர், ‘சிறுவனே, இங்கு தினமும் நீ பால், அன்னமுடன் யாருக்காக காத்திருக்கிறாய்?’ என்று கேட்டார்.
அதற்கு சனந்தன், ‘ஐயா, நான் திருமலை வேங்கடமுடையானுக்காக காத்திருக்கிறேன். அவர் திருமலையில் ஒரு புற்றுக்குள் மறைந்து இருந்து பாலை பருகினாராம். அவர் இவ்வழியாக பசியுடன் வந்தால் அன்னமும், பாலையும் வழங்கவே காத்திருக்கிறேன்’ என்று கூறினான். அதற்கு அந்த மகரிஷி, ‘சனந்தா, அவர் திருமலையில் சிலா ரூபமாக வீற்றிருக்கிறார். அவர் மனிதன் இல்லை. தெய்வம்’ என்று கூறினார். ஆனால் சனந்தன், ‘ஐயா, எனது தந்தை கூறியதுதான் உண்மையாக இருக்கும். அவர் திருமலையில் மனிதனாக புற்றினில் இருந்து பாலை பருகி, பத்மாவதி என்ற பெண்ணை குபேரனிடம் கடன் வாங்கி திருமணம் செய்தாராம். அப்படி இருக்கையில் அவர் மனிதனாகத்தான் இருக்க முடியும். ஆகவே, நானும் அவரை தரிசிக்க முடியும்’ என்று தெரிவித்தான்.
அவனது நம்பிக்கையை கண்ட மகரிஷி, ‘சனந்தா, இப்பிறவியில் அவதரித்த மற்றொரு பிரகலாதன். நிச்சயம் நீ வேங்கடமுடையானின் தரிசனம் காண்பாய். அதற்கு ஊனை உருக்கி தவம் செய்ய வேண்டும்’ என்று ஆசி கூறி சென்றார். அவரது வார்த்தையை ஏற்ற சனந்தன் அன்று முதல் உணவு, நீர் என ஆகாரமின்றி எந்நேரமும் திருவேங்கமுடையானை நினைத்து சஞ்சீவி பர்வதத்தில் தியானிக்கலானான். 6 நாட்கள் இவ்வாறு அவன் ஊன் உறக்கமின்றி தவிக்கையில், ஏழாவது நாளும் வந்தது. சனந்தனின் பசியற்ற தவநிலை அவனை மயக்கத்தில் ஆழ்த்தியதுடன், அவன் பாறை மீது மோதி ரத்தவெள்ளத்தில் தரையில் வீழ்ந்தான்.
தனது பக்தனின் நிலை அறிந்து பதறிய திருவேங்கமுடையான், திருப்பதி திருமலை ஆனந்த நிலையத்தில் இருந்து உடனடியாக சஞ்சீவிகிரியில் சனந்தனின் முன்பு ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் பிரசன்னமாகி காட்சி தந்தார். சனந்தனை நோக்கி, ‘சனந்தா, நான் உன் ஸ்ரீநிவாசன், வேங்கடமுடையான் வந்திருக்கிறேன். கண்ணைத் திற’ என்று உத்தரவிட்டார். கண்ணை திறந்த சனந்தன் மறுநொடியே அந்த பிரகாச ஜோதி வடிவை கண்டு மயக்கமுற்றான். பகவான் சனந்தனின் நிலை உணர்ந்து உடனடியாக தனது ரூபத்தை மானிட ரூபமாக தலைப்பாகை அணிந்து அழகிய முக மண்டலத்துடன், ‘சனந்தா, நான்தான் ஸ்ரீநிவாசன் வந்திருக்கிறேன். பசிக்கிறது. பாலை கொடு’ என்று கேட்டதும், சனந்தன் பரவச நிலை அடைந்தான்.
உடனே தன்னிடம் இருந்த பாலையும், அன்னத்தையும் ஸ்ரீனிவாசனிடம் கொடுத்தான். அதை உண்ட ஸ்ரீநிவாசன் மானிட ரூபமாகவே அவனுடன் உண்டு களித்து சிறிது நேரம் விளையாடினான். இதை தேவர்கள் கண்டு மகிழ்ந்தனர். அங்கு அன்பு, பக்தியினால் பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இரண்டறக் கலந்தன. பின்னர் மாலை நெருங்கியதும், ‘சனந்தா, இப்போது உன்னுடன் விளையாடிய ரூபத்துடனே சிறியவனாக சிலையாக இங்கு குடியிருந்து பக்தர்களை காப்பேன். இந்த தலம் திருமலையைப் போன்று பேரும், புகழும் பெறும்’ என்று ஆசி கூறி அங்கிருந்த பாறையில் மறைந்தார்.
இத்தகைய சிறப்பு கொண்ட பிரம்மபுரம் சஞ்சீவிமலை பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் அன்பால் உருகி வழிபடும் பக்தர்களின் பிரார்த்தனையை உடனே, நிறைவேற்றும் சிறந்த தலமாகவும், திருமணத் தடை நீக்கும் தலமாகவும், திருமலை திருப்பதி சென்று வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் தலமாகவும் போற்றப்படுகிறது. இக்கோயில் முதலில் பல்லவர்களாலும், சோழர்களாலும் கட்டி முடிக்கப்பட்டது என்றும், பின்னர் பாண்டியர், விஜயநகர பேரரசுகளால் புனரமைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து 1950, 1980, 1990ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தேறியது. தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி மலைக்கு பாதைகள் அமைக்கப்பட்டு திருமண மண்டபம், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு பெரிய திருச்சுற்றுடன் கோயில் புனர் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறியது. ஆனந்த நிலையம் என்ற சிறிய கருவறையில் எதிரில் பெரிய திருவடி கருட பகவான் வீற்றிருக்க, சுயம்பு மூர்த்தியுடன், ஆவுடையார் மேல் நின்ற கோலத்தில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்னை சரணடை. உன்னை நான் காப்பேன் என்ற நிலையில் காட்சி தருகிறார். பக்கவாட்டில் ஆஞ்சநேயர் சந்நதியும் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்துக்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் காட்பாடி வந்து அங்கிருந்து ஆட்டோ மூலமே கோயிலை சென்றடையலாம். அல்லது வேலூரில் இருந்து காட்பாடி வந்து அங்கிருந்து 3 கி.மீ திருவலம் சாலையில் சென்றும் ேகாயிலை அடையலாம்.
No comments:
Post a Comment