Wednesday 26 July 2017

பிணிகளை தீர்க்கும் வேலங்காடு பொற்கொடியம்மன்


அன்னை பராசக்தியின் அவதார மகிமையை அளவிட முடியாது. பல்வேறு பெயர்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் அன்னை பராசக்தி. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள வேலங்காடு கிராமத்தில் உள்ள ஏரியின் நடுவே பொற்கொடியம்மன் என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார். அவள் பக்தர்கள் வேண்டும் வரங்களை அள்ளிதரும் நாயகியாக வீற்றிருக்கிறாள். கருவறையில் நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் அன்னை தன்னை நாடி வரும் பக்தர்களின் இன்னல்களை போக்கும் கருணையே வடிவாக காட்சியளிக்கிறாள். மணமாகாத பெண்களுக்கு தடைநீங்கி திருமணம் நடைபெறவும், பிணியுற்றோர் பிணி அகலவும், துயர் உற்றோரின் துயர் துடைக்கவும் அருள்பாலிக்கிறாள். 

மனிதர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தாயாக விளங்கும் பொற்கொடியம்மன், கால்நடைகளின் பிணிகளையும் தீர்த்து வைக்கிறாள் என்பது தனிச்சிறப்பு. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி புதன் அன்று நடைபெறும் புஷ்பரத ஏரி திருவிழா மிகச்சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்தாண்டு திருவிழா வரும் 10ம்தேதி நடக்கிறது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு வல்லண்டராமம் கிராமத்தில் உள்ள கோயிலில் இருந்து அம்மன் புறப்பாடு நடைபெறும். பின்னர் அன்னாசிபாளையத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும். இதைதொடர்ந்து புதன்கிழமை புஷ்பரத ஏரி திருவிழா நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். 

இந்த தேரை பக்தர்கள் தோளில் சுமந்தபடி வேலங்காடு ஏரியில் உள்ள கோயிலுக்கு ஆடியபடியே கொண்டுவருவர். ஆனாலும் தேரில் உள்ள பூக்கள் உதிராதாம். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தம் மனக்குறைகளை வேண்டியும், நேர்த்தி கடன் செலுத்தியும் உப்பு, மிளகு ஆகியவற்றை அம்மன் மீது தூவி வழிபடுவர்.  பிணியில் இருந்து மீண்டுவந்த கால்நடைகளுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையிலும், நோய்கள் தாக்காமல் இருக்கவும் வேண்டிக்கொண்டு,  கால்நடைகளுடன் கோயிலை 3முறை வலம் வருவர். மேலும் விரதம் இருந்து பச்சை வண்டி கட்டிக்கொண்டு செல்வர். (மாட்டு வண்டியில் தென்னை ஓலை கட்டியபடி செல்வது). மேலும் ஆடு, மாடுகளை பக்தர்கள்  கோயிலை சுற்றி வந்து அம்மனின் அருள்பெறுகின்றனர்.

அதேபோல் குழந்தை வரம் வேண்டியும், அம்மன் அருளால் குழந்தை வரம் பெற்றவர்கள், பிணியில் இருந்து மீண்டு வந்தவர்கள், கண், காது பிரச்னைகளில் இருந்து விடுபட்டவர்கள் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வகையில் மண்ணால் செய்யப்பட்ட ஆண், பெண் உருவபொம்மைகள், கை, கால், காது, கண், மாடு ஆகிய உருவ பொம்மைகளை வாங்கி தலையில் வைத்து கோயிலை சுற்றிவந்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். வேலூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொற்கொடியம்மன் கோயிலுக்கு வேலூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம். பிரசித்தி பெற்ற புஷ்பரத ஏரி திருவிழாவிற்கு வேலூரில் இருந்து ஏராளமான  சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

No comments:

Post a Comment