Monday 31 July 2017

சப்த கன்னியர்கள் தோஷம் நீக்கிய குளித்தலை கடம்பவனேஸ்வரர்


வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி, அகண்ட காவிரியாக விஸ்வரூபம் எடுத்து பாயும்  இடம் கரூர் மாவட்டம் குளித்தலை. இங்கு காவிரி கரையோரம் எழுந்தருளியிருக்கும் சிவத்தலம் கடம்பவனேஸ்வரர் ஆலயம்.   அருணகிரி நாதரால் பாடல்பெற்ற  இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது.  வடக்கே காசியைப்போல, தென்னகத்தில் வடக்கு நோக்கியுள்ள தலம் என்பதால் இதைத் தட்சிண காசி என்றும் அழைக்கிறார்கள். குபேர திசையெனப் போற்றப்படும் வடதிசையை நோக்கி எழுந்தருளியுள்ள  சிவன்   கடம்ப மரத்தில் தோன்றி காட்சியளித்ததால் கடம்பவனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பாலகுஜலாம்பிகை  எனப்படும்  முற்றாமுலையம்மை உடன் இங்கு இறைவன்  அருள் பாலிக்கிறார். 

இக்கோயில் 2 பிரகாரங்களை கொண்டது. கோயிலை சுற்றித் தேரோடும் வீதி உள்ளது. கோயில் நுழைவு வாயிலுக்கு முன்புறம் ஒரு மண்டபமும் இருக்கிறது. உட்புறத்தில் 2ம் பிரகாரத்தின் கிழக்கில் வாகன மண்டபம், ம ட ப் ப ள் ளி, கி ண று முதலியவையும், கால சன்னதியும் உள்ளது. பிரம்ம தீர்த்தம், நவராத்திரி மண்டபமும், இதன் அருகே அம்பாள் சன்னதியும் உள்ளது. தென்கிழக்கு மூலையில் பிரம்ம தீர்த்தமும், வடகிழக்கு மூலையில் நவராத்திரி மண்டபமும், வடகிழக்கில் நடராஜர் சன்னதியும், நவக்கிரகங்களும், தெற்கில்  நால்வர், அறுபத்து மூவர், சேக்கிழார் சன்னதிகளும், மேற்கில் விஸ்வநாதர், விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

இவற்றின் நடுநாயகமாக மகாமண்டபம் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் கடம்பவனேஸ்வர்  அருள்பாலிக்கிறார்.  மூலவரின் பின்பக்கத்தில் சப்தகன்னியர்கள் உள்ளனர். கன்னியரின் தோஷம்  நீங்கிய தலம்:  ஒருசமயம்  துர்க்கைக்கும், தூம்றலோசன் என்ற அரக்கனுக்கும் கடும் போர் நடந்தது. போரில் அரக்கனின் கை ஓங்கியது. இதைக் கண்ட சப்த கன்னியர்கள் துர்க்கைக்கு ஆதரவாக அரக்கனை எதிர்த்து போரிட்டனர். இதைத் தாக்கு பிடிக்க முடியாத அரக்கன் உயிர் பிழைக்க தப்பி ஓடினான். வழியில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார். 

அரக்கன் ஓடும்போது தவம் கலைந்ததால் ஆத்திரமடைந்த முனிவரால் அரக்கன் மறைந்தான்.  அப்போது அங்கு வந்த சப்த கன்னியர்கள்,  அரக்கன் தான் முனிவர் வேடமிட்டு இருக்கிறார் என கருதி முனிவரை கொன்று விடுகின்றனர். இதனால் சப்த கன்னியர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதைப் போக்க கன்னியர்கள் எங்கெங்கோ சென்று வழிபாடு நடத்தினர். ஆனாலும் தீரவில்லை. இறுதியாக கடம்பவனேஸ்வரரை வழிபட்டு சாப  விமோசனம் பெற்றனர் என்பது தல வரலாறு. 

அதனால் தான் மூலஸ்தானத்தில் கடம்பவனேஸ்வரருக்கு பின்னால் சப்த கன்னியர்கள் வீற்றிருக்கின்றனர். இன்றும் இங்கு மூலவரை தரிசிக்கும்போது இதைக் காணலாம். இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றபோதும்,  இங்கு நடைபெறும் தைப்பூச திருவிழா சிறப்பு வாய்ந்தது. குளித்தலை கடம்பவனேஸ்வரர், முசிறி சந்திரமவுலீஸ்வரர்,  ராஜேந்திரம் மத்யார்சுவனேஸ்வரர், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதீஸ்வரர், கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர், வெள்ளூர் திருக்காமேஸ்வரர்,  பெட்டவாய்த்தலை மத்யார்சுவனேஸ்வரர் ஆகிய 8 கோயில் சுவாமிகளும் தைப்பூச திருநாளில் குளித்தலை வந்து காவிரி ஆற்றில் வரிசையாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்ற  வைபவம் பிரசித்தி பெற்றது. பின்னர் 8 சுவாமிகளும் காவிரியில் ஒருசேர தீர்த்தவாரி காண்பர்.

அப்போது 8 சுவாமிகளையும் ஒரே நேரத்தில் இங்கு பக்தர்கள் கண்குளிரக் கண்டு தரிசிக்கும் பாக்யம் தைப்பூச நாளில் மட்டும் கிடைக்கும். இதற்காக இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். விடிய விடிய இந்த தரிசனம் நடைபெறும். தைப்பூசத்திற்கு மறுநாள் காலை  சுவாமிகள் தங்கள் தலங்களுக்கு பிரியாவிடை பெறும் நிகழ்ச்சி நடைபெறும். 7 ஊர் சுவாமிகளையும் கடம்பவனேஸ்வரர் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைப்பார். 

மனதில் கட்டிய ஒரு சிவாலயம்


விசுவநாதபுரம் ஒரு சிறிய கிராமம். இங்கு காசிநாதன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான அவருக்கு, ஒரு சமயம் ஏதோ பிரச்னை வந்தது. அதனால் ஒரு ஜோதிடரிடம் தன் ஜாதகத்தைக் கொடுத்து பலன் கேட்க நினைத்தார். இதற்காக அருகிலுள்ள விசாலாட்சிபுரம் கிராமத்திற்கு ஒரு பவுர்ணமியன்று ஜோதிடரை தேடிச் சென்றார்அந்த ஜோதிடர் தெய்வபக்தி உள்ளவர், நல்லவர், ஒழுக்கமானவர், நேர்மையான முறையில் பலன் சொல்பவர், அவர் சொன்னது அப்படியே பலிக்கும்'' என்று மக்களிடம் பெயர் பெற்றிருந்தார். 

காசிநாதன் ஜோதிடரைச் சந்தித்தபோது மாலை மணி நான்கு. 

ஜோதிடர் விவசாயியின் ஜாதகத்தைக் கையில் வாங்கினார். ஜாதகத்தைப் பார்த்த உடனேயே அவருக்கு, "இந்த விவசாயிக்கு இன்று இரவு ஏழு மணிக்கு ஒரு கண்டம் இருக்கிறது. இன்றைய தினமே அவர் இறந்துவிடுவார்' என்று புரிந்தது. அது அவருக்கு வருத்தம் தந்தது. 

அதை விவசாயியிடம் நேரில் எப்படி சொல்வது? அது அநாகரீகம் அல்லவா!' என்று எண்ணினார் ஜோதிடர். எனவே, ஜாதகம் பார்ப்பதைத் தவிர்க்க, ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்ல முடிவு செய்தார். 

அவர் விவசாயியிடம் கனிவுடன், "ஐயா! நீங்கள் இன்று ஆர்வத்துடன் என்னிடம் பலன் கேட்பதற்கு வந்திருக்கிறீர்கள். ஆனால், எனக்கு இன்றைய தினம் ஓர் அவசர வேலை இருக்கிறது. இப்போது தான் அது என் நினைவுக்கு வந்தது. இப்போது உடனடியாக நான் அந்த வேலையைக் கவனித்தாக வேண்டும். எனவே இன்றைய தினம் உங்கள் ஜாதகம் என்னிடம் இருக்கட்டும். நீங்கள் நாளை காலை 11 மணிக்கு என்னை வந்து பாருங்கள். அப்போது பலன் சொல்கிறேன்,'' என்றார்.

விவசாயியும் ஒப்புக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.

ஜோதிடர் இருந்த கிராமத்திற்கும், விவசாயியின் கிராமத்திற்கும் இடையில் ஒரு சிறிய காடு இருந்தது. அதைக் கடந்து தான் விவசாயி ஊருக்கு சென்றாக வேண்டும். 

அவர் காட்டுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில், மழை தூறியது. சிறிது நேரத்தில் பெருமழை பெய்ய ஆரம்பித்தது. 

மழைக்கு ஒதுங்க அவர் இடம் தேடி ஓடினார். சற்று தூரத்தில், பாழடைந்த ஒரு சிவாலயம் இருப்பது தென்பட்டது. அங்கு சென்று ஒதுங்கினார். 

மண்டபத்தில் நின்ற அவர் சுற்றும் முற்றும் கோவிலைப் பார்த்தார். கோவில் மிகவும் பாழடைந்திருந்தது. ஆங்காங்கே புதர் மண்டிக் கிடந்தது. கருவறையாவது சரியாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை. சிவபக்தரான அவர், கோவில் இருந்த நிலையைப் பார்த்து மனம் வருந்தினார். 

"இந்தக் கோவில் இப்படி பாழடைந்து காணப்படுகிறதே! என்னிடம் போதிய பணவசதி இருந்தால், இந்தக் கோவிலை மிகவும் நன்றாகப் புதுப்பித்து கும்பாபிஷேகமும் செய்திருப்பேனே' என்று எண்ணினார்.

ஆனாலும், ஆசை விடவில்லை. பெரிய புராணத்தில் பூசலார் நாயனார் மனதிற்குள் கோவில் எழுப்பியது போன்று, தன் மனதால், அந்தக் கோவிலுக்குத் திருப்பணி செய்ய ஆரம்பித்தார். 

முதலில், மானசீகமாக அவர் கோவில் முழுவதும் அடர்த்தியாக வளர்ந்திருந்த புதர்களை எல்லாம் நீக்கினார்; சிவன் சன்னிதி, அம்பாள் சன்னிதி, பரிவார தேவதைகளின் சன்னிதி, அர்த்த மண்டபம், மகாமண்டபம், மதில்சுவர் போன்றவற்றை சீரமைத்தார். பிறகு, கருவறையில் சுவாமியையும், அம்பாளையும் பிரதிஷ்டை செய்வது போல் பாவனை செய்தார். மனதாலேயே யாகசாலை அமைத்து, ஹோமங்கள் செய்தார். 

அந்தணர்கள் கலசங்களுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கருவறைக்குள் வந்து குடமுழுக்கு செய்வதையும் மனதில் செய்து முடித்தார். அப்போது மக்கள் வெள்ளம் "சிவ, சிவா!'' என்று முழங்கியதை மானசீகமாகக் கேட்டார். 

இதை அவர் செய்து முடித்து தற்செயலாக, தான் நின்றுகொண்டிருந்த மண்டபத்தை நிமிர்ந்து பார்த்தார். அங்கு ஒரு கருநாகம் அவரைக் கொத்தும் நிலையில் இருந்தது! 

பாம்பை பார்த்தாரோ இல்லையோ, ""சிவ, சிவா!'' என்று கூவியபடியே மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

அவர் மண்டபத்தை விட்டு வெளியே வந்த அதே சமயம், மண்டபத்தின்மீது இடி விழுந்து மண்டபம் தரைமட்டமாயிற்று! அப்போது சரியாக இரவு மணி ஏழு.

அதன்பிறகு விவசாயி, மேற்கொண்டு தான் செல்ல வேண்டிய காட்டுப்பாதையைக் கடந்து தன் கிராமத்திற்குச் சென்றார். 

மறுநாள் அவர் ஜோதிடர் குறிப்பிட்டபடி, காலை 11 மணிக்கு விசாலாட்சிபுரம் சென்றார். அங்கு ஜோதிடரைச் சந்தித்தார். 

விவசாயியைப் பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவர், "நேற்று நாம் இவரது ஜாதகத்தைச் சரியாகப் பார்க்கவில்லையோ!' என்று நினைத்து, துல்லியமாக ஜாதகத்தை ஆராய்ந்தார். அப்போது அவருக்கு, "நேற்றிரவு விவசாயிக்கு ஒரு கண்டம் இருந்தது என்பது உண்மைதான். அவர் நேற்றிரவு ஏழு மணிக்கு மரணமடைவார் என்பதும் சரிதான்' என்று புரிந்தது. 

மேலும் ஜோதிடர், விவசாயி ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து பார்த்தார். அப்போது அவருக்கு, ""இந்த விவசாயிக்குக் கண்டம் இருந்தது உண்மை, அவர் நேற்றிரவு மரணம் அடைந்திருக்க வேண்டும் என்பதும் உண்மை. ஆனால் இந்த ஆபத்திலிருந்து விவசாயி தப்ப வேண்டுமானால் அவருக்கு ஒரு சிவன் கோவில் கட்டிய புண்ணியம் இருக்க வேண்டும்'' என்பது தெரிய வந்தது. 

ஜோதிடர் இப்போது விவசாயிடம், அவரது ஜாதகம் கூறுவதை உள்ளது உள்ளபடியே கூறினார். நீங்கள் நேற்று எப்படி தப்பினீர்கள்?'' என்று கேட்டார்.

அவ்விதம் ஜோதிடர் கூறியதைக் கேட்ட விவசாயி, "நான் நேற்று மழைக்குப் பாழடைந்த ஒரு சிவன் கோவில் மண்டபத்தில் ஒதுங்கினேன். அப்போது மானசீகமாக அந்த சிவன் கோயிலுக்குத் திருப்பணி செய்து, குடமுழுக்கும் செய்தேன்'' என்பது போன்ற விவரங்களைச் சொல்லி முடித்தார்.

விவசாயி தனக்கு நேர்ந்த கண்டத்திலிருந்து தப்புவற்கு, வெளிப்படையாக ஒரு சிவன் கோவில் கட்டவில்லை தான். ஆனால், அவர் பக்தி சிரத்தையுடன் மானசீகமாக ஒரு சிவாலயம் அமைத்து, கும்பாபிஷேகம் செய்தார். அதை ஏற்ற சிவபெருமான் - விவசாயி உண்மையாகவே ஒரு கோவில் எழுப்பியதாக ஏற்று அங்கீகரித்தார். 

இந்தக் கதையின் கருத்து: மானசீகமாக பக்தியுடன் பக்தர்கள் செய்யும் பூஜை போன்றவற்றை, கருணை வள்ளலான இறைவன் ஏற்று அருள் புரிகிறார்.

குடந்தை அமுதம்


1. அமிர்த கலசம் இருந்த கும்பத்துக்கு வாய் மட்டுமல்லாமல், கமண்டலம்போல மூக்கும் இருந்தது. இந்த மூக்கு வழியே சிவபெருமான் தொடுத்த பாணத்தால் அமுதம் வெளிவந்தது. கும்பத்தின் மூக்கிற்கு கோணம் என்று பெயருண்டு. அந்த கோணம் விழுந்த தலமே கும்பகோணம் என்றாயிற்று. 

2. தேவாரத்தில் இத்தலம் குடமூக்கு என்றே அழைக்கப்பட்டது. விழுந்த இரு அமுதத் துளிகள் தனித் தனி குளமாக மாறின. ஒன்று மகாமகக் குளம்; மற்றொன்று 
பொற்றாமரைக் குளம்.

3. பூரண கும்பம் என்பது அதன் சிகரமாக விளங்கும் தேங்காய், பூணூல், மாவிலை, தீர்த்தம் என்று எல்லாமும் அடங்கியது. இந்த கும்பத்தினின்று நழுவிய தேங்காய் விழுந்த இடத்துக்கு அருகிலே உள்ளதுதான் 
இன்றைய மகாமகக் குளம். 

4.தேங்காய் லிங்க உருபெற்று சிவமானது. இன்றும் குளத்தருகே உள்ள இந்த கோயில் மூலவருக்கு நாரிகேளேஸ்வரர் என்ற பெயருண்டு. நாரிகேளம் என்றால் தேங்காய் என்று பொருள். 

5. கும்பத்தைச் சுற்றியிருந்த பூணூல் குளத்தின் அருகே விழுந்தது. அங்கு ஸூத்ரநாதர் எனும் திருநாமத்தோடு ஈசன் எழுந்தருளியுள்ளார். ஸூத்ரம் என்றால் பூணூல் என்று பொருள். 

6. கோயிலின் நாயகன் கும்பத்தினுள் புகுந்து அருளாட்சி செய்வதால், கும்பேஸ்வரரானார். பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், அமுத கும்பேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.

7. கிழக்குப் பகுதியில் கிராத மூர்த்தியாகவும் ஈசன் அருள்பாலிக்கிறார். இவர் வேடன் ரூபத்தில் தோன்றியதால் இந்தப் பெயர். வில், அம்பு ஏந்திய இந்த தோரணை வித்தியாசமானது.

8. உட்பிராகாரத்தில், நடுநாயகமாக மூலவர் கும்பேஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். இந்த லிங்க உருவே குடம் போன்று சாயலை கொண்டிருக்கிறது. 

9. திருச்செங்கோடில் ஈசன் தம் பாதி சரீரத்தை கொடுத்ததுபோல, இங்கே இறைவர் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அதனால் மந்திரப் பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தாள் எனவும் அன்னை அழைக்கப்படுகிறாள். 

10. அம்பாளின் திருமுடி முதல் திருப்பாத நகக்கணுவரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன. ஆகவே அனைத்து சக்திகளையும் தன்னுள் கொண்ட தலையாய சக்தி பீடமாக அம்பாளின் சந்நதி விளங்குகிறது. 

11. பக்தர்களுக்கு வாழ்வில் மங்களத்தை மேன்மேலும் வளர்த்துக் காப்பதால், ஞானசம்பந்தப் பெருமான், அம்பாளை வளர் மங்கை என்று தேவாரப் பதிகத்தில் குறிக்கிறார்.

12. இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரால் இயற்றப்பட்ட இத்தல நாயகன், நாயகி பற்றிய கீர்த்தனையை இறைவன் முன்பு எழுதி வைத்துள்ளார்கள். 

13. வேறெங்கும் காண இயலாத கல் நாதஸ்வரம் இக்கோயிலில் உள்ளது. குறிப்பிட்ட விழாக்காலங்களில் இதற்கென்றே தனிப் பயிற்சி பெற்ற இசைக் கலைஞர் இதனை வாசிக்கிறார்.

14. கும்பமுனி சித்தர் மங்களாம்பிகையையும், கும்பேசரையும் தியானித்து முக்தி பெற்றது இங்குதான். வெளிப் பிராகாரத்தில் இவருக்குத் தனி சந்நதி உள்ளது. கூடவே ஆதி விநாயகரும் அருள்பாலிக்கிறார். 

15. இறைவனும் இறைவியும் இத்தலத்திற்கு வரப்போவதை முன்கூட்டியே அறிந்த விநாயகர் அவர்களுக்கு முன்பாகத் தான் வந்து கோயில் கொண்டார். அதனால் இவர் ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

16. மொத்தம் 19 பதினான்கு தீர்த்தங்களைக் கொண்ட கோயில் இது.

17. உட்பிராகாரத்தின் மேற்பகுதியில் கந்தன், ஆறுமுகங்கள், ஆறு திருக்கரங்களுடன் அபூர்வமாகக் காட்சியளிக்கிறார்.

18. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய 9 நதிகளும், பக்தர்கள் தம்மில் கழுவிய பாபங்களைப் போக்கிக் கொள்ள இங்குள்ள மகாமகக் குளத்தில் நீராடியதாக ஐதீகம். அவர்கள் கோயிலினுள் சிலை வடிவங்களில் குளத்தை நோக்கியபடி அமைந்திருக்
கிறார்கள். 

19. மகாமகக் குளத்தைச் சுற்றிலும் 16 மண்டபங்கள் உள்ளன. இவை சோடசலிங்க மண்டபங்கள் என்றழைக்கப்படுகின்றன.

20. தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரிடம் மந்திரியாகப் பணியாற்றிய கோவிந்த தீட்சிதரின் (கி.பி.1542) அரிய முயற்சியால் இந்த மண்டபங்களும் தஞ்சை, கும்பகோணத்தின் வேறு சில இறைத் தலங்களும் உருவாயின.

வாழ்வு தந்த வீணை


நீண்ட காலமாக குழந்தை இல்லாத மன்னன் பிரதாபனுக்கு ஒரு மகன் பிறந்தான். வித்யாபதி என்று பெயரிட்டு வளர்த்தான். புத்திசாலியாக வளர்ந்த அவன் சரஸ்வதி அருளால் கல்வியிலும், இசையிலும் சிறந்து விளங்கினான். மகனுக்கு பட்டம் சூட்ட முடிவெடுத்தான் மன்னன். அதற்காக நல்லநாள் குறிக்க அரண்மனை ஜோசியரை அழைத்தான். ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர், ""மன்னா! மன்னிக்க வேண்டும். தங்கள் மகன் வித்யாபதிக்கு பட்டம் சூட்டி பயனில்லை. ஏனெனில் அவர் அற்பாயுளே வாழ்வார்,'' என தெரிவித்தார். 

வீரபிரதாபன் அதிர்ச்சியில் ஆழ்ந்தான். ஆனால்,வித்யாபதி சிறிதும் கலங்கவில்லை.

"தந்தையே.... இதற்கு போய் ஏன் கவலைப்படுகிறீர்கள். மண்ணில் பிறந்த அனைவரும் ஒருநாள் மறையத் தானே போகிறோம். எனக்கு முடிவுநாள் முந்தி வருகிறது. இதை பெரிதுபடுத்தாதீர்கள்,'' என்றான் சாதாரணமாக.
""மகனே! நீ சொல்வது உண்மை தான். இருந்தாலும், பெற்றவன் என்ற முறையில் பிள்ளை நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நினைப்பது இயல்பு தானே. என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது,'' என்றான். 

"தந்தையே! உங்கள் கண்ணெதிரில் இருப்பதால் தானே கவலைப்படுகிறீர்கள். நான் இப்போதே எங்காவது போய் விடுகிறேன். அப்படியானால், நான் ஒருவேளை உயிரோடு எங்காவது திரிந்து கொண்டிருப்பேனோ என்ற சந்தேகத்தில், நான் என்றாவது வருவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பீர்கள். நான் கிளம்புகிறேன்,'' என்றான்.

தன் கண் முன்னால் மகன் சாவதை விட, இந்த யோசனை நன்றாகத் தெரிந்தது மன்னனுக்கு. அரை மனதுடன் சம்மதித்தான்.

இளவரசன் சில பணியாளர்களுடனும், செலவுக்கு பெரும் பணத்துடனும் நாட்டை விட்டுப் புறப்பட்டான். மலைநாட்டை சென்றடைந்தான். அங்குள்ள குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியராக கல்வி, கலைகளைப் போதித்து வந்தான். ஏழைகளுக்கு தானம் அளித்து மகிழ்ந்தான். 

வித்யாபதியின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று சரஸ்வதி பூஜை என்பதால், குழந்தைகளுடன் சேர்ந்து சரஸ்வதியை வழிபட்டான். வீணை இசைத்து மனம் உருகி தேவியைப் பாடிக் கொண்டிருந்தான். அப்போது, எமதூதர்கள் வித்யாபதியின் உயிரைப் பறிக்க பாசக் கயிற்றுடன் வந்தனர். வந்தவர்கள் வித்யாபதியின் வீணை இசை கேட்டு மெய் மறந்து நின்றனர். 

இதனால், அவனது உயிரைப் பறிக்கும் நேரம் கடந்து விட்டது. அவர்கள் செய்வதறியாது திரும்பி விட்டனர்.

அப்போது அங்கு தோன்றிய சரஸ்வதி, "வித்யாபதி! தானத்தில் சிறந்தது கல்வி தானமே. கொடுத்தாலும் குறையாத செல்வமும் கல்வியே. இந்த குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்த உனக்கு, ஜாதகத்தில் ஆயுளுக்கு நேர்ந்த தோஷம் அகன்று விட்டது. அது மட்டுமில்லாமல், உன் வீணை இசை எமதூதர்களையும் கட்டிப் போட்டு விட்டது. இனி நீண்ட காலம் வாழும் பாக்கியம் பெறுவாய்,'' என்று வாழ்த்தினாள்.

சரஸ்வதியின் அருள் பெற்ற வித்யாபதி நாடு திரும்பினான். அவனைக் கண்ட தந்தை மகிழ்ந்தான். அவனுக்கு பட்டம் சூட்டப்பட்டது.

திருப்பம் தரும் திருமாகறல்


பிரம்மா அகிலத்தின் நான்கு திசைகளையும் ஒரே நேரத்தில் கம்பீரமாக பார்த்தபடி நின்றிருந்தான். தன் காலடியில் இத்தனை பிரபஞ்சமா எனகால் மடக்கினான். கோணலாய்ப் பார்த்தான். பார்வையில் கர்வம் எனும் கரும்புள்ளி திட்டாய் தெரிந்தது. அந்தப் புள்ளி வட்டமாய் வளர்ந்தது. நான்கு முகங்களும் மெல்ல இருண்டன. கர்வம் சிரசின் மீது சிம்மாசனம் போட்டு அமர்ந்தது. தன்னைத்தானே பார்த்துக் கொண்டான். மெல்ல மெல்ல தன் வேலையைக் குறைத்துக் கொண்டான். தான் எப்படி, எப்படி என்று பலபேரிடம் கேட்டு மகிழ்ந்தான். 

சுத்தமாய் சிருஷ்டி என்கிற விஷயத்தை மறந்தே போனான். கயிலையும், வைகுண்டமும் விழித்துக் கொண்டன. சகல தேவர்களும் திருமாலுடன் சென்று ஈசனிடம் முறையிட்டனர். ஈசன் கண்கள் மூடினார். பிரம்மனைத் தேடினார். பிரம்மன் கர்வக் கொப்பளிப்பில் முற்றிலும் தன் சக்தியிழந்து திரிந்து கொண்டிருந்தான். ஈசனைப் பார்த்ததும் நினைவு வந்தவனாய் வணங்கினான். ஈசன் பிரம்மாவையே உற்றுப்பார்க்க, முதன்முதலாய் தான் சக்தியிழந்த விஷயம் தெரிந்தவனாய் துணுக்குற்றான். ஈசனின் காலடி பற்றினான். 

கண நேரத்தில் தன் தவறு தெரிந்து தெளிவானான். பிரம்மா தன் தவறை உணர்ந்து ஈசனிடம் மன்றாடினான். ஈசனும், ‘‘துண்டீர மண்டலத்தில் உள்ள வேணுபுரம் எனும் தலத்தில் தவம் செய்துவா. சரியான சமயத்தில் உன் பழைய நிலையை திரும்பப் பெறுவாய்” என ஆதாரத்துடன் கூறினார். அவ்வாறே பிரம்மாவும் சிவத்தியானத்தில் ஆழ்ந்தான். அகங்காரம் அறுத்தான். அகம் மலர்ந்து அளவிலா ஆற்றல் பெற்றான். 

ஈசனின் கருணையை கண்டு கண்ணீர் மல்கினான், பிரம்மன். அங்கேயே அழகான அதிசய பலா மரம் ஒன்றை உருவாக்கினான். ஈசனின் மூன்று கண்கள் போல் நாள்தோறும் மூன்று கனிகளை கொடுத்தது அந்த மரம். மூன்றும் தங்க நிறத்தில் பிரகாசித்தன. ஒரு யுகத்திற்காக காத்திருந்தது. புராணகாலம் முடிந்து கலியுகம் தன் மையத்தை எட்டியிருந்தது. எட்டு திக்கிலும்  சோழர்களின் பொற் காலம் பிரகாசித்தது. ராஜேந்திர சோழன் முன்னிலும் அதிகமாய்  கோயில்களை நிர்மாணிக்க ஆரம்பித்தார். 

இந்த அதிசய பலா மரம் பற்றி அறிந்திருந்தார். ‘மூன்று கனிகளையும் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘ஒன்று கயிலைக்கும், மற்றொன்று தில்லைக்கும், மூன்றாவது...’ என்று தயங்க, ‘தினமும் எனக்கு வந்தாக வேண்டும்’ என கட்டளையிட்டார். வீரர்கள் துரிதமாயினர். எங்கிருக்கிறது அந்த அதிசய பலா மரம் என்று ஆவலாய் விசாரித்தனர். குதிரைகளோடு சிறுபடை ஒன்று கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து சீறிக் கிளம்பியது. அந்த அழகான கிராமத்திற்கு திருமாகறல் என்று பெயர். மலையன், மாகறகன் எனும் இரு அசுரர்கள் தவம் செய்த இடமாதலால் ‘மாகறல்’ என அழைக்கப்பட்டது. 

அவ்வூர் எல்லையில்தான் இந்த அதிசய பலா மரம் தனியே வளர்ந்திருந்தது. இது அந்த ஊரின் வளத்திற்கு காரணமாய் இருந்தது. ஊர் மக்கள் அந்த பலா மரத்தை பொன்போல பாதுகாத்தார்கள். அது கொடுக்கும் கனிகளை ஈசனுக்கு அர்ப்பணித்தார்கள். கயிலைக்கும், தில்லைக்கும் குழுக்குழுவாய் பிரிந்து பலாப் பழத்தை தலையில் சுமந்து சென்றனர். குறிப்பிட்ட இடம்வரை சென்று வைத்தனர். அதிசயமாய் அந்தப் பழங்கள் சேருவது பார்த்து அதிசயித்தனர். அவர்கள் தலை எப்பொழுதும் முடி நீக்கப்பட்டு முண்டிதம் செய்யப்பட்டிருந்தது. சிகைபட்டால் தோஷம் எனக் கருதினார்கள்.   

காலணி அணியாது வெறும் காலோடு நடந்தார்கள். அப்படி நடக்க அடுத்த தலைமுறையை பழக்கினார்கள். கைப்பிடித்து நடத்திச் சென்றார்கள். அதில் ஓர் இளைஞன் பழக மறுத்தான். ஈசனை தன் இடம் கொண்டுவர தீர்மானித்தான். அதற்காக தன்னையே தந்துவிடவும் துணிந்தான். கண்கள் மூடி மனம் குவித்தான். ஈசனின் முழுச் சக்தியும் அந்த கிராமத்தை கவ்வியிருப்பதை உணர்ந்தான். தலைதிருப்பி வானம் பார்த்தான். அந்தப் பலா மரம் உச்சி வெயிலில் மின்னி நாற்புறமும் தெறித்துக் கொண்டிருந்தது. வெகுதொலைவே குதிரைகளின் குளம்படிச் சத்தம் தொடர்ச்சியாய் அதிர்ந்தது. மக்கள் ஒவ்வொருவராய் வீடுவிட்டு வெளியே வந்தார்கள். தம் தலைவனோடு பெரிய கூட்டமாய் குழுமினார்கள். அந்த சோழ வீரர்கள் கங்கையின் வேகத்தோடு ஊரின் எல்லையைத் தொட்டார்கள். 

சோழ வீரர்கள் குதிரைகளிலிருந்து குதித்தனர். அவ்வூர் மக்களை இருகரம் கொண்டு வணங்கினர். ‘‘மாமன்னர் ராஜேந்திர சோழர் அதிசயப் பலாப்பழம் தினமும் தனக்கு பிரசாதமாய் வேண்டுமென்கிறார். நீங்கள் உங்களுக்குள் முடிவு செய்து அரசருக்கு சேர்ப்பிக்க வேண்டும். அவர் இருக்கும் இடம்பற்றி அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும். இது மன்னரின் நேரடி ஆணை’’ என்று சொன்னார்கள். சொன்ன வேகத்தோடு புழுதி பறக்க திரும்பினார்கள். 

அந்த மாகறல் மக்களின் முகம் தூசிபடிந்து சிவந்திருந்தது. எவ்வளவு தூரம் தலையில் சுமப்பது என்று திகைத்தது. இது மன்னரின் ஆணை என்று சொன்ன வீரனின் முகம் நினைத்து மிரண்டது. வேறு வழியில்லாமல் தலையில் தாங்கிய பலாப் பழத்துடன் தினமும் ஒரு குழு என்று சுழற்சி முறையில் ராஜேந்திரனை நோக்கி பயணப்பட்டது. பிரசாதம் உண்ட ராஜேந்திர சோழர் மெல்ல மலர்ந்தார். ஆனால், மாகறல் மக்கள் வாடிப்போனார்கள். வயதானவர்கள் வெயில் தாங்காது சுருண்டார்கள். ஒரு வருடம் இப்படியே உருண்டது.

அந்த வீர இளைஞன் குடிசையிலிருந்து வெளிப்பட்டான். ஈசன் தன் தீக்கண்ணை திறந்தார். அந்த இளைஞன் தீப்பந்தத் தோடு பலா மரம் நோக்கி நடந்தான். மரத்தின் ஒவ்வொரு பகுதியாய் பற்ற வைத்தான். தீ பெருஞ்சுடராய் எரிந்தது. மரம் கருங்கட்டையாய் கருகி சரிந்தது. ஊரிலுள்ளவர்கள் பயத்தில் உறைந்தார்கள். அந்த இளைஞனை பிடித்து உலுக்கினார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று நாட்கள் அப்படியே யோசித்தபடி கிடந்தார்கள். ராஜேந்திரர் பலாப் பழம் எங்கே என்று கேட்க, அந்த மரத்தை தீயிட்டு கொளுத்தி விட்டதாய் சொல்ல, மாமன்னன் முகம் சிவந்தான். 

‘மாகறலுக்கு கிளம்புங்கள்’ என்று தேரில் ஏறி அமர்ந்தான். மாமன்னர் வருவதை அறிந்த மக்கள் கூட்டம் அஞ்சி நடுங்கியது. ஆனால், அந்த இளைஞன் கிஞ்சித்தும் பயமில்லாது இருந்தான். ராஜேந்திர சோழர் மிகப்பெரிய படையோடு ஊருக்குள் நுழைந்தார். ஊரார் திரண்டு நின்று வரவேற்றனர். ஆனால், உள்ளுக்குள் பயம் கரும்புகையாய் சுழன்று கொண்டிருந்தது. ராஜேந்திரர் நேரடியாய் விஷயம் தொட்டார். ‘‘ஏன் எரித்தீர்கள், யார் காரணம்? எரித்தவன் நம் தேசத்தவனா...’’ என்றெல்லாம் தொடர்ச்சியாய் வினாக்கள் தொடுத்தார். அந்த இளைஞன் மெல்ல வெளியே வந்தான். ‘‘நான்தான் எரித்தேன். 

இவர்கள் படும் கஷ்டம் பார்த்து இந்த வழக்கத்தை நிறுத்தவே எரித்தேன். நீங்கள் என்னை என்ன செய்தாலும் ஏற்கிறேன்’’ என்றான். அரசன் முன்பு மண்டியிட்டான். அரசன் அவனையே உற்றுப் பார்த்தார். அருகிலிருக்கும் வீரனை அழைத்தார். ‘‘இவன் கண்களைக் கட்டி காட்டைத்தாண்டி விட்டுவிட்டு வாருங்கள். அவனைக் கொல்லாதீர்கள். இளைஞனைக் கொன்ற பாவம் நமக்கு வேண்டாம். வாருங்கள், நானும் உங்களுடனேயே வருகிறேன்’’ மன்னர் படை புயலாய் புறப்பட்டது. 

விடியும் வரை தொடர்ந்து நடந்தது. விடிந்ததும் அவன் கண்களை அவிழ்த்துவிட்டது. அவனுக்கு அவ்வூரில் விடிந்ததால் இன்றும் அந்த ஊர் ‘விடிமாகறல்’ என்று அழைக்கப்படுகிறது. காட்டுப் பாதையாக இருப்பதால் ஏதேனும் வேட்டைக்கு கிடைக்குமோ என வீரர்கள் தேடினர். ராஜேந்திரரும் உன்னிப்பாய் கவனித்த வண்ணம் பார்த்துக்கொண்டே வந்தார். தூரத்தே நீள் ஒளிவட்டம் பார்த்தார். சட்டென்று நகர்ந்தது. உற்றுப் பார்த்தபோது அது உடும்பு என்று புரிந்தது. 

மன்னன், தங்க நிறத்தில் உடும்பா என்று வியப்பெய்தினான். எப்படியாவது அதைப் பிடியுங்கள் என்று கட்டளையிட்டான். வீரர்கள் ஓடஓட அந்த உடும்பும் துள்ளிக்குதித்து பாய்ந்து சென்றது. வீரர்கள் சோர்வுற்றார்கள். பலர் வலுவிழந்து வீழ்ந்தனர். உடும்பு அந்த இருளில் மிகப் பிரகாசமாய் ஒளிர்ந்தது. ராஜேந்திரன் பிரமித்து நின்றான். ராஜேந்திரனுக்கும் உடும்புக்குமிடையே உக்கிரமான ஓட்டம் நடந்தது. ராஜேந்திரன் அம்பு மழை பொழிய, அம்பைவிட உடும்பு இன்னும் கூர்மையாய் பாய்ந்து சென்றது. அதிவேகமாய் மாகறல் எல்லையை அடைந்தது. 

ராஜேந்திரன் உடும்பை நெருங்க, உடும்பு ஒரு புற்றுக்குள் புக, உடும்பின் தலைப்பகுதி புற்றுக்குள் நகர்ந்து வால் பகுதியை உள்ளே இழுப்பதற்குள் பட்டென்று சீறி வந்த ஓர் அம்பு வாலைத் தைத்தது. வால் பகுதி புற்றின் வெளியே நின்றது. அதனின்று வெடிச்சிதறலாய் மாபெரும் ஓர் ஒளிப்பிழம்பு வானுக்கும் பூமிக்குமாய் எழுந்தது. ராஜேந்திரன் நிலைகுலைந்து ‘என் சிவனே... என் சிவனே’ என வாய்விட்டு அலறினான். 

அந்த சக்தியின் வலிமையைத் தாங்காது மயங்கி விழுந்தான். எழுந்து பார்த்தபோதுதான் அந்த ஊர் சுயம்பு புற்றின் வாயிலில், தான் இருப்பது தெரியவந்தது. புற்றின் மேல் உடும்பின் வால் பகுதி கூர்தீட்டிய தங்கவாள் போல மின்னியது. ராஜேந்திரர் தளர்வாய் நடந்தார். பொய்யாமொழிப் பிள்ளையார் எனும் கோயிலை அடைந்தார். கோயில் வாயிலில் ஓர் சாது அவர்களை வரவேற்று இரவு நடந்த விஷயத்தை தானாகக் கூற, மன்னன் இன்னும் ஆச்சரியமானான். அந்த சாது அவ்விடத்தில் ஓர் கோயிலொன்றை நிர்மாணிக்கச் சொன்னார். 

மெல்ல கோயிலுக்குள் சென்று மறைந்தார். ராஜேந்திரன் அயர்ந்தான். மன்னர் குழாம் ‘சிவோஹம்’ என பெருங்குரலில் பிளிறியது. ராஜேந்திரர் அன்றே அக்கோயிலுக்கான வேலைகளைத் தொடங்கினார். வெகுவிரைவாக கட்டியும் முடித்தார். இன்றும் அக்கோயில் மிகப் பொலிவோடு விளங்குகிறது. ஐந்து நிலை ராஜகோபுரத்தோடு கஜபிருஷ்ட விமானம் எனும் அமைப்போடு கட்டப்பட்டுள்ளது. பிராகாரத்தில் தெற்கு பக்கமாக தட்சிணாமூர்த்தி அருள்பொங்கும் முகத்தோடு காட்சி தருகிறார். 

துர்க்கையும், பிரம்மாவும் அடுத்தடுத்து கோஷ்ட மூர்த்தியாய் மிளிர்கிறார்கள். ஆறுமுகப் பெருமான் இந்திரனின் வெள்ளை யானையில் அமர்ந்து அன்பர்களுக்கெல்லாம் அருள்பாலிக்கும் சிலை இத்தலத்து அற்புதம்.மூலவர் மாகறலீசர். ஆவுடையாரின் மீது உடும்பின் வால் பகுதியே லிங்கமாய் உள்ளது. ஈசன் அரசருக்கெல்லாம் அரசராக கம்பீரமாய் வீற்றிருக்கிறார். ஒரு மாபெரும் சம்பவத்தின் எதிரொலி இன்னும் அங்கு மின் துடிப்பாய், அதிர்வலையாய் அந்த சந்நதியில் பரவிக் கிடக்கிறது. அருகே வருவோரை ஆட்கொள்கிறது. 

அந்த உடும்பைப் பார்க்கும் போதெல்லாம் நம் உடல் சிலிர்க்கிறது. ஈசன் எப்படி வேண்டுமானாலும் வருவான் என நினைக்க வைக்கிறது. உடும்பின் மேல் இன்னும் அந்த தழும்பு மாறாது இருக்கிறது. ஆயுதத்தால் ஏற்பட்ட தழும்பால் பாரத்தழும்பர் எனும் பெயர் பெற்றார். உடும்பு வடிவில் வந்ததால் உடும்பீசர் ஆனார். உடும்பு புற்றில் சென்று மறைந்ததால் புற்றிடங்கொண்டநாதர் என புகழ் பெற்றார். பாரத்தழும்பரான ஈசன் பக்தர்களின் தழும்பை மறையச் செய்கிறார். 

எனவே, இத்தலத்து இறைவன் எலும்பு சம்பந்தமான அத்தனை பாதிப்புகளையும் தன் அருட்பார்வையால் போக்குகிறார். மருத்துவம் முடியாது என விட்டுவிட்டதை மாகறலீசர் கைகொடுத்து தூக்கி நிறுத்தும் அற்புதம் இங்கு சகஜமானது. ஈசனுக்கு அருகேயே அம்பாள் திரிபுவனநாயகி, அருட்பார்வையோடு திகழ்கிறாள். கேட்கும் வரம் தருகிறாள். 

அம்மனுக்கு அருகே நவகிரக சந்நதியும், பைரவர் திருவுருவமும் காணப்படுகின்றன. இத்தலத்து விருட்சம் எலுமிச்சை மரமாகும். இங்குள்ள தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். ஞானசம்பந்தப் பெருமான் இக்கோயிலைப்பற்றி பல பதிகங்கள் பாடியுள்ளார். இத்தலம் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ளது. திருமாகறல் செல்லுங்கள். திருப்பம் ஏற்படும் பாருங்கள்.

ஒரு துளியில் ஒற்றுமை


போஜராஜனின் அவையில் காளிதாசர், பவபூதி, தண்டி என்னும் மூன்று புலவர்கள் இருந்தனர். இதில் யார் சிறந்தவர் என்ற போட்டி எழுந்தது. காளியிடம் வணங்கி, இதற்கான பதில் அளிக்கும்படி போஜராஜன் முறையிட்டான். 

உடனே காளி அங்கு தோன்றினாள்.

"போஜராஜனே! தண்டி நல்ல கவிஞன்; பவபூதி நல்ல அறிஞன்,'' என்றாள். உடனே அங்கு நின்ற காளிதாசருக்கு கோபம் வந்தது. அவர், "அப்படியானால்... நான் யாரடி?'' என்று காளியைப் பார்த்து கேட்டார். 

புன்னகைத்த காளி, "காளிதாசா! நீயே நான்; நானே நீ! என்னைப் போல் பெருமையுடையவன் அல்லவா நீ!'' என்றாள். 

இதை கேட்ட காளிதாசர் தலைக்கனத்துடன் நடக்கத் தொடங்கினார். அதைப் போக்க விரும்பிய காளி, ஒருநாள் பவபூதிக்கும், காளிதாசருக்கும் இடையே சண்டை வரும்படி செய்தாள். 

மீண்டும் போஜனின் தலைமையில், காளி சன்னிதியில் ஒன்று கூடினர். காளிதாசரும், பவபூதியும் பனை ஓலையில் கவிதை எழுதி, தராசுத் தட்டில் வைத்தனர். பவபூதியின் தட்டை விட காளிதாசரின் தட்டு வேகமாக கீழிறங்கியது. இதைக் கண்ட காளிதாசர் தனக்கே புலமை அதிகம் என மகிழ்ந்தார். 

உடனே, காளி தான் சூடியிருந்த பூவைச் சரி செய்வது போல கையால் அழுத்தினாள். பூவில் இருந்த தேன் துளி பவபூதியின் ஓலை மீது தெறித்தது. இதன்பின், அந்த தட்டு கீழிறங்க ஆரம்பித்தது. இதைக் கண்ட பவபூதி மகிழ்ச்சியில் குதித்தார். காளிதாசருக்கு இப்போது தான், தன் கர்வம் பற்றி உணர முடிந்தது.

"தாயே! நீ சூடிய மலரிலுள்ள தேன் மூலம் பவபூதியின் கவிதைக்கு கனம் கொடுத்தாய். இதனால் என் தலைக்கனம் நீங்கியது,'' என்னும் பொருள்பட கவிதை பாடினார். இதன்பின் காளிதாசரும், பவபூதியும் நண்பர்கள் ஆயினர்.

எமபயம் நீக்கி அபயம் அளிக்கும் ஈசன்


திருவைகாவூர்

திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி போன்ற மகாசிவராத்திரி தலங்களின் வரிசையில் முக்கியத்துவம் பெற்றது திருவைகாவூர். காலம் காலமாக வேடனொருவன் சிவராத்திரியன்று ஈசனை பூஜித்த சம்பவம் நிகழ்ந்த தலமே இதுதான்! வேடன் ஒருவன் மானை பார்த்தான். வேடன் நோக்குவதை உணர்ந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அடர்ந்த பிரதேசமான வில்வாரண்யத்திற்குள், அங்கிருந்த முனிவரின் குடிலுக்குள் புகுந்தது. வேடன் விடாது துரத்தி, உள்ளே நுழைந்தான். தவநிதி என்ற அந்த முனிவர் ‘‘மானைக் கொல்லாதே. வேறெங்கேனும் சென்று விடு’’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், வேடனோ, ‘‘இதோ பாருங்கள். என் வேலை வேட்டையாடுவது. உங்கள் பேச்சையெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளுங்கள். ஒழுங்காக மானை விடுவியுங்கள். இல்லையெனில் உங்களைத் தாக்கிவிட்டு மானை பிடித்துச் செல்வேன்’’ என்றான்.

முனிவர் மெல்ல சிரித்தபடி, ‘‘உன்னைவிட பலமான விஷயத்தைக் கண்டால் நீ பயப்படுவாய் அல்லவா? நான் புலியாக மாறினால் நீ என்ன செய்வாய்? இதோ நானே புலி வடிவில் உன்னை கொல்கிறேன் பார்’’ என்று சொல்லி, புலியாக மாறினார். வேடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பயந்துபோய் அந்தப் புலியிடமிருந்து தப்பிக்க, அருகேயிருந்த வில்வமரத்தின் மீது ஏறினான். கீழே, சிவமே புலியாக, இவன் எப்படியானாலும் வந்துதானே ஆகவேண்டும் எனக் காத்திருந்தது. அன்று மகாசிவராத்திரி இரவு. உறங்காது உலகமே விழித்திருந்தது. பசியும், பயமும் வேடனை பதட்டமடைய வைத்தன. என்ன செய்வது என்று தெரியாமல், எதை பறிக்கிறோம் என்று கூடத் தெரியாமல் வில்வத் தளங்களை உருவினான். 

புலியின் மீது போட்டான். புலிச் சிவம் பரவசமாக ஏற்றுக் கொண்டது. சிவராத்திரி இரவு முழுவதும் தூக்கம் வராதிருக்க மரத்தின் எல்லா இலைகளையும் பறித்துக் கீழே போட்டபடி இருந்தான். ஈசனுக்குள் கருணை பீறிட்டது. சட்டென்று மரத்தினடியில் லிங்க உருவில் தோன்றினார். வேடனை ஆட்கொண்டு மோட்சமளித்தார். பிரம்மனும், விஷ்ணுவும் அங்கே தோன்றினார்கள். அன்று அதிகாலையில் வேடனின் ஆயுள் முடிவதாக இருந்தது. எமதர்மராஜன் அவன் உயிரை வேட்டையாட அருகே வந்தான். சிவபெருமானோ தட்சிணாமூர்த்தியின் வடிவில் கையில் கோலேந்தி, எமனை விரட்டினார். சற்று தொலைவில் இருந்த நந்திதேவரை ஈசன் முறைக்க நந்திதேவர் மூச்சுக்காற்றாலேயே எமனைத் தள்ளி நிறுத்தினார். எமன் பயந்தான். 

அங்கேயே சிறிது காலமிருந்து, அருகேயே தீர்த்தம் உருவாக்கி நீராடி வேண்டினான். ஈசனும் எமனை விடுவித்தார். இந்த புராணக் கதையை பல்வேறு விதங்களாக சொன்னாலும் இத்தலத்தில்தான் இதைப்பற்றி முழுமையாக விஷயத்தை அறிய முடிகிறது. ஈசன் ஆட்கொள்ள வேண்டுமென்று நினைத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. ஈசன் எமனைக் கட்டுப்படுத்தியதால், இத்தலத்தில் எமபயம் நீங்கும். மகாசிவராத்திரியின் முழு மகத்துவத்தையும் விளக்கும் தலமும் இதுதான். திருவைகாவூர், பச்சை வயல் பூசிய அழகிய கிராமம். கோயிலுக்கு எதிரேயே எம தீர்த்தம். தலத்தின் தொன்மையை கோயிலின் ராஜகோபுரம் உணர்த்துகிறது. உள்ளே உள்கோபுரமொன்றும் இருக்கிறது. நீண்ட நெடிய வழியாக இருக்கிறது. 

ஈசனுக்கு முதுகு காட்டி, வாயிலை நோக்கும் நந்திதேவர். கோயிலுக்குள் ஆங்காங்கு வேடன் மோட்சம் பெற்ற கதையை சுதைச் சிற்பமாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். இங்கே வேதங்களே வில்வ விருட்சங்களாக நின்று தவம் புரிவதாக புராணம் கூறுகிறது. மிகப் பழமையான ஆலயமாதலால் உட்கோபுர வாயிலில் நிறைய சிவலிங்கங்களை தரிசிக்கலாம். மகாமண்டபத்தின் அருகேயே தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில். தன் கையில் கோலோடு, மான், மழுவோடு ஜடாதாரியாக அருள்வது இத்தலத்தில்தான். அருகில் துவாரபாலகர்களாக பிரம்மனும், விஷ்ணுவும் நிற்கிறார்கள். அடுத்து அர்த்த மண்டபத்திலுள்ள நந்திதேவரும் வாசலையே நோக்கியிருக்கிறார். எதிரே வில்வாரண்யேஸ்வரர் அற்புதக் காட்சி தருகிறார். அருட்பிரவாகமானது அலை அலையாக அவ்விடத்தில் எழுந்தவண்ணம் உள்ளது. மனதை துளைத்ததொரு சக்தி நமக்குள் ஊடுருவுகிறது. 

நெஞ்சம் நிறைந்து பிராகாரத்தை நோக்கி நகர்கிறோம். கருவறை கோஷ்டத்தில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் நேர்த்தியாக உள்ளன. அகத்தியர், பிள்ளையார், அர்த்தநாரீஸ்வரர் போன்றோர் பார்க்கப் பார்க்க பிரமிப்பூட்டுகின்றனர். அதிலும் வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமியின் சிலையானது அருள் உலகம் மட்டுமல்லாது, கலையுலகத்திற்கும் பொக்கிஷமுமாகும். அருணகிரிநாதரின் பாடல் பெற்றது. கோயிலை வலம் வரும்போதே துர்க்கையை வணங்கி அருகேயுள்ள அம்பாள் சந்நதியை அடையலாம். ஸ்ரீசர்வ ஜன ரட்சகி எனும் திருநாமத்தோடு அம்பாள் அருள்பாலிக்கிறார். அழகிய தமிழில் வளைக்கை அம்மன் என்று பெயர். அழகும், அருளும் சேர்ந்து இலகும் திருமுகம். அபய வரத ஹஸ்தத்தோடு நாடி வருபவர்களின் குறைகளை தீர்க்கிறாள். 

கோயிலை வலமாக வரும்போது நடராஜர் சந்நதியை தரிசிக்கலாம். இக்கோயிலில் பஞ்ச பைரவர்கள் அபூர்வ கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். முதலாம் குலோத்துங்கச் சோழன் இந்த கோயிலுக்காக கொடுத்த நிலங்கள் பற்றி நிறைய கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. மாசி மாத மகாசிவராத்திரி விழா நான்கு கால பூஜையும், வேடனுக்கு மோட்சமளித்த நிகழ்வும், அமாவாசை அன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.

மகாசிவராத்திரியின் மகிமை சொல்லும், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற இந்த ஆலயம், பலரால் இன்னும் கவனிக்கப்படாமல் உள்ளது. புராணங்கள் இதன் அருமையை பக்கம் பக்கமாக பேசுகின்றன. வரலாறு இவ்வூரை தலையில் வைத்து கொண்டாடுகிறது. 

ஒருகாலத்தில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் இத்தலத்தை நோக்கி நடந்த வண்ணமிருந்தனர். ஆனால், இன்று பிரதோஷ வழிபாட்டிற்கு மட்டும் ஆங்காங்கிருந்து சில பக்தர்கள் வருகிறார்கள். பழமையின் கம்பீரமும், தொன்மையின் அழகும் கொட்டிக் கிடக்கும் இந்த ஆலயத்தை ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாடி நலம் பெறாதிருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. நோயின் கடுமை தாங்க முடியாதவர்கள், மரண பயம் கொண்டவர்கள் இத்தலத்தை மிதித்தவுடன் குணமாகிறார்கள். இத்தலத்தின் எல்லையில் நின்று அவரை காப்பாற்றுங்கள் என்று யாரையேனும் குறிப்பிட்டுச் சொன்னாலே போதும், பாதிக்கப்பட்டவர் குணமாவார் என்கிறது தலபுராணம். ஸ்ரீவாஞ்சியத்திற்கு இணையான எமபயம் போக்கும் தலம் இது. பொதுவாகவே இது மோட்ச பூமியாதலால் பயம் குறைத்து அபயத்தை கூட்டும் தலமாகும். கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருவைகாவூர். பேருந்து வசதிகள் உள்ளன. 

புதிய கோவில் எப்படி கட்ட முடியும்?


ஒரு ஊரில் பாழடைந்த கோவில் இருந்தது. "அது எப்போது கட்டப்பட்டது?' என்று யாருக்கும் தெரியாது. எந்த நேரத்திலும் இடிந்து விழுந்துவிடும் என்ற நிலையில் இருந்தது. அச்சம் காரணமாக, அந்தக் கோவிலுக்குச் செல்வதை அறவே நிறுத்தி விட்டனர் மக்கள். 

கோவில் வழியாக மக்கள் செல்ல நேர்ந்தால், வேகமாக நடந்து அந்த இடத்தைக் கடப்பது வழக்கம். அதற்கு, நம் மீது கோவில் இடிந்து விழுவதற்குள், அந்த இடத்தைக் கடக்கவேண்டும் என்று நினைத்தது தான் காரணம். 

அந்த ஊர் பெரியவர்கள் சிலர், கோவிலின் முன்னேற்றத்தின் பொருட்டு, ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு நாள் அது பற்றி கலந்தாலோசிப்பதற்கு ஓர் இடத்தில் கூடினார்கள். 

அவர்கள் நடத்திய அந்த ஆலோசனை கூட்டம், கோவிலுக்குள் நடைபெறவில்லை. "கோவிலுக்குள் கூட்டம் நடைபெறும் சமயத்தில், தங்கள் மீது கோவில் இடிந்து விழுந்து விட்டால் என்ன செய்வது?' என்று அவர்கள் பயந்தது தான் காரணம். 

எனவே கோவிலுக்குச் சற்று தூரத்தில் தான் அவர்கள் கூடிப் பேசினார்கள். 

ஆலோசனை கூட்டத்தில், "கோவிலில் மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளைச் செப்பனிட வேண்டும். வெளிச்சுவருக்குச் சுண்ணாம்பு அடிக்க வேண்டும்' என்று முடிவு செய்தார்கள். 

அதன்படி, கோவிலின் சில பகுதிகள் செப்பனிடப் பட்டன. சுவருக்கு வெள்ளையடிக்கப்பட்டது. ஆனால், அப்படி செய்த பிறகும் கூட, சிலர் மட்டும் சில நாட்களுக்குக் கோவிலுக்குச் சென்றார்கள். பிறகு அதுவும் நின்று போயிற்று.

எனவே மீண்டும் நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கோவிலுக்குச் சற்று தூரத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில், அவர்கள் அனைவரும் கலந்து பேசி, நான்கு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றினார்கள்.

முதலாவது தீர்மானம்: இந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. பழமையான இந்தக் கோயிலை இடிக்க வேண்டியிருக்கிறதே என்று நினைக்கும்போது, எங்கள் மனம் மிகவும் வருந்தத்தான் செய்கிறது. என்றாலும், கோயிலின் நலன் கருதி அதை இடிக்க முடிவு செய்கிறோம். 

இரண்டாவது தீர்மானம்: இந்தப் பழைய கோவிலுக்குப் பதிலாக, கூடிய விரைவில் வேறு ஒரு புதிய கோவில் கட்ட இருக்கிறோம்.

மூன்றாவது தீர்மானம்: கோவிலிலுள்ள பழைய கதவுகள், செங்கற்கள் ஆகியவற்றைக் கட்டவிருக்கும் புதிய கோவிலுக்குப் பயன்படுத்த வேண்டும். பழைய கோவிலை இடித்த பிறகு, அஸ்திவாரத்தை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, அதே இடத்தில் முன்பு பழைய கோவில் இருந்தது போன்ற அதே அமைப்பில் புதிய கோவில் எழுப்ப இருக்கிறோம்.

இந்த மூன்று தீர்மானங்களையும் நிறைவேற்றிய பிறகு, நான்காவதாக ஒரு வேடிக்கையான தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றினார்கள். அந்த நான்காவது தீர்மானம் இதுதான்.

வேறு ஒரு புதிய கோவிலைக் கட்டும் வரையில், இந்தப் பழைய கோவிலை இடிக்காமல் அப்படியே வைத்திருக்கப் போகிறோம். 

இந்த நான்காவது தீர்மானம் எப்படியிருக்கிறது, பாருங்கள்? பழைய கோவிலை இடிக்காமல், அதே இடத்தில் புதிதாக எப்படி ஒரு கோவில் எழுப்ப முடியும்? 

இந்தக் கோவில் நிர்வாகிகள் எடுத்த முடிவைப் போன்றுதான், இந்த உலகில் நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அவ்விதம் நாம் வாழ்க்கையில் உயர்வதற்கு எது முட்டுக் கட்டையாக இருக்கிறதோ, எது இடையூறாக இருக்கிறதோ, அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கிறோம்.

பலரும், நல்ல உடல் ஆரோக்கியம் வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், அதே சமயம், நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு இடையூறாக இருக்கும் தீய பழக்கங்களை எல்லாம் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பார்கள். 

மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு, எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை எல்லா மாணவர்களும் பயன்படுத்துகிறார்களா என்றால் அதுதான் இல்லை.

பலரும் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அதே சமயம், அவர்கள் தேவையற்ற தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது போன்ற பயனற்ற செயல்களை விட்டு விடவும் தயாராக இல்லை. நல்ல பழக்கங்கள் தங்களிடம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதே சமயம், அவர்களுக்குத் தங்களிடமுள்ள தீய பழக்கங்களை விட மனம் வராது. 

ஒரு மொழியில் அல்லது கலையில் நல்ல தேர்ச்சி பெற வேண்டும் தலைசிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்விதம் நினைக்கும் அதே சமயத்தில், அவர்கள் அதற்கு உரியவர்களை அணுகி உரிய பயிற்சியையும், உழைப்பையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

நோயாளிகளுக்கு, ஒழுங்காகப் பத்தியம் இருந்து மருந்து சாப்பிட்டால், தங்கள் நோய் குணமாகும் என்று தெரியும். ஆனால், அதை அவர்கள் செய்யமாட்டார்கள்.

உணவில் கட்டுப்பாடுடன் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்ற உண்மை அனைவருக்கும் தெரியும். உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அதே சமயத்தில், பலர் நாவின் சுவைக்கு ஆசைப்பட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வார்கள்.

வாழ்க்கையில் நாம் உயர்வு பெறுவதற்கு, முட்டுக்கட்டையாக உள்ள தீயவற்றை விட்டொழிக்க வேண்டும் என்பது இந்தக் கதையின் கருத்து. 

என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும்


பக்தனின் கரைகாணாத அன்பும் அசையாத நம்பிக்கையால் பாபா குதுகலம் அடைகிறார் அவரே காரியங்களை செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். செயல்புரியும் அதிகாரத்தை பாபாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு பூரண சரணாகதி அடையுங்கள். என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும். பக்தர்களில் எவரெல்லாம் முழுமையான சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லோருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார், பக்தனை கொண்டாடுகிறார். அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் சாயியின் தர்பாருக்குள் வரமுடியும். வந்தவர்கள், யாரையும் வெறும் கையுடன் பாபா அனுப்புவதில்லை. 

சாயி சாயி  என்று அவருடைய திவ்ய நாமத்தை நாம் கூறும்பொழுது அவர் நம் கண்ணிற்கு புலப்படாமல் அவர் அங்கேயே இருக்கிறார். இது சத்தியம். அவர் தனது சக்தியையும், நிலையையும் நமக்கு தெய்வீக அற்புதங்கள் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார். ஒருவருடைய வழிபாட்டு நிலை எப்படியோ, அப்படியே அவருக்குக் கிடைக்கும் நித்திய அனுபவமும் அமைகிறது. தம்மளவில் சூட்சுமமாக இருந்த போதிலும், நம்மை அவர்பால் வசிகரித்து இழுக்கிறார். பக்தியுடன் தன்னை வணங்குபவர்களை பாதுகாப்பவர். அவருடைய இதயத்தில் கனிந்த அபரிமிதமான அன்பை கெட்டியாகப் பற்றிகொள்வோமாக! அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரிய சாதனை பெறுவோமாக! பாபாவின் பாதங்களிலேயே சித்தம் நிலைக்க வேண்டும். 

சிவனுக்கு பிடித்த செவ்வாழை


பண்ணையார் ஒருவரிடம் நல்லதம்பி என்ற படிப்பறிவு இல்லாத இளைஞன் வேலை செய்து வந்தான். 

வழக்கமாக நெல்லும், கரும்பும் மட்டும் பயிரிடும் பண்ணையார், வேறு ஏதாவது புதிதாகப் பயிரிடலாமா என்று நல்லதம்பியிடம் யோசனை கேட்டார். 
"நீங்க விரும்பினா இந்த வருஷம் செவ்வாழை பயிரிடலாம். நல்ல லாபம் வரும்,'' என்றான் நல்லதம்பி. 

பண்ணையாரும், "உன் மனசு போல செவ்வாழையே நடலாம்'' என்றார்.

வாழைக்கன்று நட்டதில் இருந்து, நல்லதம்பி தோட்டமே கதி என்று காவல் கிடந்தான்.

கன்றுகள் பச்சைப் பசேலென செழித்து வளர ஆரம்பித்தன. அதைக் கண்ட நல்லதம்பி மகிழ்ந்தான். 

முதன் முதலில் ஒரு மரம் குலை தள்ளியது.

வயலுக்கு வந்த பண்ணையார், ""நல்லதம்பி... வாழையெல்லாம் எப்படி இருக்கு?'' என்று கேட்டார்.

"பலன் கொடுக்கிற நேரம் வந்தாச்சு எஜமான். இதோ! நீங்களே மொதல்ல தள்ளிய குலையைப் பாருங்க,'' என்றான் நல்லதம்பி. 

பண்ணையாரும் மனதிற்குள், "ஆகா.....செவ்வாழையால் நல்ல லாபம் கிடைக்கும் போலிருக்கே,'' என்று சந்தோஷத்துடன்  வீட்டுக்கு கிளம்பினார்.

வீட்டில் , குலதெய்வமான சிவன் கோவிலில் இருந்து அழைப்பிதழ் வந்திருந்தது. அதைப் படித்த போது, ஐப்பசி பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேம் நடக்க இருப்பதை அறிந்தார். பண்ணையார் சிவனுக்கு காணிக்கை செலுத்த விரும்பினார். 

நல்லதம்பியை அழைத்து, ""மொதல்ல வர்ற வாழைத்தாரை வெட்டி பழுக்க வைச்சிடு. அதை நீயே போய் குலதெய்வம் கோவிலுக்கு குடுத்துடு,'' என்றார்.

நல்ல தம்பியும் தாரை வெட்டிப் பழுக்க வைத்தான். அதில் 136 பழங்கள் இருந்தன. அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

நீண்ட தூரம் நடந்ததால், அவனுக்கு பசி உண்டானது. பொறுக்க முடியாமல், சில வாழைப் பழங்களைத் தின்று பசியாறினான். 

கோவிலுக்குச் சென்றவன், ""சிவனே..... உன்னருளாலே எல்லாரும் நல்லா இருக்கணும் சாமி,'' என்று வேண்டினான். கோவில் பொறுப்பாளரிடம் வாழைத்தாரை ஒப்படைத்தான். 

அவரும் அதை வாங்கி விட்டு பண்ணையாருக்கு ரசீது எழுதிக் கொடுத்தார். அதில், "தாங்கள் அனுப்பியதில் 10 பழம் தவிர மீதிப் பழங்கள் வந்து சேர்ந்தது,'' என்று இருந்தது. 

நல்லதம்பியும், விஷயம் புரியாமல் பண்ணையாரிடம் ரசீதை ஒப்படைத்தான்.
அதைப் படித்த பண்ணையாருக்கு கோபம் எழுந்தது. 

"சுவாமிக்கு கொடுத்த பழத்தை திருடியது இந்த கை தானே!'' என்று சொல்லி நல்லதம்பியின் கையில் சூடு போட்டார். அவன் வலி தாளாமல் துடித்தான்.

அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய சிவன், "பக்தனே.... நீ அனுப்பியதில் 10 பழத்தை மட்டும் விருப்பமுடன் ஏற்றுக் கொண்டேன்,'' என்றார். விழித்தெழுந்த பண்ணையார் படபடத்துப் போனார். 

"நல்லதம்பி.... நீ சாப்பிட்ட பழத்தையே கடவுள் ஏற்றுக் கொண்டிருக்கிறார். உழைப்பின் பலனை அனுபவிக்கும் முதல் உரிமை உனக்கே என்பதை உணர்ந்தேன். என்னை மன்னித்து விடு,'' என்றார் பண்ணையார். 

வேண்டுதல்களை நிறைவேற்றும் வீரராகவ பெருமாள்


மதுரை தெற்குமாசி வீதி எழுத்தாணிக்காரத் தெரு சந்திப்பில் உள்ளது வீரராகவப் பெருமாள் கோயில். இது மன்னர் சொக்கப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். மதுரை கூடலழகர் கோயிலின் உப கோயில் இது. இக்கோயில் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக வீரராகவப் பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அருகில் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். தாயார் கனகவல்லி, ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பள்ளி கொண்ட அரங்கநாதர், சக்கரத்தாழ்வார், அமர்ந்த கோல யோகநரசிம்மர், கருடன், அனுமன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றனர்.

சித்திரைப் பெருநாளில் வைகையாற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் அழகரை வீரராகவப் பெருமாள் வெள்ளிகுதிரை வாகனத்தில் எதிர்கொண்டு வரவேற்பது இக்கோயிலின் சிறப்பாகும். புராண காலத்தில் மதுரை வரும் அழகர் சோழவந்தான் அருகே தேனூர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார். விளைந்த நெற்கதிர்களால் பந்தலிட்டு அழகுடன் அமைக்கப்பட்ட கதிர்கால மண்டபத்திற்கு வந்த பக்தர்களில் ஒருவர் ‘திரி’ சுற்றிய போது, அதிலிருந்து பறந்த நெருப்பு பொறி பந்தலில் பற்றி எரிய துவங்கியது. இதனை கண்ட பக்தர்கள் உற்சவர் கள்ளழகரை விட்டுவிட்டு அலறியடித்து ஓடினர். தங்கத்தாலான அழகர் விக்கிரகம் நெருப்பில் சிக்கியதை கண்ட வீரராகவப் பெருமாள் கோயிலின் அன்றைய அர்ச்சகர் அமுதார் மண்டபத்துக்குள் விரைந்தார். 

அங்கு கொழுந்து விட்டெறிந்த பந்தலுக்குள் புகுந்த அவர், தன் மீது பற்றிய நெருப்பையும் பொருட்படுத்தாது அழகரை வாரியணைத்து வெளியில் வந்தார். பின்னர் ஆற்று மணலை தோண்டி அதில் விக்கிரகத்தை புதைத்து காத்தார். கள்ளழகர் மீதான பக்தி வெளிப்பாட்டில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கள்ளழகர் திருமேனி காத்த அமுதாரை காண மதுரை மன்னரே நேரில் வந்தார். ‘கடவுள் காத்த உமக்கு இனி அழகர் ஆற்றில் இறங்கும் ஒவ்வொரு ஆண்டும் மன்னரின் முன்மரியாதை உண்டென்று’ மனம் உருக உரிமையளித்தார். அதற்கு அர்ச்சகரோ, ‘விழா நாளன்று வைகை ஆற்றில் என் வீரராகவப் பெருமாள் கள்ளழகரை எதிர் கொண்டு அழைத்திட வேண்டும்’ என மன்னரிடம் வேண்டினாராம். 

அமுதாரின் வேண்டுகோளுக்கிணங்க அன்று முதல் அழகர் ஆற்றில் இறங்கும் போது வீரராகவப் பெருமாள் வெள்ளிக்குதிரையில் அவரை எதிர்கொண்டு வரவேற்கும் நிகழ்வு தொடர்கிறது. அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு கோயிலில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி வீரராகவப் பெருமாள் புறப்பாடாகிறார். வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து, காலை ஆறரை மணியளவில் வைகையில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து ஆற்றில் இறங்கும் அழகரைக் கண்டதும் வீரராகவப் பெருமாளை சுமந்து வருவோர் ‘வையாளி’ எனும் குலுக்கியெடுத்தலில் குதூகலமடைவர்.

ஆற்றில் உள்ள மண்டபத்தில் அழகர் வீற்றிருக்க, அவரை மும்முறை வலம் வருகிறார் பெருமாள். மங்களாசாசனம் செய்து, பரிவட்டம் மற்றும் மாலை சாற்றி இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுக்கும் நிகழ்வு அற்புதமானது. இதன் தொடர்ச்சியாக ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயில் பட்டருக்கு, அழகரின் சடாரியை ஏந்தும் உரிமை தரப்படுகிறது. வீரராகவப் பெருமாளை மனமுருக வழிபடுவதன் மூலம் திருமணம், புத்திர பாக்கியம், கருத்து வேறுபாடுள்ள தம்பதிகள் மனம் சேர்ந்து வாழ்தல், தொழில் விருத்தியடைதல் என பலதரப்பட்ட வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல்களுடன் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சித்ரா பவுர்ணமி தினம், ஆடிப்பூரம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி ஆகிய விசேஷ தினங்களில் இக்கோயில் திருவிழாக்கோலம் பூண்டு காட்சி தருகிறது. பவுர்ணமி தினத்தன்று வீரராகவப் பெருமாளுக்கும், அமாவாசை திதியன்று ரங்கநாதருக்கும் ‘திருமஞ்சன வைபவம்’ சிறப்பாக நடத்தப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் இக்கோயிலில் தரிசனம் செய்யலாம்.

Sunday 30 July 2017

எங்கும் சிவமயம்


இளைஞன் ஒருவனுக்கு, "எல்லாம் சிவமயம் என்பது உண்மை தானா?' என்ற சந்தேகம் எழுந்தது. 

கங்கைக் கரையில் இருக்கும் சாதுக்களிடம் சென்று கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தான். 

அங்கிருந்த ஒரு சாது, "ஞானியான ஏகநாதரிடம் செல். அவரைச் சந்தித்தால் உன் சந்தேகம் தீரும்,'' என்றார். 

ஏகநாதரைக் காண இளைஞன், கங்கை கரையிலுள்ள ஒவ்வொரு சிவன் கோவிலாக ஏறி இறங்கினான். ஆனால், அவர் தென்படவில்லை. 

நண்பகல் நேரம் ஆகி விட்டது. வெயிலும் உக்கிரமானது.

கடைசியாக இளைஞன் சோர்வுடன் ஒரு கோவிலுக்குள் நுழைந்தான். அங்கு ஒரு சிவலிங்கத்தை நோக்கி, கால் வைத்தபடி ஏகநாதர் தூங்குவதைக் கண்டான். "சிவனை அவமதிக்கும் இவரா ஞானி,'' என திகைத்துப் போனான். இருந்தாலும், அவர் விழிக்கும் வரை காத்திருந்தான். 

அவரிடம் இளைஞன், ""ஞானிகள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லவா கண் விழிப்பார்கள்? நீங்கள் நண்பகல் வரை தூங்குகிறீர்களே....'' என்று கேட்டான்.

"எனக்குள் இருக்கும் பிரம்மத்திற்கு (கடவுளுக்கு) தூக்கம் வரும் போது தூங்கினேன். விழிப்பு வரும் போது விழித்தேன். பிரம்மம் விழிக்கும் நேரம் தானே பிரம்ம முகூர்த்தம்,'' என்றார் ஏகநாதர்.

"அதுவும் சரி தான்...லிங்கத்தை நோக்கி கால் நீட்டி அவமதிக்கிறீர்களே.....'' என்றான் இளைஞன். 

"சிவன் இல்லாத திசையே உலகில் இல்லை.....காண்பது அனைத்தும் சிவமே. நீயும், நானும் சிவம் தான். யாராலும் அவரை அவமதிக்க முடியாது'' என்றார் ஏகநாதர்.

எங்கும் சிவமயம் என்பதை புரிந்து கொண்டான் அவன்.

சீர்மிகு வாழ்வருளும் சீதளாதேவி


புதுடெல்லி - குர்காவூன்

சீதளா என்றால் குளுமையானவள் என்ற அர்த்தத்தைத் தரும். சீதளா மாதாவிற்குப் பல இடங்களிலும் பல ஆலயங்கள் உள்ளன. அந்த தேவியின் பெயரை  வடநாட்டில் சீதள மாதா, மஹா மாயி, மாயி அன்னம்மா, சாத், சிடல் மாதா எனவும் தென்னிந்தியப் பகுதிகளில் மாரியம்மன், ரேணுகா, குளிர்ந்த நாயகி,  எல்லம்மா, எனவும்  முண்டகண்ணியம்மன், கெம்பம்மா, தொட்டம்மா, சுகஜம்மா, கங்கம்மா என்ற பெயர்களில் அழைத்தாலும் அனைத்து இடங்களிலும் அவள்  அம்மை நோயில் இருந்து காப்பாற்றுபவள் என்பதே முக்கியமான நம்பிக்கையாக உள்ளது. 

அம்மை நோயை மட்டும் தடுப்பதற்காக  அவள் பிறப்பு எடுக்கவில்லை, பக்தர்கள் அவள்மீது நம்பிக்கை கொண்டு வணங்குகையில் அவர்கள் வேண்டியவற்றை  தந்து அருளுகின்றாள், ஊரைக் காக்கின்றாள், பஞ்சகாலத்தில் மழை பொழிய வைக்கின்றாள், குழந்தைப் பேறு தருகின்றாள், குடும்பத்தைக் காக்கின்றாள்,  நோய்களை விரட்டுகின்றாள் என பல்வேறு விதங்களில் பல இடங்களிலும் நம்பப்படுகின்றது. தென்னிந்தியாவில் மட்டுமே அவளுக்குப் மிகப் பெரிய ஆலயங்கள்  உள்ளன. கஞ்சி வார்த்தல், கூழ் காய்ச்சுதல், வேப்பிலை சுற்றிக் கொண்டு வலம் வருதல், தீ மிதித்தல் போன்ற சடங்குகள் அங்கு மிகவும் அதிகம். அப்படிப்பட்ட  வழக்கங்கள் வடநாட்டில் இல்லை என்றாலும் அவளுக்கு பல இடங்களில் சிறுசிறு ஆலயங்கள் உள்ளன. 

ஆனால், சீதளா மாதாவிற்கு மிகப்பெரிய ஆலயம் வடநாட்டில் புது டெல்லியின் எல்லையில் உள்ள குர்காவூன் என்ற நகரில் உள்ளது. சீதளாமாதா நான்கு  கைகளைக் கொண்டவள், சிவப்பு நிற உடைகளை விரும்புபவள் என்ற நம்பிக்கை உள்ளது. அவளுடைய பூஜைகளில் வேப்பிலையும், எலுமிச்சம் பழமும்  முக்கியமானவை. உண்மையில் சீதள மாதா அம்பிகையின் ஒரு அம்சமாகவே கருதப்படுகிறாள். குர்காவூன் என்ற நகரம் ஹரியானாமாநிலத்தின் ஒருபகுதியாகும்.  அந்த இடம் மகாபாரத நாயகர்களான பாண்டவர்களுக்கு வில்வித்தைப் பயிற்சி தந்த துரோணாச்சாரியார் பிறந்த பூமி என்ற பெருமை பெற்றுள்ளது. குர்காவூன்  நகரில் ஒரு ஏரியின் கரையில் அமைந்துள்ள அந்த ஆலயம் எழும்பிய கதை மிகவும் சுவாரசியமானது மட்டுமல்ல புராணப் புகழ் பெற்றதுமாகும். இந்த ஆலயம்  சுமார் 350 வருடங்களுக்கு முன்னர் எழுந்தது எனக் கூறுகின்றனர். 

தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகின்றனர். அங்கு வந்து குழந்தைகளுக்கு முதல் முடி  இறக்குகின்றனர். 300 அல்லது 350 ஆண்டுகளுக்கு முன்பு  குர்காவூவில் பாதராத் மற்றும் சிங்கா என்ற இரு சகோதரர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருந்தனர், மிகவும்  ஒற்றுமையாக இருந்தனர். அவர்களில் சிங்கா என்பவர் பக்தியாளர். பூஜைகள், பஜனைகள் எனச் செய்து வந்தவர். ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு  பிரச்னையினால் இரண்டு சகோதரர்களுக்கும் இடையே கருத்து வேற்றுமை தோன்றி சொத்துகளை பாகப் பிரிவினை செய்து கொள்ள இப்போது ஆலயமுள்ள ஒரு  பகுதி நிலம் சிங்காவிற்குக் கிடைத்தது. சிங்காவிற்குக் கிடைத்த அந்த நிலத்தின் பெருமை என்னவெனில் அந்த பகுதியில்தான் துரோணாச்சாரியார் பிறந்ததாக  நம்பப்பட்டது. 

பாகப் பிரிவினை ஏற்பட்டாலும் சிங்கா தான் வைத்திருந்த பழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் பஜனைகள், பூஜைகளை செய்து வந்தார். ஒருநாள் அவருடைய  கனவில் சீதளாதேவி தோன்றி அன்று முதல் நோயுற்று வரும் எவரையும் அவர் தொட்டால் அவர்களுடைய நோய் விலகி விடும் எனக் கூறி விட்டு மறைந்து  விட்டாள். அவரும் அதை நம்பி தன் நிலத்தில் ஒரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு தியானம் செய்யத் துவங்கினார். அதற்கு முன் அந்த இடத்தில் தன்  மனதில் தோன்றிய வகையில் கல்லாலான சிறு ஆலயம் ஒன்றைக் கட்டி ஒரு கல்லை தேவியாகப் புதைத்து வைத்து அதை வணங்கி வரலானார். ஒருநாள்  அவர் நிலத்தைத் தோண்டிக் கொண்டு இருந்தபோது அவர் கனவில் தோன்றிய அதே உருவிலிருந்த ஒரு சிலை கிடைத்தது. 

தனக்காகவே அந்த தேவி எழுந்தருளியிருக்கிறாள் என நம்பியவர் அதை எடுத்துவந்து அந்த ஆலயத்தில் வைத்து பூஜிக்கலானர். அதுவே, பின்னர் சீதளா மாதா  ஆலயமாயிற்று. அந்தச்சிலை அங்கு தோன்றியதற்கும் ஒரு கதை கூறப்படுகின்றது. ஒரு காலத்தில் முகலாய மன்னர்கள் பல பகுதிகளுக்கும் படை எடுத்துச்  சென்று அந்தந்த நகரங்களில் இருந்த ஆலயங்களை இடித்து சேதப்படுத்தி பொருட்களை கொள்ளையடித்துச் செல்வது மிக சாதாரணமாக நடந்து வந்தது.  அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் தான் அந்த இடத்தில் படையெடுத்து வந்திருந்த முகலாய மன்னன் அங்கு இருந்திருந்த சீதளாமாதாவின் ஆலயத்தை இடித்துத்  தள்ளியபின் அதிலிருந்த சிலையை அங்கிருந்த ஏரியில் தூக்கி எறிந்து விட்டானாம். நாளடைவில் அந்த ஏரி மறைந்து விளைநிலமாக மாறியிருந்தது. 

அந்த இடத்தில்தான் சிங்கா தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையும் அவருக்குக் கிடைத்தது. முகலாய மன்னன் அழித்துச்  சென்ற ஆலயம் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் அதன் மகிமை மிகவும் அதிகம் எனவும் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக கைகால்கள் விளங்காமல்  நோயுற்றிருந்த ஒரு மன்னனின் குழந்தையை அந்த ஆலயத்திற்கு கொண்டு வந்து அந்த ஆலய மண்ணினால் களிம்பு போட்டு வைத்திருக்க பத்து நாட்களில்  குழந்தை நலமாகி விட்டது என்றவொரு செவி வழிக்கதை உள்ளதாகவும் கூறுகின்றனர். அந்த ஆலயம் கட்டப்பட்டது குறித்து மற்றுமொரு வரலாறு நிலவுகின்றது.  முன்னொரு காலத்தில் ஆலயமுள்ள நகரை ஒட்டி பரூக் என்ற நகரம் இருந்தது. 

அந்த நாட்டு மன்னனின் அரண்மனையில் ஒரு தச்சன் இருந்தான். அவனுக்கு மிகவும் அழகான ஒரு மகள் இருந்தாள். அவளுடைய அழகு குறித்து கேள்விப்பட்ட  ஒரு முகலாய மன்னன் அவளை அடைய ஆசைப்பட்டு தன்னுடைய ஆட்களை அனுப்பியபொழுது அந்த தச்சன் அதற்கு சம்மதிக்கவில்லை. அந்த முகலாய  மன்னனின் மிரட்டலுக்குப் பயந்து அவன் அந்த நாட்டு மன்னனிடம் சென்று முறையிட்டான். மன்னன் தன் நாட்டு குடிமகனுக்கு அபயம் அளிக்க முடிவு செய்ததும்  முகலாய மன்னனுடன் போர் ஏற்பட்டது. யுத்த பூமிக்குச் செல்கையில் அந்த மன்னன் தான் யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டு வந்தால் அவளுக்கு ஒரு ஆலயம்  அமைப்பேன் என உறுதிமொழி எடுத்துச் சென்றானாம். 

இன்னொரு கதையின் படி அந்த மன்னன் யுத்தத்திற்குக் கிளம்பிய பொழுது துர்க்கையை வழிபடாமல் கிளம்பியதால் ஆலயமுள்ள இடத்திற்கு அருகில் அவன்  படை வந்த பொழுது அவன் சென்ற குதிரை மேலும் செல்ல முடியாமல் நின்று விட்டதாம். அதனால் கலக்கமுற்றவன் துர்க்கையிடம்‘தான் யுத்தத்தில் வெற்றி  பெற்றுவிட்டு வந்தால் அவளுக்கொரு ஆலயம் கட்டுகின்றேன் என வேண்டிக் கொண்டானாம். அதன்படி யுத்தத்தில் வெற்றிபெற்று வந்து அங்கு ஆலயமும்  அமைத்தானாம். இன்னொரு கதையின் படி சீதளாமாதாவை நான்முகன் படைத்தார். அவளிடம் சிறிது உளுத்தம் பருப்பைக் கொடுத்து அதை அவள்  வைத்திருக்கும் வரை அவளை கடவுளாக உலகத்தினர் வணங்குவர் என்றார். 

அவளுக்கு உதவியாக சிவபெருமானின் வியர்வையிலிருந்து தோன்றிய கந்தர்வன் ஒருவன் தோன்ற, இருவரும் ஒரு கழுதை மீது பருப்பை வைத்துக் கொண்டு  செல்ல அது சிந்திய இடங்களில் பெரிய நோய் ஏற்பட்டது. அதனால் பீதியடைந்த தேவர்கள் அனைவரும் அவளை பூமிக்குச் சென்று வசிக்கும்படியும் அங்கு அவள்  வணங்கப்படுவாள் எனவும் கூறி அனுப்ப பூமிக்கு வந்தவள் கையில் இருந்த பருப்பு எங்கெல்லாம் விழுந்ததோ அங்கெல்லாம் அம்மைநோய் தோன்றியது.  மனிதர்கள் அவளிடமே தம்மைக் காத்தருளுமாறு வேண்டிக் கொள்ள சீதளா மாதாவும் அந்த நோயை குணப்படுத்திளாள். அது முதல் அந்த நோய் வராமல் இருக்க  வேண்டும் என்பதற்காக அவளுக்கு ஆலயம் அமைத்து வழிபாடுகள் செய்யத் துவங்க, மனம் மகிழ்ந்த தேவியும் தன்னை வேண்டிக் கொண்டவர்களை நோய்  வராமல் தடுத்து காத்தருளி வருகின்றாள். 

ஸ்ரீ கிருஷ்ணர் செய்த தந்திரம்


காந்தார தேச மன்னன் சுலபாவின் மகள் காந்தாரி. இவள் சிறுமியாக இருந்தபோது, சிவபெருமான் மீது பெரிதும் பக்தி கொண்டு பூஜை செய்து வந்தாள். 

காந்தாரிக்கு திருமண வயது வந்தது. அவளுக்கும், திருதராஷ்டிரனுக்கும் திருமணம் நிச்சயமாயிற்று.

காந்தாரிக்கு, "திருதராஷ்டிரன் கண் பார்வை இல்லாதவன்' என்று தெரிய வந்தது. எனவே அவள், ""எனக்குக் கணவராக வரப் போகிறவர் பார்த்து அனுபவிக்காத இந்த உலகத்தை, நானும் பார்த்து அனுபவிக்கக் கூடாது,'' என்று கூறி, தன் கண்களை ஒரு துணியைக் கட்டி மறைத்துக் கொண்டாள். திருமணமும் சிறப்பாக முடிந்தது.

பின் காந்தாரி, பிறவியிலேயே பார்வையற்றவள் போல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள். அவள் தியாக மனப்பான்மை உடையவள், தொண்டு மனப்பான்மை கொண்டவள், பதிவிரதை, தவம் நிறைந்தவள். ஒரு உயர்ந்த இந்துப் பெண்மணிக்கு உரிய தெய்வீகக் குணங்களுடன் வாழ்ந்தாள். 

மகாபாரதப் போர் மும்முராக நடந்துகொண்டிருந்தது. போரில் பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற மாபெரும் வீரர்களுக்கும் காயம்  ஏற்பட்டது. இந்த நிலையில் துரியோதனன் ஒரு நாள் தர்மபுத்திரரிடம் சென்று, ""போரில் ஆயுதங்கள் என்னைத் தாக்கினாலும், அதனால் எனக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படக் கூடாது. அதற்கேற்ப என் உடல் வஜ்ரம் போன்று உறுதி உடையதாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்,'' என்று கேட்டுக்கொண்டான். 

அவனிடம் தர்மபுத்திரர், "நமது தாய் காந்தாரி போற்றுவதற்கு உரிய தூய்மையும் தவமும் உடையவள். அவள் உன்னைப் பெற்றவள். அவள், தன் கணவர் பார்க்காத உலகத்தை, தான் பார்க்கக் கூடாது என்று நினைத்து, கண்களை மறைத்து வாழ்ந்து வருபவள். அவ்விதம் அவள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதால், அவள் கண்களில் ஓர் அபூர்வமான சக்தி இருக்கிறது. நீ அவளிடம் சென்று, அவள் எதிரில் உடைகளைக் களைந்துவிட்டு பிறந்தமேனியாக நில். அந்த நிலையில் அவளைக் கண் திறந்து உன்னை ஒருமுறை பார்க்கும்படி கேட்டுக்கொள். அவள் தன் கண்களைக் கட்டியிருக்கும் துணியை அகற்றிவிட்டு ஒரு தடவை உன்னைப் பார்த்தால் போதும். உடனே உன் உடல் வஜ்ரம் போன்று உறுதி வாய்ந்ததாகிவிடும்,'' என்று கூறினார்.

தர்மபுத்திரர் கூறியதைக் கேட்ட துரியோதனன், அதை உடனடியாக செயல்படுத்த முடிவு செய்தான். அவன் தன் தாயின் மாளிகைக்கு புறப்பட்டான். 

இந்த விஷயம் அர்ஜுனனுக்குத் தெரிய வந்தது. அப்போது கிருஷ்ணர் சிறிது தூரத்தில் இருந்த ஒரு பாசறையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரிடம் அர்ஜுனன் விஷயத்தை தெரிவித்தான்.

இதைக் கேட்ட கிருஷ்ணர், தர்மத்தை நிலைநிறுத்துவதற்கு இந்த போர் நடக்கிறது. தர்மபுத்திரர் கூறியதுபோல் துரியோதனன் செய்தால், அவன் உடல் வஜ்ரம் போன்று ஆகிவிடும். அதன்பிறகு அவனைக் கொல்ல முடியாது. அதனால் இது வரையில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிவிடும். துரியோதனின் இந்த நிலையை மாற்றுவதற்கு, நான் இப்போது ஏதாவது செய்ய வேண்டும்,'' என்று நினைத்தார். 

துரியோதனன் செய்யும் பூஜைக்கு தினந்தோறும் பூக்கள் கொண்டு போய் கொடுக்கும் தோட்டக்காரன் ஒருவன் இருந்தான். அவனது வடிவத்தில் கிருஷ்ணர், காந்தாரியின் மாளிகை நோக்கிச் சென்ற துரியோதனனைச் சந்தித்தார். 

துரியோதனனிடம், ""அரசே! நீங்கள் போருக்குப் பயந்து இப்போது போர்க்களத்திலிருந்து வந்து விட்டீர்களா? அல்லது உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வருகிறீர்களா?'' என்று கேட்டார்.

அதற்கு துரியோதனன், "நான் எதற்கும் பயப்படவில்லை. போர்க்களத்திலிருந்து ஓடி வரவும் இல்லை,'' என்று கூறிவிட்டு, தனக்கும், தர்மபுத்திரருக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தெரிவித்தான். 

உடனே தோட்டக்கார வடிவிலிருந்த கிருஷ்ணர், "அரசே! தர்மபுத்திரர் நேர்மையானவர்தான். ஆனால், அவர் இப்போது உங்கள் எதிரி. உங்கள் நாட்டைக் கைப்பற்றுவதற்காக உங்களிடம் அவர் போரிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் கூறியபடி நீங்கள் ஆடை எதுவுமின்றி பிறந்தமேனியாக அன்னையின் முன்பு சென்றால், அது அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தும். அந்தநிலையில் அவள் கண் திறந்து உங்களைப் பார்த்தால், நீங்கள் எரிந்து சாம்பலாகி விடுவீர்கள்! இப்படி ஒரு யோசனையைக் கூறி தர்மபுத்திரர் உங்களை நன்றாக 
ஏமாற்றியிருக்கிறார்,'' என்று கூறினான்.

இதைக் கேட்டு துரியோதனன் குழம்பி விட்டான். அவன் கவலை உடன், "இப்போது நான் என்னதான் செய்வது?'' என்று கேட்டான்.

உடனே கிருஷ்ணர், துரியோதனனிடம் ஒரு மாலையைக் கொடுத்து, "நான் தரும் இந்த மாலையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அன்னை முன்பு சென்று உங்கள் உடைகளைக் களைந்தபிறகு, இந்த மாலையால், உங்கள் இடுப்பு மற்றும் மர்மஸ்தானத்தை மறைத்துச் சுற்றிக் கொள்ளுங்கள். அது காந்தாரிக்குக் கோபத்தை ஏற்படுத்தாது. உங்கள் எண்ணமும் நிறைவேறும்,'' என்றான். 

துரியோதனனுக்கு, அது நல்ல யோசனை என்று தோன்றியது. 

துரியோதனனும் தாய் முன் வந்தான்.

அவன் வந்ததைக் கண்டு கோபமடைந்த காந்தாரி, ""நீ இப்போது போர்க்களத்தில் இருக்க வேண்டியவன். அங்கிருந்து இங்கு ஏன் வந்தாய்? சண்டைக்குப் பயந்து வந்தாயா? உன்னுடைய செயல் ஒரு கோழையின் செயல்,'' என்று படபடத்தாள்.

அவளிடம் துரியோதனன் தனக்கும், தர்மபுத்திரருக்கும் நடந்த உரையாடலைத் தெரிவித்து, 

"நீங்கள் உங்கள் கண்களைக் கட்டியிருக்கும் துணியை ஒரு முறை அவிழ்த்து என்னைப் பாருங்கள்,'' என்று கேட்டுக்கொண்டான்.

காந்தாரியும் சாந்தமாகி, துரியோதனன் சொன்னபடி செய்தாள். அவள் பார்வை பட்டதும் துரியோதனன் உடலில் மாலை மறைத்திருந்த பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகள் வஜ்ரம் போன்று ஆகிவிட்டன. இது நடந்ததும் காந்தாரி, தன் கண்ணை மீண்டும் துணியைக் கட்டி மறைத்துக்கொண்டாள். 

அதன் பின் காந்தாரி, அவனது இடுப்பை மறைத்ததற்கான காரணத்தைக் கேட்டாள். 

துரியோதனன் அவளிடம், ""தோட்டக்காரன் கூறிய யோசனை இது'' என்றான். 
அது கேட்ட காந்தாரி, ""உன்னை வழியில் சந்தித்துப் பேசியவன் தோட்டக்காரன் இல்லை. கிருஷ்ணன் தான் தோட்டக்காரன் வடிவில் வந்து, உன்னிடம் இப்படி ஒரு யோசனையைக் கூறினான்,'' என்றாள்.

மேற்கூறிய ஒரு சமயத்தில் மட்டும்தான், அவள் தன் கண்களை மூடியிருந்த துணியை அவிழ்த்து ஒரு முறை இந்த உலகத்தைப் பார்த்தாள். கிருஷ்ணர், தன் பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும்' என்பதில் எப்போதும் கவனமாக இருப்பவர். அதனால் அவர் பாண்டவர்களுக்கு உதவும் பொருட்டு, தோட்டக்காரன் வடிவில் சென்று இப்படி ஒரு நாடகம் ஆடினார்.

இந்த நிகழ்ச்சி தர்மபுத்திரரின் நேர்மை, பக்தர்களைக் காப்பாற்றுவதற்கு கிருஷ்ணர் மேற்கொண்ட முயற்சி, காந்தாரியின் பெருமை ஆகியவற்றை உணர்த்துகிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு துரியோதனனுக்கும் பீமனுக்கும் போர் நடந்தது. அதில் துரியோதனன் காந்தாரியின் முன்பு மாலையால் மறைத்திருந்த தொடையை பீமன் தாக்கி, அவனைக் கொன்றான். 

மேற்கூறிய கதை, சுவாமி சிவானந்தர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கதையை ஆதாரமாகக் கொண்டது. 

மகாபாரதத்தில், ""யதோ தர்ம: ததோ ஜய: (எங்கே தர்மம் இருக்கிறதோ, அங்கே வெற்றி இருக்கும்)'' ஒரு புகழ்பெற்ற ஸ்லோகம் 
இருக்கிறது. இதைக் கூறியவள் காந்தாரி.

பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம்


பாபாவின் குணாதிசயங்களை நினைவு பெற பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார். ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது, அதை எப்படி வளர்த்து கொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார். பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள், அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள்.

பக்தர்களின் நலம் கருதி பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று அவர் பக்தர்கள் வம்சம் விருத்தியாக அருளியது. ஏதாவது ஒரு பக்தைக்கு பிள்ளைப் பேறு  உண்டாகும் என பாபா ஆசி வழங்கினால், அனேகமாக அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பாபாவின் வாக்கின்படி அப்பெண்மணி குழந்தை பெறுவது உறுதி. ஜாதகத்தின் படி புத்திர ஸ்தானத்தில் பாவகிரகம் இருப்பதால் இப்பிறவியில் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என சோதிடர்கள் கூறியும், பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம். ஊழ்வினையின் நியதிகளை மாற்றி பாபா இன்றும் தனது பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அளித்து வருகிறார்.

அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள். அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிறவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார். அவர்கள் பாபாவை அணுக வேண்டும் என மனப்பூர்வமாக விரும்பட்டும். உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலன் அடைகின்றனர். முதலில் ஒரு வித நன்றியுணர்வையும், நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள். 

மகிழ்ச்சி தந்த கவலை


சீதையைத் தேடி வரும் வழியில், தம்பி லட்சுமணனுடன் பம்பை நதிக்கரைக்கு வந்தார் ராமர். பம்பையில் நீராடும் பொருட்டு, தன் கோதண்டம் என்னும் வில்லை, கரையில் அழுத்தமாக ஊன்றி வைத்தார். நீராடித் திரும்பிய அவர் வில்லை கையில் எடுத்தார். அதன் நுனியில் ரத்தக்கறை இருந்தது கண்டு திடுக்கிட்டார். ரத்தம் படிந்த காரணம் என்ன என ஆராய்ந்த போது, தவளை ஒன்று ரத்தம் வழிய தரையில் கிடந்தது. 

தவளை கிடப்பதைக் கவனிக்காமல், வில்லை அழுத்தமாக ஊன்றி விட்டோமே என வருந்திய ராமர், முத்து முத்தாக கண்ணீர் வடித்தார். 

தவளையை தடவிக் கொடுத்தபடியே, "தவளையே! நான் அறியாமல் பிழை செய்து விட்டேன், நீ கீழே இருப்பதை நான் கவனிக்கவில்லை. நான் கோதண்டத்தை ஊன்றும் போது, சத்தம் போட்டிருக்கலாம் இல்லையா?'' என்று பரிவுடன் கேட்டார்.

தவளை கனிவுடன் பேசியது.

"ஸ்ரீராமா! தாங்கள் நாராயணனின் அவதாரம் என்பதை நான் அறிவேன். என் மீது பட்டது உங்கள் கோதண்டம். இந்த கோதண்டத்தை தாங்கள் கண்ணாலாவது பார்க்க மாட்டோமா என இந்திரனும், மற்ற தேவர்களும் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால், என் மீது அதன் ஸ்பரிசம் தானாகப் பட்டது. அது எனக்கு வேதனை தந்தது என்னவோ உண்மை தான். ஆனால், அந்த வேதனையிலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே ஏற்பட்டது,'' என்றது. ராமனுக்கு அதன் பேச்சு சமாதானத்தை தரவில்லை.

"என்ன இருந்தாலும், நான் செய்தது தவறு தான். இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யப் போகிறேனோ!'' என்றவரிடம் தவளை மீண்டும் பேசியது.

"ஸ்ரீராமா! நீ பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன். இந்த உலகத்தில் அதர்மம் அழிந்து தர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நீயே மனிதனாக அவதரித்து வந்திருக்கிறாய். தர்மத்தை நிலைநாட்டவே, உன் வில்லான கோதண்டமும் உன்னோடு வந்திருக்கிறது. புனிதமான அந்த வில், என் மீது பட்டதே எனக்கு பெருமை தானே! ஒரு வேளை அதன் அழுத்தத்தால் என் உயிரே போயிருந்தாலும், அதை விட உயர்வான செயல் என்ன இருந்து விட முடியும்?

ஐயனே! இந்த வில்லால் ஏற்பட்ட புண் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்ன பாவம் செய்தேனோ! நான் உன்னைப் போல், உயர்ந்த மானிடப்பிறப்பு எடுக்காமல் தவளையாய் பிறந்தேன். இந்த பிறவி மறைந்து, இன்னும் எத்தனையோ பிறப்பெடுத்தால் மானிடப் பிறவியையே அடைய முடியும். அதன்பிறகே எனக்கு முக்தி கிடைக்கும். ஆனால், இப்போது உன் கோதண்டத்தால் இப்போதே எனக்கு முக்தி கிடைத்து விடுமே!'' என பெருமையாகச் சொன்னது.

தவளையின் உயர்ந்த பக்தி கண்ட ராமர், "அழியாத புண்ணிய உலகத்தை இப்போதே அடைவாய்!'' என்று வாழ்த்தினார். அந்த தவளை பெருமாளின் திவ்யலோகத்தை அடைந்தது.

கடவுளை நம்புவோருக்கு கவலையும், வேதனையும் கூட சந்தோஷத்தை தந்து விடுகிறது

கடல் திறக்கும் சிவாலயம்


கடல் உள்வாங்கும்போது மட்டுமே பக்தர்கள் வழிபட வழிவிடும் சிவாலயம் இது. பாண்டவர்களின் பாவம் தீர வழிபட்ட மிஷ்கலங்க மகாதேவர் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கிறார்.

அகமதாபாத் மாவட்டம் பாவ்நகரில் கோலியாக் கடற்கரை உள்ளது.இந்தக் கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிவாலயம் இருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் சுமார் ஆறு மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்குகிறது. அப்போதுதான் பக்தர்களால் வழிபட முடியும்.

இந்த நிகழ்ச்சி தினம்தோறும் ஒரே நேரத்தில், அதே கால இடைவெளியில் நடைபெறுவது மேலும் வியப்பை அளிக்கிறது. மாலை எட்டு மணி அளவில் கடல் உள்வாங்கும். கடற்கரைக்கு அருகில் காத்திருக்கும் பக்தர்கள் கடலுக்குள்ளே செல்கின்றனர். உள்ளே மேடை போன்ற மணற் திட்டில் அந்தச் சிவாலயம் அமைந்திருக்கிறது. உள்ளே ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன.

கடல்நீர் வற்றியதும் கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். பள்ளமும் சேறும் சகதியுமாக ஒன்றரை கிலோமீட்டர் நடக்க வேண்டும்.ஆடையெல்லாம் நனைந்து, தடுமாறி, வீழ்ந்து, அடிபட்டு, சமாளித்துத் தான் கோயிலைச் சென்றடைய முடியும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாது பக்தர்கள் இங்கு நூற்றுக்கணக்கில் தினமும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அமர்நாத் அனுபவம்: உச்சியில் வீற்றிருக்கும் பனிலிங்கம்


அமர்நாத் யாத்திரை வெற்றிபெற உடலும் மனமும் ஒத்துழைப்பது அவசியம். இத்துடன் இயற்கையின் ஒத்துழைப்பும் கைவரப்பெற்று உச்சியில் வீற்றிருக்கும் அந்த இயற்கை லிங்கத்தைப் பார்த்தபோது கிடைத்த பரவச அனுபவம் பயணத்தில் எதிர்கொண்ட கஷ்டங்களை மறக்கடித்துவிடுகிறது.

முதலில் சென்னையிலிருந்து புதுடெல்லிக்கும் அங்கிருந்து ஜம்முவுக்கும் ரயில் பயணம். புதுடெல்லியிலிருந்து ஜம்முவுக்குச் செல்ல 18 மணி நேரம் ஆகிறது. சிரம பரிகாரம் முடித்த பின்னர் ஒரு நண்பகல் வேளையில் கட்ராவுக்குப் புறப்பட்டோம். டெல்லிக்கு ரயிலேறியவுடனேயே ஆங்காங்கு கிடைக்கும் உணவுகளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்துவிடுவது அவசியம்.

மலை அடிவாரப் பகுதியில் அமைந்திருக்கிறது கட்ரா. இங்கிருந்து மாதா ஸ்ரீ வைஷ்ணவி ஆலயம் செல்வதற்கு மலைமீது ஏற வேண்டும். நடக்க இயலாதவர்களை டோலியில் அமர்த்தித் தூக்கிச் செல்கிறார்கள். கோவேறுக் கழுதை இனத்தைச் சேர்ந்த மட்டரகக் குதிரைகளிலும் அழைத்துச் செல்வார்கள். பாதசாரிகளுக்குக் குறைந்தது எட்டு முதல் பன்னிரெண்டு மணி நேரம் ஆகும். சபரிமலை பெரிய பாதையைப் போல இரண்டு மடங்கு பெரியது இது.

வழி நன்றாக இருக்கும். சிமெண்ட் ரோடுகளும் படிக்கட்டுகளும் உண்டு. ஒரே விஷயம் நமது பயணத்தை இயற்கையின் கரங்களில் ஒப்படைத்துவிட வேண்டும். எஞ்சியவற்றை எல்லாம் வல்ல இயற்கை பார்த்துக்கொள்ளும் எனும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர வேண்டியதுதான்.

சூறாவளியுடன் கடும் மழை

நான் சென்ற நேரம், மாலை நான்கு மணி. ஆனால், மதிய நேரம் போல் சூரியன் சுடர்விட்டது. ஏழு மணி ஆகியும் வெளிச்சம் குறையவில்லை. ஐந்து மணி நேர நடைப்பயணம் செய்திருப்போம். சிறு தூறலில் ஆரம்பித்து, கனமழையாகி, சூறாவளியுடன் கடும் மழையும் பெய்தது. யாத்ரீகர்கள் திகைத்து நின்றோம். எங்கள் யாத்திரை ஸ்தம்பித்தது. மழைக்குக் கட்டுப்பட்டு நின்றோம். அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் யாத்திரையை ஆரம்பித்தோம்.

இந்திய ராணுவத்தினர் எங்களை நெறிப்படுத்தி அனுப்பிவைத்தனர். ஒருவழியாக ஆலயம் சென்றோம். அதிகக் கூட்டம். வளைந்து செல்லும் வரிசை. மூன்று மணி நேரக் காத்திருப்புக்குப் பின், ஒரு சிறு குகைக்குள் வைஷ்ணவி அன்னையின் தரிசனம். மீண்டும் மலை இறங்கி எங்கள் வாகனம் தேடி ஸ்ரீநகர் பயணம் செய்தோம். சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான பயணம். இது மலைவழிப் பயணம் என்பதால் காலதாமதமானது.

மலை நீர் அருந்துவதாலும் உணவு மாற்றத்தாலும் ஒவ்வாமை காரணமாகவும் யாத்ரீகர்கள் பலர் வாந்தியாலும் வயிற்றுவலியாலும் துன்புற்றனர். இரண்டு கிலோமீட்டர்வரை நீண்ட குகைக்குள் செய்யும் பயணம் மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தும். ராணுவ, போலீஸ் பாதுகாப்பு அதிகம் கொண்ட வழிப்பாதை இது.

மருத்துவப் பரிசோதனையும் காப்பீடும்

ஸ்ரீநகரை அடைந்து அங்குள்ள மருத்துவ முகாமில் (ராணுவத்தின்) உடல்தகுதியைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் உள்ளதா என்று கேட்டுப் பரிசோதனை செய்வார்கள். அங்கிருந்து பொபூல்காம் எனும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.

இந்த யாத்திரைக்கு ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறையிடம் காப்பீடு செய்திருக்க வேண்டும். அதற்கான அடையாள அட்டை கேட்கப்படும். நமது உடைமைகளையும் சோதித்து அனுப்புவார்கள். இங்கிருந்து நடை ஆரம்பம். சந்தன் வாரிவரை ஆட்டோவும் உண்டு. அங்கு நமக்கு தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும். இட்லி, தோசை யும் உண்டு. நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். காசு கேட்க மாட்டார்கள். விரும்பினால் உண்டியில் காசு போடலாம்.

பஞ்சதரணி எனப்படும் பலவர்ண ஏரி

ஐந்து மணிக்கெல்லாம் பொழுது விடிந்துவிட்டது. காலை ஆறு மணிக்கு மேல் யாத்திரை வழி திறக்கப்படுகிறது. வழியில் சில்லென்று குளிர் காற்று வீசுகிறது. சேஷநாத் எனும் அடிவாரம் காவலர்களின் பலத்த பாதுகாப்பு வளையத்திலிருக்கிறது. இந்த இடத்தை அடைவதற்குள் சிலருக்கு மூச்சுவிடக் கடினமாக இருக்கும். இங்கு பிராணவாயு குறைந்து போகும். உடல் சற்றுச் சங்கடத்தை எதிர்கொள்கிறது.

இங்கு மருத்துவ முகாம் உண்டு. பிராண வாயு சிலிண்டர் உண்டு. இலவச உணவும் இருப்பிட வசதியும் உண்டு. இதைத் தொடர்ந்து நடக்க வேண்டும். சுமார் 15 கிலோமீட்டர் பயணத்தில் பஞ்சதரணி எனும் இடத்தில் அழகான, பல்வேறு நிறம் கொண்ட ஏரி உள்ளது. 90 டிகிரி செங்குத்துப் பாதையில் ஏறி உச்சிக்குச் சென்று இறங்க வேண்டும். இந்த இறக்கத்தில்தான் பஞ்சதரணி இருக்கிறது. இந்தப் பகுதியில் ஆக்ஸிஜன் சரிவரக் கிடைக்காது.

ஒருபக்கம் உயர்ந்த மலை, கீழே பள்ளத்தாக்கு. அதன் அடியில் ஏரிக்கரை. இதற்கு நடுவே பாதை. இந்தப் பாதையில் கழுதை சவாரி, டோலி சவாரி செல்வார்கள். இதில்தான் நாம் நடக்க வேண்டும். பிராண வாயு பிரச்சினையால் இங்குதான் அதிகம் மரணம் சம்பவிக்கும்.

யாத்ரீகர்கள் நடந்தபடி கீழே விழுவார்கள். மயக்கம் வரும். மூச்சுத் திணறும். மரணம் அடைவார்கள். ஆயிரத்தில் ஒருவர் இங்கே மரணம் அடைவதாகக் கூறப்படுகிறது.

முதலுதவி, மருத்துவர் இருந்தும் சிலநேரம் காப்பாற்ற இயலாத நிலை உருவாகும். நடக்கும் வழிகளில் புல்பூண்டு கிடையாது. மரங்கள் கிடையாது. மலைப்பரப்பு மொட்டையடித்தது போலக் காட்சி தருகிறது. கடுமையான குளிரிலிருந்து தப்பிப்பதற்காக ஸ்வெட்டர், ஜெர்கின், குல்லாய் ஆகியவை எல்லாருக்கும் அவசியமாகும். உணவு செல்லாது, தண்ணீர் குடிக்கவும் தோன்றாது. குளுகோஸ் நல்லது. புளிப்பு மிட்டாய் சற்று இதம் தரும்.

இதைத் தொடர்ந்து வரும் நெடிய பள்ளத்தாக்கெங்கும் பனிக்கட்டிகள் படர்ந்து இருக்கும். நடைவழியில் கவனம் தேவை; விபத்துகளைத் தடுக்க இயலாது. மலையடிவாரத்தின் ஓரமாகச் செல்ல வேண்டும். உதவிக்கு நமது ராணுவ நண்பர்கள் இருப்பார்கள். உடல் நடுங்கும். உயிர் தத்தளிக்கும். பயம்தான் காரணம். சோர்வு நம்மை ஆட்கொள்ளும். ஓய்வு இந்த இடத்தில் ஓய்வு மிக அவசியமானது. எடுக்க லங்கர் என்று அழைக்கப்படும் ஓய்விடங்கள் உண்டு. இங்கு யாத்ரீகர்களுக்கு ஜல்ஜீரா என்கிற பானம் தருவார்கள். அதைக் குடிக்க வேண்டும். அது உடலுக்கு நல்லது.

பனி லிங்கம் அருகே புறாக்கள்

இந்த மலையடிவாரத்தைக் கடக்கும் போதே எதிரில் அமர்நாத் (Holi Cave) குகை தெரியத் தொடங்கிவிடுகிறது. இந்தப் பாதையைக் கடந்தால் மீண்டும் ஒரு சிறிய ஏற்றம் உண்டு. அதைத் தொடர்ந்து சென்றால் நிறையக் கூடாரங்கள் தெரியும். கடைகள் இருக்கும். அந்த வழியில் சென்று மீண்டும் ஒரு மலையுச்சியின் பனி படர்ந்த மத்தியப் பகுதியில் பெரிய குகையின் நடுவே அமர்நாத் ஈஸ்வரன் பனிக்கட்டியின் வடிவில் காட்சியளிக்கிறார்.

நீண்ட வரிசையில் காத்திருந்து குகைக்குள் செல்ல வேண்டும். பெரிய மேடை உண்டு. சூலம் உண்டு. காக்கா, குருவிகள் வாழ முடியாத இடமாக இருந்தாலும், இரண்டு புறாக்கள் மட்டும் எப்போதும் இருக்கும் என்று கூறப்படுகிறது. பனிக்கட்டியாகக் காட்சியளிக்கும் லிங்கத்துக்கு வட நாட்டு முறை வழிபாட்டுடன் இனிமையான தரிசன அனுபவம் கிடைக்கும்.

அத்தனை போராட்டங்களையும் தாண்டி மனித வாழ்க்கையில் உணர நேரும் முழுமையை ஞாபகப்படுத்தி நிற்கிறது அமர்நாத் பனிலிங்கம்.

பேரருள் நல்குவார் புண்டரீகாட்சப் பெருமாள்


திருவெள்ளறை

அந்த மொட்டை கோபுரத்தைப் பார்க்கும்போது ஏக்கம் பீறிடுவதைத் தவிர்க்க முடியாதுதான். கோபுரத்துச் சிற்பங்கள்தான் எத்தனை நேர்த்தியாகக் காட்சி தருகின்றன! ஆனால், அவற்றைப் பார்க்கும் ஆவலில், அவற்றுடன் உறவாடும் வாஞ்சையில், பின்னிப் பிணைந்திருக்கும் செடி, கொடிகளையும் பார்க்கும் போது மனசு விண்டுதான் போகிறது. நான்கு அடுக்குகளுக்கு மேல் நிலவும் வெறுமை, உச்சியைக் காணாத அந்த கோபுரத்தின் வேதனையை வெளிப்படுத்துகிறது. இந்த ஆலயத்தை நிர்மாணித்ததாகக் கூறப்படும் பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மனின் இந்த முயற்சி முழுமை பெறாதது ஏன்? நிதிப் பற்றாக்குறையா,
அந்நியரின் ஆக்கிரமிப்பு என்ற இடையூறா? இந்த முயற்சிக்கு வித்திட்டவர், முயற்சி முற்றுப்பெறு முன்னரே மண்ணுக்குள் புதைந்துபோனாரா? 

அவருக்கு அடுத்து யாரும் முயற்சியை மேற்கொள்ளவில்லையா? ஒருவேளை ஸ்ரீரங்கத்து தெற்குப் பக்க மொட்டை கோபுரத்தை முழு கோபுரமாக்கிய அஹோபில மடத்தின் 41வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் சுவாமிகளைப் போல, இந்தத் திருவெள்ளறைக் கோயிலுக்குப் புரவலர் யாரும் கிடைக்கவில்லையா?  கேள்விகள் மனதை ஆக்கிரமிக்க, 18 படிகள் ஏறி அந்த மொட்டைக் கோபுரத்திற்குள் நுழைந்து நிமிர்ந்தால், எதிரே முழுமை பெற்ற இன்னொரு கோபுரம் நம்மை ஆறுதலாக வரவேற்கிறது. ஒரு சம்பிரதாயத்துக்காக, ஆலய அமைப்பின் பூரணமாக கோபுரம் திகழவேண்டுமே என்பதற்காக இந்த முழு கோபுரம் நின்றிருப்பதாகவே தோன்றுகிறது. 

எதிரே, மூலவர் சந்நதிக்கு முன்னால் நாழி கேட்டான் வாசல் ஒன்று இருக்கிறது. இந்த வாசலுக்கு ஏன் அந்தப் பெயர்? ஒருமுறை, ஊர் மக்களைக் காக்கும் பொருட்டு வெளியே உலா சென்றாராம் எம்பெருமான். அவர் திரும்பிவர காலதாமதமானதால், இந்த வாசலருகே வந்து நின்று காத்திருந்தாளாம் தாயார். எம்பெருமான் நேரம் கழித்து உள்ளே வந்தபோது, ‘‘ஏன் இத்தனை நாழி? (லேட்!)’’ என்று கேட்டாளாம். அதனாலேயே இந்த வாசல் ‘நாழி கேட்டான் வாசல்’ என்ற பெயர் பெற்றதாம். இந்த வாசலின் இரு புறங்களிலும் பத்திரனும் (சுக்கிரனின் மகன்; அசுரர்களுக்கு புரோகிதன்), சுபத்திரனும் (வசுதேவருக்கு பௌரவி மூலம் பிறந்தவன், யாதவ வீரன்) சுதைச் சிற்பங்களாக அமைந்திருக்கிறார்கள். 

வாசலுக்கு உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் பத்மநிதியும், வலதுபக்கம் சங்கநிதியும் சிலா ரூபமாகத் திகழ்கிறார்கள். எதிரே, சூரியன், இந்திரன், புண்டரீகாட்சப் பெருமாள், கருடன், சந்திரன் ஆகியோர் பத்து அடி உயரத்தில் பிரமாண்டமாக அருட்காட்சி நல்குகிறார்கள். மூலவர் பிராகார சுற்றில் கருடன் கர்வ பங்கமும், ஈஸ்வரனின் பிரம்மதோஷ நிவாரணமுமான இரு புராண காட்சிகள் சிற்ப வடிவில் பொலிகின்றன. மேற்குப் பகுதியில் சிவன், பிரம்மா, விஷ்ணு, கோவர்த்தன கிரியைத் தாங்கிய கிருஷ்ணன் என்று சிற்பங்கள் தம் அழகால், நம்மை சில விநாடிகள் நிறுத்தி வைக்கின்றன. வலம் வந்தால், சற்று உயரத்தில், உத்திராயண வாசல், மூலவர் தரிசனத்துக்காக கதவுகள் திறந்து நம்மை அழைக்கிறது. 

அது என்ன உத்தராயண வாசல்? பரமபதமான வைகுண்டத்தை நமக்கு நினைவுபடுத்தும் உத்திதான் இது. அங்கே அமைந்துள்ளதைப் போலவே இந்த ஆலயத்திலும் மூலவரை (ஸ்ரீமன் நாராயணனை) தரிசிக்க இரண்டு வாசல்கள். ஒன்று இந்த உத்திராயண வாசல்; இன்னொன்று தட்சிணாயன வாசல். ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயண வாசல் வழியாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தட்சிணாயன வாசல் வழியாகவும்தான் கருவறைக்குச் சென்று பெருமாளை சேவிக்க முடியும். அவரவர் மோட்ச காலத்திற்கேற்ப ஸ்ரீமன் நாராயணனை வைகுண்டத்தில் சேவிக்கப் போகும் இறுதி நாளின் ஒத்திகையாகவே இந்த தரிசன முறையை எடுத்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. அதாவது, இந்தப் பெருமாளை தரிசித்துவிட்டால், வாழ்வின் முடிவு மோட்சத்தில்தான் என்பது உறுதி. 

உள்ளே மண்டபத்தில் கிருஷ்ணன் தனி சந்நதியில் அருள்மாரி பொழிகிறார். அடுத்து 32 படியேறினால் புண்டரீகாட்சன் புன்முறுவலுடன் ‘வா’ என்று வாஞ்சையோடு அழைக்கிறார். அந்த நெடிதுயர்ந்த உருவம் நம் மன விகாரங்களைப் பொடிப்பொடியாக்குகிறது. மென்மையாக உற்றுப் பார்க்கும் விழிகள் நம் உள்ளத்தை உருக்கி கண்களில் நீர் பொழிய வைக்கின்றன. ‘உனக்கினி கவலை ஏன்? உன்னை நான் உற்றுப் பார்க்கும்போது அந்தக் கவலையெல்லாம் இனி என்னுடையதாகிறது. மனபாரம் நீங்கி மகிழ்ச்சி கொள்’ என்று சொல்வதுபோல தோன்றுகிறது. இவர் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், ஆதிசேஷன் அனைவருமே தம் தெய்வத் தோற்றம் விடுத்து மனித ரூபத்தில் பெருமாளுக்குப் பணிவிடைகள் செய்வது பார்த்தற்கரிய காட்சி.

கருவறை வலம் வரும்போது காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி சுதைச் சிற்பங்களும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. மொத்தத்தில் இந்தக் கருவறைச் சுற்று அனைத்துக் கடவுளர்களின் அருளாசியையும் பெற்றுத் தருவதாகவே அமைந்துள்ளது. உற்சவப் பெருமாளின் பெயரும் புண்டரீகாட்சன்தான். பெருமாளை தரிசித்த பின், வெளிச்சுற்றில், தனி சந்நதி கொண்டிருக்கும் செண்பகவல்லி என்ற பங்கயச் செல்வித் தாயாரை சேவிக்கலாம். தாயார் கோயில் கொண்டிருப்பது என்னவோ வெளிச்சுற்றில்தான்; ஆனால், இந்தக் கோயிலைப் பொறுத்தவரை முதல் மரியாதை தாயாருக்குதான். திருவெள்ளறை என்ற இந்தத் தலத்தின் பெயரே, மகாலட்சுமி இங்கே தாயாராக எழுந்தருளியதன் பொருட்டு உருவானதுதான். 

‘வண்டல் நந்தாத இப்பெருமான் கரிமறைய
வளர் சாலிப் பழனம் நண்ணும்
கொந்தாரும் பொழில் திருவெள்ளறை
புண்டரீகக் கண்ணன்’

 என்கிறது திவ்யசூரி சரிதம். அதாவது, இவ்வுலக ஆன்மாக்களை எல்லாம் தூய்மைப்படுத்தி, தன்னைப் போலவே பேரின்ப நிலையில் வைக்க வேண்டும் என்று திருமகள் நாராயணனுக்கு ‘ஆணை’யிட்டதாகவும், அதனாலேயே பரந்தாமன் அர்ச்சாவதார மூர்த்தியாக இந்தத் தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறது திவ்யசூரி சரிதம். இந்தத் திருவெள்ளறை எப்படிப்பட்டதாம்? திருமகளே வந்துவிட்டதால் வற்றாத வளம் கொழிக்கும் பூமியாகத் திகழ்கிறதாம். பயிர் உற்பத்திக்கு ஆதாரமான வண்டல் மண் நிறைந்திருக்கும் பகுதி இது. அதனால் இங்கே விளையும் நெற்பயிர்கள், நின்றுகொண்டிருக்கும் உயரமான யானைகளையும் மறைக்கும் அளவுக்கு ஓங்கி உயர்ந்து, அடர்ந்து வளரக்கூடியவையாம்! அத்தகைய செழிப்பான வயல்களைக் கொண்ட பூமி இது. 

மகாலட்சுமியின் கடாட்சம் இந்தத் தலத்தில் பொலிவதால், இந்த பூமி முழுவதுமே தாயாருக்குதான் சொந்தம்! அதனால்தான் வீதி உலா செல்லும்போது முதலில் தாயார் செல்ல, பெருமாள் அவளைப் பின்தொடர்ந்து செல்கிறார். அதேபோல கோயிலுக்குத் திரும்பும்போதும் தாயார் முதலில் வந்து கோயிலுக்குள் புக, எம்பெருமான் தொடர்கிறார். இதே ஆலயத்தில் ராமானுஜர் பல்லாண்டு காலம் தங்கியிருந்து அருட் சேவை புரிந்திருக்கிறார். தான் உண்ட அமுதை ராமானுஜனுக்கும் கொடுக்கச் சொல்லி, தாயாரிடம் சொல்ல, அதன்படி தாயாரும் அளித்து ராமானுஜரின் தினப்பசியை ஆற்றியிருக்கிறார். இதே நடைமுறை இன்றளவும் ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இப்படிப் பசியறிந்து உணவிடும் தாய்மை உணர்வு கொண்ட செண்பகவல்லித் தாயாரைத் தொழுவோருக்குக் குறை ஒன்றும் இல்லை என்பது அனுபவபூர்வமான உண்மை. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தாயாரை உளமாற வணங்கி, கோயில் பிரசாதத்தை உட்கொண்டால், தடைகள் விலகி ஓட, விரைவில் திருமணம் முடியும்; புத்திர பாக்கிய ஏக்கமும் நிவர்த்தியாகும் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள், பக்தர்கள். தசாவதார சந்நதியை அடுத்து சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன் மிகப் பெரிய உருவினராகக் காட்சியளிக்கிறார். அவருக்கு முன்னால் உற்சவர். சக்கரத்தாழ்வார் மூலவருக்கு தைலக்காப்பு மட்டும் நடைபெறுகிறது. இவர் கிரகக் கோளாறுகளை நிவர்த்தி செய்கிறார். சருமத் தொல்லைகளையும் சரிசெய்து அருள்கிறார். 

சரி, இந்தக் கோயில் இங்கே உருவானதற்கான புராணத் தகவல்களைப் பார்க்கலாமா? ஸ்ரீராமனுடைய குலத்தின் மூதாதையரில் ஒருவர் சிபி சக்கரவர்த்தி. இறைவனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில், பாரதத்தின் தென்பகுதிக்கு வந்தார். அயோத்தியிலிருந்து வந்த அவருக்கு எண்ணற்ற தலங்களைத் தரிசித்தாலும் எங்குமே பரந்தாமனை பார்க்க முடியாத ஏக்கம் வலுத்தது. ஆனாலும் முயற்சியில் சற்றும் தளர்ச்சியை சேர்க்காமல் தொடர்ந்து தேடினார். மிகச் சரியாக திருவெள்ளறை என்று பின்னாளில் அழைக்கப்பட்ட இந்தத் தலத்துக்கு வந்தார். இங்கே கால் பதித்ததுமே புத்துணர்வு தன்னை அரவணைப்பதை உணர்ந்தார். இறைவனைக் கண்டுவிட முடியும் என்ற நம்பிக்கை உறுதியானது. 

அப்போது அவர்முன் ஒரு வெள்ளைப் பன்றி ஓடியது. அப்படி ஒரு பிராணியைப் பார்த்தறியாத அவர், அதன் அழகில் மயங்கி அதனைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அதன் பின்னாலேயே ஓடினார். அவருக்குப் போக்குக் காட்டியபடியே ஓடிய அந்தப் பன்றி சற்றும் எதிர்பாராத வகையில் மிகச் சிறிய ஒரு புற்றுக்குள் புகுந்து மறைந்தது. அத்தனை பெரிய பன்றி இத்தனை சிறிய புற்றுக்குள் எப்படி ஒடுங்கியது! வாழ்க்கைத் தத்துவம் ஏதோ புரிவது போலிருந்தது சிபிக்கு. சுற்றுமுற்றும் பார்த்த சிபி, அங்கே புற்றுக்கு அருகில் மார்க்கண்டேய மகரிஷி தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார். தவம் கலைந்த ரிஷி, சக்கரவர்த்தியைப் பார்த்து அவர் அங்கு வந்திருக்கும் காரணத்தை வினவினார். சிபியும் இறைவனை தரிசிக்கும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். 

வெண் பன்றி ஒளிந்து மறைந்த புற்றுக்குப் பால் அபிஷேகம் செய்யுமாறு அறிவுறுத்தினார் மார்க்கண்டேயர். அவரும் அப்படியே செய்ய, அந்தப் புற்றிலிருந்து ஒரு பேரொளி தோன்றியது. அதனூடே பரந்தாமன், புண்டரீகாட்சனாக, தாமரைக் கண்ணனாக, பிரத்யட்சமாக தரிசனம் தந்தார். மெய்சிலிர்த்துப் போனார் சிபி. அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். தன் ஜன்மம் சாபல்யம் அடைந்த நெகிழ்ச்சியில் நெக்குருகினார். அந்த நொடியில் பரந்தாமன் மறைந்தார். திடுக்கிட்ட சிபி, தனக்கு இந்த அளவிலாவது அந்தப் பேரருள் தரிசனம் தந்தமைக்குக் காரணமான மார்க்கண்டேயருக்கும் தாள் பணிந்து நன்றி தெரிவித்தார். அந்த நன்றிக்குக் காணிக்கையாக மன்னனிடம் ஓர் உதவி கேட்டார்: ‘‘நீ பரந்தாமனின் திவ்ய தரிசனம் கண்டாயே, அந்த மூர்த்தியின் அர்ச்சாவதாரத்தைப் பிறரும் காணச் செய்ய வேண்டியது உன் பொறுப்பு. 

அதற்காக நீ 3700 வைணவர்களை உன் நாடு மற்றும் பிற இடங்களிலிருந்து அழைத்து வா. அவர்களை இங்கே குடியமர்த்து. நீ பாலால் அபிஷேகம் செய்தாயே அந்தப் புற்றை மையமாக வைத்து புண்டரீகாட்சனுக்கு ஒரு கோயில் உருவாக்கு.’’உடனே அந்தப் பணியை சிரமேற் கொண்டார் சிபி. பாரத தேசமெங்கும் சென்று 3700 வைணவர்களைத் திரட்டி அழைத்து வந்தார். அனைவரும் மார்க்கண்டேயரின் பாதம் பணிந்தனர். மன்னர் கோயிலை நிர்மாணிக்கும் பணியைத் தொடங்கினார். தனக்குப் பரந்தாமன் எவ்வாறு காட்சியளித்தாரோ அதே தோற்றத்தில் அவரது அர்ச்சாவதாரத்தை உருவாக்கச் சொன்னார் மன்னர். ஆலயம் பிரமாண்டமாக எழுந்தது. எல்லாம் நிறைவு பெறும் தருணத்தில் ஒரு குறை. ஆமாம், மொத்தம் 3700 பேரில் ஒருவர் மரணமடைந்துவிட்டார். 

அடக்கடவுளே, பணி முற்றுப் பெறும் கட்டத்தில் இப்படி ஒரு இடையூறா? இந்த ஒருவருக்கு பதிலாக மாற்று வைணவரை நான் எங்கே தேடிக் கொண்டு வருவேன் என்று பெரிதும் வருந்தினார். அப்போது புதிதாக ஒரு வைணவர் அங்கே வந்து சேர்ந்தார். வியப்பால் விழி தெறிக்கப் புதியவரை சிபி மன்னன் பார்த்தபோது அவர் மென்மையாகச் சிரித்தார். ‘‘உன்னுடைய இந்தக் குறையையும் நானே தீர்த்து வைக்கிறேன்,’’ என்றது அந்தச் சிரிப்பு. வைணவராக வந்த பகவான் எப்போதும் தன்னைக் கைவிடமாட்டான் என்று அகமகிழ்ந்த சிபி, தன் குறை தீர்த்ததுபோலவே தரணியில் அனைவரது குறையும் தீர்த்து வைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டான். கோயில் நிமிர்ந்து எழுந்தது. 

கோயிலுக்கு வெளியே துவஜஸ்தம்பத்துக்கு முன்னால் ஒரு பலிபீடம் இருக்கிறது. இதனை பிரார்த்தனை பீடம் என்றழைக்கிறார்கள். இந்த பலிபீடத்துக்கு பக்தர்கள் திருமஞ்சனம் செய்கிறார்கள். தம் எந்த வேண்டுதலுக்காகவும் இவ்வாறு திருமஞ்சனம் செய்தால் எண்ணியது ஈடேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. கோயிலுக்குப் பின்னால் நாலு மூலைக்கேணி எனப்படும் ஸ்வஸ்திகா கிணறு ஒன்று உள்ளது. கம்பன் அரையன் என்பவரால் உருவாக்கப்பட்ட கிணறு இது. நான்கு புறங்களிலிருந்தும் படிகளில் இறங்கி இந்தக் கிணற்றில் நீராடலாம். ஒரு பக்கத்தில் குளிப்பவரை அடுத்த பக்கத்திலிருந்து குளிப்பவரால் பார்க்க முடியாது. இந்த ரகசிய குளியலை ஒட்டியே இந்தக் கிணற்றை ‘மாமியார்மருமகள்’ கிணறு என்று குறிப்பிடுகிறார்கள். 

இந்தக் கோயிலுக்கும், கிணற்றுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால், கிணற்றின் மேல் பரப்பில் நந்தி, நாகர் சிலைகள் பதிக்கப்பட்டுள்ளன. புண்டரீகாட்சன் கோயிலுக்குள் சைவவைணவ ஒற்றுமைச் சின்னங்கள் பலவற்றைப் பார்க்க முடிகிறது. ஆனால், இந்த கிணறோ, ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத ரகசியத்தைக் கொண்டிருக்கிறது! இந்தத் தலத்துக்கு இன்னொரு பெருமை எங்களாழ்வான், உய்யக்கொண்டார் ஆகிய ஆசார்யப் பெருமக்கள் அவதரித்த தலம் இது. மார்ச் 16ம் தேதி இக்கோயிலில் உற்சவம் ஆரம்பமாகிறது.

எப்படிப் போவது?

திருச்சிதுறையூர் பாதையில், 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது இக்கோயில். ஸ்ரீரங்கத்திலிருந்து 10 கி.மீ. நிறைய பேருந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதிகள் உள்ளன.