Saturday 22 July 2017

துயர் துடைக்கும் துர்க்கை

தொடர்புடைய படம்

கும்பகோணம் - அம்மன்குடி

பிரமாண்டமாகப் பரந்தெழுந்த மகாசக்தியின் ஒளியையும், உருவமும் பார்த்து தேவர்கள், உணர்வு மேலீட்டால் ‘ஜெய் துர்க்கா...’ என விண்முட்டும் கோஷம் எழுப்பினர். அரக்கன் மகிஷனிடமிருந்து தங்களைக் காக்குமாறு முறையிட்டனர். சகல ஆயுதங்களையும் அவள் முன் மலையாகக் குவித்தனர். 
ராஜராஜேஸ்வரியாக நின்றவளுக்கு ராஜசிம்மத்தையே கொடுத்தான் இமயத்து ராஜன் ஹிமவான். அந்த சிம்மத்தின் கர்ஜனை அசுரன் மகிஷனின் காதை செவிடாக்கியது. மகாலக்ஷ்மி மாபெரும் உருவோடு அவனெதிரே நின்றாள். மகிஷன் அவளை மதியாது ஆயுதங்களை வீசினான். அவற்றைப் புல்லாகக் கிள்ளி எறிந்தாள் தேவி. அசுரக் கூட்டம் அதற்குள் பேயாகப் பறந்து தாக்கினர். 

அன்னை அசுரர்களின் உடலைச் சீவி எறிந்தாலும், உள்ளிருக்கும் ஜீவன்களை பரம கருணையாக தன்னிடம் அழைத்துக் கொண்டாள். தேவர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது! இறுதியாக எருமைத் தலையனான மகிஷனை வாரி எடுத்தாள் துர்க்கை. தன் இரு பாதங்களையும் மகிஷன் மீது வைத்து நசுக்கினாள். மகிஷன் அலறி மலைபோலச் சரிந்தான். தேவர்கள் துர்க்கா மகாலக்ஷ்மியை பூத்தூவி அர்ச்சித்தனர். இவளே ‘மகிஷாசுரமர்த்தினி’ எனப்படுபவள். ‘மர்த்தனம்’ என்றாலே ‘மாவுபோல் அரைப்பது’ என்று பொருள். மகிஷனின் இறுகிய கல் போன்ற அகங்காரத் தலையை சிதைத்து வெண்மாவாய் இழைத்ததாலேயே ‘மகிஷாசுரமர்த்தினி’ என அழைக்கப்படுகிறாள்.   
  
பெரும் வதம் முடித்த துர்க்கா தேவி நானிலமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ, அது கங்கையாகப் பொங்கியது. தேவி தியானத்தில் அமர்ந்ததால் இத்தலத்தை ‘தேவி தபோவனம்’ என அழைத்தனர். ராஜராஜசோழனின் படைத் தலைவரான பிரம்மராயரின் சொந்த ஊர் இது. இங்கு கோயில் கட்டி அதற்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டினார். கோயில் நடுவாந்திர அளவில் இருந்தாலும், கீர்த்தியிலும், புகழிலும் விஞ்சி நிற்கிறது. ஈசன் சந்நதிக்கும், அம்பாள் சந்நதிக்கும் இணையாக தனிக் கருவறையில் துர்க்கா தேவி சிம்ம வாகனத்தில் எழில் கொஞ்சும் திருமுகத்தோடும், அருள் பூக்கும் கண்களோடும் அருட்பாலிக்கிறாள்.   

பிரம்மராயர் கங்கைவரை போர்புரிந்து திரும்பியபோது மிக அழகான விசித்திரமான கல்லாலான விநாயகர் சிலையைக் கொண்டு வந்தார். பகல் பொழுதில் சூரிய கிரணங்கள் பட, சிலை வெண்மையாக ஒளிரும். அந்தி சாயும்போது சிலை இருளாக கறுக்கும். கை வைத்தால் வழுக்கும் கல் அது. இப்போதும் புத்தம் புதிதாக அது பொலிவது வியப்பளிக்கிறது. கோயிலின் முகப்பு வாயிலில் உள்ள இந்த விநாயகரைத் தரிசித்து உள்ளே சென்றால் இடது புறத்தில் துர்க்கையின் சந்நதி. பிரம்மராயர் காலத்திய துர்க்கை சிலை காலத்தால் சற்றே பழுதுபட்டதால், அதே அழகு கொண்ட சிலையை அறுபது வருடம் பிரதிஷ்டை செய்துள்ளனர். பழைய சிலையையும் உள்ளேயே புதிய துர்க்கைக்கு அருகேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். 

துர்க்கா சிம்ம வாகனத்தில் எண்கரங்களோடு அமர்ந்திருக்கும் கோலம் பார்க்க உள்ளம் கொள்ளை கொள்ளும். அந்த மென்மையான புன்னகை, நம் அகம் முழுதும் அருளமுதத்தை நிரப்பும். தன் பாதம் பணிவோருக்கு கைமேல் கனியாக வெற்றியை ஈட்டித் தருவாள் இந்த அஷ்டபுஜ துர்க்கை. வாழ்வின் வெம்மை தாங்காது பயம் என்று கைகூப்பி நின்றோருக்கு அபயமளித்து அருட் கடலில் ஆழ்த்துவாள் இந்த அம்மன்குடி நாயகி. கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது அம்மன்குடி. கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில்அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும் இக்கோயிலை அடையலாம்.                                

No comments:

Post a Comment