ஒரு ஞானியிடம் சிலர், ''நாங்கள் புனித நதிகளில் நீராடி புணணியம் சேர்க்க செல்கிறோம்.! நீங்களும் வந்தால் நன்றாக இருக்கும்,'' என அழைத்தனர்.
''இப்போது வரும் சாத்தியம் இல்லை,'' என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயைக் கொடுத்து, ''நீங்கள் புனித நதிகளில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் நனைத்து என்னிடம் திரும்பக் கொண்டு வந்து தாருங்கள்,'' என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.
அவர் அந்த பாகற்காயை நறுக்கி, ஆளுக்கு ஒரு துண்டு கொடுத்தார்.
''புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க, இனிக்கும்,'' என்றார்...!
ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள், வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது. பாகற்காய் தன் குணத்தைக் காட்டியது.
ஞானி அவர்களிடம்,"பார்த்தீர்களா? புனிதநதியில் முழுகினாலும், பாகற்காய் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளாது. அதுபோல, நமது கெட்ட குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும், பயன் கிடைக்காது. மனதில் மாற்றம் வந்தால் தான் புண்ணியம் ஏற்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment