Monday 10 July 2017

பழநிப் பதிகம்

தொடர்புடைய படம்

பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர். தலங்கள்தோறும் சென்று முருகப்பெருமானை தரிசித்தவருக்கு, காஞ்சியில் முருகப்பெருமானே வழிகாட்டி குமரக்கோட்டத்துக்கு அழைத்துச்சென்ற அற்புதமும் நிகழ்ந்தது.  

பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானின் எண்ணற்ற தலங்களை தரிசித்திருந்தாலும், அவரால் பழநிக்குச் சென்று பழநி ஆண்டவரை தரிசிக்க முடியவில்லை. அதன் பின்னணியில் அமைந்துள்ள நிகழ்ச்சி இதுதான். 

பாம்பன் சுவாமிகளின் இயற்பெயர் அப்பாவு என்பதாகும். அவர் ஒருநாள் அங்கமுத்து பிள்ளை என்பவரிடம், தான் பழநிக்குச் செல்லப்போவதாகக் கூறினார். எங்கே அவர் பழநிக்குச் சென்றால் திரும்பி வராமல் சந்நியாசம் வாங்கிவிடுவாரோ என்ற எண்ணம் அங்கமுத்து பிள்ளைக்கு. எனவே, அவர் பாம்பன் சுவாமிகளிடம், ‘`நீ பழநிக்குப் போவதற்கு முருகன் உத்தரவு கொடுத்துவிட்டானா?'’ என்று கேட்டார். 

உடனே பாம்பன் சுவாமிகள் சற்றும் தயங்காமல், ‘`ஆம், பழநிக்கு வருவதற்கு எனக்கு முருகப்பெருமான் உத்தரவு கொடுத்துவிட்டான்’’ என்று கூறினார். உண்மையில் அவருக்கு அப்படி ஓர் உத்தரவு கிடைக்கவில்லை. அன்று மதியம் அவர் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு இருந்தபோது, அவருக்கு நேராக வானத்தில் காட்சி கொடுத்தார் முருகப்பெருமான். அவருடைய தோற்றம் அச்சுறுத்தும் வண்ணம் இருந்தது. தன் வலக் கை சுட்டு விரலை நீட்டி, ‘`நானா உன்னைப் பழநிக்கு வரும்படி அழைத்தேன்? ஏன் அப்படி சொன்னாய்?'' என்று அச்சுறுத்துவதுபோல் மிரட்டலாகக் கேட்டார். பாம்பன் சுவாமிகளோ சற்றும் அஞ்சாமல், ‘`ஐயனே, நான் பொன்னும், பொருளும் உன்னிடம் பெற வேண்டும் என்பதற்கா பொய் சொன்னேன்? உன் அருள் பெற்று துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்றுதானே விரும்பினேன்’' என்று கூறினார்.      

``எப்படிப் பார்த்தாலும் என் பக்தனான நீ பொய் சொன்னது தவறுதான். இனி என் உத்தரவு கிடைக்கும் வரை நீ பழநிக்கு வரவே கூடாது'’ என்று உத்தரவும் போட்டுவிட்டார். பாம்பன் சுவாமிகள் ஸித்தி அடையும்வரை அவருக்கு பழநிக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிக்கும் பேறு கிடைக்கவே இல்லை. அப்படியிருந்தும் பழநி முருகப்பெருமானை நேரில் தரிசித்ததுபோன்ற அனுபவத்தில் பாம்பன் சுவாமிகள் `பழநிப் பதிகம்' என்று பத்து பாடல்களை இயற்றி அருளினார். அவற்றில், பழநி முருகப் பெருமானின் திருவுருவத்தை அப்படியே வர்ணிக்கும் வகையில் அமைந்த ஒரு பாடல் இதோ உங்களுக்காக...

முண்டிதம் இல் சிறு சிகையும் இடையில் அணி கவுசனையும் 
முழு மதியம் என மிளிரும் முகமும் ஒருகைத் 
தண்டும் உரம் உறு புரியும் இளமை உடை உருவும் எழில் 
தர இலக இருடி சுரர் அடிகள் எவரும் 
கண்டு நலன் அடைய என அமிர்தம் மழை பொழி பெரிய 
கருவி கவி பழநிமலை உறை பெரியவன் 
தொண்டன் என உள எனது மனதில் உளன் இரவு பகல் 
துணையும் அவன் அணைவும் அவன் நினைவும் அவனே.

இந்தப் பாடலைப் பக்தியுடன் பாராயணம் செய்து, மானசீகமாக பழநி ஆண்டவரை வழிபட்டால், பழநிக்குச் சென்ற புண்ணியம் கிடைப்பதுடன், அழகன் முருகன் அருளால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

No comments:

Post a Comment