Wednesday, 12 July 2017

மனம் தடம் மாறிப் போகாமல் இருப்பதற்கு எளிய வழி விரதம்

தொடர்புடைய படம்

ஆன்மீகப் பாதையில் இருப்பவர், வெளிப்புறச் சூழல்களின் காரணமாக தடம் மாறிப் போகாமல் இருப்பதற்கு, விரதம் ஒரு எளிய வழியாகும்.

சத்குரு: மனித உடல், 40 முதல் 48 நாட்களுக்கு ஒருமுறை ஒருவித சுழற்சிக்கு உள்ளாகிறது. இந்த 48 நாட்களை ஒரு “மண்டலம்“ என்கிறோம். இந்த சுழற்சியில், மூன்று குறிப்பிட்ட நாட்களில், உடலுக்கு உணவு தேவைப்படுவதில்லை. இந்த 3 நாட்கள் எவை என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். மேலும், அத்தகைய நாட்கள் ஒரே காலஅளவுள்ள இடைவெளியில்தான் ஏற்படும் என்றும் சொல்ல இயலாது. நீங்கள் இந்த நாட்கள் எவை என்று கண்டறிந்து, உங்கள் உடலுக்கு உணவு கொடுக்காமல் விட்டுவிடுங்கள். இந்த எளிமையான முறையால், ஆரோக்கியம் சம்பந்தமான பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். 

இவ்வளவு மாவு சத்துக்கள், இவ்வளவு புரதங்கள், இவ்வளவு உயிர் சத்துக்களைச் சாப்பிட வேண்டும் என்பன போன்ற முட்டாள்தனமான கோட்பாடுகளை விட்டுவிட்டால், உடலமைப்பின் சுழற்சியை கவனித்து அறிந்துகொள்ள முடியும். தங்கள் உடல் சொல்வதை கேட்பதில் கவனம் செலுத்தினால், இந்த மூன்று நாட்களையும் பெரும்பாலான மனிதர்கள் சுலபமாக அறிந்து கொள்வார்கள். 

அதனால்தான், 48 நாட்களில் மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். யாரோ ஒருவர் தன் உடலமைப்பைக் கூர்ந்து கவனித்து, அதிலிருந்து இந்தக் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், மக்களுக்கு இந்த விழிப்புணர்வு இல்லாததால், அவர்கள் ஏகாதசியைத் தேர்ந்தெடுத்தனர். கவனித்துப் பார்த்தால், 48 நாட்களில் மூன்று ஏகாதசிகள் வரும். இது அவர்கள் சொன்ன கணக்கோடு ஒத்துப் போய்விடுகிறது. 

ஏகாதசி என்றால் பௌர்ணமிக்குப் பிறகு 11 ஆம் நாள், மற்றும் அமாவாசைக்குப் பிறகு 11 ஆம் நாள் என்றும் பொருள். 

இந்தப் பூமியே அந்நாளில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. எனவே, அன்று நாம் நம் உடலை இலகுவாகவும் தயாராகவும் வைத்திருந்தால், நம் விழிப்புணர்வு உள்நோக்கித் திரும்பும். அந்நாளில் நம் உள்நிலையின் கதவுகளைத் திறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அன்று நீங்கள் வயிறு நிரம்ப உணவு உட்கொண்டு, விழிப்புணர்வின்றி சோம்பலாக இருந்தால், உள்நிலையை நீங்கள் கவனிக்க மாட்டீர்கள். எனவே விழிப்புடன் இருப்பதற்கும், உடலை தூய்மைப்படுத்துவதற்கும், அன்று ஒரு நாள் உணவருந்தாமல் இருக்கவேண்டும். 

நீங்கள் முதல் நாள் இரவு உணவருந்தி இருப்பீர்கள். ஏகாதசி அன்று இரவுதான் அடுத்தவேளை உணவு அருந்தவேண்டும். உங்களால் உணவருந்தாமல் செயல்பட முடியாவிட்டால் பழங்களை உணவாக எடுக்கலாம். அது வயிற்றை இலகுவாக வைத்திருக்கும்.

உணவைக் கட்டாயப்படுத்தி துறப்பதல்ல நோக்கம். எல்லாவற்றிலும் விழிப்புணர்வோடு செயல்புரிவதுதான் நோக்கம். நாம் சாப்பிடுவதை கட்டாயத்தினால் செய்யாமல், தேர்ந்தெடுத்துச் செய்கிறோம். சில இந்திய மொழிகளில் ‘ஃபல்’ என்றால் ‘பழம்‘ என்று பொருள். ஆனால், ‘ஃபல்’ என்பதை ‘பல’ என்று பொருள் கொண்டு, இன்று தென்னிந்தியாவில் ஏகாதசியன்று, ‘பல ஆகாரம்‘ அதாவது ‘பலகாரம்‘ செய்து சாப்பிடுகிறார்கள். 

மக்கள், தாம் அன்றாடம் சாப்பிடும் சாதம், சாம்பார், போன்றவற்றைச் சாப்பிடாமல், அதற்கு பதிலாக, வகை வகையான உணவுகளை, பெரும்பாலும் எண்ணெயில் வறுத்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்துவிட்டனர். அன்றுதான் அத்தகைய உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பதால் ‘சரி... பழம் மட்டும் சாப்பிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மக்கள் ‘பல’ என்ற வார்த்தையை வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்டு, அன்றைய தினம் ஒரு கட்டு கட்டிவிடுகிறார்கள். 

ஆன்மீகப் பாதையில் இருக்கும்போது, மிகச் சிறிய வசதியின்மை வந்தாலும், பெரும்பாலான மக்கள் தம் பாதையில் துவண்டுவிடுவார்கள். எனவே, ஆன்மீகப் பாதையில் இருப்பவர், வெளிப்புறச் சூழல்களின் காரணமாக தடம் மாறிப் போகாமல் இருப்பதற்கு, விரதம் ஒரு எளிய வழியாகும். விரதம் இருக்கும்போது உங்களுக்குப் பசித்தால், படுத்துத் தூங்குவதற்கு பதிலாக, விழிப்புடன் செயலாற்றுங்கள். இன்னும் அதிகமாக பசிக்கும்போது, விழிப்புடன் இருந்து, ஆன்மீகப் பயிற்சிகளில் கவனத்தைச் செலுத்துங்கள். இதுதான் பயிற்சியின் மிக முக்கிய அம்சம். இதனால், வெளிப்புறச் சூழல்கள் உங்களை தடம் புரளச் செய்யாது.

விரதத்தின்போது, தாகம் எடுத்தால், தண்ணீர் குடிக்கலாம். களைப்பாக இருந்தால், குடிக்கும் தண்ணீரில் சில சொட்டு தேனையோ, எலுமிச்சை சாறையோ கலந்து குடிக்கலாம். அது உங்கள் நலனைப் பார்த்துக் கொள்ளும். 24 மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு கஷ்டமான விஷயமே அல்ல. உங்கள் உடலுக்கு அத்தனை வலிமை இல்லையென்றால், உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம். ஒரு வலிமையான உடலால் அத்தனை நேரம் உணவின்றி இருக்கமுடியும். 

விரதம் இருக்கும்போது, உங்கள் உடல் மிகவும் சிரமப்பட்டால், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் உடல்ரீதியாக பலமில்லாதவராக இருக்கலாம். அல்லது உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், விரதம் இருப்பதில் வெறும் மனப்போராட்டங்கள் இருந்து, வடைகளும் போண்டாக்களும் விண்கற்களைப் போல வந்து உங்களைத் தாக்கிக் கொண்டிருந்தால்...? அப்போது நீங்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும் !

No comments:

Post a Comment