Saturday 1 July 2017

தாயினும் சாலப் பரிந்தூட்டும் திருஈங்கோய்மலை இறைவன்


திருஈங்கோய் மலை என்பது சோழ நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இது, காவிரியின் வடகரையில், முசிறிக்கு அருகில் உள்ளது, இப்பொழுது இத்தலம் திருவேங்கிநாதர் மலை என்று திரிந்து வழங்கப்படுகிறது. காவிரியின் தென்கரையில் இருக்கும் கடம்பர் கோயில், வாட்போக்கி என்ற ரத்னகிரி, திருஈங்கோய் மலை என்ற மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தலங்கள் ஆகும். 

இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் மூன்று வேளைகளிலும் தரிசித்தால் நலம் உண்டு என்று பெரியோர்கள் கூறுவார்கள். “காலைக் கடம்பர், மத்தியான்னச் சொக்கர், அந்தித்  திருவெங்கி நாதர்’’ என்று இந்த முறையைப் பற்றி ஒரு பழமொழி அந்தப் பக்கங்களில் இன்றும்  வழங்கி வருகின்றது. ஈ என்றால் தேனீ, கோய் என்றல் பை. ஆக ஈங்கோய் என்றால் தேனீக்கள் வாழும் பையான தேனடை என்று பொருள். திருமுருகாற்றுப்படை எழுதிய புலவர் நக்கீரர் ஒருசமயம் ஈங்கோய் மலைக்கு வந்தார். 

மரங்கள் அடர்ந்த அந்தப் பகுதியில் பல மரங்களில் தென்பட்ட தேனடைகளிலிருந்து தேன் கசிந்து  ஒழுகிக் கொண்டிருந்தது. அங்கு குரங்குகள் அதிகமாக இருந்ததால், அவை கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருந்ததையும், அவற்றின் சேட்டைகளையும் கண்ணாறக் கண்டு மகிழ்ந்தார். ஒரு குரங்கு மாத்திரம் மரத்திற்கு மரம் தாவாது சற்று ஓய்வாகப் படுத்திருந்தது. 

நக்கீரர் அந்தக் குரங்கை ஊன்றிக் கவனித்தார். அந்தக் குரங்கிற்கு அருகில் மிக இளைய குட்டி ஒன்று இருந்தது. அப்போது தான் பிரசவிக்கப்பெற்ற குட்டி போலத்தோன்றியது. குட்டியை ஈன்றெடுத்த தாய்க் குரங்கு அந்தக் களைப்பினாலே எங்கும் போகாமல் அங்கேயே கிடந்து இளைப்பாறிற்று. குட்டி தனக்கு பால் வேண்டும் என்பதை கீச்சுக் கீச்சு என்ற கத்தலால் தன் தாய்க்கு உணர்த்தியது. உடனே  தாய்க் குரங்கு தன் இளைப்பையும் பாராது குட்டிக்கு அன்பாகப் பால் கொடுத்தது.  

அவ்வாறு பால் கொடுத்தும் குட்டியின் அழுகை நின்றபாடில்லை. அம்மா குரங்கு என்ன செய்வது என்று சுற்று முற்றும் பார்த்தது. அங்கு தேன் ஒழுகிக் கொண்டிருந்த ஒரு மரத்தின் கீழ் தேன் தேங்கியிருந்ததைக் கண்டது. சட்டென்று ஒரு தீர்மானத்திற்கு வந்து தன்னைக் கட்டிக் கொண்டிருந்த குழந்தையுடன் மெல்லத் தேன் தேங்கிய இடத்திற்கு வந்து, தன் கையைத் தேனில் தோய்த்து, அந்தத் தேனைக் குட்டிக்கு ஊட்டத் துவங்கியது. 

ஆனால், தான் அந்தத் தேனைச் சிறிதும் சுவைக்கவில்லை. என்ன தாயன்பு! ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்குவான்’ என்ற சொற்றொடர் மனிதருக்கு மட்டுமே ஏற்பட்டிருந்திருக்க வேண்டும்! தாய் தந்த பால் குட்டிக்குப் போதவில்லை போலும்! அதனால் கத்தியிருக்கிறது. இப்பொழுது தன் தாய் அளித்த தேனைச் சுவைத்து உண்டு மகிழ்ந்தது. இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த நக்கீரர் அப்படியே நெகிழ்ந்து போனார். உடனே இச்சம்பவங்களை இறைவனை இணைக்கும் எண்ணம்தான் அவருக்கு வந்தது.

“இந்த மந்திக்குத் தன் குட்டியிடம்தான் எத்தனை அன்பு! இப்படிப்பட்ட காட்சியைக் காண எனக்குக் கொடுத்து வைத்திருந்ததே! இறைவா உனக்கு நன்றி’’ என்று எண்ணி மகிழ்ந்தார் நக்கீரர். “அன்புக்குள் தாயன்பு மிகச் சிறந்தது. இனியதும் ஆகும். துன்பத்தை நீக்குவது. அதனால்தானே இறைவனுடைய அன்புக்கு அதைப் பெரியவர்கள் உவமை கூறுகிறார்கள்’’ என்று எண்ணி வியந்தார்.

அவருக்கு இறைவனைப் பற்றிய எண்ணம் மேலும் மேலும் தோன்றலாயிற்று. இறைவன்  திருவருளின் பெருமையை எண்ணி எண்ணி வியந்தார். “இறைவனிடம் அன்பு கொள்வதில் இரண்டுவகை  உண்டு. பூனைக்குட்டியை அதன் தாய் லாவகமாகத் தன் வாயினால் கவ்விக் கொண்டுதான் போகும். என்னதான் அதன் பற்கள் கூர்மையாக இருந்தாலும், அது குட்டியை மென்மையாகவே ஆனால், கீழே விழுந்துவிடாதபடி பற்றிக்கொண்டிருக்கும். 

ஆனால், குரங்குக் குட்டியோ தானாகத்தான் தன் தாயைப் பற்றிக் கொள்ளவேண்டும். தாய் பாய்ந்து பாய்ந்து எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் ஜாக்கிரதையாகத் தாயைப்  பற்றிக்கொண்டு பிடியை விடாமல் செல்லவேண்டும். குழந்தையின் முயற்சியின்றித் தாய் தன் குழந்தையைப் பற்றிக் கொள்ளும் அன்பைப் பூனையிடம் பார்க்கிறோம். அவ்வாறே இறைவனும் தன் அடியார்களுக்குக் கவலை ஒன்றும் இல்லாமல் தானே வலிய வந்து பாதுகாக்கிறான். இதனை மார்ஜால நியாயம் என்று சொல்வார்கள். 

இதற்கு நேர்மாறாக குரங்குக் குட்டி தன் தாயைப் பற்றிக் கொள்ள, தாய்க் குரங்கு அனாயாசமாக கிளைக்குக் கிளை தாவுகிறது. குட்டி பற்றை விட்டு விட்டால் அதற்கு ஆபத்துதான் உண்டாகும். இதைப்போலவே இறைவனை இடைவிடாமல் பற்றிக்கொண்டால் அவன் அருள் கிடைக்கிறது. இதனை மர்க்கட நியாயம் என்பார்கள். பூனைக்குட்டிக்குச் செயல் இல்லை ஆனால், குரங்குக் குட்டிக்குச் செயல் உள்ளவரை பயம் இல்லை. இறைவனிடம் செய்யும் பக்தியும் இவ்விரண்டிலும் அடங்கியிருக்கிறது.

மந்தியையும் அதன் குட்டியையும் கண்ட நக்கீரருக்கு இறைவனுடைய அருள், பேரானந்தமாகப் புரிந்தது. “அன்பர்கள் இறைவனை இறுகப் பற்றிக்கொண்டால் அவன் அவர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கி, இன்பத்தை உண்டாக்குகிறான். இந்த மந்தி தன்னைப் பற்றிக்கொண்ட குட்டிக்கு முதலில் பசியைப் பாலால் போக்கிப் பின்பு இனிமையான தேனைப் புகட்டி மேலும் மகிழ்ச்சியூட்டியது. 

இது எனக்கு என்னவோ இறைவன் இயல்புபோல் தோன்றுகின்றது. அவன் எழுந்தருளியிருக்கும் இந்த ஈங்கோய் மலையில் இத்தகைய காட்சிகள் அவன் அருளை நினைப்பூட்டும் வகையில் அமைந்ததுதான் எத்தனை பொருத்தம்!” என்று வியந்தார். தன் எண்ணத்தையெல்லாம் சுருக்கி  அமைத்து ஒரு பாடலையே பாடி விட்டார்.

‘ஈன்ற குழவிக்கு மந்தி இருவரைமேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.’

(பதினொன்றாம் திருமுறை 10-திருஈங்கோய்மலை எழுபது, 9வது பாடல்) ‘‘தான் பெற்ற குட்டிக்குத்  தாயாகிய மந்தி, மலைப்பக்கத்தின் மேலிருந்து ஒழுகிய தேனை, அதனருகிலே  சென்று, பிறர் காணும்படியாகத் தன் கை விரலால்  தோய்த்து ஊட்டும் சம்பவம் நிகழ்ந்த இந்த ஈங்கோயானது , தன்னை நம்பிய அடியார்களாகிய நம் மேல் படையெடுத்து வரக்கூடிய துன்பங்களைத் தீர்த்தருளும் இறைவன் எழுந்தருளியிருக்கும் மலையாகும்.’’ 

No comments:

Post a Comment