Sunday 9 July 2017

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை விளக்கும் மகாபெரியவா

mahaperiyava

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குலதெய்வம் நிச்சயம் உண்டு. காலம் காலமாக நம் முன்னோர்களால் வழிபட்டு வரும் தெய்வத்தையே நாம் குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். ஒவ்வொருவருக்கும் தன் தாய் எவ்வளவு முக்கியமோ, அதே போன்ற முக்கியத்துவத்தைக் குலதெய்வ வழிபாட்டிற்கு நாம் கொடுக்க வேண்டும்.

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை மகா பெரியவா தன் பக்தன் ஒருவனுக்கு எவ்வாறு உணர்த்துகிறார் என்பதைப் பார்ப்போம்.

ஒரு சமயம் மகா பெரியவா யாத்திரை மேற்கொண்டிருந்தார். அப்போது, அவர் ஒரு சிறு கிராமத்தில் முகாமிட்டுத் தங்கியிருந்தார். அங்கு வந்த பக்தர் ஒருவர் மிகுந்த கவலையான முகத்துடன் பெரியவரை தரிக்க வந்தார். முகத்தைப் பார்த்ததும் நிலைமையைப் புரிந்து கொண்டார் மகா பெரியவா....

என்னப்பா சொல்லு, என்ன பிரச்னை உனக்கு என்று கேட்டார்....

பெரியவா கேட்ட மறுவினாடியே அவன் கண்ணில் கண்ணீர் பெருகியது. சுதாரித்துக் கொண்டு, சாமி நான் ஒரு விவசாயி, வாழ்க்கையில் எனக்கு ஏகப்பட்ட பிரச்னை. எதைத் தொட்டாலும் முடிவில் தோல்வி தான் மிஞ்சுகிறது. இதெல்லாம் நிவர்த்தியாக நீங்கள் தான் ஒரு நல்ல வழி சொல்லனும் என்றார்....

அதற்குப் பெரியவா, குலதெய்வ வழிபாடெல்லாம் தவறாமல் செய்கிறாயா என்று கேட்டார். விவசாயி, என்ன சாமி சொல்றீங்க....குலதெய்வமா! அதெல்லாம் எனக்கே தெரியாதே என்று பரிதாபமாக சொன்னார். எங்க முன்னோர்கள் எல்லாம் உத்தரப் பிரதேசத்தில் இருக்காங்க....அங்கிருந்து எங்க குடும்பம் மட்டும் இங்கே வந்துவிட்டோம்.

வீட்டில் பெரியவங்க யாரும் இல்லையா என்று கேட்டார் பெரியவா...ம் ம் எனக்குத் தெரிந்த சொந்தக்காரர் இந்த ஊரில் தான் இருக்கின்றார் அவருக்கு கடவுள் பக்தி இருக்கா, இல்லையானு தெரியவில்லை கேட்டுப்பார்க்கிறேன் என்றார்.

சரி, நீ போயி அவர்கிட்ட கேட்டு குலதெய்வத்தை வழிபடுப்பா என்றார். அதற்கு, விவசாயி எவ்வளவோ சாமி இருக்கும் பட்சத்தில்...அதையெல்லாம் விட்டு குலசாமியை எங்க தேடிப் பிடிப்பது என்றார்.

அதற்கு பெரியவா...பாத்திரத்துல அடிப்பக்கம் இல்லாம நீ எவ்வளவு தண்ணீர் பிடித்தாலும், கடைசியில் ஒரு சொட்டு கூட மிஞ்சாது...அந்த மாதிரி தான் குலதெய்வ வழிபாடு என்றார்.

அந்தப் பக்தரும் தன்னுடைய குலதெய்வத்தை கேட்டு, தேடிப்பிடித்து வழிபாடு செய்தான். பின்னர், ஒரு நாள் பெரியவரை சந்திக்க வந்தார். நடந்தவற்றை அனைத்தையும் மகா பெரியவரிடம் கூறினார்.

அதைக் கேட்ட பெரியவா...நல்ல காரியம் செய்தாய்.....இதை அப்படியே விட்டு விடாதே, சிதிலம் அடைந்த போன அந்தக் கோயிலை மறுபடியும் நீ கட்டு என்றார். இனி எல்லாம் உன்னுடைய குலதெய்வம் தான் உனக்கு. எந்தக் குறையும் இன்றி செழிப்புடன் வாழ வைப்பார்.

இரண்டு வருடத்திற்குப் பின்பு விவசாயி, தட்டில் பூ, பழங்களுடன், காசு வைத்து மகா பெரியவரை தரிசிக்க வந்தார்.

சாமி, இப்ப நான் என் குடும்பத்தோடு சந்தோஷமா, செல்வ செழிப்புடன் இருக்கேன். எப்படி சாமி, இந்த மாற்றங்கள் நடந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லையே. அந்த ரகசியத்தைச் சொல்லுங்களேன் என்று கேட்டார் விவசாயி.

அதற்கு பெரியவா...எல்லாம் உன் குலதெய்வத்தின் மகிமையப்பா. நம் பரம்பரை பரம்பரையாகத் தந்தை வழி குலதெய்வத்தை வணங்கி வருகிறோம். நம் முன்னோர்கள் மேற்கொண்ட வழியையே நாம் பின்பற்ற வேண்டும். 'கோத்திரம்' என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப்பாதையே இது. பெரும்பாலும் நம் பாட்டிகள் வேறு கோத்திரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். அதனால் ஆண் வழியாகவே குலதெய்வம் அறியப்படுகிறது. இந்த ரிஷி பரம்பரை ஒரு சங்கிலித் தொடர் போல அறுபடாமல் இருக்கும்.

எனவே, குலதெய்வத்தை வணங்கும்போது மற்ற எல்லா கோயில்களுக்குச் சென்று வழிபட்டும் கிடைக்காத பலன்கள் பலவும் கிடைக்கும். பக்தி என்னும் ஒன்று உருவாவதற்கு முன்பே குலதெய்வத்தை வணங்கியிருப்போம். குலதெய்வக் கோயிலில் நாம் நிற்கும்போது, நம் பரம்பரையின் வரிசையில் நிற்பதாக அர்த்தம். இந்தத் தொடர்பை வேறு எப்படியும் உருவாக்கிட முடியாது என்றார்.

மேலும், ஒரு குடும்பத்துக்கு இறைசக்தியானது குலதெய்வ வடிவில் தான் பெற முடியும். குலதெய்வத்தின் மூலமே நவக்கிரகங்களினால் உண்டாகும் பலன்கள்  கிடைக்கும். அதன் பிறகு தான் நம் முன்னோர்களின் ஆசீர்வாதமும் நமக்குப் பரிபூரணமாக கிடைக்கும். இது ஒரு சங்கிலி தொடர்பு போன்று தான் என்று கூறினார் மகா பெரியவா. பின்னர், விவசாயி நன்றி கூறி விடைபெற்றார்.

இவ்வாறு குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை விவசாயி மட்டுமல்லாமல்,  நாமும் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார் காஞ்சி மகா பெரியவா.

No comments:

Post a Comment