Sunday 23 July 2017

ஆனந்த வாழ்வருளும் அனுமந்தராயசாமி


இடுகம்பாளையம்

ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதாதேவியைப் பார்த்து யுத்தம் முடிந்த செய்தியை கூற அனுமன் சென்றபோது, சீதாதேவி தன் நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து இருந்ததைப் பார்த்து இது குறித்து சீதாதேவியிடம் அனுமன் வினவ, ராமன் ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும்போது அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினார். நெற்றியில் சிறிதளவு செந்தூரம் இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது, உடல் முழுவதும் பூசினால் ராமன் எவ்வளவு வெற்றி வாகை சூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர் செந்தூரம் அணிந்து கொண்டதாகவும் இதுவே அனுமனுக்கு செந்தூரம் சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் வரலாறு. இந்த தெய்வீகச் செயல் அனுமன் ராமபிரான் மீது  கொண்டுள்ள மாசற்ற அளவுகடந்த பக்தியை பறைசாற்றுகிறது.

மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு மாசற்ற பக்தியும், உறுதியான வலிமையையும் என்றுமே வேண்டுமென்று செந்தூரப் பிரியன் அனுமனுக்கு  எழுப்பப்பெற்ற தலம் இடுகம்பாளையம் அனுமந்தராயசாமி திருத்தலம். இவர் மிகவும் பழமை வாய்ந்தவர். விஜய நகர மன்னர்களின் ராஜகுருவாகவும், தலைசிறந்த அனுமன் பக்தராகவும் திகழ்ந்த ஸ்ரீ வியாசராஜர் இந்தியா முழுவதும் பல நூற்றுக் கணக்கான அனுமன் ஆலயங்களை அமைத்த பெருமைக்குரியவர். அவர் அமைத்த ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்று என முற்காலத்திலிருந்து ஆன்மிகச் சான்றோர்களால் சொல்லப்பட்டு வருகிறது. கிருஷ்ணதேவராய மன்னர் காலத்தில் ஏராளமான மான்யத்தைப் பெற்றிருப்பதற்கு குறிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் சிதிலமான இக்கோயிலைப் புனரமைத்து, 2006ம் ஆண்டு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

கோயிலின் முன்புறம் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தீபஸ்தம்பம் உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் வாயு புத்திரனான அனுமந்தராயப் பெருமான் எட்டு அடி உயர சுயம்புப் பாறையில், ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர்கொண்ட பார்வையுடன் காட்சியளிக்கிறார். அனுமந்தராயசாமியின் இரு கால்களிலும் தாமரை மலர் போன்ற தண்டையும், வலது கையில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்ட நிலையில் ஆசீர்வாதம் செய்யும் வகையிலும், இடது கையில் சவுகந்திக மலருடனும், வாலின் நுனி தலைக்குப் பின்புறம் மணியுடன் நேராக நிமிர்ந்து அனைத்து உயிர்களையும் கனிவோடு நோக்கும் கருணை விழிகளுடன் காட்சியளிக்கிறார். 

பெரும்பாலும் ஆஞ்சநேயர் உருவச் சிலைகள் வலதுபுறமாகவோ அல்லது இடது புறமாகவோ திரும்பி நின்று கொண்டு கையில் கதை அல்லது சஞ்சீவி மலையை தாங்கியவாறு இருப்பதாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு நேர் கொண்ட பார்வையில் சேவை சாதிக்கும் அமைப்பு வேறெங்கும் காண முடியாத அமைப்பு என்றும், இவரை தாிசித்தோரின் வாழ்வில் தடைபட்ட காரியங்கள் ஜெயமாவதால் ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்றும், பக்தர்களின் துன்பங்கள் போக்குவதால் இடுக்கண் தீர்க்கும் இடுகம் பாளையசாமி எனவும் பக்தர்கள் பரவசம் பொங்க அஞ்சனை மகனின் மகிமையை சொல்லி ஆராதிக்கின்றனர். கோயிலின் கோஷ்டத்தில் நளன், அனுமன் பாதம், நீலன் காட்சியைக் காணலாம். 

இக்கோயிலின் தெற்கில் பர்வதவர்த்தினி உடனமர் ராமலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் முன்புறமுள்ள கருவறையில் பூமியிலிருந்து மேலெழுந்த ஒரு நீள்வடிவ சுயம்பு பாறையின் முன்பகுதியில் மகாகணபதி பெரிய திருவுருவாகவும், அவரின் கீழ்ப் பகுதியில் மூஷிகனும், இரு தோள்களையொட்டியவாறு ராகு, கேது திருவுருவமும் அமைந்துள்ளது. சூரியன், சந்திரன், ஆதிசேஷன் மற்றும் சிவலிங்கத்திற்கு பால் சொரியும் காமதேனு ஆகிய தெய்வத் திருவடிவங்களும் இப்பாறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பகுதியில் நந்தீஸ்வரர் பெரிய திருவுருவமாக வடிக்கப் பெற்றுள்ளது. இந்த நந்தீஸ்வரர் ராமலிங்கேஸ்வரரை நோக்கி வீற்றிருக்கிறார். இந்த மாதிரியான அமைப்பு வேறெங்குமில்லை என்று சான்றோர்கள் கூறுகின்றனர். பிரதோஷ நாளில் இவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இங்குள்ள பர்வதவர்த்தினி உடனமர் ராமலிங்கேஸ்வரர் ஆலயம் சுமார் 1537 வருடங்களுக்கு முற்பட்டது என்ற குறிப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இறைவன், இறைவி சந்நதிகளில் காணப் படும் மீன் சின்னங்கள் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்திருக்கலாம் என எண்ண முடிகிறது. இலங்கை செல்லும் வழியில் ராமபிரான் இங்கு தங்கி சுயம்புலிங்கத்தை பூஜித்ததால் இவருக்கு ராமலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றதாக ஐதீகம். இவரின் சந்நதியில் மகாமண்டபத்தில் உள்ள பலிபீடத்தை தாண்டிச் சென்றால் பெரிய ஆதிசேஷன் காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தைக் கடந்து கருவறையினுள் நம் பார்வையை பயபக்தியுடன் செலுத்தினால் ராமலிங்கேஸ்வரரின் அற்புதக்காட்சி நமக்கு கிடைக்கின்றது. 

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, வெளிச்சுற்றில் சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கின்றனர். இறைவனின் சந்நதியின் இடப் பாகத்தில் இறைவி பர்வதவர்த்தினி என்ற திருநாமத்துடன் தனிச் சந்நதியில் சுயம்புவாக அருள்மழை பொழிகிறாள். தற்போது 1979ம் ஆண்டு சிலாரூபம் வடிக்கப்பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவியின் தரிசனம் கிடைக்கின்றது. அம்பிகை சந்நதியின் கோஷ்டத்தில் துர்க்கை வரம் நல்குகிறார். சிவனுக்கும், உமாதேவிக்கும் நடுவில் 1996ம் ஆண்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. 

கருவறையில் தனது வாகனமான மயிலுடன் முருகப் பெருமான் இங்கு செல்வக்குமரன் என்ற திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறார். அவரின் சந்நதியின் எதிரே மயில், பலிபீடம் உள்ளன. இத்தலங்களின் கன்னிமூலையிலுள்ள கிணற்று தீர்த்தம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. தல விருட்சமாக வன்னி மரமும், வில்வ மரமும் உள்ளது. கோவை மாவட்டம், சிறுமுகையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இடுகம்பாளையத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சிறுமுகையிலிருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து வசதி உள்ளது.

No comments:

Post a Comment